தமிழர் நகர நாகரிகத்தின் தடயம் - கீழடி - அமர்நாத் இராமகிருட்டிணன் - ஆய்வுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஜூலை 2018 12:43

உலகத்  தமிழர் பேரமைப்பின் சார்பில் 23-06-2018 அன்று மன்னார்குடியில் நடைபெற்ற தமிழர் வரலாற்றுத் தொன்மை கருத்தரங்கில் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், கீழடியில் புதையுண்டுக் கிடந்த தொன்மையான வைகைக் கரை நாகரிகத்தைக் கண்டறிந்தவருமான கி. அமர்நாத் இராமகிருட்டிணன் ஆற்றிய உரையின் சாரம்-

"நகர விரிவாக்கம், தொழிற்சாலைப் பெருக்கம், செங்கற் சூளைகள் அமைப்பதற்காக மண் தோண்டுதல் போன்றவற்றால் வைகைக் கரையில் நிலத்திற்கு அடியில் புதைந்துக் கிடக்கும் சங்ககால வரலாற்றுத் தொல்லியல் எச்சங்கள் அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாத்து ஆவணப்படுத்திட இந்திய, தமிழக அரசுகள் விரைந்து நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1861ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது. 1926ஆம் ஆண்டு சிந்து மாநிலத்தில் நடைபெற்ற தொல்லாய்வில் அரப்பா நாகரிகம் என்னும் சிந்து நாகரிகம் கண்டறியப்பட்டது. தற்போது வடநாட்டில் ஐந்து தொல்லாய்வு மையங்களும், தென்னாட்டில் ஒரேயொரு தொல்லாய்வு மையம் மட்டும் பெங்களூரிலும் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் 1944ஆம் ஆண்டில் அரிக்கமேடு தொல்லாய்விலும், 1980ஆம் ஆண்டு காவிரிப் பூம்பட்டினம் தொல்லாய்விலும், 1876, 1903, 1905ஆம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூர் தொல்லாய்விலும் கண்டறியப்பட்ட வரலாற்றுத் தடயங்கள் மூலம் தமிழர் நாகரிகம் மிகத் தொன்மையானது என்பது வெளிப்பட்டது. ஆனால், மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மேலும் விரிவாகவும், தொடர்ந்தும் செய்யப்படவில்லை.  
சங்க இலக்கியங்களில் மதுரை, பூம்புகார், உறையூர், வஞ்சி போன்ற மூவேந்தர்களின் தலைநகரங்கள் குறித்த ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால், இவற்றின் உண்மையை நிலைநிறுத்தக் கூடிய வரலாற்றுத்  தடயங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. மதுரை மிகத் தொன்மையான நகரமாகும். 9ஆம்  நூற்றாண்டிற்குப்  பிற்பட்ட மதுரை நகரம் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால், அதற்கு முன்பாக சங்க கால மதுரை குறித்த தொல்லியல் ஆய்வு ஆதாரம் எதுவும் நமக்குக் கிடைக்காமல் இருந்தது.
2013-2014இல் வைகை ஆறு தோன்றும் இடத்திலிருந்து அது இராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலக்கும் இடம் வரை வைகை ஆற்றின் கரைகளில் உள்ள கிராமங்களை முழுமையாக ஆய்வு செய்தோம். இதில் 293 இடங்களில் தொல்லியல் சுவடுகள் கிடைத்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் மக்களின் வாழ்விடங்களிலேயே அமைந்திருந்தன. மதுரையிலிருந்து 35 கி.மீ. உள்ள சித்தர் நத்தம், மாறநாடு, 15கி.மீ. தொலைவில் உள்ள கீழடி ஆகிய மூன்று இடங்களை தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 102 தொல்லியல் ஆய்வுக் குழிகளைத் தோண்டி நடைபெற்ற மிகப்பெரிய ஆய்வு கீழடியில் நடைபெற்றதே ஆகும். இதன்மூலம் 5,800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகளவு சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடப் பகுதிகள் தமிழ்நாட்டிலேயே இங்குதான் கிடைத்துள்ளன. இச்செங்கற்களின் அளவு 36செ.மீ.து38செ.மீ. ஆகும். கட்டடங்கள் அடித்தளமற்ற மணல் மீது கட்டப்பட்டுள்ளன. அழிந்துபோகும் பொருட்களைக் கொண்டு மேற்கூரை உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாக ஓடுகள் கிடைத்துள்ளன. இங்கு உறை கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்கு அருகாமையில் நீர் ஆதாரமாக உறை கிணறுகள் அமைக்கப்படுவது நகர்ப்புற நாகரிகத்தின் அடையாளமாகும். எனவே இங்கு ஒரு நகர்ப்புற நாகரிக சமுதாயம் வாழ்ந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரும்புக் காலத்திலிருந்து இந்நகரம் செயல்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு. 200 என்பது நிறுவப்பட்டுள்ளது. அப்படியானால் இந்நகரம் வளர்வதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே தமிழர்களின் நாகரிகத் தொன்மை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.
அரிய வகை கல், மணி, முத்து ஆபரணங்கள், இரும்பு மற்றும் செம்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சங்கு வளையல்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட  சீப்பு, பலவகையான காதணிகள், மை  தீட்டும் கருவி, கொம்பினால் செய்யப்பட்ட எழுத்தாணி, தாயக்கட்டைகள், எடைக்கற்கள் வணிக முத்திரைகள் ஆகியவைகளும் கிடைத்துள்ளன.
தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் வேறெங்கும்  இதுபோல கிடைக்கவில்லை. அசோகர் ஆட்சியில் சாசனம் பொறிக்கப்பட்ட பிராமி கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், கீழடியில் பானை ஓடுகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களும், கல்வியறிவு பெற்ற ஒரு சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம்  இருந்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.  அசோகர் பிராமி எழுத்து சிக்கல் நிறைந்தது.  தமிழ் பிராமி எழுத்து எளிமையானது.  சங்காலப் பெயர்களான சேந்தன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடும், கோதை என்னும் பெண் பெயர் பொறிக்கப்பட்ட தங்கக் கட்டியும் கிடைத்துள்ளன.
துளையிடப்பட்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்துள்ளன. சிந்து சமவெளி அகழாய்விலும்  இத்தகைய ஓடுகள் கிடைத்துள்ளன. இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பது ஆராயப்படவேண்டும்.
மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. எனவே பாண்டியரின் தலைநகரமான சங்ககால மதுரையாக இது இருக்க வாய்ப்புள்ளது.
ரோமானிய பானைகளும் கிடைத்துள்ளன. சங்கப் பாடல்களில் ரோமானியர் தொடர்பு பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே அதற்கான தொல்லியல் தடயமாக இது கிடைத்துள்ளது. சாதவாகனர் பானையும் கிடைத்துள்ளது.  உடையாத அழகுப்படுத்தப்பட்ட  தானிய சேமிப்பு பானைகள் கிடைத்துள்ளன.  மேலும் இங்கு கிடைத்துள்ள கருப்பு&சிவப்பு பானைகள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
பலவகையான கழிவு நீர்க் கால்வாய்கள் கண்டறியப்பட்டன. சுட்ட மண் குழாய்கள் ஏதோ ஒரு வேதிப் பொருள் உருக்கப்பட்டு குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு,  பானைகளில்  காய்ச்சி வடிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. 2 அடுக்கு எரிகலன் கண்டறியப்பட்டுள்ளது. இது சாயத் தொழிற்சாலையாகவும் இருக்கலாம். பலவகையான உலைகள் கிடைத்துள்ளன.
 கீழடியில் உள்ள மணல் அடுக்குகளை ஆய்வு செய்தபோது வைகை ஆறு முதலில் இந்தப் பகுதியில் பாய்ந்து பின்னர் தனது போக்கை மாற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது.
நகருக்கு வெளியே மக்கள் பயன்பாடற்ற நிலத்தில் புதை குழிகளை அமைத்துள்ளனர் என்பது தெரிகிறது. பல ஊர்களுக்கும் ஒரு புதைக்காடு இருந்துள்ளது.  
செப்பு நாணயங்கள் கிடைத்திருப்பது  வணிகம் சிறந்து விளங்கியது என்பது எடுத்துக்காட்டுகிறது.
இங்கு கீழ்ப் பகுதியில் கற்கோடாரி  போன்ற கற்கால ஆயுதங்கள் கிடைத்துள்ளன.  அவை அங்கு  வாழ்ந்த முன்னோர்கள் விட்டுச் சென்றவையாக இருக்கும். முன்னோரின் சொத்துக்களை அம்மக்கள் பாதுகாத்து வந்துள்ளனர் எனத் தெரிகிறது.
இலக்கியங்களிலோ, வரலாற்றிலோ, கீழடிப்பற்றி எத்தகைய குறிப்பும் இல்லை.  திருவிளையாடல் புராணத்தில் மணலூருக்கு அருகில் மதுரை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழடி மணலூருக்கு மிக அருகில் உள்ளது. வைகையின் தென்புறம் 15கி.மீ. தொலைவில்  இந்த ஊர் அமைந்துள்ளது.
இங்கு நாங்கள் கண்டறிந்த தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு உள்ளதாகும். 2 ஏக்கர்தான் தோண்டியிருக்கிறோம். மேலும் உள்ள பகுதிகளை முழுமையாகத் தோண்டி ஆராய்ந்தால் தமிழ்நாட்டின் வரலாற்றுக் குறியீடாக கீழடி அமையும். சங்கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நகர்ப்புற நாகரிகத்திற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்.  
சங்ககால தமிழர்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். நகர்ப்புற நாகரிகமே இல்லை என்று கூறப்படுவது தவறு என்பதை கீழடி அகழாய்வில் கிடைத்த வரலாற்றுத் தடயங்கள் மூலம் நிறுவிக்காட்டினோம். இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இந்திய அரசுக்கு இல்லை. எனவே கீழடி அகழாய்வு திட்டமிட்டு முடக்கப்பட்டது.
கீழடியில் தொல்லாய்வு மேடு அமைந்திருக்கும் 110 ஏக்கர் பரப்பளவு முழுமையையும் விவசாயிகளுக்குரிய இழப்பீடு கொடுத்து தமிழக அரசு தன்வசப்படுத்தவேண்டும். அப்போதுதான் இந்த ஆய்வினைத் தொடர  முடியும். பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிந்து தமிழர்கள் நாகரிகம் இந்தியாவிலேயே மிகத் தொன்மையான நாகரிகமாகும் என்பதை நிலைநாட்ட முடியும்” என்றார்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.