ஆங்கில ஆதிக்கத்திலிருந்து தமிழ் விடுதலை பெறுவதே தமிழரின் விடுதலைக்கு வழிவகுக்கும் மொழிப்போர் வீரர் நாளில் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 15:44

உலகத் தாய்மொழி நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதே  நாளில்தான் வங்காள  தேசம் மக்கள்  மீது  உருதுமொழி திணிக்கப்பட்டபோது  அதை எதிர்த்து  அம்மக்கள் நடத்திய போராட்டத்தின் போது இருவர் உயிரீகம் செய்தனர்.

அந்த நாளை மொழிப்போர் நாளாகவும், உலகத்  தாய்மொழி நாளாகவும் ஐ.நா. பேரவை அறிவித்தது.
ஆனால்,  1937ஆம்  ஆண்டு தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கெதிராக நடைபெற்ற போராட்டத்தில் தாளமுத்து & நடராசன் ஆகிய  இருவர் உயிரீகம் செய்தனர். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிக் காப்புப் போராட்டத்தில் 10 தமிழர்கள் உயிர் துறந்தனர்.  இந்த நாட்களை நியாயமாக ஐ.நா. பேரவை உலகத்  தாய்மொழி நாளாக அறிவித்திருக்கவேண்டும். ஆனால்,   தமிழர்கள் மொழிக் காக்கத் தங்களின் இன்னுயிர்களை  ஈகம் செய்த வரலாறு  ஐ.நா. விற்கு எட்டாத காரணத்தினால் அவ்வாறு  செய்யப்படவில்லை.
தமிழ்மொழியின் தூய்மைக் காக்கவும், பிற மொழிக் கலப்பைத்  தடுக்கவுமான முயற்சி தொல்காப்பியர் காலத்திலேயே  தொடங்கிவிட்டது. தொடர்ந்து  திருவள்ளுவர் முதல் கம்பன் காலம் வரையிலும் அதற்குப் பின்னரும் வடமொழிக்  கலப்பை எதிர்த்து தமிழறிஞர்கள் தொடர்ந்து போராடித்  தமிழின் தனித்தன்மைக்கு  ஊறு நேரிடாமல் காத்திருக்கிறார்கள். சங்கப் பாடல்களிலும், ஐம்பெரும்  காப்பியங்களிலும்  இந்நிலை தொடர்ந்திருக்கிறது. சீத்தலைச் சாத்தனார்  பாடிய  மணிமேகலைக் காப்பியத்தில்  புத்த  சமயத்தின் கருத்துக்களை விரிவாகவே அவர் பதிவு செய்திருக்கிறார்.  புத்தர் தான் போதித்த நெறிகளைப் பாலி மொழியில்தான் பரப்பினார்.  புத்த சமயம் தமிழகத்தில் பரவியபோது பாலி மொழியும்  நுழைந்தது,  சமணம் பரவியபோது பிராகிருதமும், வேத சமயம் பரவியபோது சமற்கிருதமும் அடியெடுத்து  வைத்தன.
மணிமேகலைக் காப்பியம் பாடிய சாத்தனாருக்கு பாலி மொழி  தெரிந்திருக்கவேண்டும்.  அதனால்தான் புத்தர்  போதித்தவற்றை  அவர் ஆழமாக உள்வாங்கி அதைத் தமிழில் மணிமேகலைக் காப்பியத்தில்  பொறித்து  வைத்தார். சாத்தன், சாக்கிய முனி  என்ற பெயர்கள் புத்தருக்குத்  தமிழர் சூட்டிய பெயர்களாகும்.  புத்த  சமயம்  50க்கும் மேற்பட்ட மொழிப் பேசும் மக்களிடையே பரவி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. ஆனால்,  50  மொழிகளிலும் புத்த தருமத்தை அடிப்படையாகக் கொண்ட காப்பியங்கள் எதும் படைக்கப்படவில்லை.  மணிமேகலை  ஒன்றுதான் ஒரே புத்த  சமய காப்பியமாகும்.  எனவேதான் அதை ஜப்பான் மொழி உட்பட பல்வேறு மொழிகளில் பெயர்த்து கொண்டிருக்கிறார்கள். பாலி மொழியில்    புலமைப்பெற்ற சாத்தனார் அம்மொழியில் மணிமேகலைக்  காப்பியத்தைப் பாடாமல்  தமிழில்  பாடியதற்கு ஒரே காரணம் தாய்மொழிப்  பற்றுதான்.
