சிங்களப் பேரினவாத நாகம் மீண்டும் படமெடுத்து நஞ்சு கக்கி உள்ளது. இதன் விளைவாக இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 மசூதிகள், 32 வீடுகள், 72 கடைகள் சிங்கள வெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இக்கலவரம் மேலும் பல பகுதிகளுக்குப் பரவக் கூடும் என அஞ்சிய இலங்கை குடியரசுத் தலைவர் சிறீசேனா உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்து 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்வது என முடிவெடுத்தார். முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குக் காரணம் மதவெறி மட்டுமல்ல, இனவெறியும் காரணமாகும். முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் அவர்களும் தமிழர்களே என்பதுதான் இந்தக் கலவரங்களுக்குக் காரணமாகும். 2009ஆம் ஆண்டுவரையில் பிரித்தாலும் சூழ்ச்சியைக் கையாண்டு முஸ்லிம்களை ஈழத் தமிழர்களுடன் சேரவிடாமல் தடுத்துவந்த சிங்கள பேரினவாதம் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டிலும், 2016ஆம் ஆண்டிலும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட கலவரங்களைச் சிங்களவெறியர்கள் நடத்தினார்கள். 1948ஆம் ஆண்டு இலங்கை விடுதலைப் பெற்றபோது இந்திய வம்சாவழித் தமிழர்கள் மீது சிங்களர் குறி வைத்தார்கள். இலங்கையில் இரப்பர், தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களை ஆங்கிலேய அரசு அழைத்துச் சென்றது. கப்பல் கப்பலாக ஆட்டுமந்தைகளைப் போல இலங்கை வந்தடைந்த தமிழர்கள் தங்களின் கடும் உழைப்பினால் இரப்பர், தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். இலங்கையின் தேசிய வருமானத்தில் 60% வருமானம் இந்திய வம்சாவளி தமிழர்களால் கிடைப்பதாகும். ஆனாலும், நன்றிகொன்ற சிங்கள அரசு அவர்களின் குடியுரிமையைப் பறித்தது. ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக அந்த நாட்டில் வாழ்ந்து அதை வளப்படுத்திய தமிழர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத்தரவேண்டிய இந்திய அரசு தலையிட மறுத்தது. 1964ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி ஏறத்தாழ 5இலட்சம் தமிழர்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இன்றுவரை அவர்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள். பிரதமராக இந்திரா இருந்த காலத்திலும், மேலும் 1இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்ப நேரிட்டது. இதன் பின்னர், சிங்களவெறியர்களின் பார்வை ஈழத் தமிழர்கள் மீது திரும்பியது. சிங்கள வெறியர்கள் இராணுவ துணையுடன் தமிழர்களுக்கெதிராகத் திட்டமிட்ட இனப்படுகொலையில் ஈடுபட்டார்கள். 60ஆண்டுகாலத்திற்கு மேலாக நடைபெற்ற தமிழ்இன அழிப்பில் 5இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்கள் உயிர்களைத் துறந்தார்கள். 15இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் ஏதிலிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். உள்நாட்டில் வாழும் தமிழர்கள் உரிமையற்றவர்களாக சொல்லொண்ணாத துயரங்களுக்கிடையே வாழ்கிறார்கள். ஈழத் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டதாகக் கருதும் சிங்களப் பேரினவாதிகள் அடுத்து இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள். முதலில் மலையகத் தமிழர்களை விரட்டியடித்தார்கள். அடுத்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். இப்போது முஸ்லிம் களுக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள். அண்மையில் இலங்கைக்குச் சென்று தமிழர் பகுதியெங்கும் சுற்றுப்பயணம் செய்து அங்கு வாழும் தமிழர்கள் பலரை நேரில் கண்டும், கேட்டறிந்தும் திரும்பி உள்ளார் நண்பர் குமரன். அவர்கள் தெரிவித்த கீழ்க்கண்ட செய்திகள் அதிர்ச்சியையும், துயரத்தையும் மூட்டியுள்ளன. திரிகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த நிலைமாறி சிங்கள குடியேற்றத்தினால் தமிழர்கள் சிறுபான்மை யினராக ஆக்கப்பட்டார்கள். கிழக்கு மாநில முதலமைச்சராக ஒரு முஸ்லிமை பதவியேற்க வைத்தார்கள். தமிழர்கள் & முஸ்லிம்கள் இணைந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமாகும். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு இயங்கும் கிழக்கு மாநில அரசினால் தலைநகரமான திரிகோணமலையில் வாழும் முஸ்லிம்களைக் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ முடியவில்லை. திரிகோணமலை மட்டுமல்ல, மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்கு வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் கல்வியறிவு பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். எதை இழந்தாலும் எத்தகைய வறுமையில் வாழ நேர்ந்தாலும் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைப் புகட்டுவதைத் தங்களது குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். கல்வியறிவு பெற்றதனால் தமிழர்கள் அரசுப் பணிகளில் முதலிடம் பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத சிங்களப் பேரினவாதிகள் சிங்களம் கற்றாலொழிய அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். சிங்கள இராணுவத்திலேயோ, காவல்துறையிலேயோ தமிழர்களை சேர்ப்பதில்லை. ஆனால், இன்றைக்குத் தமிழர்கள் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் மிகக் கீழான நிலைக்கு ஆளாகியிருக்கின்றன. போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஒரே ஆசிரியர் பல பாடங்களை நடத்தவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். பள்ளிக்கூடங்களுக்கு அருகே உள்ள கடைகளில் கஞ்சா கலந்த மிட்டாய்கள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி உண்டு பழகிய மாணவர்கள் நாளடைவில் கஞ்சா போதைக்கு அடிமையாக்கப்படுகிறார்கள். உணவு விடுதிகளில் விற்கப்படும் கொத்து ரொட்டிகளில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதை வாங்கி உண்ணும் ஆண்களும், பெண்களும் நாளடைவில் மலடாகிறார்கள். தமிழர்களின் இனப்பெருக்கம் மறைமுகமாக அழிக்கப்படுகிறது. இதுவும் ஒரு இனப்படுகொலையே ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் கடைகளையும், உணவு விடுதிகளையும் மற்றும் வணிக நிலையங்களையும் திறந்திருக்கிறார்கள். இதன் விளைவாக தமிழ் வணிகர்கள் நொடித்துப் போய் தங்களின் கடைகளை மூடவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேளாண்மை வேளாண்மைத் தொழில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களின் நிலங்கள் இராணுவத் தேவைக்கென்று பறிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்து 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மேலும்மேலும் இராணுவம் குவிக்கப்பட்டு மேலும்மேலும் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. மக்களுடைய காணிகள் மட்டுமல்ல, கோவில்கள், தேவாலயங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலங்களும் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அகதிகளாகப் பிற நாடுகளுக்கு வெளியேறியவர்களின் நிலங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது. வானம் பார்த்த நிலம் & மழை பெய்தால் மட்டுமே வேளாண்மை செய்ய முடியும். மழைபெய்து வேளாண்மை செய்தாலும் அறுவடை செய்வதை விற்க முடியாது. சிங்கள வணிகர்கள் கணக்குப் பார்த்து கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அதை மீற முடியாது. உழவர்களின் ஆடு, மாடுகளை இராணுவம் பறித்துக்கொண்டுப் போய்கிறது. அவற்றிற்கு தீவனம் போடக்கூட வழி கிடையாது. இவற்றின் மூலம் வருமானம் கிடைக்கவில்லையென்பதால் உழவர்களும் அவற்றைப் பராமரிப்பதில்லை. கால்நடைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றன. வேளாண்மை செய்ய முடியாத தமிழர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இராணுவத்தின் எடுபிடி வேலைகளுக்கும் மற்றும் சிங்கள நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வேலைப் பார்த்து பிழைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடித்தல் தமிழர் பகுதிகளில் வேளாண்மையும், மீன்பிடித்தலும் ஆகிய இரண்டுமே முக்கிய தொழில்களாகும். தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு