2018 பிப்ரவரி 16ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் காவிரிப் பிரச்னையில் இறுதித் தீர்ப்பு அளித்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றினை 6 வாரங்களுக்குள் அதாவது
42 நாட்களுக்குள் அமைக்கவேண்டும் என ஆணைப் பிறப்பித்தது. மார்ச் 29ஆம் தேதியுடன் இந்தக் கெடு முடிவடைந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிப்ரவரி 16ஆம் தேதியன்றோ அல்லது அதையொட்டி இரண்டொரு நாட்களிலோ இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட செயல் திட்டம் scheme)என்பது குறித்த விளக்கத்தை மத்திய அரசு கேட்டுப் பெற்றிருக்கவேண்டும். ஆனால், கெடு முடிவடைகிற நாளில் மத்திய அரசின் நீர்வளத்துறை இத்தகைய விளக்கத்தைக் கேட்டு அளித்துள்ள மனு, மத்திய அரசின் திட்டமிட்ட காலம் கடத்தும் ஏமாற்று நடவடிக்கையாகும். ்காவிரி மேலாண்மை வாரியத்தின் பணிகள் என்ன? அதிகாரம் என்ன? எப்படி செயல்படவேண்டும்? காவிரி மேலாண்மை வாரியத்தின் நிர்வாக, தொழில்நுட்ப அம்சங்களை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். அப்படியே மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டுமானால் கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்படவேண்டும் என்றும் தனது மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்ட சூழலில் செயல்திட்டம் குறித்து அறிவிக்கை வெளியிட்டால் சட்டம், ஒழுங்குப் பிரச்னைகளை உருவாகும் என அஞ்சுவதாகவும், காவிரி விவகாரம் என்பது கர்நாடகத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சனையாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளதாகவும், எனவே காவிரி நடுவர் மன்ற ஆணையின்படி அமைக்கப்படவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாறுபட்ட செயல்திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. காவிரிப் பிரச்னையில் தொடக்கத்திலிருந்தே அடாவடித் தனமாகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும், கர்நாடகம் வாழ் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை மூட்டியும் செயல்படும் கர்நாடகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய மத்திய அரசு அறவழியிலும், நீதி மன்றங்களின் மாண்பை மதித்தும் போராடும் தமிழகத்திற்கு வஞ்சனை இழைக்கிறது. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மார்ச் 19ஆம் தேதியன்று அளித்திருக்கும் முறையீட்டு மனுவில் செயல்திட்டம் என்பது தாவாவை தீர்க்கும் அமைப்பே தவிர, மேலாண்மை வாரியம் அல்ல. அவ்வாறு மேலாண்மை வாரியம் அமைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்” என்று கூறியுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை கொஞ்சமும் மதிக்காமலும், நாடாளுமன்றம் 1956ஆம் ஆண்டில் நிறைவேற்றிய நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம், நதிநீர் தாவாச் சட்டம் ஆகியவற்றை சட்டை செய்யாமலும், நாட்டின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்தின் ஆணையை சிறிதளவு கூட மதிக்காத போக்கிலும் இந்திய அரசும், கர்நாடக அரசும் நடந்து கொள்வதைத்தான் அவைகளின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் 262ஆவது பிரிவு நாடாளுமன்றத்திற்குக் கீழ்க்கண்ட அதிகாரத்தை அளித்துள்ளது. பன் மாநில நதிநீரைப் பயன்படுத்தல், வழங்குதல், கட்டுப்படுத்துதல் ஆகியவைக் குறித்து ஏதேனும் தாவா அல்லது புகார் எழுமானால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்கவே 1956ஆம் ஆண்டு நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம், 1956ஆம் ஆண்டு பன் மாநில நதிநீர் தாவாச் சட்டம் ஆகிய இரு முக்கிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இரு சட்டங்களும் ஒன்றுக்கொன்று நிறைவை உருவாக்குகிற சட்டங்களாகும். ஆனாலும், அவைகளுக்கென்று தனித்தனியான விதி முறைகள் உண்டு. நடுவர் மன்றம், நதிநீர் மேலாண்மை வாரியம் ஆகியவற்றின் அமைப்பு, அதன் தலைவர், உறுப்பினர்கள், அதனுடைய செயல்பாடு, அதிகாரங்கள் ஆகியவைக் குறித்து இந்த இரு சட்டங்களிலும் விரிவாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டத்தை இந்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் அத்தியாயம் 2) பிரிவு 4 1)இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பன் மாநில நதிநீரை முறைப்படுத்துதல், வடிநில வளர்ச்சி ஆகியவைக் குறித்து ஏதாவதொரு மாநிலம் நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டால் மத்திய அரசு அவ்வாறு அமைக்கவேண்டும். அதற்குரிய செயற்பாடுகள் என்ன என்பதையும் தனது அறிவிக்கையின் மூலம் தெரியப்படுத்தவேண்டும். ஆனால், அத்தகைய அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்தாய்வு செய்யவேண்டும்”. பிரிவு 5 (1) நதிநீர் மேலாண்மை வாரியம் தகுதி வாய்ந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை கொண்டதாக அமையும். 