தமிழர்களின் தொன்மை - வரலாறு தொகுக்கும் பணியை விரைவில் தொடங்குக! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 04 ஜூலை 2018 11:06

தடயங்களைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் பணியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்கு தமிழக அரசு, இந்திய அரசு, யுனெஸ்கோ அமைப்பு ஆகியவை உதவவேண்டும் என உலகத்  தமிழர்  பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சூன் 23ஆம் நாளில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழர் வரலாற்றுத் தொன்மை குறித்தக் கருத்தரங்கில் அவர் தொடர்ந்து பேசியதாவது-  "உலகத்தில் மூத்த மாந்தன் தமிழன்; முதல் மொழி தமிழ் என மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தனது ஆய்வுகளின் மூலம் நிலை நாட்டினார். இப்போது தமிழகத்தில் கிடைக்கும் தொல்லாய்வுத்  தடயங்களிலிருந்து பாவாணரின்  ஆய்வு மேலும் உறுதிப்படுகிறது.
இன்று காலையில் தொடங்கிய கருத்தரங்கில் கீழடி அகழாய்வு - வைகைக் கரை நாகரிகம் என்னும்  தலைப்பில்  இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் கி. அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களும், அரிக்கமேடும்& தமிழக  அயலகத் தொடர்புகளும் என்னும் தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழகப்  பேராசிரியர் வீ. செல்வக்குமார் அவர்களும், அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் - வளர்ச்சியும் என்னும்  தலைப்பில் தொல்லியத்துறை முன்னாள் உதவி இயக்குநர்  முனைவர் தி.  சுப்பிரமணியன் அவர்களும், மிகச்  சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ந. அதியமான் அவர்கள் உடல்நலம் குன்றியதின் காரணமாக வர இயலாதபோதிலும் அவரது உரையை  பேரா. வீ. செல்வக்குமார் அவர்கள் படித்தளித்தார்.
கருத்தரங்கம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை வந்திருந்த அனைவருமே மிக கவனமாக உரைகளை  கேட்டதையும், குறிப்பாக,  திரளான பேராசிரியர்களும், மாணவ-மாணவிகளும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுச்  சிறப்பித்ததையும் மனமாறப் பாராட்டி நன்றி கூறுகிறேன்.
சமற்கிருத இலக்கியத்தில் கற்பனை வளம் மிகுதி. ஆனால் தமிழ் இலக்கியம் இயற்கைத் தன்மை நிறைந்ததாகும். வடமொழி இலக்கியம் அனைத்திலும் கற்பனை மெய்போன்று சொல்லப்பட்டிருக்கும். ஆனால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக, சங்க இலக்கியத்தில் ஏராளமான வரலாற்று உண்மைகள் பொதிந்துக்  கிடக்கின்றன.  திருத்தொண்டர் புராணம் என அழைக்கப்படும் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் காணக்கிடக்கின்றன. சோழப் பேரரசின் அமைச்சராக சேக்கிழார் இருந்த  காரணத்தினால் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் தமிழக வரலாற்றை நன்கு அறிந்திருக்கிறார். அவர் படைத்த நூல்  இச்சான்றுகளின்  அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பாண்டிய  நாட்டின் தலைநகரமாக  விளங்கிய பண்டைய மதுரை குறித்து மாங்குடி மருதனார் என்னும் புலவர் மதுரைக் காஞ்சி என்னும் நூலைப் படைத்துள்ளார். பண்டைய மதுரையின் சிறப்பை சங்ககால நூலான இந்நூல் எடுத்துக் கூறுகிறது. அகநானூறு, புறநானூறு,  திருமுருகாற்றுப்படை, பெருங்கதை, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் மதுரை நகரம் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. ஆனால், இப்போதுள்ள  மதுரை நாயக்கர் கால மதுரையாகும். எனவே, சங்கப் பாடல்கள் சுட்டிக்காட்டிய மதுரை எது? என்பது யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடந்தது. சங்கப் புலவர்கள் கற்பனையாக மதுரையைப் பற்றிப் பாடியிருக்க முடியாது. ஆனாலும், அவர்கள் பாடிய மதுரைக்கான வரலாற்றுத் தடயங்கள் நமக்குக் கிடைக்காமல் இருந்தன.
