நீதித் தூண் சாய்ந்தால் ஜனநாயகம் சரியும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2018 12:44

என்றும் வழுவாத நீதி நெறிமுறையைக் கொண்ட சமுதாயத்தை மட்டுமே நாகரிக சமுதாயமாகக் கருத முடியும். நீதித்துறை சுதந்திரமாகவும், செயல்திறன் கொண்டதாகவும் விளங்கினால்தான் ஜனநாயக நாடு என்பதற்கு பொருள் இருக்க முடியும்.

இல்லையென்றால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிபோகும்.
இந்தியாவின் நீதித் துறையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரம் படைத்த தலைமை நீதிமன்றமாகும். அரசியற் சட்டத்திற்கு விளக்கம் சொல்லும் உரிமையும் அதிகாரமும் அதற்கு உண்டு. அரசியற் சட்டத்தின் பரிவு 32-இல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் காவலனாகவும், பிரிவு 131-இன் கீழ் ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களிலும் மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களிலும் அவர்களுக்கு இடையில் நின்று நீதி வழங்கும் தீர்ப்பாளராகவும், பிரிவு 132-இன் கீழ் அரசியற் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் உயர் அமைப்பாகவும், பிரிவு 133-இன் கீழ் குடிமையியல் வழக்குகளிலும் பிரிவு 134-இன் கீழ் குற்றவியல் வழக்குகளிலும் செய்யப்படும் மேல்முறையீடுகளை விசாரித்துத் தீர்ப்பு கூறும் அதிகாரம் படைத்த அமைப்பாகவும் செயல்படும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திற்கே உண்டு. நாடெங்கிலும் உள்ள நீதித்துறையை மேற்பார்வையிடும் அதிகாரமும் அதற்கு உண்டு.
"மக்கள் மற்றும் அரசுகள் ஆகியவற்றின் அழுத்தங்களுக்குப் பணியாமல் சுதந்திரமாகவும் சட்டங்களுக்கு உட்பட்டும் செயற்படும் நீதிபதிகளே ஜனநாயக சமுதாயத்தின் பண்புத் திறன் மிக்கவர்களாக திகழ்கிறார்கள்” என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி நாயகம் எச். ஆர். கன்னா கூறினார்.
நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இவற்றில் எது அதிக அதிகாரம் கொண்டது என்பது குறித்த பிரச்னை 1950 முதல் 1968 வரை எழவில்லை. அரசியற் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மாற்றவோ திருத்தவோ அல்லது இரத்து செய்யவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என கோலக்நாத் வழக்கில் 1968-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே 1971  நவம்பர் 5 அன்று 24-ஆவது திருத்தம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளு மன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 1972-ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியற் சட்டப்பிரிவு 31-க்கு கொண்டு வரப்பட்ட 25-ஆவது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துக்களையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும் போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. அப்போது தலைமை அமைச்சராக இந்திரா காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இத்திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (கேசவானந்தா பாரதி) தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் கொண்ட முழு ஆயம் இவ்வழக்கை விசாரித்தது. 6 நீதிபதிகள் திருத்தங்களுக்கு ஆதரவாகவும் 6 நீதிபதிகள் திருத்தங்களுக்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர். 13-ஆவது நீதிபதியான எச். ஆர். கன்னா ஓரளவு ஆதரவாகவும் ஓரளவு எதிராகவும் தீர்ப்பளித்ததால் 7:6 என்ற விகிதத்தில் பெரும்பான்மை தீர்ப்பு திருத்தங்களுக்கு எதிராக உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக 23-4-1973-இல் தலைமை நீதிபதி எஸ். எம். சிக்ரி தனது பதவியிலிருந்து விலகினார். இந்திரா அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தவர்களில் இவரும் ஒருவராவார். இவருக்கு அடுத்த இடத்தில் இருந்த நீதி நாயகம் ஜே. எம். ஷீலத் மூப்பு அடிப்படையில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீதி நாயகம் எஸ். எம். சிக்ரியைப் போன்றே இவரும் இவருக்கு அடுத்தத்தடுத்த இடங்களில் இருந்த நீதி நாயகங்கள் கே. எஸ். ஹெக்டே, ஏ. என். குரோவர் ஆகியோரும் அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியிருந்தனர். எனவே மேற்கண்ட மூவரில் யாரையும் தலைமை நீதிநாயகமாக பரிந்துரை செய்ய இந்திரா அரசு விரும்பவில்லை. மாறாக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதி நாயகம் ஏ. என். ரே என்பவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதி நாயகமாக நியமிக்க பரிந்துரை செய்தது. தங்களுக்கு மிக இளையவரான அவரைத் தலைமை நீதி நாயகமாக ஆக்கியதைத் தொடர்ந்து மூத்த நீதி நாயகங்களான ஜே. எம். ஷீலத், கே. எஸ். ஹெக்டே, ஏ. என். குரோவர் ஆகியோர் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பதவிகளை விட்டு விலகினர். அதைப் பற்றி இந்திரா அரசு சிறிதும் கவலைப்படவில்லை.