2) நீர்ப்பாசனம், மின் பொறியியல், வெள்ளக் கட்டுப்பாடு, படகு போக்குவரத்து, நீர்ப் பாதுகாப்பு, மண்பாதுகாப்பு போன்ற துறைகளில் நிர்வாகத்திறனும், நிதி மேலாண்மையும் கொண்டவர்களாக உறுப்பினர்கள் இருக்கவேண்டும். (10)இச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவ்வப்போது தேவையான ஆலோசனை குழுக்களை வாரியம் அமைத்துக் கொள்ளலாம். அத்தியாயம் 3 பிரிவு (13) நதிநீர் மேலாண்மை வாரியம் கீழ்க்கண்ட செயற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரம் படைத்ததாகும். i. பன் மாநில நதிநீரை முறைப்படுத்துவது, தகராறுகளைத் தீர்த்து வைப்பது, பன் மாநிலங்களுக்கும் பயன் இருக்கும் வகையில் நதிநீரைப் பங்கீட்டுக் கொள்வதில் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல். நீர் சேமிப்பு, கட்டுப்பாடு, நீர்வளத்தை முழுமையாகப் பயன்படுத்துவது, நீர்ப்பாசனம், நீர் வளங்கள், நீர் வடித்தல் போன்றவற்றை செயற்படுத்துதல், புனல் மின் உற்பத்தி திட்டங்களை இயக்குதலும், வளர்ச்சியடையச் செய்தலும், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், படகு போக்குவரத்தைக் கண்காணித்தல், மண் அரிப்பு, காடுகள் அழிப்பு ஆகியவற்றைக் கண்காணித்தல், பன் மாநில ஆற்று நீர் மாசுபடுத்தலைத் தடுத்தல், மேலும் மற்றும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ii. பன் மாநில நதி நீரைக் கண்காணித்துப் பகிர்ந்தளித்தல் போன்றவைக்காக நதிநீர் மேலாண்மை வாரியம் செயல் திட்டங்களையோ (scheme) , பல்நோக்குத் திட்டங்களையோ வகுக்கலாம். இங்கு செயல் திட்டம் (scheme) என குறிப்பிடப்பட்டிருப்பது நீரைப் பகிர்ந்தளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுப்பதற்கு நதிநீர் மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரம் உண்டு என்பதைக் குறிப்பிடவே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு நதிநீர் மேலாண்மை வாரியம் என உச்சநீதிமன்ற ஆணை குறிப்பிடவில்லை. திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது என திரித்துக் கூறுகிறது. உச்சநீதிமன்றத்தின் ஆணையில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு பின்பற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளது. 2007ஆம் ஆண்டில் நடுவர் அளித்தத் தீர்ப்பில் 3 முழுநேர உறுப்பினர்களையும், 6 பகுதிநேர உறுப்பினர்களையும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே நீரைப் பகிர்வது சம்பந்தமாக மேலாண்மை வாரியமே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளது. காவிரியில் நீர் வரத்து எவ்வளவு என்பதையும், அதை மாநிலங்களுக்கு எப்படி, எந்தளவு பகிர்வது என்பதையும் மேலாண்மை வாரியம் முடிவு செய்யும். இதற்காக காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. scheme என்பதற்கு திட்டம் என்பது மட்டும் பொருளல்ல. சூழ்ச்சி என்ற பொருளும் உண்டு. எனவே கர்நாடகமும், மத்திய அரசும் சூழ்ச்சியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துக் கூறுகின்றன. நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டத்தின் 14 (1)பிரிவின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களைக் கலந்தாலோசித்து நதிநீர் வாரியம் பிரிவு 13ன்படி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக அரசிதழில் வெளியிடவேண்டும். பிரிவு (2) நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டத்தின் கீழ் இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் தனது வரம்புக்குரிய பகுதியில் செயற்படுத்தும் உரிமை இந்த வாரியத்திற்கு உண்டு. பிரிவு(3)இச்சட்டத்தின்படி மேலாண்மை வாரியம் மேற்கொள் வதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும். நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டத்தின் 15ஆவது பிரிவு செயல்திட்டங்கள் (schemes) மற்றும் அவற்றை நடைமுறைப் படுத்துவது குறித்து மிக தெளிவாகக் கூறுகிறது. இந்தப் பிரிவுக்கான தலைப்பிலேயே மேலாண்மை வாரியம் வகுக்கும் செயல்திட்டங்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதின் மூலம் மேலாண்மை வாரியம் என்பது உயர் அதிகார அமைப்பு என்பதையும், செயல்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும் அதிகாரம் படைத்தது என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகிறது. அவை வருமாறு- 15 (1) இச்சட்டத்தின் 13 (ஆ) பிரிவின்படி அவ்வப்போது தனது செயற்பாட்டுக்குரிய திட்டங்களை உ ருவாக்கி பன் மாநில நதிநீரை முறைப்படுத்தி வழங்குதல். (2) இவ்வாறு திட்டங்கள் வகுக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடனும், மத்திய அரசுடனும் கலந்தாலோசித்து தேவையானால் மாறுதல் செய்து இத்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். (3) வகுக்கப்பட்ட திட்டம் அல்லது திருத்தப்பட்ட திட்டம் இறுதியானதாகும். மேலாண்மை வாரியத்தில் ஒப்புதல் பெற்ற திட்டமாகும். மேலாண்மை வாரியச் சட்டத்தில் செயல்திட்டம் குறித்து இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் அது புரியாதது போல நடித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்துள்ள முறையீடு என்பது ஆழமான உள்நோக்கத்துடன் நீதியின் மாண்பை சிதைக்கச் செய்யும் முயற்சியாகும். கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காகத் திட்டமிட்டுக் காலம் கடத்துவதற்கு மத்திய அரசு செய்யும் சூழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் இரையாகாது என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இருக்கிறது. எனவே 2007ஆம் ஆண்டில் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசு காலம் கடத்தியபோது, உச்சநீதி மன்றமே நடுவர் மன்றத்தை அமைத்தது. அதைப்போல இப்போதும் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் உச்சநீதி மன்றமே நேரடியாக அமைக்கவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தமிழக விவசாயிகளின் அரை நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நீதி நிலைக்கும். நன்றி - தினமணி - 02-04-2018 |