சங்க காலத்தில் செழித்துத் திகழ்ந்த மதுரை, உறையூர், பூம்புகார் போன்ற நகரங்கள் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. சோழர்  தலைநகரமான உறையூர் இன்றைய திருச்சி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. அங்குள்ள கட்டடங்கள் அத்தனையும் இடித்துத் தகர்த்து அகழாய்வு நடத்த முடியாது. பூம்புகார் நகரை  கடல் கொள்ளைக் கொண்டுவிட்டது. அதைபோல பண்டைய மதுரையும் எது? என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை. சேரர் தலைநகரமான வஞ்சியும், துறைமுகப் பட்டினமான முசிறியும் எங்கு இருக்கின்றன?என்பது இன்னமும்தெரியாமல் திகைக்கிறோம்.
ஆனால், இன்றைய மதுரைக்கு 15 கல் தொலைவில் அமைந்துள்ள  கீழடியில்நடைபெற்ற தொல்லாய்வின்போது கண்டறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகள், வேறு  அரியவகை  அணிகலன்கள், கட்டடங்களின் தரைத்தடங்கள், மதில் சுவர்கள், கால்வாய்கள், தொட்டிகள், வட்டக் கிணறுகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்கள் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. ஒரு பெரும் நகர நாகரிகம் இருந்ததற்கானஅடையாளச் சின்னங்களே இவையாவும். இவற்றைக்  கண்டறிந்த இந்தியத் தொல்  துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் குழுவினரையே இந்தப் பெருமை முழுமையாகச் சாரும். தமிழகத்தில் தொன்மையான நகரப்புற நாகரிகம் இருந்தது என்பதை இதன் மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டிய அவரை மனமாறப்  பாராட்டுகிறேன். வைகைக் கரை நெடுகிலும் 293 இடங்களில் தொல்லியல் சுவடுகள் உள்ளன. கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும் தொல்லியல் மேட்டில் வெறும் 50 செண்ட் பரப்பளவிற்குத்தான் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 5,800க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. வைகைக்கரை நெடுகிலும் இத்தொல்லாய்வு தொடர்ந்து நடத்தப்படுமானால் தமிழர் நாகரிகம்தான் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் என நிறுவப்பட்டுவிடும். ஆனால், அது வெளியாகக் கூடாது என்பதால்தான் அவரை அசாம் மாநிலத்திற்கு மாற்றியுள்ளார்கள். அவர் இங்கு பேசும்போது, வைகை நாகரிகத்தின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக  நிறுவிக்காட்டினார். ஆனால், நகர்ப்புற வளர்ச்சியின் விளைவாக இந்தத் தடயங்கள் காலப்போக்கில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
அதைபோல அரிக்கமேட்டின் பழைமைச் சிறப்புகள் குறித்து பேரா. வீ. செல்வக்குமார்  அவர்கள் கூறிய செய்திகள் நமக்கு பெருமிதத்தை ஊட்டின. கிழக்கே சீனத்திலிருந்து மேற்கே கிரேக்கம், ரோமாபுரி வரை தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கான ஏராளமான தடயங்கள் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. பல வெளிநாட்டினரின் காசுகளும், பொருட்களும் அகழாய்வில்  கிடைத்துள்ளன.  அரிக்கமேடு மட்டுமல்ல, தமிழகத்தில் பண்டைப் பெருமை வாய்ந்த பல ஊர்களைக் குறித்து சங்கப் பாடல்கள் நமக்குக் கூறுகின்றன. தேவாரப் பதிகங்களைப் பெற்ற பல கோயில்கள் சங்ககால ஊர்களுக்கு மிக அண்மையில் அமைந்திருக்கின்றன என்பது முக்கியமான செய்தியாகும். சங்ககாலத்திலிருந்து அந்த ஊர்கள் தேவாரக் காலம் வரையிலும், அதற்குப் பின்னரும் நின்று  நிலவி வந்திருக்கின்றன  என்பதை அவர் எடுத்துக்காட்டினார். சங்க இலக்கியங்களுக்கும், தொல்லியல் சான்றுகளுக்குமிடையே காணப்படும் நெருக்கமான உறவு குறித்தும் விரிவாக அவர் இங்கே பேசினார். பண்டையத் தமிழகத்தில் வெளிநாட்டுக் கலங்கள் வந்துசெல்லும் சிறந்த துறைமுகமாக அரிக்கமேடு விளங்கிற்று என்பதை அவர் எடுத்துக்காட்டியமைக்காக அவருக்கு எனதுபாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் - வளர்ச்சியும் என்னும் தலைப்பில்  