தொழில்கள் எதையும் சிங்கள அரசு தொடக்கவில்லை. எனவே, அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்பு கிடையாது. ஆனால், தற்போது மீன்பிடித் தொழிலையும் தமிழர்கள் செய்ய முடியவில்லை. தமிழர் கடற்கரை நெடுகிலும் ஏராளமான சிங்கள மீனவர்கள் குடியேறி பெரும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கிறார்கள். சிறிய படகுகளில் செல்லும் தமிழர் மீனவர்களுக்குப் போதுமான அளவு மீன் கிடைப்பதில்லை. மேலும் சிங்கள மீனவர்களும், சிங்கள கடற்படையும் அவர்களை அச்சுறுத்தி விரட்டிகிறார்கள். எனவே, வேறு வழியில்லாமல் தமிழர் மீனவர்கள் சிங்கள மீனவர்களிடம் வேலைப் பார்த்துத் தீரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். தலைமன்னார் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியைப் பறவைகளின் சரணாலயம் என அறிவித்து அங்கு மீன்பிடிப்பதைச் சிங்கள அரசு தடை செய்துவிட்டது. மீன்பிடித் தொழிலிலும் சிங்கள மீனவர்களின் ஆதிக்கமும், இராணுவ வீரர்களின் தலையீடும் உள்ளது. மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை நேரடியாக விற்க முடியாது. சிங்களவர்களிடம்தான் மொத்தமாகக் கொடுத்துவிட்டு அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இராணுவம் வாங்கும் மீன்களுக்குரிய பணம் கிடைத்தால் அது பெரும் பேறாகும். பெரும்பாலும் பணம் கொடுக்காமலேயே மீன்களை அள்ளிச் சென்றுவிடுவார்கள். கொடுமையான வட்டி 2009ஆம் ஆண்டில் போர் முடிந்தப்பிறகு தமிழர் பகுதியெங்கும் ஏராளமான நிதி நிறுவனங்களைச் சிங்களர்கள் திறந்திருக்கிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தமிழர்களுக்கு இந்த நிறுவனங்கள் ஆசை வார்த்தைக் காட்டி கடன் தருகின்றனர். வட்டி விகிதம் மிகக் கொடுமையானது. 28% வட்டி என கடன் பத்திரத்தில் குறிப்பிட்டாலும் 70% வட்டி என்று எழுதப்படாத விதியாகிவிட்டது. தொடர்ந்து மாதாமாதம் வட்டிக் கட்டாவிட்டால் குடியிருக்கும் வீட்டையோ அல்லது நிலத்தையோ பறித்துக்கொள்கிறார்கள். இதைவிடக் கொடுமையாக அந்த வீட்டைச் சேர்ந்தப் பெண்களைத் தங்களது ஆசை நாயகிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். இவற்றின் விளைவாகப் பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கெதிராக அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சமூக நலத் திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துமனைகள், குடியிருப்புகள் போன்றவற்றைக் கட்டுவதற்காக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதியுதவி சிங்கள அரசுக்குக் கிடைக்கிறது. ஆனால், தமிழர்ப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுவதில்லை. இராணுவத் தேவைக்கான சாலைகள் மட்டுமே அமைக்கப்படுகின்றன. இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் அவர்களின் குடும்பங்கள் குடியேறுகின்றன. மறைமுகமாகத் தமிழர் மண்ணைப் பறிக்கும் செயல் மட்டுமல்ல, தமிழ் மண்ணில் சிங்களரைக் குடியேற்றும் சூழ்ச்சி நிறைந்த திட்டமுமாகும். இந்திய அரசு உள்பட பல்வேறு நாடுகளின் அரசுகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உதவுகின்றன. ஆனால், இலங்கை அரசு ஒரு வீடு கட்டுவதற்கு இலங்கைப் பணத்தில் ரூ. 5 இலட்சம் (இந்திய ரூபாய் 2.5இலட்சம்) மட்டுமே தருகிறது. அதுவும் அவர்கள் அளிக்கும் திட்டத்தின்படி கட்டவேண்டும். இந்தப் பணத்தைக் கொண்டு இரண்டே அறைகள் கொண்ட வீடுகளை மட்டுமே கட்ட முடியும். எனவே, இம்மக்கள் வெளியில் கடன்வாங்கி வீடுகளைக் கட்டுகிறார்கள். ஆனால், கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார்கள். கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்து குடும்பத்துடன் வீட்டை வெளியேறி காடுகளில் வாழவேண்டிய நிலைமையில் உள்ளார்கள். போரினால் இடிந்தும், தகர்ந்தும் கிடக்கும் பள்ளிக்கூடங்களுக்குத் தமிழ்க் குழந்தைகள் செல்லவேண்டிய இரங்கத்தக்க சூழல் தொடர்கிறது. கரடுமுரடானப் பாதைகளில் மாணவர்கள் நடந்தே செல்லவேண்டும். பள்ளிக்கூடங்களில் சோதனை சாலைகளோ, அவற்றிற்கேற்ற கருவிகளோ கிடையாது. போதுமான