அதைப்போலவே  தான் பாடிய கீதாஞ்சலி  நூலுக்கு  நோபல்  பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் தனது  தாய்மொழியான வங்காள மொழியில்தான்  பாடினார்.  அதை பிறகு ஆங்கிலத்தில்  அவரே  மொழிபெயர்த்தார்.  அவருக்கு  நோபல்  பரிசு  கிடைத்தது. ஆங்கிலம் தெரிந்த அவர்  ஆங்கிலத்திலேயே  மூல  நூலைப் படைத்திருக்கலாம்.  ஆனால், அவர்  தனது  தாய்மொழியில்தான் படைத்தார்.
கி.பி.   600 முதல் 900 வரை பக்தி இலக்கியங்கள் பிறந்த காலமாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர்  பாடிய தேவாரப் பாடல்களும், மாணிக்கவாசகர் பாடிய  திருவாசகமும்,சேக்கிழார் பாடிய பெரியபுராணமும் உட்பட 12 சைவத்  திருமுறைகள்  நம்பியாண்டார்  நம்பியால் தொகுக்கப்பட்டன. 12 வைணவ ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாதமுனிகள் திவ்வியபிரபந்தமாகத்  தொகுத்தளித்தார்.    சமணம், பெளத்தம் தமிழகத்தில் தலைதூக்கி நின்ற காலத்தில் சைவத்தையும், வைணவத்தையும் பரப்பிய இலக்கியங்கள் பக்தி இலக்கியங்களாகும்.
சமண சமயத்தின் கோட்பாடுகள் பிராகிருத மொழியிலும், பெளத்த சமயத்தின் கோட்பாடுகள் பாலி  மொழியிலும் இருந்தன.  எனவே, இவ்விரு  மொழிகளும் தமிழகத்தில் நுழைந்தன. இவற்றுக்கெதிராக சைவம்,  வைணவம் ஆகியவற்றைப் பரப்ப  விரும்பியவர்கள்  தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்து இறைவனைத் துதிக்கத் தீந்தமிழ் பாடல்களைப்  பாடினார்கள்.  இசையோடும்,  பண்னோடும் இவர்கள் பாடிய பாடல்கள் எளிதாக மக்களிடம்  பரவின. இசையும், கலையும், பாவம் என சமணமும், பெளத்தமும் ஒதுக்கின.  எனவே, இசையையும், கலையையும் கருவிகளாகத் தேர்ந்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து  சைவத்தையும், வைணவத்தையும் பரப்பினார்கள். தாய்மொழி உணர்வு அவர்களுக்கு  இருந்த காரணத்தினால் தங்கள் சமயங்களைப் பரப்புவதற்குத் தமிழைக் கருவியாகக்  கைக்கொண்டார்கள். வெற்றியும்  பெற்றார்கள்.
கத்தோலிக்க கிறித்துவ சமயம் போப்பாண்டவரைத் தலைமைக் குருவாக ஏற்றுக்கொண்டு ஒரே  சமயமாக விளங்கி வந்தது. ஆனால், கிறித்துவ  வேதமான பைபிள் இலத்தீன்  மொழியில்தான்  இருந்தது. கிருத்துவ தேவாலயங்களில் பாதிரியார்கள்  இலத்தீன் மொழியில்தான்  வழிபாடு செய்வித்தார்கள்.  ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின்  லூதர் தன்னுடைய தாய்மொழியில்தான் வழிபாடு செய்யவேண்டும்  எனக் கூறி அதற்காக பைபிளை ஜெர்மன் மொழியில் மொழியாக்கம்  செய்தார். மதத் துரோகி  எனக்  குற்றம் சாட்டி அவரை மதத்திலிருந்தே நீக்க போப்பாண்டவர் ஆணைப்  பிறப்பித்தார்.  ஆனால், மார்ட்டின்  லூதர் அடிபணியவில்லை.  தனது தாய்மொழியான ஜெர்மன் மொழியிலேயே வழிபாடுகளை நடத்தத்  தொடங்கினார்.  இதன் விளைவாக ஐரோப்பிய  நாடுகள் பலவற்றிலும் அந்தந்த  நாடுகளின் தாய்மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது.  இவ்வாறு  தங்களின்  தாய்மொழியில் வழிபாடு நடத்தியவர்கள் புரோட்டஸ்டன்ட் என்னும் புதிய கிருத்துவ சமயத்தை  உருவாக்கிக்  கொண்டார்கள்.
