"கன்னித் தமிழ்க் காவிரி” என தமிழுடன் காவிரியை இணைத்து சங்கப் புலவர்கள் பாடினார்கள். தமிழோடும், தமிழர்களோடும் இணை பிரிக்க முடியாத அங்கமாக காவிரி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விளங்கி வருகிறது.
ஆனால் விடுதலைப் பெற்ற இந்தியாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக காவிரி மீதுள்ள நமது நியாயமான உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய நிலை நீடித்தது. பன்னாட்டு நதியின் மேல் பகுதியில் உள்ள நாட்டிற்கு என்னென்ன உரிமைகள், கீழ்ப்பகுதியில் உள்ள நாட்டிற்கு என்னென்ன உரிமைகள் என்பதை ஹெல்சிங்கி உடன்பாட்டின் மூலம் 1956ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஒன்றுகூடி வரையறுத்துள்ளன. இதன் அடிப்படையில் 1956ஆம் ஆண்டில் பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம், நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம் ஆகியவை இந்திய அரசியல் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு உருவாக்கப்பட்டன. ஆனால், 50 ஆண்டு காலமாக இந்த உலக நீதியையும், இந்திய அரசியல் சட்டத்தின்படியும் அமைக்கப்பட்ட சட்டங்களின் விதிமுறைகளையும் நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்தத் தீர்ப்புகளையும் கர்நாடகம் மதிக்க மறுத்தது. அதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்திய அரசும் அதற்குத் துணை நின்றது. 1968ஆம் ஆண்டு முதல் 22ஆண்டுகள் காவிரிப் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசின் முயற்சியின் பேரில் இரு மாநிலங்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தை என்ற பேரால் திட்டமிட்டுக் காலம் கடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் காவிரியின் துணை நதிகளில் கர்நாடகம் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணைகளைக் கட்டி முடித்தது. அப்போதும் இந்திய அரசு அணைக் கட்டுவதைத் தடுக்கச் செயலற்று இருந்தது. பேச்சுவார்த்தையால் பயனில்லை என்பதை உணர்ந்த தமிழக அரசு நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என ஒன்றிய அரசை வற்புறுத்தியது. ஆனால், சட்டப்படி அவ்வாறு செயல்பட ஒன்றிய அரசு தவறியபோது தமிழகம் முறையிட்டதின் விளைவாக உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைத்தது. 21-06-1991இல் நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும், 5-02-2007இல் அளித்த இறுதித் தீர்ப்பினையும் அரசிதழில் வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் கடத்தியது. மீண்டும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஆணை பிறப்பித்ததின் விளைவாக 6 ஆண்டுகள் கழித்து 19-2-2013 இல் அரசிதழில் இத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தமிழகத்திற்கு மாத வாரியாகப் பிரித்து மொத்தம் 192 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டிருக்கவேண்டும். சட்டப்படி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்திற்குச் சமமானதாகும். ஆனாலும், கர்நாடகம் இதை மதிக்க மறுத்தது. தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கடந்த 10 ஆண்டு காலமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நீடித்தது. தமிழக மக்களின் கொந்தளிப்பின் விளைவாக உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காவிரி வழக்கை வாரத்தில் 3 நாட்கள் விசாரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக கடந்த பிப்ரவரி 16-2-2018 அன்று தலைமை நீதிபதியைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்தது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய நீர் அளவு 192 டி.எம்.சி.யிலிருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் 6 வாரங்களுக்குள் ஒரு வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி வரைவுத் திட்டத்தை அளிக்க ஒன்றிய அரசு தவறியது. இதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்த பின்னர் 14-5-2018 அன்று வரைவுத் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்தது. இந்த அறிக்கையில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வற்புறுத்தின. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வரைவுத் திட்டத்தைத் திருத்தி அளிக்குமாறு கூறியது. பல கட்ட கால தாமதத்திற்குப் பிறகு மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் 17-5-2018 அன்று திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் கீழ்வரும் ஆணையை 18-05-2018 அன்று பிறப்பிக்கும்போது "திருத்தப்பட்ட இந்த வரைவுத் திட்டம், நடுவர் மன்றம் அளித்த ஆணை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றோடு ஒத்திசைவு கொண்டதாகவும், உச்ச நீதிமன்றத்தினால் திருத்தி யமைக்கப்பட்டதாகவும், 1956ஆம் ஆண்டு நதிநீர் தாவாச் சட்டத்தின் 6ஏ பிரிவின்படி அமைந்ததாகவும் திகழ்கிறது” எனக்கூறி வெளியிட்ட ஆணையின் முதன்மையான கூறுகள் வருமாறு: 1. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எத்தகைய சிக்கல் ஏற்பட்டாலும் ஆணையத்தைதான் மாநிலங்கள் அணுகவேண்டும். ஒன்றிய அரசை அணுகத் தேவையில்லை. 2. அணைகளிலிருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை ஆணையமே மேற்கொள்ளும். 3. காவிரியின் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் எத்தகைய அணைகளையோ, தடுப்பு அணைகளையோ கர்நாடக, தமிழக அரசுகள் அமைக்கக் கூடாது. 4. இறுதித் தீர்ப்பின்படி காவிரி நதிநீர்ப் பகிர்வைச் செயல்படுத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு மேலாண்மை ஆணையம் மட்டுமே. அதற்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உண்டு. 5. ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்படும். நிர்வாக ரீதியான அலுவலகம் பெங்களூரில் செயல்படும். 6. ஆணையத்தின் தலைவராக செயல்திறன் கொண்ட தலைமைப் பொறியாளர் ஒருவரோ அல்லது மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியோ நியமிக்கப்படுவார். இரண்டு முழுநேர உறுப்பினர்களும், இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் உட்பட 9 பேர் இடம் பெறுவார்கள். 7. கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகியவற்றில் உள்ள காவிரி மற்றும் கிளை ஆறுகளின் அணைகள் யாவும் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். 8. ஆனால், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள காவிரி தொடர்பான அணைகள், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆணையம் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். 9. மேற்கண்ட மாநிலங்களில் உள்ள காவிரி அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்தல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு உரிய நீரைப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். அணைகளில் உள்ள நீரைக் கண்காணித்து நீர் திறந்துவிடுவது உள்ளிட்டவற்றை ஆணையம் மேற்கொள்ளும். இதற்காக கர்நாடக&தமிழக எல்லையில் உள்ள பிலி குண்டுலுவில் அளவை நிலையம் அமைத்துக் கண்காணிக்கும். 10. மழைப் பருவ காலமான சூன் 1ஆம் தேதிக்கு முன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவேண்டும். அரசிதழிலும் அது உடனடியாக வெளியிடப்படவேண்டும். "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெறும் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அமைப்பாக இருக்கக் கூடாது. மாறாக, உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு மாநிலங்களை ஒப்புக்கொள்ள வைக்கும் வகையில் ஆணையம் செயல்படவேண்டும்” என புதுச்சேரி அரசு சார்பில் வாதாடிய ஏ.எஸ். நம்பியார் அவர்களின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் பாராட்டி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தங்களது தீர்ப்பில் "எந்த நோக்கத்திற்காக செயல்திட்ட வரைவு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சட்டப்பூர்வமாகவும், காலதாமதமின்றியும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏற்கெனவே தீர்வுகாணப்பட்ட பிரச்சனைகளை மாநிலங்கள் மீண்டும் முன் வைப்பதை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பின்படி நமக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய நீரின் அளவு ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்தத் தீர்ப்பு நீதியை நிலைநிறுத்தும் தீர்ப்பாகும். 