ஈழத் தமிழர் பிரச்னையில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பழ. நெடுமாறன் - சூளுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:48

ஈழத் தமிழர் பிரச்சனையில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார் உலகத்  தமிழர்  பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மே-18 ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள்  9ஆம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


"ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பதைக்க, பதைக்க சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18ஆம் தேதி. ஒன்பது ஆண்டுகள் உருண்டோடி  விட்டன. நம்முடைய வீர வரலாற்றில்  இப்படியொரு அவலம் நிகழ்ந்ததில்லை என சொல்லும் அளவுக்குப் பேரவலம் நிகழ்ந்தது. மேலும், அங்கு எழுப்பப்பட்ட மாவீரர் நினைவு சின்னங்களை எலும்புத் துண்டுகள் உட்படத் தோண்டி எடுத்து அழித்தவர்கள் சிங்கள இனவெறியர்கள்.
எனவே ஈகியரின் நினைவாக தமிழ்நாட்டில் நினைவு சின்னம் அமைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்  அமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம் சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்நாள்.
"யார் இந்தக் கொலைக்குக் காரணமானவர்களோ அவர்களை  மன்னிக்கவோ மறக்கவோ கூடாது. இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உலக அரங்கில் நீதி கிடைக்கும் வரை நாம் போராடவேண்டும். அந்த மக்கள்  தங்கள் மண்ணை மீட்கும் வரை நாமும் தொடர்ந்து போராடவேண்டும் எனச் சூளுரைப்போம்” என்றார் நெடுமாறன்.
முன்னதாக மறைந்த ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புலவர் மதிவாணன்,  அய்யனாபுரம் சி. முருகேசன், விளார் ம. சுவாமிநாதன், பழ. இராசேந்திரன், ந.மு. தமிழ்மணி, துரை. குபேந்திரன், ஜான்கென்னடி, சா.  இராமன், எம்.  ஆர்.  மாணிக்கம், அருணா சுந்தரராசன், சதா. முத்துக்கிருஷ்ணன்,  மரு. பாரதிசெல்வன், கலைச்செல்வன், வெ.ந. கணேசன் உட்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.