மாற்று அணியா? மாற்றுக் கோட்பாடா? பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மே 2018 13:05

பிரிட்டனைச்  சேர்ந்த பொருளாதார நுண்ணறிவு  அமைப்பு உலகில்  உள்ள 167  நாடுகளில் நிலவும் சுதந்திரமான தேர்தல்,  பன்முகத்  தன்மை பேணுதல், மக்கள் அமைப்புகளுக்கு வழங்கப்படும் சுதந்திரம், அரசின் செயல்பாடுகள்,  அரசியல் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளை ஆராய்ந்து ஆண்டு தோறும் ஆய்வு  நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

சென்ற ஆண்டு இந்தப் பட்டியலில் 32ஆவது  இடத்திலிருந்த இந்தியா  இந்த ஆண்டு  42ஆவது இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது  மத  அடிப்படைவாத போக்குக் கூடியிருப்பது,  சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு,  சில அமைப்புகள்  அதிகாரத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது, ஜனநாயகம் ஒடுக்கப்படுவது போன்ற காரணங்களினால் இந்தியாவிற்கு 42ஆவது இடம்   அளிக்கப்பட்டுள்ளது.  
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்ந்த இந்தியாவில் இப்போது  ஜனநாயகம் சிறிதுசிறிதாக சிதைக்கப்பட்டு சர்வாதிகாரப் போக்குப் பெருகி வருவதையே இந்த ஆய்வு சுட்டிக்  காட்டுகிறது.  இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து  நாடுகளிலும் இராணுவ சர்வாதிகார ஆட்சியோ அல்லது ஜனநாயகப்  போர்வைப்  போர்த்திய சர்வாதிகார  ஆட்சிகளோ நடைபெற்று வருகின்றன.  
ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் தூண்களில் ஒன்றான பத்திரிகையாளர்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.  சுதந்திர  சிந்தனை படைத்த பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.  பல்வேறு  மாநிலங்களில் மக்களால்  தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்குப்   போட்டியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் விதிமுறைகளை மீறி துணைவேந்தர்களை ஆளுநர்களே நியமிக்கிறார்கள்.   பல்கலைக்கழகங்களின் சுயாட்சி கட்டுப்படுத்தப்படுகிறது. பசு பாதுகாவலர்களாக தங்களுக்குத் தாங்களே  மகுடம்  சூட்டிக் கொண்டவர்கள் பசு மாமிசம் வைத்திருப்பவர்களைப் படுகொலை செய்கிறார்கள். சிறுபான்மை சமூகங்களின் வழிபடும்  இடங்கள்  தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
நாட்டின் குடியரசுத்  தலைவர்,  துணைக்  குடியரசுத்  தலைவர், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள்  ஆகிய பதவிகளில்  முழுமையாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச்  சேர்ந்தவர்களே  அமர்த்தப்பட்டுள்ளனர்.   பதவிக்கு வந்த பிறகு கட்சி சார்ந்த அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் செயல்படவேண்டும் என்பதுதான் உன்னதமான ஜனநாயக மரபாகும்.  ஆனால்,  மேற்கண்ட  அனைவரும் இன்னமும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவே தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும்  செயலற்றவையாக ஆக்கப்பட்டுவிட்டன.  மக்கள் பிரச்சனைகளை  எழுப்புவதற்கு பதில் இந்த  மன்றங்களில் நாள்தோறும் கூச்சலும், குழப்பமும் மிகுந்து ஒத்தி வைக்கப்படும் சூழ்நிலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  
ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு  அல்லது  பா.ஜ.க.வோ தங்களது அடிப்படைக் கொள்கையான  இந்துத்துவாவை நிலைநிறுத்துவதே  தங்களது  தலையாய கடமை எனவும்,  அதற்காகவே  ஆட்சியில் அமர்ந்திருப்பதாகவும் கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள். இதில் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். இந்தப்  போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதை காலம் கடந்தாவது உணர்ந்த  பல்வேறு கட்சிகளும் மாற்று அணி  அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  
அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான சோனியா  காந்தி 20க்கு  மேற்பட்ட கட்சித்  தலைவர்களை விருந்தொன்றுக்கு  அழைத்து  மாற்று  அணி அமைப்பது  பற்றிப்  பேசினார்.  காங்கிரசு, பா.ஜ.க.  அல்லாத  மாற்று அணி  அமைப்பது  குறித்து மேற்குவங்க முதலமைச்சர்  மம்தா  பானர்ஜி,  தெலுங்கானா  முதலமைச்சர்  கே. சந்திர சேகர ராவ் ஆகியோர் சந்தித்துப் பேசி மாநிலக்  கட்சிகளைக் கொண்ட  கூட்டாட்சி  அணி  ஒன்றை அமைப்பது  குறித்துப்  பேசியிருக்கிறார்கள். இடதுசாரி கட்சிகளும் மாற்று  அணி குறித்து  கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.  
