தமிழக அணைகள் உடையும் அபாயம்!- பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:19

   182 ஆண்டுகளுக்கு  முன்னால்  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1836ஆம் ஆண்டில் முக்கொம்பு மேலணை 45 நீர்ப் போக்கி மதகுகளுடன் கட்டப்பட்டது. 1924, 1958, 1961, 1977, 1994, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளம் பெருகி மேலணை வழியாக ஒடியது. 

2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம்தான் அதிகளவு வெள்ளமாகும். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தென்னிந்திய நீர்ப்பாசனத்தின்  தந்தை என்று போற்றப்பட்ட சர்ஆர்தர் காட்டன் என்பவரால் ரூ. 2 இலட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த அணை இப்போது உடைந்ததின் விளைவாக ரூ. 410 கோடியில் புதிய அணை கட்டவேண்டியநிலைமை ஏற்பட்டுள்ளது. 182 ஆண்டுகாலமாக பல பெரு வெள்ளங்களைச் சந்தித்து உறுதியாக நின்ற அணை, இப்போது உடைந்ததற்குரிய காரணங்கள் நன்கு ஆராயப்படவேண்டும்.
இந்த அணையின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்கள் அரசால் ஒதுக்கப்படுகிறது. அணையின் கட்டுமானத்தில் ஏற்படும் சிதைவுகள், வெடிப்புகள் ஆகியவற்றை கவனித்து சீரமைப்புச் செய்யவேண்டும். மூடித் திறக்கும் மதகுகள் இரும்பாலானவை. அவை துருப்பிடிக்காமல் இருக்க தகுந்த பூச்சு பூசப்படவேண்டும். மதகுகள் நீர், வெயில் காரணங்களினால் இற்றுப் போயிருந்தால் மாற்றிவிட்டுப் புதிய மதகுகள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும். செங்கல் மற்றும் கருங்கல் கட்டுமானத்தால் ஆன இந்த அணையின் அடித்தளம் வழியாக நீர் ஊடுருவி மறுபக்கம் கசியும். அவ்வாறு கசிகின்ற நீரில் மணல் துகள் கலந்து வருகிறதா? என்று பார்க்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அடித்தளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
2002ஆம் ஆண்டில் தமிழக அரசின் நீர் வளத்துறை ஆலோசகரான திரு. மோகன கிருஷ்ணன் ஆய்வு செய்து மேலணை,  கீழணை ஆகியவை பலவீனமாக  இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த அணைகளின் மேல் உள்ள பாலங்கள், போக்குவரத்துக்கான தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டன. எனவே, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், சில ஆண்டுகள் மட்டுமே இந்த பரிந்துரை செயல்படுத்தப்பட்டது. கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் அணையும், கீழணையும் பலப்படுத்தப்பட்டன. ஆனால், மேலணையில் இந்த வேலைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆண்டுதோறும் செய்யப்படவேண்டிய பராமரிப்புப் பணிகளும், பழுது நீக்கல் பணியும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டும் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனாலும், அதற்குப் பிறகு கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன் விளைவாக மேலணை மேலும் வலிமை குன்றியது.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 90 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான பாலத்தின் இரு தூண்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.  அணைகள், பாலங்கள்,  கால்வாய்கள், குளங்கள்,  ஏரிகள் ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கொரு முறையாவது பழுது பார்த்தல், பராமரித்தல், தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  கடந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏரி, குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை மராமத்து செய்ய ரூ. 300 கோடியும், நடப்பாண்டில் ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டன. ஆனால் அந்தப் பணிகள் முறையாக செய்யப்படவில்லை.நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் மூலம் குடிமராமத்துப் பணிகளை செய்ய வேண்டும் என்பது விதியாகும். 2013 ஆண்டுக்குப் பிறகு இந்த சங்கங் களுக்குத் தேர்தல் நடத்தப் படவில்லை. அவைகள் செயலற்றுக் கிடக்கின்றன. இந்தப் பணிகள் அரசியல் பின்னணியில்உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படுவதால்அவர்கள் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். திட்ட மதிப்பீட்டில் 60% நிதி அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அளிக்கப்படுகிறது. எஞ்சிய 40% நிதியில்  ஒப்பந்தக்காரரின் ஆதாயம் போக எஞ்சிய பணத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளால் எவ்விதப்பயனும் கிட்டுவதில்லை.  