ஆசிரியர்களும் இல்லாமல் மாணவர்களின் கல்வித்தரம் சீரழிந்துகொண்டே இருக்கிறது. மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களோ, மருந்துகளோ கிடையாது. குழந்தைப் பேற்றுக்காக இங்கு செல்லும் தமிழ்ப் பெண்களுக்கு அவர்களின் அனுமதி இல்லாமலேயே கருத்தடை செய்யப்படுகிறது. இதுவும் ஒருவகையான தமிழின அழிப்பேயாகும். போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால் ஆகியவற்றை வழங்கும் தொண்டு கிறித்துவ சமூக சேவை நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுகிறது. ஆனால், இது எப்போதும் இராணுவத்தின் கண்காணிப்பிலேயே இருக்கிறது. இளைஞர்கள் சிகிச்சைப் பெற வந்தால் அவர்கள் புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு இராணுவத்தினால் கைது செய்து கொண்டு செல்லப்படுகிறார்கள். இராணுவக் கொடுமைகள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் 2 இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 5 தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் தமிழர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது. குடும்ப நிகழ்வுக்காக ஏதாவதொரு வீட்டில் 10 தமிழர்கள் கூடினால்கூட இராணுவ வீரர்கள் வீட்டிற்குள் புகுந்து விசாரணை நடத்துகிறார்கள். இளைஞர்களுக்கு இராணுவமே கஞ்சா விற்கிறது. இதன்மூலம் அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்து என்றைக்கும் போர் குணமே எழாத அளவுக்கு மயக்க நிலையில் வைக்கப்படுகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கஞ்சா போதை மயக்கத்தில் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாகும் நிலை பரவலாக உள்ளது. இதற்கான கொலை வழக்குகளில் சிக்கி 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் உள்ளார்கள். அடுத்தத் தலைமுறையினர் அறிவு ரீதியாக தமிழன் என்ற உணர்வோடு வளர்வதைத் தடுக்க இராணுவம் இவ்வாறு திட்டமிட்டு செய்கிறது. யாழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் ஏராளமாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிங்கள மாணவர் ஒருவர் மாணவர் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். மாணவர்களையும், ஆசிரியர்களையும் இராணுவம் தொடர்ந்து கடும் கண்காணிப்பில் வைத்துள்ளது. பொதுவாக மக்களிடையே இளைஞர்களை காண்பது அரிதாக உள்ளது. ஏனெனில் வெளியில் நடமாடினால் இராணுவம் அவர்களைக் கைது செய்கிறது அல்லது வெள்ளை வேன் கடத்தல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எதிர்காலத்தில் திருமண வயதுள்ள பெண்களுக்குத் தகுந்த மணமகன் கிடைப்பது அரிதாக அமையும். மத ரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் கிறித்துவ தேவாலயங்களுக்கு அருகில் பிள்ளையார் சிலையைக் கொண்டு வைத்து கிறித்துவர் & சைவர் மோதல்களை ஏற்படுத்த முயல்கிறார்கள். சிங்களர்கள் இல்லாத இடத்திலும் புத்தர் கோயில்களைக் கட்டுகிறார்கள். ஒவ்வொரு முழு நிலவு நாளன்றும் புத்த பூர்ணிமா நாள் எனக் கூறி அரசு விடுமுறையை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்கள். வீட்டைவிட்டு வெளியில் செல்பவர் உறுதியாக வீடு திரும்புவார் என்று சொல்ல முடியாது. இராணுவ வீரர்களின் சோதனைகளுக்கும், மிரட்டல்களுக்கும் மக்கள் ஆளாக்கப்படுகிறார்கள். 2009ஆம் ஆண்டு போர் முடிந்தப் பிறகு பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே கிடையாது. குழந்தைப் பிறப்பு என்பது இப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. போரிலேயே மாண்டு போயிருந்தால் நலமாக இருக்கும் என்ற உணர்வு பலரிடம் உள்ளது. இத்தனைக் கொடுமைகளுக்கிடையேயும் மக்களிடம் காணப்படும் மனஉறுதி வியப்பையும், பெருமிதத்தையும் ஊட்டுகிறது. ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் ஒருவரோ, இருவரோ அல்லது குடும்பம் முழுவதுமோ விடுதலைப் போரில் அழிந்து போயிருக்கிறார்கள். வீடு மற்றும் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். ஆனாலும், இந்தத் தலைமுறையிலேயே தமிழீழம் காணவேண்டும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் அவர்கள் வாழ்கிறார்கள். |