புட்கரம் - பாழ்படும் பொருநை - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2018 12:18

அக்டோபர் 11ஆம் நாளில் தொடங்கி 23ஆம் நாள் வரை கடந்த 13 நாட்களாக தாமிரபரணி ஆற்றில் நடத்தப்பட்ட மகா புஷ்கர விழா ஒருவாறாக முடிந்துள்ளது. இவ்விழாவில் 70இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து ஆற்றில் நீராடியும், மூதாதையர்களை வழிபடும் சடங்குகளைச் செய்தும், மஞ்சள், மலர்கள் ஆகியவற்றை ஆற்றில் தூவியும் கொண்டாடியுள்ளனர்.

கரையோரங்களிலிருந்த புரோகிதர்கள் தட்சணை என்ற பெயரிலும், யாகசாலைகள் என்ற பெயரிலும் பணத்தை அள்ளிக் குவித்தனர். தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உட்பட முதன்மையானவர்களே இவ்விழாவில் கலந்துகொண்டபோது மக்களும் திரளாகக் கூடியதில் வியப்பேதுமில்லை.       
அகில பாரத துறவிகள் சங்கம் என்னும் ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்பு ஒன்றே இவ்விழாவை அறிவித்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 12  ஆண்டுகளுக்கொருமுறை புஷ்கரமும், 144 ஆண்டுகளுக்கொரு முறை மகாபுஷ்கரமும் நடத்தப்பெறும் என இந்த அமைப்பு அறிவித்தது. ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு ராசி உண்டு. அந்த ராசிக்கு குருபகவான் இடம் பெயரும் போது புஷ்கர விழா நடைபெறும். தாமிரபரணி ஆற்றுக்குரிய ராசி விருச்சிக ராசியாகும். அந்த ராசியில் குருபகவான் இடம்பெயர்ந்துள்ளார். எனவே 144 ஆண்டுகளுக்குப் பிறகு மகாபுஷ்கர விழா வந்துள்ளது என அகில பாரத துறவிகள் சங்கம் அறிவித்தது.
சங்க இலக்கியங்களில் தண் பொருநை என வழங்கப்பட்ட இந்த ஆற்றின் பெயர் பிற்காலத்தில் வடமொழியில் தாமிரபரணி என மாற்றப்பட்டது. சங்க இலக்கியங்களில் தை நீராடல், மாசி கடலாடல் என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால், சங்க இலக்கியங்களிலோ, அதற்குப் பின்னர் தோன்றிய காப்பியங்களிலோ, பக்தி இலக்கியங்களான பன்னிரு திருமுறைகள், திவ்ய பிரபந்தம், இவற்றுக்குப் பின்னர் தோன்றிய கம்பராமாயணம் மற்றும் பிற்கால சிற்றிலக்கியங்கள் வரை தமிழக ஆறுகளில் புஷ்கர விழாக் கொண்டாடப்பட்டதாக எவ்விதச் சான்றும் கிடையாது.
புஷ்கரம் என்றால் குளம் என்று பொருளாகும். அபிதான சிந்தாமணியில் புஷ்கரம் என்பதற்கு பின்வரும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கே உள்ள ஆஜ்மீர் நகரத்திற்கு ஆறு கல் தொலைவில் அமைந்துள்ள குளம் புஷ்கர் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில்தான் புஷ்கர விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கும்பகோணம் நகரில் உள்ள ஒரு குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை அதாவது, மாசி மாதத்தில் குருபகவான் சிம்மராசியில் சேரும் நாளில் இக்குளத்தில் மகாமகம் திருவிழா நடைபெறும். அருகில் ஓடும் காவிரியாற்றில் கூட இந்த விழா நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஆற்றிலும் இதுவரை புஷ்கர விழாவோ அல்லது மகா புஷ்கர விழாவோ நடைபெற்றதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சூது திட்டமே இந்த மகா புஷ்கர விழாவாகும். இதன் விளைவாக தாமிரபரணி ஆறு என்ன ஆகி இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு என்றும் வற்றாத நீரோட்டமுள்ள ஆறு தண் பொருநை ஆறாகும். பொதிகை மலையில் 5,500 அடி உயரத்தில் பூங்குளம் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு வழிநெடுக 3,000த்திற்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளைத் தழுவி வான தீர்த்தம் அருவியாக வெளிப்படுகிறது இந்த ஆறாகும். நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 200கி.மீ. தூரம் வரை ஒடி புன்னைக்காயலில் வங்கக் கடலில் கலக்கிறது. இடையில் சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா ஆறு, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலை ஆறு, காட்டாறு, சோம்பனாறு, கெளதலை ஆறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பை ஆறு, குண்டாறு ஆகியன இவ்வாற்றில் இணைந்து நீரோட்டத்தைப் பெருக்குகின்றன.  இந்த ஆற்றில் 3 பெரிய அணைகள், 8 சிறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 280கி.மீ. நீளமுடைய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆற்று நீர் 187 ஏரிகளை நிரப்புகிறது. மொத்தத்தில் 35,000 ஹெக்டேர் நிலத்திற்கு நேரிடையாகவும், சுமார் 16,000 ஹெக்டேர் நிலத்திற்கு கால்வாய்கள் மூலமும், சுமார் 19,000 ஹெக்டேர் நிலத்திற்கு ஏரிகள் மூலமாகவும் பாசன வசதியை இந்த ஆறு அளிக்கிறது. பாபநாசம் அணையின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 3 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும், 5 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் இந்த ஆறு பயன்படுத்தப்படுகிறது.
என்றும் வற்றாத இந்த ஆறு ஏற்கெனவே தொழிற்சாலைகளின் கழிவு நீராலும், கரையோரங்களில் அமைந்திருக்கும் நகரங்களின் சாக்கடை நீர் கலப்பதாலும் மாசடைந்து வருகிறது. இவற்றிற்கு மேலாக மணல் கொள்ளையாலும் ஆறு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 13 நாட்கள் மகா புஷ்கர விழா என்ற பெயரால் சுமார் 70 இலட்சம் மக்கள் குவிந்து ஆற்று நீரையும், ஆற்றின் கரைகளையும் மாசுபடுத்தியுள்ளார்கள். இந்தச்  சீரழிவிலிருந்து இந்த ஆற்றினை மீட்பதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.  
200மைல் நீளமுள்ள இந்த ஆற்றைத் தூய்மை செய்ய சில ஆயிரம் மக்களைத் திரட்டி அந்தப் பணியை திறம்பட செய்திருந்தால் ஆறும் கெடாமல் இருந்திருக்கும், மக்களுக்கும் தூய்மையான நீர் கிடைத்திருக்கும். மாறாக, இயற்கையை மாசுபடுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு மகா புஷ்கரம் என்ற பெயரைச் சூட்டி மக்களை மூடத்தனத்தில் மூழ்கச் செய்து ஆற்றின் இயற்கை வளத்தை அழித்தவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்களாவார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இல்லாத விழாக்களை உருவாக்கி மக்களை மேலும் மேலும்   மடமைச் சேற்றில் அழுத்தச் செய்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கிறது என்பதை தமிழர்கள் உணரவேண்டும். மகா புஷ்கரம் என்ற விழாக்களில் பங்கெடுத்துப் புண்ணியம் தேட நினைப்பதைவிட தமிழ்நாட்டில் உள்ள ஆற்றங் கரையோரங்களில் வாழும்  மக்கள் தங்கள் பகுதியில் ஓடும் ஆற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு தங்களின் உழைப்பையும், நேரத்தையும் செலவளிப்பார்களானால் அதைவிடப் பெரும்பேறு அவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.