மேலணை மற்றும் கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு மேற்கண்டவை மட்டும் காரணமல்ல, மணல் கொள்ளைதான் மிக முக்கியமான காரணமாகும். ஆறுகள் நீரை மட்டுமன்றி செழிப்பான வண்டலையும், மணலையும் அள்ளித் தருகின்றன. ஆனால் நீரும், மணலும் இப்போது வணிகப் பொருள்களாகிவிட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆறுகளைக் காப்பதற்காக 1884ஆம் ஆண்டில் கொண்டுவந்த சட்டம்  இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆற்றின் நீரையும், மணலையும் இச்சட்டம் பாதுகாத்தது. 1920ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் இயற்றப்பட்டது. 1935ஆம் ஆண்டில் இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1950ஆம்  ஆண்டில் சில  திருத்தங்கள் செய்யப்பட்டன. பாசன  வேலைகளில் கிராமப் பஞ்சாயத்துகள் ஈடுபட இத்திருத்தம் வழிவகுத்தது. ஆனால், பஞ்சாயத்துகளுக்கு போதிய நிதியும், அதிகாரங்களும் வழங்கப்படாததால் அவைகள் சரிவர செயல்பட முடியவில்லை. 1958ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம் பிரிவு 84இன் படி ஆறு, குளங்களில் மணல் அள்ளுவதை அனுமதிக்கும் அதிகாரம் கிராமப்பஞ்சாயத்துகளுக்குக் கொடுக்கப்பட்டது. எனவே அந்தந்த ஊர் மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்த ஆறுகளில் உள்ள நீர், மணல்  ஆகியவற்றைப் பாதுகாத்தனர். ஆனால் 1994ஆம்  ஆண்டில் பஞ்சாயத்துச் சட்டத்தில் பிரிவு 132, 133 ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டன. நீர் நிலைகள் மீது பஞ்சாயத்துகளுக்கு இருந்த உரிமையும், அதிகாரமும் பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆளுங் கட்சியினர் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் செயற்படவேண்டிய நிலைமையில் ஆற்று மணல் கொள்ளை பெருகியது. ஆறுகளில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதை இச்சட்டம் அனுமதிக்கவில்லை. 2004ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையின்படி தொழில்துறை செயலாளரின் அனுமதியுடன் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என சட்டம் திருத்தப்பட்டது.  இதன் பிறகு தமிழக ஆறுகள் அனைத்திலும் இருந்த மணல் சூறையாடப்பட்டு அண்டை மாநிலங்கள் வரை கொண்டுபோகப்பட்டது.
1996ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டு மணல் கொள்ளையைத் தடுக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டது. இதற்கிணங்க மணல் எடுக்கும் உரிமம் இரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ. 21/2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மணல் கொள்ளை அப்போது நின்றது. சில  ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணல் கொள்ளை பெருகிற்று.  2000ம் ஆண்டில் தமிழ்நாட்டின் நீர்வளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கண்டறிய ஒரு குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கொடுத்த அறிக்கையில் "அரசுத்துறைகளில் உள்ள ஊழல் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கூட்டுச்சேர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுக்க வல்லுனர்கள் மற்றும் கிராம மக்களைக் கொண்ட குழுவே மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் கொண்டதாக அமைக்கப்படவேண்டும்” என்று பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரை மதிக்கப்படவில்லை.
மணல் கொள்ளைக்கெதிராக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு கீழ்க்கண்ட ஆணைகளைப்   பிறப்பித்தது. ்ஒரு மாத காலத்திற்குள் விஞ்ஞானிகள், நிலவியல் வல்லுநர்கள்  மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளைப் பார்வையிட்டு இனி செய்யவேண்டியது குறித்து ஆறு மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும். அந்த அறிக்கையின்படி தக்க ஆணைகளை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்” என கூறியது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக நிலவியல்துறைத் தலைவரான முனைவர் சி. மோகன்தாஸ் தலைமையில் அரசு ஒரு  குழுவை அமைத்தது. இக்குழு அளித்தப் பரிந்துரைகளில் மிக முக்கியமானது பாசன கட்டுமானங்கள் மற்றும் பாலங்கள் அமைந்திருக்கும் இடங்களிலிருந்து 500 மீ தூரத்திற்கு  அப்பால்தான் மணல் எடுக்கவேண்டும் என்பதாகும். ஆனால், இந்த விதி அரசாலும், மணல் கொள்ளையர்களாலும் மதிக்கப்படவே இல்லை. இரவு வேளைகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்றது.
