பா.ச.க. ஆளுநர்களின் சனநாயகப் படுகொலை - பழ. நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:21 |
கர்நாடக மாநிலத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ச.கட்சியைப் பதவியில் அமர்த்துவதற்கு ஆளுநரைப் பயன்படுத்திய சூழ்ச்சித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தலையிட்டு முறியடித்தது.
கர்நாடக சட்டமன்றத்தில் 224 இடங்கள் உள்ளன. 2 இடங்களுக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே எஞ்சியுள்ள 222 இடங்களில் குறைந்தளவு 112 இடங்களில் வெற்றிபெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், பா.ச.கவிற்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனாலும், ஆளுநர் பா.ச.கவைச் சேர்ந்தவராக இருந்ததால், பா.ச.க. தலைவர் எடியூரப்பாவை அமைச்சரவை அமைக்க அழைத்ததோடு மட்டுமல்ல, தனது பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கு அவருக்கு 15 நாட்கள் காலக் கெடுவும் கொடுத்தார். இதன்மூலம் குதிரைபேரம் நடத்தும் முயற்சிகளுக்கு ஆளுநர் ஊக்கம் அளித்தார். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பாகவே எடியூரப்பா ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவரை அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைத்தது சட்டப்படி தவறாகும். காங்கிரசு, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி, பண ஆசைக்காட்டித் தங்கள் பக்கம் இழுக்க பா.ச.க. பெரும் முயற்சியில் ஈடுபட்டது. கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி அல்லது 100 கோடி ரூபாய் எனப் பேரம் பேசப்பட்டது. பெங்களூர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த காங்கிரசு, ஜனதாதளம்(ச) உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட காவல்துறையின் பாதுகாப்பு, முதலமைச்சர் பதவி ஏற்ற எடியூரப்பாவின் ஆணையின் பேரில் நீக்கப்பட்டது. எனவே அவர்களை ஐதராபாத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தற்காலிகப் பேரவைத் தலைவராக மூத்த உறுப்பினர் யாரோ அவர் நியமிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த மரபை மீறி பா.ச.கவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா என்பவர் நியமிக்கப்பட்டார். ஆளுநரின் இந்த ஆணைகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு, ஜனதாதளம்(ச)சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நிலைமையின் அவசரத் தன்மையை உணர்ந்த உச்ச நீதிமன்றம் உடனடியாக மே 18ஆம் தேதியன்றே இரவோடு இரவாக வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணை நடத்திக் கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்தது. 1. மே 19ஆம் தேதி மாலை 4 மணிக்குள்ளாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கவேண்டும். 2. அதற்குப்பின் சட்டமன்றத்தில் புதிய அரசு தனது பெரும்பான்மையை நிலைநிறுத்த வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். 3. பா.ச.கவின் வழக்கறிஞர் கோரியபடி இரகசிய வாக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 4. சட்டமன்றத்தின் பாதுகாப்பை கர்நாடக காவல்துறை தலைவரே நேரடியாக மேற்பார்வையிட வேண்டும். 5. ஆங்கிலோ-இந்தியர் ஒருவரை நியமன உறுப்பினராக நியமிப்பது இப்போது கூடாது. 6. எடியூரப்பாவை அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைத்தது குறித்த விசாரணை சூலை மாதம் நடத்தித் தீர்ப்பளிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மே 19ஆம் தேதி மாலையில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னால் முதல்வர் எடியூரப்பா தனது பதவியைவிட்டு விலகுவதாக அறிவித்துவிட்டுச் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். 55 மணிநேரம் மட்டுமே முதல்வர் பதவி வகித்த ஒரேயொருவர் எடியூரப்பா மட்டுமே. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற காரணத்தைக் காட்டி அதற்குப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் மேற்கொண்ட முடிவு சனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, கோவா, மேகாலயா, மணிப்பூர், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் இதுபோன்ற கட்டங்களில் மேற்கொண்ட முடிவுகளுக்கு எதிரானதாகும். மேலே குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் காங்கிரசும் அல்லது வேறு மாநிலக் கட்சிகளும் அந்தந்த சட்டமன்றங்களில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளாக இருந்தபோதிலும் அக்கட்சிகளை அழைக்காமல் பா.ச.க. கூட்டணி கட்சிகளை ஆட்சி அமைக்க அழைத்தனர். கர்நாடக ஆளுநரோ அதற்கு நேர் மாறாக நடந்துகொண்டிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலும் தனது நோக்கத்திற்கேற்ப சட்டங்களையும், மரபுகளையும் வளைப்பதற்கு பா.ச.கவைச் சேர்ந்த ஆளுநர்கள் முற்படுகிறார்கள். சனநாயக நெறிமுறைகளை ஒருபோதும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார்கள். அரசியல் சட்டத்தின 356ஆவது பிரிவு மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி தன்னால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் மாநில அரசுகள் நீக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒன்றிய அரசு தனது விருப்பு, வெறுப்பு களுக்கேற்ப ஆட்டிப்படைத்தப் போக்கு வளர்ந்தது. காங்கிரசு, ஜனதாதளம் ஆட்சி காலங்களிலும் இந்தப் போக்கு கையாளப்பட்டது. கர்நாடக முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர். பொம்மை அவர்களின் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றம் இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மாநில சட்டமன்றத்திற்கு மட்டுமே ஓர் அரசை நீக்குவதற்கும், தொடரச் செய்வதற்கும் அதிகாரம் உண்டு என்பது உச்ச நீதிமன்றத்தால் நிலை நிறுத்தப்பட்டது. அரசியல் சட்டப் பிரிவு 356ன்படி மாநில அரசுகள் நீக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதைப்போல இப்போதும் ஆளுநர்கள் ஜனநாயக நெறிமுறைகளைப் பொருட்படுத்தாது தமது விருப்பம்போல யாரையாவது ஆட்சி அமைக்க அழைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தகுந்ததொரு தீர்ப்பை வழங்க முன்வரவேண்டும். கர்நாடக ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கைக் குறித்து சூலை மாதம் விசாரிக்க இருக்கிற உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.
|