சமூக நீதியை நிலை நிறுத்திய கேரள அரசுசமூக நீதியை நிலை நிறுத்திய கேரள அரசு |
|
|
|
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 11:25 |
2006ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்த தி.மு.க. அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. தமிழகம் முழுவதிலும் சைவ, வைணவ மரபுகளின் அடிப்படையில் 6 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன.
சைவத்திற்கு நான்கும், வைணவத்திற்கு இரண்டும் உருவாக்கப்பட்டு பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 240பேர் பயிற்சிப் பெற்றனர். இவர்களில் 207பேர் முழுமையான பயிற்சிப் பெற்று வெளியேறினர். இச்சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கின் காரணமாக இம்மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்படவில்லை. பிறகு 2009ஆம் ஆண்டில்தான் இவர்களுக்கு அவை வழங்கப்பட்டன. இவர்களில் ஒருவருக்குக் கூட அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இம்மாணவர்கள் இதற்காக பல போராட்டங்களை நடத்தினார்கள். பலமுறை கைது செய்யப்பட்டார்கள். எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்று சொன்னால், இவர்கள் பயிற்சி காலத்தில் தொட்டு பூசை செய்த சாமி சிலைகள் தீட்டாகிவிட்டன என்று சொல்லி அவற்றை யாரும் தொடாமல் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். பயிற்சிப் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாணவர்களில் ஒருவரும், மிகவும் பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருமான மாரிச்சாமி என்பவருக்கு மதுரையில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் பணி இந்து அறநிலையத்துறையால் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளத்தில் பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 36 அர்ச்சகர்கள் அரசு நிர்வகிக்கும் கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக நீதிக்கான நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள கேரள இடதுசாரி அரசு பாராட்டுக்குரியதாகும். கேரளத்தில் சட்டப்படி சாத்தியமானது தமிழகத்தில் எப்படி சாத்தியமாக்க முடியவில்லை? ஏன்? ஆனாலும், இந்து மதத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விசுவ இந்து பரிசத் போன்ற அமைப்புகள் இன்னமும் தங்களின் உயர்சாதி வெறியை மாற்றிக்கொள்ள மறுக்கின்றன. இந்த அமைப்பின் அகில உலக செயல் தலைவர் எஸ். வேதாந்தம் பின்வருமாறு கூறியுள்ளார். "எதையும் அரசு திணிக்கக் கூடாது. ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் அந்தந்த ஆகம முறைப்படி பூசைகள் நடந்து வருகின்றன. அது அவர்களின் உரிமையாகும். அதை ஒருபோதும் யாரும் மாற்றக்கூடாது. வேறு சமூகங்களிலிருந்து அர்ச்சகராக வருபவர்கள்கூட பெரிய கோயில்களைத்தான் கேட்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள் ஒரு இலட்சம் பேர்கள் தான் உள்ளனர். ஆனால், கிராமக் கோயில்களின் பூசாரியாக 6 இலட்சம் பேர் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். இதைவிட அப்பட்டமாக யாரும் பார்ப்பன வெறியை வெளியிட முடியாது. ஆயிரம் ஆண்டுகாலமாக பார்ப்பனர்கள்தான் பூசை செய்து வருகிறார்கள். எனவே, அதை மாற்றக்கூடாது என வாதாடுகிறார் வேதாந்தம். ஒரு இலட்சம் பார்ப்பனர்கள் கோயில்களில் பூசாரிகளாக இருப்பதாக வேதாந்தம் கூறுகிறார். அதில் ஒரு ஐயம் எழுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா முழுமையிலும் சமற்கிருதம் மொழியில் பேச, எழுத தெரிந்தவர்களின் எண்ணிக்கை 24,821 ஆகும். அப்படியானால் தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் மட்டுமே இருக்க முடியும். இப்போது கோயில்களில் பட்டர்களாக உள்ள ஒரு இலட்சம் பார்ப்பனர்களில் மிகப் பெரும்பாலோருக்கு சமற்கிருதமே தெரியவில்லை என்பது அம்பலப்பட்டுள்ளது. சமற்கிருதம் தெரியாமல் அந்த மொழியில் இவர்கள் அப்படி அர்ச்சனை செய்கிறார்கள்? தமிழ்மொழியைப் புறக்கணித்துவிட்டு வடமொழியில்தான் அர்ச்சனை செய்யவேண்டும் என பிடிவாதம் காட்டும் பார்ப்பனர்கள் எந்த மொழியை உயர்த்திப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த மொழியை பேசவோ, எழுதவோ தெரியாது ஆனாலும், பார்ப்பனர்கள் தமிழுக்கெதிரான வெறியுடன் செயல்படுகிறார்கள் என்பதை வேதாந்தம் தன்னையறியாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். |