காவிரி நீரை முற்றிலுமாகத் தடுக்கவே மேகதாட்டுத் திட்டம் - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 அக்டோபர் 2018 14:39

தமிழ்நாட்டில் காவிரி ஒன்றுதான் பெரிய ஆறாகும். கர்நாடகத்தில் காவிரி மட்டுமின்றி கிருஷ்ணா, துங்கபத்ரா (கிளை) எனும் இரண்டு பெரிய ஆறுகளும் மற்றும் கோதாவிரி ஆற்றின் கிளை ஆறுகளும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பலவும் உள்ளன.

தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் 34% காவிரிப் படுகையில் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள நிலப்பகுதியில் 17% மட்டுமே காவிரிப் படுகையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசன நிலத்தில் 60% காவிரி ஆறு ஒன்றினையே நம்பியுள்ளது. தமிழ்நாடு தனது உணவு தானிய உற்பத்திக்குக் காவிரியையே பெரிதும் சார்ந்துள்ளது.
1974-ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் சராசரியாக 300 டி. எம். சிக்கு குறையாமல் காவிரியில் நீர் வந்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு காவிரியில் வந்து இணையும் கிளை ஆறுகளான கபினி, ஏமாவதி, ஏரங்கி போன்ற ஆறுகளில் அணைகளை கட்டி நீரை கர்நாடகம் தேக்கியது. மேலும் கர்நாடகத்தில் காவிரிப் படுகைப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் கொள்ளவை அதிகரிக்க "காவிரிப் பெருந் திட்டம்" ஒன்றினை வகுத்து அவைகளில் நீரைத் தேக்கிக் கொண்டு காவிரி அணைகளில் நீர் இல்லை என தமிழகத்தையும் இந்திய அரசையும் தொடர்ந்து ஏமாற்றியது. நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்தத் தீர்ப்புகளை மதிக்க மறுத்தது. ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட சட்டப் போராட்டத்தின் மூலம் 2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பினையும் அதற்குப் பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தையும் நாம் பெற்றோம். ஆனாலும் கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்வதற்கு கர்நாடகம் முயலுகிறது.
தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு என்னும் இடத்தில் 5912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனல் மின் திட்டம் ஒன்றை அமைக்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படுமேயானால் மேட்டூர் அணைக்கு இப்போது வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதுமாகத் தடுக்கப்பட்டு விடும்.
1982-ஆம் ஆண்டில் கர்நாடக மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக மேகதாட்டுத் திட்டத்தை அறிவிப்பதாக அப்போதைய முதலமைச்சர் குண்டுராவ் அறிவித்தார். இந்த அறிவிப்புத் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திற்று.
6-2-1982-அன்று தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்னை குறித்து நான் பேசும் போது "தமிழகம் நீர்ப் பற்றாக்குறை மாநிலம் மட்டுமல்ல, மின் பற்றாக்குறை மாநிலமும் ஆகும். ஆனால் கர்நாடகம் நீரிலும், மின்சாரத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும். அம்மாநிலத்தில் கிருஷ்ணா, துங்கபத்ரா மற்றும் அதன் கிளை ஆறுகள் உட்பட வற்றாத ஆறுகள் பல உள்ளன. இவற்றின் மூலம் 6500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 1500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கர்நாடகம் உற்பத்திகளைச் செய்கிறது. அந்தப் பேராறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டாமல் தமிழ்நாட்டிற்கு ஓடி வரும் காவிரியிலும் அதன் கிளை ஆறுகளிலும் அணைகளைக் கட்டி நமக்கு தண்ணீர் வர விடாமல் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு கர்நாடகம் செயற்படுகிறது. 1961-ஆம் ஆண்டில் ஒகனக்கல்லில் தமிழ்நாட்டின் எல்லைக்குள் அணை கட்டி புனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாகத் திட்டக் குழுவும் நடுவண் அரசும் அத்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. அதன் விளைவாக நமதுத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒகனக்கல்லுக்கு மேலே நமது எல்லைக்கு மிக அருகில் மேகதாட்டு புனல் மின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உலக வங்கி நிதி உதவி செய்ய ஒப்புதல் கொடுத்திருப்பதாக கர்நாடக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் உலக வங்கி இத்திட்டத்திற்கு உதவி செய்ய முன் வராது. நமது ஒகனக்கல் புனல் மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த இந்திய அரசு மேகதாட்டுத் திட்டத்திற்கு எப்படி ஒப்புதல் அளித்தது?” என எனது உரையில் நான் கேள்வி எழுப்பினேன். அனைத்துக் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக சட்டமன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இந்திய அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறி,  அவ்வாறே செய்தார். அதன் விளைவாக கர்நாடகத்தின் திட்டம் அன்று தடுக்கப்பட்டது.