சமய வழிபாட்டிற்கு மட்டும் தாய்மொழி என்பதில்லாமல் கல்வி மொழியாகவும்  தாய்மொழித்  திகழவேண்டும். உலகம் முழுவதிலும் பெரிய நாடாக இருந்தாலும், சிறிய  நாடாக இருந்தாலும் தாய்மொழிக் கல்வியே  நிலவுகிறது.  1953ஆம் ஆண்டில் ஐ.நா. கல்வி  &  அறிவியல் & பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ)  உலகில் உள்ள அனைத்து கண்டங்களைச் சேர்ந்த 12 நாடுகளில்  நடத்திய ஆய்வின் மூலம்  கண்டறிந்த  தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்ற கோட்பாட்டினை வலியுறுத்தி வருகிறது.  இந்தியாவைச் சுற்றியிருக்கக் கூடிய பூடான்,  நோபாளம், மியான்மர் போன்ற நாடுகளிலும், கம்போடியா,  தாய்லாந்து,  வியட்நாம், கொரியா,  பிலிப்பைன்ஸ், ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் தாய்மொழிக் கல்விதான் தலைதூக்கி நிற்கிறது. இந்தியாவின்  பிற  மாநிலங்களிலும்  தாய்மொழிகளே  கல்வி மொழிகளாகத் திகழ்கின்றன.  
ஐரோப்பாவில்  உள்ள  28 நாடுகளிலும் தாய்மொழியே கல்வி  மொழியாகத்  திகழ்கிறது. ஐரோப்பாவிலேயே  சின்னஞ்சிறிய  நாடான  பெல்ஜியத்தில் வாழும் மக்களில்  பாதி  பேர் பிரெஞ்சு  மரபையும்,  பாதி  பேர் டச்சு மரபையும்  சேர்ந்தவர்கள்.   இரு இனங்களும் எய்திய கலப்பினால் மொழிக்  கலப்பு ஏற்பட்டு  பிளமிஷ்  என்னும் மொழி உருவாயிற்று.  300 ஆண்டு காலத்திற்கு  முன்  உருவான  இந்த மொழியில்தான் தொடக்கக்  கல்வி  முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இம்மொழியிலேயே அறிவியல் சொற்களும், கலைச்சொற்களும் படைக்கப்பட்டு அனைத்துத்  துறைகளுக்குமான பாட  நூல்களும்  எழுதப்பட்டுள்ளன.  பெல்ஜியத்திற்கு  அண்டை  நாடுகளான  பிரான்சு, ஜெர்மனி  ஆகிய  பெரிய நாடுகளே மொழிகளைத்  தங்களின்  கல்வி மொழியாக்க பெல்ஜிய  மக்கள் விரும்பவில்லை.
கனடா நாட்டில்  உள்ள 13 மாநிலங்களில் 12  மாநிலங்களில் ஆங்கிலம்  அரசோச்சுகிறது. 13ஆவது மாநிலமான கியூபெக்  மாநிலம்  மட்டும் பிரெஞ்சு  மொழிப்  பேசும் மக்களைப்  பெரும்பான்மையாகக்  கொண்ட மாநிலமாகும்.  கனடா நாட்டின்  தேசிய  மொழிகளாக  ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டிற்கும் சமமான தகுதியே அளிக்கப்படுகிறது.  ஆனால்,  கியூபெக் மாநிலம்  பிரெஞ்சு மொழிப்  பேசும்  மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாகும். எனவே, அவர்கள் பிரெஞ்சு மொழியையே மட்டுமே பயிற்சி மொழியாக, ஆட்சிமொழியாக ஆக்கிக் கொண்டுள்ளனர்.  அம்மாநிலத்தில் குடியேறிய பிற மொழிப் பேசும் மக்கள் தங்களது குழந்தைகளை  ஆங்கிலவழிக்  கல்வி  நிலையங்களுக்கு அனுப்பியபோது, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்  கொண்டவர்கள் மட்டுமே ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர முடியும். மற்றவர்கள்  அனைவரும் பிரெஞ்சு வழிக்  கல்வி நிலையங்களிலேயே சேரவேண்டும் என கியூபெக்  அரசு  ஆணைப்  பிறப்பித்துள்ளது.