1977-ஆம் ஆண்டில் தலைமை அமைச்சராக மொரார்ஜி தேசாய் இருந்த போதும் மூத்த நீதி நாயகங்களைப் புறக்கணிக்கும் போக்கு தொடர்ந்தது. தலைமை நீதி நாயகமாக நியமிக்கப்பட வேண்டிய எச். ஆர். கன்னா குறைந்த கால அளவே இப்பொறுப்பில் நீடிக்க முடியும். விரைவில் அவர் ஓய்வு பெற வேண்டியிருக்கும் என்ற காரணத்தைக் காட்டி அவரைப் புறக்கணித்து விட்டு அவருக்கும் இளையவரான நீதி நாயகம் எச். எம். பெக் என்பவரை தலைமை நீதிநாயகமாக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் அரசு காட்டிய காரணம் சரியானது அல்ல. 1976-ஆம் ஆண்டு ஆள் கொணரும் வழக்கு ஒன்றில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தார் என்பதனால் நீதி நாயகம் எச். ஆர். கன்னா புறக்கணிக்கப்பட்டார் என்பதே உண்மையாகும்.
1978-ஆம் ஆண்டிலும் தலைமை நீதி நாயகமாக ஒய். வி. சந்திரசூட் நியமிக்கப்பட்ட போதும் இவ்வாறே மூத்த நீதி நாயகங்கள் பலர் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால் ஜனதா அரசு வயது மூப்பு காரணம் காட்டி நீதி நாயகங்களை நியமிப்பது என்பது நீதித் துறையின் சுதந்திரத்திற்கு எதிரானது எனக் காரணம் கூறியது.
தலைமை அமைச்சர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோர் நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் நீதித் துறையைக் கொண்டு வருவதற்கு செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதே முயற்சியை தலைமை அமைச்சர் மோடி 2014-ஆம் ஆண்டில் மேற்கொண்டார். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைச் சட்டம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். இருபது சட்டமன்றப் பேரவைகளின் ஒப்புதலையும் இச்சட்டம் பெற்றது. ஆனால் இந்தச் சட்டம் அரசியற் சட்டத்திற்கு எதிரானது என்றும் கடந்த இருபதாண்டு காலமாக நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் முறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் 14-10-2015-ஆம் ஆண்டு நீதி நாயகம் ஜே. எஸ். கேகர் தலைமையில் கூடிய உச்ச நீதிமன்ற ஆணையம் தீர்ப்பளித்தது. அதற்கு பின் இம்முறையே இன்றளவும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
11-1-2018-இல் தலைமை நீதிநாயகம் தலைமையில்  கொலிஜியம் கூடி நீதி நாயகம் கே. எம். ஜோசப், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் 4 மாதங்களுக்கு மேலாக இக்கோப்புகள் அரசால் கிடப்பில் போடப்பட்டன.
அதே வேளையில் நாடாளுமன்ற மேலவையில் 7 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 69 உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க வேண்டும் என்பதற்காக தீர்மானத்தை அளித்தார்கள். இத்தகைய தீர்மானம் அளிக்கப்படுமானால் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் அதை மூவர் கொண்ட விசாரணைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். அக்குழு அத்தீர்மானம் ஏற்கத்தக்கது என கூறுமானால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி கலந்துகொண்டவர்களில்  மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் தலைமை நீதிபதியையோ அல்லது நீதிபதிகளையோ பதவி விலக்கம் செய்ய முடியும். இதுதான் சட்ட விதியாகும்.
