தூத்துக்குடியில் மக்கள் படுகொலை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:52

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார மக்கள் போராடுவது எதற்காக? என்பது குறித்து விரிவான ஒரு கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்.  

 

இந்தத் தொழிற்ச் சாலையில் தாமிர உற்பத்தியின்போது வெளியாகும் கழிவு நீரில் உள்ள நச்சுத் தன்மையின் விளைவாக அப்பகுதி  மக்களிடையே புற்றுநோய், தோல் நோய் போன்றவை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இத்தொழிற்சாலைக்கு வெளியே கொட்டப்படும் திடக் கழிவுகளால் சுற்றுப்புற நிலப்பகுதி முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது. மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் இந்த ஆலையை உடனடியாக மூடவேண்டும் என தூத்துக்குடி நகர  மக்களும், சுற்றுவட்டார கிராம மக்களும் இணைந்து போராடினார்கள்.
100 நாட்களாக போராடும் இந்த மக்களை  முதலமைச்சரோ அல்லது மூத்த  அமைச்சரோ நேரில் சந்தித்துப் பேசி அவர்களின் அச்சத்தினைப் போக்கும் வகையில் ஆலையை உடனடியாக மூடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும். தமது மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற்காக 22-5-2018 அன்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் நோக்கி  மக்கள் பெருந்திரளாகத் திரண்டுவந்த போது காவல் துறையினர் வழிமறித்து கண்மூடித்தனமாக சுட்டிருக்கிறார்கள். சுடப்பட்டு இறந்தவர்கள் அனைவரும் மார்பிலும், தலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை சுடுவதானால் முழங்காலுக்குக் கீழேதான் சுடவேண்டும். ஆனால், மக்களைக் கொல்லவேண்டும் என்பதற்காகவே காவல்துறை சுட்டிருக்கிறது என்பது நிறுவப்பட்டிருக்கிறது.
டில்லி போன்ற நகரங்களில் போராடும்  மக்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி கூட்டத்தைக் கலைக்க முயலுவார்கள். காஷ்மீர் போன்ற மாநிலத்தில்  போராட்டக்காரர்கள் மீது ரப்பர் ரவைகளால் சுடுவார்கள். ஆனால், தூத்துக்குடியில் மக்களைப் படுகொலை செய்து போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே காவல்துறை புல்லட் ரவைகளால் சுட்டிருக்கிறது.
100 நாட்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளை ஒன்றிய மாநில அரசுகளுக்குத் தெரிவிக்க உளவுத் துறைகள் அடியோடு  தவறிவிட்டன.
பெரும் தொழிலதிபர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் நடத்தும் தொழிற்ச்  சாலைகள் வெளியிடும் நச்சுக் கழிவுகளால் பேரழிவுக்கு ஆளாகும் மக்களைப் பற்றி சிறிதளவுகூட கவலையில்லாத அரசுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளன.
நாடு விடுதலை பெற்ற பிறகு இதுவரை தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தப் படுகொலையே மிக மிக மோசமானதாகும். மக்களைப் பற்றிய கவலை இந்த அரசுகளுக்குக் கொஞ்சமும் இல்லை என்பதும், தொழிலதிபர்களைப் பாதுகாப்பதையே தமது கடமையாகக் கொண்டு இந்த அரசுகள் செயல்படுகின்றன என்பதும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் இப்போராட்டம் ஓயாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட அரசுகள் முன்வரவேண்டும். இல்லையேல் தூத்துக்குடி போராட்டத்தின் விளைவுகள் தமிழகமெங்கும் எதிரொலிக்கும். 

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.