50ஆண்டு காலமாக காவிரிப் பாசன உழவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடன் தொல்லையால் நூற்றுக்கணக்கானவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அகண்ட காவிரி வறண்டதின் விளைவாக இயற்கை சூழல் சீரழிந்துள்ளது. மக்கள் மட்டுமல்ல, காவிரி நீரை நம்பியிருந்த மரம், செடி, கொடிகளும், நீர் வாழ் இனங்களும் பேரழிவுக்குள்ளாகி உள்ளன. சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு ஒன்றிய அரசின் கட்சி அரசியல் ஆதாய நோக்கமே முதன்மை காரணமாகும். 1968ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்திய தலைமையமைச்சர்களாக 10 பேர் பதவி வகித்திருக்கிறார்கள். 2014 முதல் இன்றுவரை மோடி தலைமையமைச்சராக இருக்கிறார். இந்த 11 தலைமையமைச்சர்களும் தமிழகத்திற்கு நீதி வழங்க மறுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் கொள்கையைக் கொண்ட அகில இந்தியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும்கூட பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்டவற்றை கர்நாடகம் மீறியபோதும், நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளை மதிக்க மறுத்தபோதும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தத் தவறியபோதும் தலையிட்டு சட்டத்தின் மாண்பையும், நீதியின் வழுவாத மேன்மையையும் நிலை நிறுத்தவேண்டிய அதிகாரம் படைத்த தலைமையமைச்சர்கள் அனைவருமே பாராமுகமாக இருந்தது ஏன்? நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு உரிமையான நீரை அளிப்பதற்கு கர்நாடகம் பிடிவாதமாக மறுத்தபோது, அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் முன்வந்து கர்நாடகத்தின் போக்கைக் கண்டிக்காதது ஏன்? கர்நாடகத்தில் மாறிமாறி அகில இந்தியக் கட்சிகளே ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. அவை தமிழகத்திற்கு அநீதி இழைக்க முற்பட்டபோது அக்கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்கள் தலையிட்டு தடுக்காதது ஏன்? இடைக்கால ஏற்பாடாக 4 டி.எம்.சி. நீரை உடனடியாகத் தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை நிறைவேற்ற கர்நாடகத்தின் முதலமைச்சராக இருந்த சித்தராமையா அவர்கள் பிடிவாதமாக மறுத்தபோது அவர் சார்ந்த காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியோ அல்லது தலைவரான ராகுல் காந்தியோ தலையிட்டு அவரைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றும்படி கூறாதது ஏன்? என்ன காரணம்? ஆனால், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 23ஆவது கட்சிக் காங்கிரசுக் கூட்டம் 2018 ஏப்ரல் 26 முதல் 29 வரை கேரள மாநிலம் கொல்லம் நகரில் நடைபெற்றபோது காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காலதாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. வேறு எந்த அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களும் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற முன்வராதது ஏன்? கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்திற்கு கர்நாடகம் தொடர்ந்து இழைத்த அநீதியைக் கண்டிக்க மேற்கண்ட கட்சிகள் எதுவும் முன்வராதது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் ஒருமுறைக்குப் பலமுறை தீர்ப்புகளை வழங்கிய போது அதை மதிக்க முன்வருமாறு கர்நாடகத்தை வற்புறுத்தவும் தவறியதற்குக் கட்சி நலம் நாடும் போக்கே காரணமாகும். இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடும் அங்கம் வகிக்கிறது என்பதை இவர்கள் மறந்து போனார்களா? அல்லது மறுக்கிறார்களா? இந்த கட்டத்திலாவாவது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை நேர்மையுடன் அமைக்கவும், அதன் செயற்பாடுகளில் மறைமுகமாகக் குறுக்கீடு செய்யாமலும் தமிழகத்திற்கு நீரும், நீதியும் வழங்க தலைமையமைச்சர் மோடி அவர்களும், பிற அகில இந்தியக் கட்சித் தலைவர்களும் முன் வருவார்களா? நன்றி - தினமணி - 22-05-2018 |