கன்னித் தமிழ்க் காவிரியைக் காப்போம்! பொங்கியெழுந்து போராடும் தமிழகம் --பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மே 2018 14:41

தமிழ்நாட்டின் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றோடு இரண்டறக் கலந்து  பின்னிப்   பிணைந்த பெருமை பொன்னி வள நதிக்கு  உண்டு.  விந்தியத்திற்கு வடக்கே வளர்ந்த  வடமொழி நாகரிகத்தின் சின்னமாகக் கங்கை விளங்குகிறது.

அதைப் போலத் தமிழகத்தில் வளர்ந்தோங்கிய  தமிழர் நாகரிகத்தின்  சின்னமாகக் காவிரி விளங்குகிறது.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன் தோன்றி மூத்த குடியான தமிழ்க்  குடியினருக்கு அமுதூட்டும் அன்னையாகக் காவிரி விளங்கி வந்திருக்கிறாள். எனவே தான் சங்க காலத்திலிருந்து பாரதியின் காலம் வரை பாவலர்கள் காவிரியைப் பற்றிப் பாடிப் பெருமைப்பட்டுள்ளனர். 20ஆம் நூற்றாண்டிலும் தமிழ்க் கவிஞர்கள் பொன்னி நதியைப் பற்றிப் பாடாமல் இல்லை.
அந்த  நாளில் அறம் செய்தவர்கள் அவ்வறம் என்றும்  நின்று  நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லும் காவிரியும் புல்லும் பூமியும் உள்ளவரை இந்த  அறம் நிலவ வேண்டும்”என்று கல்வெட்டுகளிலும்,  செப்பேடுகளிலும் பொறித்து வைத்தார்கள்.  
காவிரி நதி பாய்ந்தோடுகிற பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் யார்  அறக்கொடை அளித்தாலும்  அந்தக் கொடையை நிலைநிறுத்த இந்த வரிகளையே பயன்படுத்தினார்கள்.  காவிரி பாய்ந்தோடாத பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியிலும் காவிரி எத்தகைய நிலையான இடத்தைப் பெற்றிருந்தது என்பதை இது காட்டுகிறது.
அறத்தின் சின்னமாக  மட்டுமல்ல, மறத்தின்   சின்னமாகவும்  காவிரி  விளங்கிற்று. கரிகால் பெருவளத்தான்,  இராசராசன்,  இராசேந்திரன் ஆகியோர் பொற்கோட்டு  இமயத்தில் புலி பொறித்து ஆண்டதற்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தங்கள் கொடியை நடுவதற்கும் காரணமான சோழநாட்டு வீரப்படைகள் காவிரிக் கரையில்  இருந்துதான் சென்றன.  காவிரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்த  தமிழக  வீரர்கள் சென்று திசையெங்கிலும் வெற்றிக் கொடிகளை நாட்டினார்கள்.
காவிரிக் கரையில் விளைந்த பொருட்கள் பூம்புகார்ப் பட்டினத்தின் வழியாக மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் சென்றன. காவிரிக்கரை வணிகர்கள்  இந்நாடுகளில் வணிகம்  செய்து பெரும் பொருளைத்  திரட்டி வந்தனர். அரபிய  நாட்டுக் குதிரைகள்  பூம்புகாரில்  வந்திறங்கிக் காவிரிக் கரையில் மேய்ந்தன.
பண்டையத் தமிழர்களின் இலக்கியச் செறிவுக்கும், வணிக வளத்திற்கும், கள வெற்றிகளுக்கும் உரம் ஊட்டிய பெருமை காவிரிக்கு உண்டு.  இவ்வாறு தமிழர்களின் வரலாற்றோடு  பின்னிப் பிணைந்த காவிரி  நீரில் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று கூறும் நிலை உருவாகிவிட்டது. இப்போது மட்டுமல்லாமல் அந்த நாளிலும், இத்தகைய நிலைமை தோன்றியது உண்டு.  கடந்த காலத்தில் காவிரி நீரில்  நமக்கு உள்ள உரிமையைப் பலர் பறிக்க முயன்றார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் கொதித்தெழுந்து தங்கள் உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள்.
சோழர் காலம்