பா.ஜ.க.வுக்கு  எதிராக  மாற்று  அணி  அமைக்கப்படவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு  இடமில்லை. எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளையும் மறந்து ஒன்றுபட்டு  நின்றாலொழிய  பா.ஜ.க.  ஆட்சியை மாற்ற முடியாது. கடந்த காலத்தில் காங்கிரசு ஆட்சி இருந்தபோதும், பின்னர் பா.ஜ.க. ஆட்சி இருந்தபோதும் அவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அணிகள் அமைக்கப்பட்டன. ஆனால்,  கோட்பாடற்றக் கூட்டணிகளாக இருந்ததனால் அந்த  ஆட்சிகள்  விரைவிலேயே கவிழ்ந்தன.
1999ஆம்  ஆண்டு  மாநிலக் கட்சிகள் மற்றும் அகில இந்திய  சிறிய கட்சிகள் உள்பட 23 கட்சிகளின்  துணையுடன் பா.ஜ.க. அமைத்த கூட்டணி வெற்றிபெற்று  வாஜ்பாய்  தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்றார். இப்போது பா.ஜ.கவுக்கு எதிராக  மாற்று அணி அமைக்கவேண்டும் என்ற  முயற்சியில்  ஈடுபட்டிருக்கக்கூடிய  பெரும்பாலான  மாநிலக் கட்சிகள்  அன்று பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்  துணை புரிந்தன. சிலந்தியின் வலையில்  சிக்கிய  சிறு பூச்சிகள் கடைசியில் அதற்கு இரையாவதைப்  போல  மாநிலக் கட்சிகள் பலவற்றை  பா.ஜ.க. பிளவுபடுத்தி  சிதைத்தது. இந்த உண்மையை உணர்ந்தாலும் பா.ஜ.க.வின் பிடியிலிருந்து விடுபட  முடியாமல் அந்தக்  கட்சிகள் தவித்தன.  இதற்கு முன்பு காங்கிரசுக் கட்சியும் மாநிலக் கட்சிகளைப் பிளவுபடுத்தி  மாறிமாறி  அக்கட்சிகளுடன் கூட்டுசேர்ந்து அரசியல்  ஆதாயம் அடைந்தது. தேசிய ஒருமைப்பாட்டினை நிலைநிறுத்துவது என்ற பேரில் பல்வேறு மொழிகளின் தேசிய இனங்களை அடக்கி  வைப்பதிலும்,  மாநிலங்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதிலும் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்  வேறுபாடு கிடையாது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் மாநிலக் கட்சிகள் அதே தவறைப் புரிந்து தலைமையமைச்சர் மோடியின்  ஆட்சி  அமைவதற்கு துணை நின்றன.  மொழிவழி தேசிய உணர்வின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் பா.ஜ.க.வுடன்  தேர்தல்  உறவுகொண்டது  முரணானது  மட்டுமல்ல,  பச்சை சந்தர்ப்பவாதமாகும். அதே கட்சிகள்  தான் இம்முறையும்  பா.ஜ.க.விற்கு  எதிராக மாற்று அணி அமைப்பதற்கு முற்படுகின்றன.
கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட மாற்று அணிகள் எவ்வித கோட்பாட்டின் அடிப்படையிலும் அமைக்கப்படவில்லை. பதவி பங்கீடு ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அமைக்கப்பட்டன.  அதனால் வேண்டாத  விளைவுகள்  ஏற்பட்டு பா.ஜ.க. ஆட்சி உருவானது.  உண்மையில் பா.ஜ.க.வின்  மதவாத  போக்கிற்கு  எதிராக  அணி  அமைக்க  வேண்டுமானால்   மாற்றுக் கோட்பாட்டை முன்னிறுத்தி அந்த  அணி உருவானால்தான் உண்மையான மாற்று அணியாக விளங்க முடியும். இல்லையென்றால் அதுவும்  சந்தர்ப்பவாத  கூட்டணியாகத்தான் இருக்கும்.
