இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அண்டை நாடுகளான பர்மா, இலங்கை, மாலத்தீவுகள் போன்றவற்றையும் தங்கள் பேரரசின் கீழ்க் கொண்டுவந்தார்கள். மற்றும் நேபாளம், பூடான், சிக்கிம் போன்ற மன்னராட்சி நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்துமாக்கடல் ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப்போராட்டத்தின் விளைவாக மேற்கண்ட நாடுகளும் விடுதலைப்பெற்றன. எனவே, அந்நாடுகள் இந்தியாவை சார்ந்தே இயங்கின. உலக அரங்கில் இந்தியாவின் தலைமையையேற்றுப் பின்பற்றின. ஆனால், இதெல்லாம் பகற் கனவாக, பழங்கதையாக மறைந்துவிட்டன. இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், அதிலிருந்து இந்தியாவின் உதவியுடன் பிரிந்து உருவான வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற எந்த அண்டை நாடும் இந்தியாவுடன் நட்புறவாக இல்லை என்பதோடு அவை சீனாவுடன் மிக நெருக்கமான நட்புறவு கொண்ட நாடுகளாக மாறிவிட்டன என்பது மறைக்க முடியாத அப்பட்டமான உண்மையாகும். ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் பல நாடுகளைக் கொண்ட "நடுநிலை நாடுகள் அமைப்பின்" உருவாக்கத்திற்கு இந்தியாவின் முதலாவது தலைமையமைச்சர் நேரு பெரும் காரணமாவார். அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசுகளின் தலைமையில் இரு பெரும் முகாம்கள் உலகில் இயங்கி வந்தன. ஆனால், இவ்விரு முகாம்களுக்கு மாற்றாக மூன்றாவது முகாமாக நடுநிலை நாடுகள் அமைப்பு விளங்கியது. மூன்றாவது உலகப் போர் மூளவிருந்ததை இந்த அமைப்புத் தவிர்த்தது. இந்த முகாமின் உருவாக்கத்தில் நேருவின் தலைமையையேற்று தென்னாசிய நாடுகள் அவருக்குத் துணை நின்றன. ஆனால், இப்போது அதே நாடுகள் இந்தியாவிடமிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டன. இந்துமாக்கடலும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை. தனது பாட்டனார் நேரு, தாயார் இந்திராகாந்தி ஆகியோரால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை நாடுகள் அமைப்பைப் போன்று ஒரு அமைப்பை உருவாக்கி தானும் வரலாற்றில் இடம்பெற வேண்டுமென நினைத்து பிரதமர் ராஜீவ் உருவாக்கிய தென்னாசிய அமைப்பு முற்றிலுமாக செயலற்றுவிட்டது. மூத்த அண்ணாவின் போக்கில் இந்தியா நடந்து கொண்டதே இதற்குக் காரணமாகும். சின்னஞ்சிறிய நாடான மாலத்தீவு தனது உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவதை விரும்பவில்லை. தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக மாலத்தீவின் அதிபர் யாமின் அவசரநிலையை அறிவித்தார். அதை நீடிக்கவேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை வற்புறுத்தியது. ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்ற பழமொழிக்கேற்ப அவசரநிலையை உடனடியாக மேலும் நீடித்ததோடு, தன்னுடைய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி நிற்குமாறு இந்தியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. அந்தமான் தீவுக்கருகே இந்தியக் கடற்படை சார்பில் 16 நாடுகளின் கடற்படை ஒத்திகையில் கலந்துகொள்ளவேண்டும் என மாலத்தீவுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த அழைப்பையும் ஏற்க மறுத்துவிட்டது மாலத்தீவு. அதே வேளையில் சீனாவுடன் அதனுடைய நட்புறவு நாளுக்குநாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. சீனாவின் கடற்படைக் கப்பல்கள் தனது துறைமுகங்களுக்கு வந்துசெல்ல மாலத்தீவு அனுமதித்துள்ளது. மாலத்தீவில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக இந்திய நிறுவனம் ஒன்றிற்கு அளித்த அனுமதியை மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த அனுமதியை சீனாவுக்கு வழங்கியுள்ளார். சீனா திட்டமிட்டுள்ள கடல் பட்டுப்பாதைத் திட்டத்தில் மாலத்தீவும் இணைந்துள்ளது. இதன்மூலம் சீனப் போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் மாலத்தீவுக்கு வந்து போகும் உரிமையைப் பெற்றிருக்கின்றன. சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாட்டினையும் மாலத்தீவு செய்துள்ளது. இதன்மூலம் மாலத்தீவின் சந்தை சீனப் பொருட்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக் கூட்டத்தில் 20 தீவுகள் வரை சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அண்டை நாடான நேபாளத்தில் புதிதாக பதவியேற்றுள்ள இடதுசாரி அரசின் தலைமையமைச்சர் சர்மா ஒலி சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருக்கமான நட்புறவுக் கொண்டிருக்கிறார். சீனாவும், நேபாளமும் அண்மையில் 10 உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளன. பொருளாதார ரீதி மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் இந்த உடன்பாடுகள் சீனா & நேபாள நட்புறவை மேலும் நெருக்கமாக்கி உள்ளன. நேபாளத்தில் மன்னராட்சி நிலவியபோது அங்கு நடைபெற்ற மக்களாட்சி முறைப் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. ஆனால், பிற்காலத்தில் இந்தியாவின் அணுகுமுறையைத் தன் மூப்புப் போக்காக நேபாள அரசியல்வாதிகள் கருதினார்கள். இப்போது நேபாளத்தில் இடதுசாரிகள் அரசும், இந்தியாவில் இந்துத்துவா அரசும் இருப்பது என்பது இரு நாடுகளுக்கிடையேயுள்ள உறவு மேலும் சீர்கேடு