மக்கள் விசாரணைக்குழு அறிக்கை வெளியீடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:49

தூத்துக்குடி மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்திய  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 உயிர்களையும் மேலும் தடியடியால் இருவரின் உயிர்களையும் தீக்கிரைக்கு  ஒருவரையும் பலியாக்கிய மனிதநேயமற்ற அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையிலும், உண்மை நிலைகளை மக்களுக்கு அறிவிக்கவும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் விசாரணைக்கானஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளான உயர்திரு. கோல்சே பட்டீல் மற்றும் உயர்திரு. ஹரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர்கள் திரு. கமல்குமார் ஐ.பி.எஸ்., திரு. ஜேக்கப் புன்னூஸ் ஐ.பி.எஸ்., திரு. சிறீ  குமார் ஐ.பி.எஸ்., ஒய்வு பெற்ற ஆட்சியர்கள் திருமிகு. எம்.ஜி. தேவசகாயம் ஐ.ஏ.எஸ்., திருமிகு. கிறித்துதாஸ்காந்தி, ஐ.ஏ.எஸ்., மருத்துவர் கே. மதிகரன், வழக்குரைஞர் கீதா இராமசேசன், திருமிகு.  கீதா இராமநாதன், திருமிகு. மாயா தர்வாலா, மூத்த ஆலோசகர், பேராசிரியர் கல்பனா கண்ணபிரான், பேராசிரியர் சிவ் விஸ்வநாதன், திருமிகு பமீலா பிலிப்போஸ், திருமிகு. அமித் செங்குப்தா, திருமிகு. கவிதா முரளிதரன், மருத்துவர் சேவியர் சுரேஷ், முனைவர் வே.அ. இரமேசுநாதன், திருமிகு. டாம்தாமஸ், எழுத்தாளர் கவிதா கஜேந்திரன் மற்றும் முனைவர் தீபக் நாதன் ஆகியோர் உள்ளடங்கிய உயர்மட்ட கள ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது.
 2018சூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் உயர்மட்ட கள ஆய்வுக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவ சாட்சிகள், பாதிப்பு ஏற்படுத்தியவர்கள், அரசு  அலுவலர்கள் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள்,  குமுறல்கள், கண்ணீர்  கதைகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய மனித உரிமை மீறல்கள், சட்ட விரோத செயல்பாடுகள் போன்றவற்றை கேட்டறிந்து அது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து திரட்டிய தகவல்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அறிக்கையாகத் தொகுக்கப்பட்டு 18-07-18 அன்று மாலை  தூத்துக்குடியில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிடவிடாமல் தடுப்பதற்குக் காவல்துறை பல முயற்சிகளை செய்தது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள், ஓய்வுபெற்ற ஆட்சியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்கிய இக்குழுவின் அறிக்கையையே வெளியிடவிடாமல் தடுக்க காவல்துறை செய்த முயற்சி அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை முயற்சியாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளை துணிந்து அம்பலப்படுத்திய மக்கள் விசாரணைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.டபிள்யு.டி. திலக், மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் ஆகியோருக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.