இக்குழுவின் பரிந்துரைப்படி தனிநபர்களுக்கு மணல் அள்ள கொடுக்கப்பட்ட உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன. 2003ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அரசு பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே இனி ஆறுகளில் மணல் அள்ளி விற்கப்படும் என தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், ஆற்றிலிருந்து  மணலை அள்ள போதுமான இயந்திரங்கள் மற்றும் வேலையாட்கள் அரசிடம் இல்லை என்று பொய்யான காரணம் கூறி ஆற்றிலிருந்து மணல் எடுத்து அரசின் கிடங்குகளில்  சேர்க்க ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் மறைமுகமாக மணல் கொள்ளை தொடர்ந்தது.
மணல் கொள்ளைக்கு எதிராகச் செயற்பட்ட அதிகாரிகள் மக்கள் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மணல் தாதாக்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து செயல்பட்டனர்.
ஆறுகளில் உள்ள மணல் வெள்ளம் பெருகி வரும்போது அதன் வேகத்தை ஆங்காங்கே குறைக்கிறது. நீரை உறிஞ்சுகிறது, நிலத்தடி நீராகச் சேமிக்கிறது. இவற்றின் விளைவாக ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிணறுகள்  ஊற்றெடுக்கின்றன. மரம், செடி, கொடிகள் தழைக்கின்றன. மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்கிறது. விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் பயன்படுகிறது. பாசன கட்டுமானங்கள் மற்றும் பாலங்களிடமிருந்து 500மீ. தூரத்திற்கு அப்பால்தான் மணல் எடுக்கப்படவேண்டும் என்ற விதி மதிக்கப்படவில்லை. இத்தகைய அமைப்புகளின் அடித்தளம் தெரியுமளவுக்கு மணல் அள்ளப்பட்டதின் விளைவாக வெள்ளம் பெருகி ஓடி வரும்போது தங்குதடையில்லாமல் அவை வேகமாகப் பாய்ந்து அணைகள், பாலங்கள் ஆகியவற்றின் மீது மோதுகின்றன. அதன் விளைவாக அவை இடிகின்றன.
ஆரணி ஆற்றின் குறுக்கே இருந்த காரனோடை பாலம் இருமுறை இடிந்தது. இலட்சுமிபுரம் அணைக்கட்டு, கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த அணைக்கட்டு ஆகியவையும்  வெள்ளத்தால்  தகர்ந்தன. திருவள்ளூரில் இருந்த  பாலம் இடிந்தது. வைகை, காவிரி, பாலாறு பகுதிகளிலும் இதுபோன்ற சேதங்கள் ஏற்பட்டன என்பதை  நினைவில் கொள்ளாமல் தொடர்ந்து மணல் சூறையாடப்பட்டதின் விளைவாக இப்போது மேலணையும், கொள்ளிடம் பாலமும்  இடிந்து தகர்ந்தன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் சூறையாடப் பட்டுள்ளதாலும்,  இந்த ஆறுகளில் உள்ள  பாலங்கள், அணைகள் மற்றும் பாசனக் கட்டுமானங்கள் ஆகியவை சரிவர பராமரிக்கப்படாததாலும்,  அவை உறுதியாக உள்ளனவா என்பதை நன்கு பரிசோதித்து அறிக்கை தர வல்லுநர் குழு ஒன்றினை உயர்நீதிமன்றம் அமைக்க முன்வரவேண்டும். அக்குழு அளிக்கும் அறிக்கையின்படி உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதை உயர்நீதிமன்றமே கண்காணிக்கவேண்டும்.  இப்படி செய்தாலொழிய இன்னும் பல அணைகள், பாலங்கள் இடிவதையும், மக்களும் தமிழ்நாடும் பேரழிவிற்குள்ளாவதையும் யாரும் தடுக்க முடியாது.
நன்றி - தினமணி - 27-08-2018

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.