செந்தமிழ் அகராதியில் தகைமை என்ற சொல்லுக்கு தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுக்கம் என பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பொருள்களில் எது ஒன்றுக்காவது தங்களைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாத தலைவர்கள் ஆளும் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மிக்கத் துயரத்துடனும், அளவில்லாத துன்பத்துடனும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதியான தீர்ப்பின்படி செயல்படவேண்டிய தலைமையமைச்சர் மோடியின் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வாறு செய்யத் தவறியதோடு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையைச் செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்ட சொல்லுக்குப் பொருள் விளங்கவில்லை என குறித்த காலம் கடந்து முறையிட்டபோது இது திட்டமிட்ட காலம் கடத்தும் வேலை என்பதைப் புரிந்துகொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான் அடைந்த வியப்பையும், ஏமாற்றத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்ததோடு, தனது ஆணையின் வண்ணம் அமைக்கப்படவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்திற்கான திட்டத்தை அளிக்காமல் ஒன்றிய அரசு தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பதாகக் கடிந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, மேலும் 3 மாத கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என கேட்டபோது அதன் பின்னணியையும் உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டது. மே&12ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை காலங்கடத்துவதே கர்நாடகத்தின் நோக்கம் என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம் மே&3ஆம் தேதி வரை மட்டுமே கால நீட்டிப்புக் கொடுத்தது. காவிரி சமவெளிப் பகுதியில் வேளாண்மை வேலைகளைத் தொடங்குவதற்கு ஏற்றபடி ஆண்டுதோறும் சூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். எனவே, மே&3ஆம் தேதிக்குள் தனது தீர்ப்புக்கு ஏற்ற திட்ட வடிவத்தை அளிக்கவேண்டுமென ஆணைப் பிறப்பித்துள்ளது. விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு அளித்த முறையீட்டு மனுவினை ஏன் முன்னதாகவே அளிக்காமல் 6 வார காலம் கடந்தப் பிறகு அளிப்பதின் நோக்கம் என்ன? என்ற தலைமை நீதிபதியின் கேள்விக்கு அரசின் வழக்கறிஞர் பதில் கூற முடியாமல் தலைகவிழ்ந்து நின்றார். அவருக்கு இத்தகைய தலைக்குனிவு ஏற்படவில்லை. மாறாக, தலைமையமைச்சர் மோடிதான் அவமதிக்கப்பட்டு தலைக்குனிந்து நிற்கிறார். தலைமையமைச்சர் பதவியை மோடி அவர்கள் ஏற்கும்போது இந்திய அரசியல் சட்டத்தின் மூன்றாம் இணைப்புப் பட்டியலில் பிரிவு 75இன் கீழ் பின்வரும் உறுதிமொழியை கூறி பதவி ஏற்றார். ்நரேந்திர மோடி ஆகிய நான், சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும் ஒன்றியத்து அமைச்சர் என்னும் முறையில் என்னுடைய கடமைகளை அகத்தூய்மையுடனும், மனச்சான்றின்படியும் ஆற்றுவேன் என்றும், அரசமைப்பு முறைக்கும், சட்ட நெறிக்கும் இணங்க அச்சம், கண்ணோட்டம் இன்றியும், விருப்பு, வெறுப்பு இன்றியும், பல்திற மக்களுக்கும் தகுவன புரிவேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணை மொழிகிறேன்” எனக் கூறி அவர் ஏற்றப் பதவியின் தகைமையை அவர் காக்கத் தவறிவிட்டார். அவர் மட்டுமல்ல, இவருக்கு முன்னதாக தலைமையமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த பலரும் காவிரிப் பிரச்சினையில் தங்களின் தகைமையைக் காக்கத் தவறிவிட்டனர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாத நிலையில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தபோது அப்போதைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் அவ்வாறு செய்ய முன்வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்துள்ள வழக்கினைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முடிவு காண உதவுவதாக அவர் அளித்த வாக்குறுதியை நம்பி தமிழக தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கினைத் திரும்பப் பெற்றது. 1972ஆம் ஆண்டில் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்களின் பேச்சு மீண்டும் தொடங்கியது. காவிரிப் பிரச்சினை தொடர்பான புள்ளி விவரங்களை தொகுத்து தருவதற்கு உண்மை அறியும் குழு ஒன்றிணை அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைகளை முடிக்கும் வரை எந்த மாநிலமும் புதிய பயன் முறைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் மூன்று மாநில முதல்வர்களும் இந்திய அமைச்சரும் கையெழுத்திட்டார்கள். ஆனால், கர்நாடகம் இந்த உடன்பாட்டையும் மீறி புதிய பாசனத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றத் தொடங்கியது. ஆனால் இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய தலைமையமைச்சர் இந்திராகாந்தி தனது தகைமையைக் காக்கத் தவறினார். 