காவிரி மீண்டும் தீப்பற்றியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பான பிரச்சினையால் கொந்தளித்துப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.
உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவைத் தாண்டியும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காதது, உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது. நீதிமன்றத்தின் செயல்பாடு சரிதானா? உயர்நீதிமன்ற நீதிநாயகம் கே. சந்துரு அவர்களின் நேர்காணல்... உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த அளவுக்குச் சரியானது? இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னால் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்திற்கு எத்தகைய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். உலகத்திலேயே எந்த நாட்டிலும் உச்சநீதிமன்றத்திற்கு இந்த அளவுக்குப் பரந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. நாடா ளுமன்றம், சட்ட சபைகள் இயற்றும் சட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள்தான் இருக்கிறதா என்று சரிபார்க்கும் உச்சபட்ச அதிகாரம், உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயும், மா நிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயும் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம், உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. குடியரசுத் தலைவர் கேட்கும்போது சட்டப் பிரச்சினைகளில் ஆலோசனை வழங்கவும், அதெற்கெல்லாம் மேலாக இந்தியாவிலுள்ள எந்தவொரு நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் அளிக்கக்கூடிய தீர்ப்புகளைச் சீராய்வு செய்வதற்கும் அதற்கு அதிகாரம் இருக்கிறது. உச்சநீதிமன்றம் அளிக்கக்கூடிய தீர்ப்புகள் அனைவரையும் கட்டுப்ப டுத்தக்கூடியவை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் தவறேதும் ஏற்படாது என்று சொல்ல முடியாது. ஆனால், உச்சநீதிமன்றமே தவறிழைத்தால் அதன் தீர்ப்புகளை ரத்து செய்வதற்கு அதற்கு மேலும் ஒரு நீதிமன்றம் இல்லை. எனவே, அந்த நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் தவறென்று நாம் நினைத்தாலும் அதுதான் சட்டம். அதிகபட்சமாக தீர்ப்பளித்த நீதிபதிகளிடமே சீராய்வு மனு போட்டு விளக்கம் கேட்கலாம். அதற்கு மேல் முறையிடுவதற்கு வேறு அமைப்பு இல்லை. இந்தப் புரிதலுடன்தான் எந்தப் பிரச்சினையையும் நாம் அணுக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தீர்ப்பில் எதுவும் சொல்லப்படவில்லை என்கிறார்கள், இது உண்மையா, விளக்கம் அளிக்க முடியுமா? நான்கு மாநிலங்களுக்கும் உரிய நதிநீர் பங்கீட்டை அறிவித்த உச்சநீதிமன்றம், அதை நிர்வகிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்ீ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ிதிட்டம்ீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு உரிய நதிநீர் பங்கீடு கிடைப்பதற்கான மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டிற்கு உண்டான நதிநீர் பங்கீட்டு அளவை குறிப்பிட்டுவிட்டதனால் அதைத் தருவதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தித்தான் ஆகவேண்டும். அதன் பெயர் என்னவாக இருப்பினும் அந்த அமைப்பு இரு மாநிலங் களுக்குமிடையே முறையான பங்கீட்டை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கான மேற்பார்வை அதிகாரத்துடன் நிறைவேற்றுவதற்கான உரிய பலமும் பெற்றிருக்கவேண்டும். தமிழ்நாடு தொடுத்த வழக்கில் முதல்நாள் தலைமை நீதிபதி கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன செய்திருக்க வேண்டும்? நம்முடைய ஆசைகள் அல்லது மனவேகத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களால் செயல்பட முடியாது. அதற்கென்று சில நடைமுறை விதிகள் உள்ளன. மேலும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது இரண்டு தனிநபர்களல்ல. தலா ஆறரைக் கோடி மக்களுள்ள இரு மாநிலங்கள். எனவே இதில், ிஎடுத்தேன் கவிழ்த்தேன்ீ என்று எதையும் தீர்க்க முடியாது. அது தன்னாலானதைச் சரியாகவே செய்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அளவுக்கு உதாசீனப்படுத்தப்படுவது இதுதான் முதல் முறையா, இல்லை, இதற்கு ஏதேனும் முன்னுதாரணங்கள் இருக்கின்றனவா, அப்போது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஒரு சாதாரண உரிமையியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை காவல்துறை உதவியுடன் நிறைவேற்ற முடியும். அப்போது அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தடுக்கக் கூடியவர்களைக் கைது செய்வதற்கும் அந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் தங்களது தீர்ப்புகளை செயல்படுத்தும் சிறப்பு அதிகாரம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதன் மூலமே, தீர்ப்பை நிறைவேற்ற முடியும். இதற்கு முன்னரும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்குகளின் இடைக்கால உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு, தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்த பின்னரே உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது. ஒருமுறை கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டேவின் அமைச்சரவைப் பதவி நீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்போம் என்று சொன்ன பிறகே, நதிநீரைத் திறந்துவிட்டனர். இதேபோல, ஒரு தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவருக்கு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான உத்தரவை அளிப்பதற்கான அதிகாரமும் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு. நன்றி - காமதேனு - 15-04-2018 |