12ஆம் நூற்றாண்டில் கூடக் காவிரி நீரைத் தமிழகம் வராமல் தடுக்கும் முயற்சியில்  அந்நாளையக் கர்நாடக மன்னன் ஈடுபட்டான். கி.பி. 1141 முதல் 1173 வரை கர்நாடகப் பகுதியை ஆண்ட போசள நாட்டு மன்னான முதலாம் நரசிம்மன் காவிரியின் போக்கைத் தடுக்கச் செயற்கை மலைகளை ஏற்படுத்தித்  தமிழகத்திற்கு வரும் நீரைத் தடுத்தான்.   இதன்  விளைவாகக் காவிரியில் நீர்  குறைந்தது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும்”பொய்த்தது. சோழ நாட்டில் வறட்சி  ஏற்பட்டது. அவ்வேளையில் சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் இராசராசன், போசள நாட்டின் மீது படையெடுத்தான். போசள மன்னனைத் தோற்கடித்துச் செயற்கை மலையைத் தகர்த்துக் காவிரித் தண்ணீரை மீண்டும் சோழ நாட்டிற்குக் கொணர்ந்தான்.  இதனால் இரண்டாம் இராசராசன் காவிரி கண்ட சோழன், பொன்னிக்கு வழி கண்ட கண்டன் என்றெல்லாம்  புகழப்பட்டான்.   இந்தப் பெரும்  போருக்கான செலவை ஈடுகட்டக் காவிரிக்கரை வினியோகம் என்ற வரி விதிக்கப்பட்டது.
கி.பி. 17ஆம்  நூற்றாண்டின் இறுதிப்  பகுதியிலும் காவிரி  நீர் சம்பந்தமாகத்  தமிழகமும் மைசூரும் மோதிக் கொண்டன. கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அரசி மங்கம்மாளும் தஞ்சையில் மராத்திய  மன்னன் சகசியும் ஆண்டனர்.  அப்போது  மைசூரை சித்ததேவ மகாராயன் என்ற  மன்னன் ஆண்டு வந்தான். அவன் காவிரியின்  போக்கை அணை  கட்டித்  தடுக்கும் முயற்சியில்  ஈடுபட்டான்.  இதன் விளைவாக  மதுரை நாயக்கர்  அரசியும் தஞ்சை மராட்டிய மன்னனும் எவ்வளவோ பிரச்சினைகளில் கருத்து  வேறுபாடுகள் கொண்டிருந்த போதிலும்  காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டு நின்றனர்.  இரண்டு  நாடுகளைச்  சேர்ந்த  படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன.  ஆனால், படை மைசூரை அடைவதற்கு  முன்னால் காவிரியின் குறுக்கே மைசூர் மன்னன் கட்டிய  அணை திறமையற்றவர்களால் கட்டப்பட்டதால் தானே உடைந்து சிதறிவிட்டது. காவிரியில்  தடையின்றி  நீர் வரத் தொடங்கியது.
பழைய வரலாற்றை  இன்னமும் தொடர்வதற்குக் கர்நாடகம் முயல்கிறது. 20ஆம் நூற்றாண்டில், சனநாயக யுகத்தில் அந்த நாள்  போல  வாள் கொண்டு நமது உரிமையை நிலைநாட்ட வழியில்லை. எனவே  தான், உச்சநீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் காவிரிப் பாசன உழவர்கள்   இடைவிடாது  போராடினார்கள்.   தமிழக  அரசியல் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு  தந்தன. ஆனால்,  தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் காவிரிப் பிரச்சனை தமிழ்நாட்டின் தேசியப் பிரச்சனைகளில் முதன்மையானது என்பதை முழுமையாக உணரவில்லை. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதில் கர்நாடக மக்களும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.
ஆனால், சென்னை முதல் குமரி வரை அனைத்துத் தமிழர்களும் கட்சி, சாதி, மத வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபட்டு நின்று  காவிரிப் பிரச்சனைக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட  மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியினை தமிழகம் முதன் முறையாக 2013ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதத்தில்  கண்டது. இந்தப்  பேரெழுச்சியும்,  ஒற்றுமையும் டில்லியை அதிர  வைத்துள்ளன.
பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும்,  உழவர் சங்கங்களும் இணைந்தும் தனித்தனியாகவும் நடத்திய போராட்டங்கள் பாராட்டத்தக்கன. ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும்  போராட்டத்தினை  நடத்துவோமானால் காவிரியை  மீட்க  முடியும். இல்லையேல் நமது  போராட்டங்களை  டில்லி மதிக்காது. இந்த  உண்மையை எவ்வளவு  விரைவில்  நாம் உணர்கிறோமோ  அவ்வளவு  விரைவில் நாம் நமது உரிமையை காப்பாற்றவும், நிலை  நிறுத்தவும் முடியும். 

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.