1973ஆம் ஆண்டு இறுதியில் டெல்லியில் மூன்று மாநிலங்களின் முதல்வர்களும் இந்தியப் பாசன அமைச்சரும் கூடி காவிரி உண்மையறியும் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அந்தப் புள்ளி விவரங்கள் சரியானவை என ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் மேலும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று 1974ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ்காவிரி சமவெளி அதிகார அமைப்பு” ஏற்படுத்தும் திட்டத்தை மூன்று மாநில முதல்வர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதன்படி அந்த அமைப்பினை ஏற்படுத்த இந்திய அரசு தவறியதோடு தனது தகைமையையும் இழந்தது. 1976ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய அரசு ஒரு நகல் உடன்பாட்டினை உருவாக்கியது. அதற்கிணங்க தமிழகம் பெற்று வந்த 489 டி.எம்.சி. நீரில் 100 டி.எம்.சி.யை குறைத்துக் கொள்ளவேண்டும். கர்நாடகம் பெற்றுவந்த 177 டி.எம்.சி. நீரில் 25 டி.எம்.சியை குறைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு குறைத்துக்கொள்ளப்படும் 125 டி.எம்.சி. நீரில் தமிழ்நாட்டிற்கு 4 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட்டு மொத்தம் 393 டி.எம்.சி. நீர் அளிக்கப்படும். கர்நாடகத்திற்கு கூடுதலாக 87 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட்டு மொத்தம் 239 டி.எம்.சி. நீர் பெறும். கேரளத்திற்கு 39 டி.எம்.சி. நீர் அளிக்கப்படும். முதலில் இதை ஏற்றுக்கொண்ட கர்நாடகம், பின்னர் அதை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, 1990ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என ஒன்றிய அரசை தமிழகம் வற்புறுத்தியது. ஆனாலும், சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டிய ஒன்றிய அரசு காலம் கடத்தியது. அப்போது தலைமையமைச்சராக இருந்த வி.பி. சிங் தனது தகைமையைக் காக்கத் தவறினார். உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இந்தப் பிரச்சினையை விட்டுவிடுவதாக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே, உச்சநீதிமன்றம் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடுவர் மன்றத்தை அமைத்து அரசிதழிலும் வெளியிடவேண்டுமென ஆணைப் பிறப்பித்தது. அவ்வாறே சித்தாதோஷ் முகர்ஜியை தலைவராகக் கொண்ட நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு சூன் மாதம் 21ஆம் தேதி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீர் அளிக்கவேண்டும் இடைக்கால ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால், இந்த ஆணையை ஏற்க மறுத்து கர்நாடக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இச்சட்டமன்றத்தில் அங்கம் வகித்த அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து தங்களது தகைமையைக் காக்கத் தவறின. நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் கடத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டு அரசிதழில் வெளியிடுமாறு ஆணைப் பிறப்பித்தப் பிறகே அந்த ஆணை வெளியிடப்பட்டது. அப்போது தலைமையமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ் தனது தகைமையைக் காக்கத் தவறினார். 1993ஆம் ஆண்டு சூலை மாதம் வரை நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்கவோ, அதற்கிணங்க தண்ணீர் தரவோ கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. ஒன்றிய அரசு பாராமுகமாக இருந்தது. அப்போதை முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக ஒன்றிய அரசு தலையிட்டு தண்ணீர் அளவைக் கண்காணிக்க குழு அமைப்பதாக உறுதி கூறியது. ஆனால், அதை ஏற்க கர்நாடகம் பிடிவாதமாக மறுத்துவிட்டது. எனவே மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது. அதன் விளைவாக இப்பிரச்சினையில் 11 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்கு அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமையமைச்சருக்கு நடுவர் மன்றம் ஆணைப் பிறப்பித்தது. ஆனால், அந்த ஆணையை நிறைவேற்ற தலைமையமைச்சர் பி.வி. நரசிம்மராவ் தவறினார். பிரச்சனையை ஆறப்போடுவதற்காக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஒய்.கே. அலாக் என்பவர் தலைமையில் 3பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தார். இக்குழு தமிழ்நாட்டில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமும், கார் மூலமும் விரிவாகப் பயணம் செய்து பார்வையிட்டது. ஆனால், கர்நாடக பாசனப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் மேலோட்டமாகப் பார்வையிட்டதே தவிர, விரிவாகப் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் குழு 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிற்கு அளித்தால் போதும் என பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட தலைமையமைச்சர் அவ்வாறே செய்தார். பிற்காலத்தில் தலைமையமைச்சராக தேவேகெளடே பதவி ஏற்றப் பிறகு மத்திய திட்ட அமைச்சராக ஒய்.