இந்தி - பெரும்பான்மையினர் பேசும் மொழியா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:23

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள பட்டியல் மொழிகள் 22, பட்டியலில் இடம்பெறாத மொழிகள் 99 ஆகிய 121 மொழிகள் இந்தோ&ஐரோப்பியம், தமிழியம் (திரவிடம்), அசுட்ரோ-அசியாடிக்கு, திபெத்தோ-பர்மியம், செமிட்டோ-எமிடிக்கு என்னும் ஐந்து குடும்பங்களுள் அடங்குபவை.

தாய்மொழிகள் எனக் குறிக்கப்பட்டவை 270. இவை முன்னர்  காட்டிய 121 மொழிகளுக்குள் அடங்குபவை. இவற்றுள் குறிப்பிட்ட ஒரு மொழிக்கு அது எந்தப் பெருமொழியின் கீழ் காட்டப்பட்டுள்ளதோ அதுவே அதன் மொழியடையாளமாகக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
121 மொழிகளுக்குக் கீழ் தாய்மொழி எனக் குறிப்பிட்ட சில மொழிகளைச் சேர்த்துள்ளனர். இப்பகுப்பில் எண்ணிக்கையைக் கூட்டிக்  காட்டுவதற்காக  ஒரு பெரு மொழியின்  கீழ் பல மொழிகள்  வலிந்து சேர்க்கப்பட்டவையாக இருக்கின்றன என்கின்றனர். சான்றுக்கு இந்தி பேசுவோர் எண்ணிக்கை 32,22,30,009 என்றுள்ளது. இந்தி என்னும் தலைப்பின் கீழ் அமைந்த பிற தாய்மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை 20, 61, 17, 184. இவை இரண்டையும் ஒன்று சேர்த்து மொத்தமாக இந்தி பேசுவோர் எண்ணிக்கை 52,83,47,193 என்று காட்டப்பட்டுள்ளது.
இந்தி என்னும் தலைப்பில் அமைந்த பகுப்பிற்குள் 56 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதுவும் அல்லாமல் பிற என்னும் எண்ணிக்கையில் உள்ள 1,67,11,170 பேரும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். போசுபுரி மொழி 5  கோடிக்கும் மேலானவர்கள் பேசும் மொழி. அம்மொழி தனக்கென்று தனியான இலக்கண இலக்கியத்தைக் கொண்டுள்ளது. அம்மொழியில் திரைப்படம் எடுக்கப்படுகின்றது. தனியான சொற்களஞ்சியத்தை அம்மொழி கொண்டுள்ளது. இருந்தாலும் அம்மொழி இந்தி என்னும் தலைப்பிற்குக் கீழ் கணக்கிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய மூன்றுகோடி மக்கள்  பேசுவோரைக் கொண்ட இராசசுதானம் மொழியும் இந்திக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மராட்டியத்திலும் நடுவண் பைதிரத்திலும் பேசப்படும் பவரி தொல்குடியினர் மொழியும் இந்திக்குள் இணைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டு  மாநிலத்தில் உள்ள குமானி மொழியும் இந்திக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் சேர்த்து இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 52, 83,47,193 என மிகைப்படுத்திக் காட்டுகிறது இக்கணக்கெடுப்பு.     
(நன்றி - தென்மொழி ஆகத்து 2018 - முனைவர் இரா. கு. ஆல்துரை - கட்டுரை)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.