2012-ஆம் ஆண்டில் தேசிய புனல் மின் கழகம் வகுத்த ஒரு திட்டத்தை கர்நாடகம்,  தமிழகம் ஆகியவற்றின் பரிசீலனைக்கு முன் வைத்தது. சிவ சமுத்திரம், மேகதாட்டு புனல் மின் திட்டங்களை கர்நாடகத்திலும் இராசிமணல், ஒகனக்கல் புனல் மின் திட்டங்களை தமிழகத்திலும் நிறைவேற்றலாம் எனக் கூறியது. இத்திட்டத்தை தமிழகம் பின்வரும் நிபந்தனைகளுடன் ஏற்றது. அதாவது முதல் கட்டமாக கர்நாடகம் சிவ சமுத்திரம் புனல் மின் திட்டத்தையும் தமிழகம் ஒகனக்கல் புனல் மின் திட்டத்தையும் ஒரே நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும். இரண்டாம் கட்டமாக மேகதாட்டு திட்டத்தையும் இராசிமணல் திட்டத்தையும் நிறைவேற்றலாம். ஆனால் தேசிய புனல் மின் கழகம் இந்த நான்கு மின் நிலையங்களையும் தனது கட்டுப்பாட்டில் நிருவகிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர்? எவ்விதத் தடையுமின்றி வந்துசேரும் எனக் கூறியது. முதலில் இதற்கு ஒப்புக் கொண்ட கர்நாடகம் பின்னர் சிவ சமுத்திரம், மேகதாட்டு திட்டங்களை முதலில் நிறைவேற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டியது. எனவே தமிழகம் ஒப்புதல் அளிக்க மறுத்தது. உச்ச நீதிமன்றத்தில் மேகதாட்டு, சிவ சமுத்திரம், திட்டங்களுக்கு எதிராகத் தமிழகம் தொடுத்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
தற்போது மீண்டும் மேகதாட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் எதிர்ப்பினைக் கடிதம் மூலம் தலைமை அமைச்சர் மோடிக்கு தெரிவித்துள்ளார். "கர்நாடகத்தின் இந்த செயலானது நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கும் உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அது மட்டுமல்ல அவைகள் அளித்தத் தீர்ப்புகளைச் செயலற்றதாக்கி விடும். காவிரி வடிநிலப் பகுதியை சேர்ந்த மாநிலங்கள் ஏதேனும் புதியத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டுமென ஏற்கெனவே இந்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலையும் கர்நாடகம் மதிக்கவில்லை. இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசை இது வரை கர்நாடக அரசு அணுகவில்லை. மாறாக இத்திட்டத்திற்கான சாத்திய கூறு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென நடுவண் நீர்வள ஆணையத்தை கர்நாடக அரசு அணுகியுள்ளது" என்பதையும் தனது கடிதத்தில் நமது முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் கர்நாடக முதலமைச்சர் தனது அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களுடன் தில்லி சென்று தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னாள் தலைமை அமைச்சர் தேவ கவுடா தலைமையில் கர்நாடக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று மோடியைச் சந்தித்து இத்திட்டத்திற்கு அனுமதியை வழங்குவதோடு நிதி உதவியையும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதன்பிறகு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி. கே. சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில்... "கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை." என்று கூறியுள்ளார்.
கர்நாடகத்தின் தன்னலமும் தன்னிச்சையும் நிறைந்த இப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமை அமைச்சர் மோடி முன் வரவேண்டும். மேகதாட்டு அணைத் திட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்ட ஒகனக்கல் புனல் மின் திட்டத்திற்கு அனுமதி அளிப்பதன் மூலம் கர்நாடகத்திற்கு எத்தகையப் பாதிப்பும் ஒரு போதும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் ஒகனக்கல்லுக்கு வரும் காவிரி நீர் ஒரு போதும் திரும்பிப் பாயப் போவதில்லை. நமக்கு அளிக்கப்பட்ட நீரை ஒகனக்கல் புனல் மின் திட்டத்தின் மூலம் தேக்கி வைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை நமக்கு உண்டு. காவிரிச் சமவெளிப் பகுதியில் பெருகி வரும் வெள்ள மிகை நீரை தேக்கி வைத்துக் கொள்ள இயலாது. அண்மையில் வெள்ள நீரில் 150 டி.எம். சிக்கு மேலான நீர் வீணாகக் கடலுக்குச் சென்றது. இந்த மிகை நீரை தேக்கி வைத்து உரிய பருவத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் ஒகனக்கல் திட்டம் நமக்கு உதவும். ஆனால் நமக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுக்கும் உள்நோக்கத்துடன் மேகதாட்டுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து,தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேகதாட்டுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்த கட்டத்தில்கூட நாம் ஒன்றுபட்டுப் போராட முன்வராவிடில் காவிரி படுகைப்பகுதி பாலைவனமாவதைத் தடுக்க முடியாது.
நன்றி-தினமணி-22-09-2018

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.