கே. அலாக் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திட்டக் குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டுவந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துட னேயே அவர் திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவ்வாறே அவர் அனுமதியும் வழங்கினார். தேவேகெளடே அவர்களை தலைமையமைச்சராக்குவதில் தி.மு.க. முதன்மைப் பங்கு வகித்தது. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்களோ அல்லது தமிழக தி.மு.க. அரசோ இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் காவிரிப் பிரச்சனையில் தீர்வுகாணும் முயற்சியில் தலைமையமைச்சர் ஈடுபட்டிருப்பதால் நடுவர் மன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென கர்நாடக அரசு நடுவர் மன்றத்தில் முறையிட்டது. ஆனால், அக்கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்க மறுத்தது. இந்திய அரசியல் சட்டத்தின் 262ஆவது பிரிவின்படி நடுவர் மன்றத்தின் அதிகார வரம்பு சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. தலைமையமைச்சரின் நிர்வாக ஆணைகள் எதுவும் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எக்கட்டத்திலும் மீற முடியாது என தமிழக வழக்கறிஞர் வாதமிட்டதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து அதனுடன் ஒத்துழைக்கவோ, அதனுடைய ஆணைகளை நிறைவேற்றவோ கர்நாடகம் தவறியது. அதுமட்டுமல்ல, அப்போது கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேகெளடே காவிரி நடுவர் மன்றத் தலைவர் சித்தாதோஷ் முகர்ஜி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றிருப்பதாகக் குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தமிழகக் கோவில்களுக்கு நடுவர் மன்ற நீதிபதிகள் சென்றபோது அவர்களுக்குப் பரிவட்டம் போன்ற மரியாதைகள் செய்யப்பட்டன. இதையே பரிசுகள் என திசைத்திருப்ப தேவேகெளடா முயன்றார். அவர் கர்நாடகம் முதலமைச்சரான பிறகும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. பிறகு இந்தியாவின் தலைமையமைச்சர் பொறுப்பையும் அவர் ஏற்றார். தலைமையமைச்சராக உள்ளவர் தன்மீது வழக்குத் தொடர்ந்திருப்பதால் நடுவர் மன்றத் தலைவருக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற விசாரணையில் 75% முடிவடைந்துவிட்ட நிலையில் அதன் தலைவர் பதவி விலகவேண்டிய நிலையை ஏற்படுத்தியதின் மூலம் தலைமையமைச்சர் தேவேகெளடே தனது தகைமையை முற்றிலுமாக இழந்துவிட்டார். தேவேகெளடே அவர்களுக்குப் பின் தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்ற குஜ்ரால் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக வரைவுத் திட்டமும், ஆணையமும் உருவாக்கு வதற்காக வழி வகுக்கப்பட்டது. சராசரி மழைக் காலங்களில் காவிரி நீரை முற்றாக கர்நாடகம் தடுத்துவிடாமல் காப்பதற்கு இத்திட்டத்தில் வழிவகுக்கப்பட்டிருந்தது. ஆனால், சில மாதங்கள் மட்டுமே குஜ்ரால் அரசு பதவியில் இருந்ததால் இத்திட்டத்தை செயற்படுத்தவில்லை. அவரைத் தொடர்ந்து தலைமையமைச்சர் பதவியை ஏற்ற வாஜ்பாய் காலத்தில் தமிழகத்தின் நலன்களை முழுமையாகப் பாதிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுத்தார். தலைமையமைச்சரும் 4 மாநில முதல்வர்களும் அடங்கிய ஒரு உயர் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவுக்கு உதவியாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களையும், மத்திய நீர்ப்பாசனத் துறை செயலாளரையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். எனவே, இக்குழுவினால் எத்தகைய முடிவும் எடுக்க முடியவில்லை. காவிரிப் பிரச்சனை தொடங்கிய 1968ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை ஐம்பதாண்டு காலமாக பத்து தலைமையமைச்சர்கள் பதவி வகித்துள்ளார்கள். இவர்கள் யாருமே நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றங்களின் தீர்ப்பையோ மதிக்காத கர்நாடக அரசின் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முன்வராமலும், தமிழகத்திற்கு நீதி வழங்காமலும் தங்களின் தகைமையை அடியோடு சிதைத்துவிட்டனர். இவர்கள் மட்டுமல்ல, தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் அகில இந்தியக் கட்சித் தலைவர்களில் ஒருவர்கூட கர்நாடகத்தின் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் போக்கு என ஒருபோதும் கண்டிக்க முன்வரவில்லை. தங்கள் தகைமையைக் காப்பாற்றுவதைவிட கர்நாடகத் தேர்தலில் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி ஆட்சி அமைக்கவேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது. தங்களின் தகைமையைக் காக்கத் தலைமையமைச்சர்களும், அகில இந்தியத் தலைவர்களும் தவறும்போது மக்கள் அரசியல் சட்டத்தின் மாண்பை மதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், தேசிய ஒருமைப்பாட்டினைக் காக்கவேண்டும் என முழங்குவதும் வீண்! வீண்! வீணே. நன்றி - தினமணி - 13-04-2018
|