"ஒரே  நாடு; ஒரே மொழி; ஒரே கலாச்சாரம்; இந்தியாவில் வாழ்பவர்கள் யாராக  இருந்தாலும் எந்த சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  அனைவரும் இந்துக்களே" என்பதே  ஆர்.எஸ்.எஸ்.சின்  கோட்பாடு என  அதன்  தலைவர் மோகன் பகவத்  வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.   இதற்கு  மாற்றுத்  திட்டத்தை முன்  வைக்காமல் பதவி பங்கீட்டை  மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள்  அமைக்கப்படுமானால்  ஒருபோதும் இந்துத்துவாவை  வெல்ல  முடியாது.
கடந்தகால  வரலாறு  பல உண்மைகளைப்  பதிவு  செய்திருக்கிறது.  அதை நாம்  மறக்கக் கூடாது.  1946ஆம்  ஆண்டு இந்தியாவிற்கு விடுதலை அளிப்பது குறித்துப் பேசுவதற்காக  வந்திருந்த  பிரிட்டிஷ்  அமைச்சரவை தூதுக்குழுவிடம் காங்கிரசுத் தலைவராக இருந்த  அபுல்  கலாம்  ஆசாத் நாட்டுப் பிரிவினையைத்  தடுக்க வேண்டுமானால்  கீழ்க்காணும் திட்டத்தை ஏற்கவேண்டும் என கூறினார். நாட்டின் பாதுகாப்பு, போக்குவரத்து  மற்றும் தொடர்பு சாதனங்கள்,  வெளிநாட்டு உறவு  ஆகிய மூன்று  அதிகாரங்கள்  மட்டுமே  மத்திய ஆட்சியிடம்  இருக்கும்.  விருப்பு அதிகாரப்  பட்டியலில் உள்ள  அதிகாரங்களை  மாநிலங்கள் தங்களிடமே வைத்துக்கொள்வதா? அல்லது மத்திய  அரசிடம்  ஒப்படைப்பதா? என்பது குறித்து  மாநிலங்கள் முடிவெடுக்கும். மாநிலங்கள் விரும்பி  மத்திய அரசிடம் ஒப்படைத்த அதிகாரங்களைத்  தவிர அனைத்து  அதிகாரங்களும் மாநில அரசுகளிடமே  இருக்கும்” என்றார். அதைபோல   இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த  பி.சி. ஜோஷி இக்குழுவிடம் கொடுத்த அறிக்கையில் ்தேசிய இனங்களுக்கு தங்குதடையற்ற சுயநிர்ணய உரிமை  வழங்கப்படவேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.  
ஆனால், ஆசாத், பி.சி. ஜோஷி ஆகியோர்  அளித்தத்  திட்டங்கள் பல்வேறு காரணங்களினால் ஏற்கப்படாமல் போனதால்  நாடு  பிரிக்கப்பட்டது. சொல்லொண்ணாத அழிவு ஏற்பட்டது. காங்கிரசுக் கட்சியும் தனது கோட்பாட்டிலிருந்து  விலகி  பலமான  மத்திய  அரசு என்ற  கோட்பாட்டை நிலைநிறுத்தத்  தொடங்கியது.  மக்கள் போராட்டங்களுக்குப்  பிறகு  மொழிவழியாக மாநிலங்களைப்  பிரிக்கவேண்டிய இன்றியமையாமை காங்கிரசு அரசுக்கு ஏற்பட்டது.  ஆனால், அவ்வாறு பிரிக்கப்பட்ட  மாநிலங்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க மறுக்கிறது. காங்கிரசு மற்றும்  பா.ஜ.க. ஆட்சிகளில் இந்திய அரசியல் சட்டம்  நூறு தடவைகளுக்குமேல் திருத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான  திருத்தங்கள் மத்தியில்  அதிகாரக் குவிப்பு பற்றியவையே  ஆகும்.  
இந்தச் சூழ்நிலையில் மாநிலங்களுக்கு முழுமையான தன்னுரிமை, மத்திய  ஆட்சிக்கு குறிப்பிட்ட சில  அதிகாரங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு உண்மையான கூட்டாட்சி அரசியல் சட்டத்தை உருவாக்கவேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட மாற்றுக் கோட்பாட்டு  அணி அமைவதே   பா.ஜ.க.விற்கு  உண்மையான மாற்றாக  விளங்க முடியும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.