அடைவதற்கும் அதை சீனா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. வங்கதேச விடுதலைப் போருக்கு இந்தியா செய்த உதவியினால் உருவான நெருங்கிய நட்புறவு இப்போது குறைந்துவிட்டது. அண்மையில் வங்க அமைச்சரான அசாநுல் ஹக் இனியு பேசும்போது ்மதச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கையில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். இந்தியாவும் அதையே ஏற்றுக்கொண்டிருந்தது. வங்காளத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சமூகம் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறது. அந்தச் சமூகம் மீது ஏவப்படுகிற வன்முறை வங்கத்தில் வேண்டாத ஒரு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மத அடிப்படை அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மத வேறுபாடுகளுக்கப்பால் மொழி அடைப்படையில் அடையாளம் காண்பதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயுள்ள தீஸ்தா நதிநீர்ப் பிரச்சனை மற்றும் வணிகப் பிரச்சனைகள் உள்ளன. நீண்டகாலமாக இவைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக சீனாவுடனான வங்கதேச நட்புறவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வங்கதேசத்தில் சிட்டகாங் ஆழ்கடல் துறைமுக வளர்ச்சித் திட்டம் சீனாவின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இலங்கையில் நடைபெறுவது ஈழத் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பேயாகும்” என முன்னாள் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் 1983ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டு இலங்கை அரசை எச்சரித்தார். அதைத் தொடர்ந்து மூத்த இராசதந்திரியான ஜி. பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசுடன் பேச வைத்தார். இதன் விளைவாக ஈழத் தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள அரசுக்குமிடையே உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அந்த உடன்பாட்டிலிருந்து இலங்கை அரசு பின்வாங்கத் தொடங்கியவுடன் போராளிக் குழுக்களை இந்தியாவுக்கு அழைத்து இராணுவப் பயிற்சிக் கொடுக்கச் செய்தார். அதற்கடுத்தக் கட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்குப்பின் தலைமையமைச்சரான இராஜீவ்காந்தி அதற்கு நேர் மாறான பாதையில் பின்பற்றி ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசை திருப்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மன்மோகன் சிங் ஆட்சியிலும் அதுவே தொடர்ந்தது. இதன் விளைவாக இலங்கையின் அதிபராக இராஜபக்சே இருந்தபோது சீனாவுடன் நெருக்கமான நட்புறவுக் கொண்டார். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவாமல் இருக்கவேண்டுமானால் சீனாவுடன் நெருக்கமான நட்புறவுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தியா தன்னுடைய வழிக்குவரும் என்ற இராஜபக்சேயின் திட்டம் இனிதே நிறைவேறியது. அதன் விளைவாக இலங்கையின் ஹம்பன்தொட்டாவில் கடற்படைத் தளம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பில் நிற்கின்றன. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றிவிட்டது. மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் கப்பல் போக்குவரத்து இந்துமாக்கடல் வழியேதான் நடைபெறுகிறது. எனவே, இந்துமாக்கடலின் ஆதிக்கம் தன்வசம் இருக்கவேண்டும் என இந்தியாவின் திட்டத்தை இலங்கையும், மாலத்தீவும், மியான்மரும், வங்கதேசமும், பாகிஸ்தானும் செயலற்றதாக்கிவிட்டன. இந்நாடுகள் அனைத்திலும் சீனாவின் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவைச் சுற்றி இந்நாடுகளின் வழியாக சீனாவின் முற்றுகை வளையம் இறுகி வருகிறது. இதைக்கண்டு இந்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது. பல்வேறு மதங்கள், பல மொழிப்பேசும் மக்கள், பல்வேறு பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட தென்னாசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவு நீடித்தால்தான் உலக அரங்கில் இந்தியா மதிக்கப்படும். இந்த உண்மையை இந்தியா உணரவேண்டும். இந்தியாவிலேயே பல்வேறு மொழிப் பேசும் மக்களும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும், பல்வேறு பண்பாடுகளும் நிலவுவதை மதிக்காமல் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பதை நிலைநிறுத்த நடைபெறும் முயற்சி உள்நாட்டில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதோடு அண்டை நாடுகள் அனைத்தையும் மேலும் மேலும் அந்நியப்படுத்திவிடும். பல்வேறு மொழிகளையும், அவற்றின் அடிப்படையில் அமைந்த பண்பாடுகளையும் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேலும் மேலும் நெருக்கமான வலுவான உறவு கொண்டு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் ஒன்றிணைந்து வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தென்னாசிய நாடுகளில் அந்த முயற்சி தோல்வியடைந்திருப்பதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? அண்டை நாடுகளில் சீனாவைக் காலூன்ற வைத்ததில் காங்கிரசுக் கட்சிக்கு எவ்வளவு பங்குண்டோ? அதற்குக் கொஞ்சமும் குறையாத பங்கு பா.ஜ.க. ஆட்சிக்கும் உண்டு. நன்றி - தினமணி - 12-03-2018. |