ஆனால்,  தமிழ்நாட்டில்  இதற்கு நேர்மாறான  நிலைமை  உள்ளது. தொடக்கக்  கல்வி முதல்  பல்கலைக்கழக உயர்பட்டம் வரை தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெற முடியும் என்ற  இழி நிலை  தமிழகத்தில்  மட்டுமே தொடர்கிறது.
உலக செவ்வியல் மொழிகளான தமிழ், சமற்கிருதம்,  சீனம், கிரேக்கம், இலத்தீன்  போன்றவற்றில் இன்றளவும் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும்  சீரிளமைத் திறனோடு திகழும் மொழி  தமிழ் ஒன்று  மட்டுமே. மற்ற செவ்வியல் மொழிகளெல்லாம்  பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும்  உரு  மாற்றங்களை  அடைந்துள்ளன.  பண்டைய சீனமோ,  கிரேக்கமோ,  இலத்தீனோ, சமற்கிருதமோ  இன்று  இல்லை. திருவள்ளுவர்  எந்த மொழியில்  பேசினாரோ,  அதே மொழியில் இன்றளவும் நாமும் பேசுகிறோம்.  எழுத்துகள்  மட்டும் காலத்திற்கேற்ற வடிவ மாறுதல்களைக் கொண்டுள்ளன.  இந்தப் பெருமை நமக்கு  மட்டுமே உண்டு.  
ஆங்கிலம் கற்றால்தான்  அறிவியல்  துறையில் முன்னேற  முடியும் என்ற  தவறான  கண்ணோட்டம்  நம்  மக்கள்  மத்தியில் உள்ளது.  ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள்  ஆங்கிலத்தின் துணை இல்லாமையே  அறிவியலில்  பெரும் சாதனைகளைப் படைத்துள்ளன. அந்தந்த தாய்மொழிகள்தாம் இதற்குக் காரணமாகும்.  
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடனும், அறிவாற்றலுடனும் திகழுகின்றன. புட்டிப்பால் புகட்டப்பட்டு வளரும் குழந்தைகள் நோஞ்சான்களாகவும்,  அறிவுத்திறன்  குன்றியவர்களாகவும்  விளங்குவதை நடைமுறையில்  நாம்  பார்க்கிறோம்.  அதைப்போலதான்  தாய்மொழிக் கல்வி  என்பது  மாணவர்களின் புரிதல் திறனை வளர்க்கிறது. சுய சிந்தனையைப்  பெருக்குகிறது.  வீட்டில்  பேசப்படும் மொழியே கல்வி மொழியாக இருப்பதால்  குழந்தைகளின்  கல்வித்  திறன் மேம்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தாய்மொழிக் கல்வி அந்த மொழியை அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. நம்முடைய  குழந்தைகள்,  நம்முடைய  தாய்மொழியான  தமிழில் கல்வி கற்பார்களேயானால்  தமிழ்மொழித்  தொடர்ந்து  புழக்கத்தில் உள்ள மொழியாக நீடித்துத் தலைமுறை தலைமுறையாகத் தமிழைப் பாதுகாக்கும். சங்கிலித் தொடர்போல இந்தப்  பிணைப்பு நீடித்து நிற்கும்.  ஆனால்,  ஆங்கிலவழிக்  கல்வி என்பது நமது குழந்தைகளை நமது பாரம்பரியத்திலிருந்து துண்டித்து அந்நியப் படுத்திவிடும்.  உலகில் பல மொழிகள் அழிந்ததற்கு இதுதான்  காரணமாகும்.
1937ஆம்  ஆண்டில்  ஆங்கிலேயர்  ஆட்சியில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில்  தமிழ் கல்வி  மொழியாக  ஆக்கப்பட்டது.  1967ஆம் ஆண்டுவரை இந்நிலையில் மாற்றம் இல்லை.  காமராசர்  முதலமைச்சராக  இருந்தபோது 1956ஆம் ஆண்டு ஆட்சிமொழியாகத்  தமிழை  ஆக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.  கல்லூரியில்  தமிழைப் பாடமொழியாக்கும்  முயற்சிகள்  தொடங்கப்பட்டன. சென்னை,  கோவை உட்பட  பல  நகரங்களில்  சில கல்லூரிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டுத்  தமிழ்வழிக்  கல்வி கற்பிக்கப்பட்டது.  இந்த  முயற்சி மேலும் கொண்டு  செல்லப்படாமல்  அரசியல்  சூழ்நிலை  மாறியது. 24-01-1968இல் அறிஞர்  அண்ணா  முதலமைச்சராக இருந்தபோது  பயிற்று மொழியாக  வட்டார  மொழி அல்லது தாய்மொழி இருக்கவேண்டும். இரண்டாவது  மொழியாக  ஆங்கிலம்  இருக்கும் என  அரசாணைப்  பிறப்பிக்கப்பட்டது.  அந்த ஆணையில்  தமிழே பயிற்றுமொழி ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக  இருக்கும் என்று  தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால்  கடந்த  50 ஆண்டு காலமாகத் தமிழ் மொழியைக் காக்க  நாம்  போராடவேண்டிய  தேவை ஏற்பட்டிருக்காது.