ஆனால், 24-4-2018 அன்று மேலவைத் தலைவர் இத்தீர்மானத்தை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துள்ளார். அவர் செய்தது சரியா அல்லது தவறா என்ற விவாதம் தொடர்கிறது. இதற்கு 3 நாட்கள் கழித்து 4 மாதங்களாகத்  தூசி படிந்து கிடந்த நீதிபதிகள் நியமனக் கோப்பை தட்டி எடுத்து, கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரு பெயர்களில் முதலில் இடம் பெற்ற கே. எம். ஜோசப் பெயரைப் புறக்கணித்து இரண்டாவது இடம் பெற்ற இந்து மல்ஹோத்ராவின் பெயரை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து அவரும் அதை ஏற்று அவரை நியமித்து அவரும் பதவி ஏற்றுவிட்டார்.
தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்ட நான்கே நாட்களில் நீதிபதிகள் நியமனக் கோப்பை தட்டி எடுத்து ஒருவரை மட்டுமே நியமனம் செய்து மற்றொருவரை புறக்கணித்திருப்பது ஒன்றிய அரசின் ஆழமான உள்நோக்கத்தைக் காட்டுகிறது. தலைமை நீதிபதிக்கு மறைமுகமான நெருக்கடியையும் இக்கட்டான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கே. எம். ஜோசப் அவர்களின் நேர்மை, திறமை ஆகியவற்றில் இந்திய அரசால் குறை காண முடியவில்லை. ஏற்கெனவே கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எனவே இரண்டாவதாகவும் ஒருவரை நியமிக்க முடியாது என்று காரணம் கற்பித்துள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தற்போது உள்ளனர். ஆந்திரா, மும்பை, அலகாபாத், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒவ்வொன்றையும் சேர்ந்த இருவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர்.
கே. எம். ஜோசப்புக்கு எதிராக இந்திய அரசு கூறியுள்ள மற்ற காரணங்களும் பொருத்தமற்றவையே. ஏற்கெனவே ஆந்திர-தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவரை மாற்றிய உத்தரவையும் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவியது செல்லாது. எனவே கலைக்கப்பட்ட காங்கிரசு ஆட்சியை மீண்டும் நிறுவும் தீர்ப்பினை அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான கே. எம். ஜோசப் அளித்தத் தீர்ப்பு பா.ஜ.க. அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திற்று. அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்படுவதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
ஆனால் மறுபடியும் கொலிஜியம் கூடி அவரின் பெயரையே பரிந்துரை செய்தால் அதை சட்டப்படி ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனாலும் ஏற்கெனவே பதவியேற்றுள்ள இந்து மல்ஹோத்ராவுக்கு பதவி மூப்பின்படி இளையவராகி விடுவார். எதிர்காலத்தில் தலைமை நீதிபதி பதவி அவருக்குக்  கிடைப்பதற்கு இது தடையாக இருக்கும்.
கொலிஜியம் பரிந்துரை செய்த பெயர்களில் எதையாவது ஏற்க மறுப்பதற்கு முன்னால் தலைமை நீதிபதியை ஒன்றிய அரசு கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். கொலிஜியம் பெயர்களை பரிந்துரை செய்யும் போதே வரிசைப்படுத்திப் பெயர்களை பட்டியலிடும். இதன் மூலம் எதிர்காலத்தில் தலைமை நீதிபதியாக யார் வர வேண்டும் என்பதும் கோடிட்டுக் காட்டப்படும். ஆனால் பட்டியலிலிருந்து ஒருவரின் பெயரை மட்டும் நீக்கித் திருப்பி அனுப்புவது என்பது நீதித் துறையில் அப்பட்டமான குறுக்கீடாகும்” என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர். எம். லோதா கண்டனம் செய்துள்ளது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
ஜனநாயகத்தின் நான்குத் தூண்களாக நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டம் இயற்றும் துறை, பத்திரிகைத் துறை ஆகியவை கருதப்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் உள்ள அதிகார வரம்புகள் அரசியல் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏற்கெனவே மற்ற மூன்று துறைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் சிறிது சிறிதாக கொண்டு வந்து காவிமயமாக்க முயலும் தலைமை அமைச்சர் மோடியின் அரசு இறுதியாக நீதித் துறையையும் ஆட்டிப் படைக்க விரும்புகிறது. இத்தகைய போக்கு நீதித்தூணை சாய்க்கும். சனநாயக மாளிகை சரியும்.  
நன்றி - தினமணி - 03-05-2018

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.