பேசிய முனைவர் தி. சுப்பிரமணியன் அவர்கள்,  தமிழ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து அமைக்கப் பட்ட ஈமச் சின்னங்கள் குறித்து நேரடியாக கள ஆய்வு நடத்தி கண்டறிந்த உண்மைகளை  இங்கே  நமக்கு எடுத்துக்  கூறினார். பெரும் கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட  ஈமச் சின்னங்களில் தொடங்கி நடுகற்கள் அமைக்கப்பட்ட காலம் வரை எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையெல்லாம் ஆதாரப்பூர்வமாக  நமக்கு எடுத்துக் கூறினார். தாய்த் தெய்வ வழிபாடு எப்படி தொடங்கிற்று, எப்படி யெல்லாம் வளர்ந்து கொற்றவை  வழிபாடாக  உருவாயிற்று என்பதையும் அவர் இங்கே எடுத்துக் கூறினார். தமிழர்களின் நாகரிக வளர்ச்சி என்பது பழைய கற்காலத்திலிருந்து சங்க காலம் வரை படிப்படியாகத்  தொடர்ந்துள்ளது என்பதையும் எடுத்து விளக்கினார். கற்காலத்தில் புதைக்குழியைச் சுற்றி வட்டவடிவில் கற்களை வைத்து அதைச்சுற்றிலும் மீண்டும் கற்கள் வட்டவடிவத்தில் அமைக்கப்படும் முறையிலேயே சங்க காலத்தில் கோவில்களுக்கான கருவறைகளும்,  சுற்றுப் பிரகாரங்களும் அமைக்கப்பட்டன என்பதை அவர் எடுத்துக் காட்டினார். நம்முடைய நாகரிகத்திற்கு இடைவிடாத தொடர்ச்சி இருந்துள்ளது என்பதை அவரது பேச்சின் மூலம் நமக்கு உணர்த்திய அவருக்கு எனது பாராட்டும், நன்றியும் என்றும் உரியது.
உடல்நலக் குறைவினால் இங்கு வரஇயலாத போன பேரா. ந. அதியமான் அவர்களின் உரையின் முக்கிய பகுதிகளை பேரா. வீ. செல்வக்குமார்  அவர்கள் நமக்கு எடுத்துரைத்தார். சங்கப் பாடல்கள் என்பதை வரலாற்றுப் படைப்புகள் என்பதையும், இயற்கை நெறி ஒட்டியே அவை படைக்கப்பட்டன  என்பதையும் குறிப்பிட்டார். நுண் கற்காலம், பெருங் கற்காலம், புதிய கற்காலம்,  இரும்பு காலம்,  சங்ககாலம் என தமிழர் நாகரிகம் பல்வேறு கால கட்டங்களாக வளர்ந்தோங்கி வந்துள்ளது. கி.மு. நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட  அசோகரின் கல்வெட்டு சேர,  சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அப்படியானால் அதற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே மூவேந்தர்களின் ஆட்சி நிறுவப்பட்டு தொடர்ந்திருக்கிறது என்பது தெரிகிறது. அவரது உரையில் முக்கியமான ஒரு  உண்மையை தெளிவுபடுத்தினார்.  தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்பது ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை. அவ்வாறு கூறுவது தவறான கூற்று என்பதை பல்வேறு ஆதாரங்களின் மூலம்  எடுத்துக்காட்டியுள்ளார். சங்ககால சமுதாயம் பழங்குடி சமுதாயம் அல்ல, அரசு முறை சமுதாயமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவருக்கு நமது  பாராட்டும், நன்றியும் உரித்தாகுக.
வைகைக் கரை நாகரிகத் தொல்லாய்வு மட்டுமல்ல, இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் கொற்கை, அழகன் குளம், கொடுமனை, ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றுமுள்ள இடங்களில் அகழாய்வு என்பது தொடரவேண்டும். பூம்புகார் போன்ற பகுதிகளில் கடலாய்வு நடத்தப்படவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்கிழக்காசிய நாடுகளிலும்,  சீனம், சப்பான், எகிப்து, கிரேக்கம், ரோமாபுரி  மற்றும்  ஆப்பிரிக்க நாடுகளிலும் தமிழர்களின் வரலாற்றுத் தடயங்கள் மறைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டறிய வேண்டும். அவற்றையெல்லாம் தொகுத்து உண்மையான தமிழரின் வரலாறு எழுதப் படவேண்டும். எந்த தனியொரு  வரலாற்றறிஞரும் இதை செய்ய முடியாது.  இந்த  மாபெரும் பணியை தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொள்ளவேண்டும். அதற்கு தமிழக, இந்திய அரசுகள், யுனெஸ்கோ அமைப்பும் உதவவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். 

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.