31-01-1971இல்  மரு. ஏ. இலட்சுமணசாமி  முதலியார்  தலைமையிலான கல்விக்குழு பெற்றோரின் விருப்பத்திற்கு  பயிற்று மொழியை விடுதல் வேண்டும்”  என்ற  அளித்தப்  பரிந்துரையை  தமிழக அரசு செயல்படுத்திய  காரணத்தினால்  ஆங்கில வழிக் கல்வி பரவியது.  புற்றீசல்  போல தனியார் துறையில் ஏராளமான ஆங்கிலவழிப் பள்ளிகள்  முளைத்துப் பெருகின. கல்வி நீரோடையை இப்பள்ளிகள் வணிகமயமாக்கிவிட்டன. அனைவருக்கும்  இலவச  கல்வி என்பது கனவானது. பணம் படைத்தோரின்  வீட்டுக்  குழந்தைகளுக்கே கல்வி  என்பது  நடைமுறையானது.  ஏழை,  எளிய  குழந்தைகள் கட்டணமில்லாமல் படித்த அரசுப் பள்ளிகள்  வரிசையாக மூடப்பட்டன.  அவ்வாறு மூடப்பட்ட  இடங்களில்  தனியார்  பள்ளிகள் பெருகின.
2013-14 கல்வி ஆண்டு முதல்  தேவைப்படும் அரசுப் பள்ளிகளில்  ஆங்கிலவழிப்  பிரிவுகள்  தொடங்கப்படும் என தமிழக அரசு  பிறப்பித்த உத்தரவின்  விளைவாக அப்பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள்  தொடங்கப்பட்டு ஆண்டுக்காண்டு   பெருகின.  இதன் விளைவாகத் தமிழ்வழியில் கல்வி கற்றுவந்த  நமது  மாணவர்களில் 1.5இலட்சம்  பேர்  ஆண்டுதோறும் ஆங்கில வழிப்பிரிவுக்கு மாறினார்கள்.  
தமிழ்வழிக்  கல்வியைக் கட்டாயமாக்கினால் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிப் பாடத்திட்டத்திற்கு மாறுவோம் என ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள் மிரட்டுகின்றன. இப்பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே  கல்விமொழியாக இருக்கும். இந்தியும் கற்பிக்கப்படும். தமிழ் ஒரு பாடமாகக் கூட கற்பிக்கப்படமாட்டாது.  சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மூலம்  தமிழ்நாட்டு  மக்களின்  கல்வி உரிமையில்  இந்திய அரசு தலையிட்டு ஆதிக்கம்  செலுத்தும்  நிலை  உருவாகிவிட்டது.  
உலக  செவ்வியல் மொழிகளாக விளங்கிய  மொழிகள்  யாவும்  பேச்சு வழக்கை  இழந்துவிட்டன. முதல்  செம்மொழியான தமிழ்  கல்விமொழியாகாவிட்டால்  நமது மொழியும் நாளடைவில் பேச்சு  வழக்கை  இழக்கும். வேகமாக மறைந்துவரும்  மொழிகளில் ஒன்றாகி  மறையும் சூழலை  உருவாகும். ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து நாம்  விடுதலைப் பெற்றாலும் நமது  மொழி  இன்னமும்  ஆங்கிலத்திற்கு  அடிமையாக  உள்ளது.  தமிழ்மொழி  சுதந்திரம்  பெற்றால்தான்  தமிழர்கள்  சுதந்திர  மனிதர்களாவார்கள். மொழிச்  சுதந்திரம் பெற்றால்தான்  நமது சுதந்திரம்  முழுமைப் பெறும். இல்லையேல்  மொழி  அடிமைத்தனம் நீடிக்கும்.  நம்மை  நிரந்தரமாக அந்நியமொழியின்  அடிமைகளாக்கும்.  

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.