திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகளைப் போல இலங்கையில் மிக விரைவாக அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எதிர்பார்க்கப்படாதவையல்ல.
சிங்கள அரசியல் தலைவர்களிடையே தொடர்ந்து நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில் இப்போது நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல. அவர்களிடையே நடைபெறும் அதிகாரப் போட்டியில்தமிழர்கள் பலிகடாக்களாக்கப்படுவதுதான் துயரமிக்கதாகும். 2015ஆம் ஆண்டு சனவரியில் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அசைக்க முடியாத அளவுக்கு வலிமை வாய்ந்த தலைவராக விளங்கிய இராசபக்சேயை எதிர்த்து அவரது அமைச்சர்களில் ஒருவரான சிறீசேனா போட்டியிட முன்வந்ததும், அவருக்கு சந்திரிகா, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் ஆதரவு தந்ததும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. இறுதியாக இராசபக்சே மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்ற உறுதியுடன் ஈழத் தமிழர்கள் அளித்த வாக்குகளின் விளைவாக சிறீசேனா வெற்றி பெற்றார். சிங்கள மக்களின் பெரும்பாலோர் இராசபக்சேவிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தும் வெற்றிக் கனியைப் பறிக்க அவரால் இயலவில்லை. 2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் ரணில் விக்ரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றபோது, ஆட்சி அமைப்பதற்கு மேலும் 7 பேரின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் சிறீசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவளித்து ரணில் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றார். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இராசபக்சே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. தமிழர்களுக்கெதிரான கொடுமைகள் தொடர்ந்தன. இந்தியாவின் தலைமையமைச்சராக மோடி பொறுப்பேற்றப் பிறகும் அரசின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கை அரசை திருப்திபடுத்தும் கொள்கையாகவே தொடர்ந்தது. சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்கவேண்டும் என்பதற்காக இந்தியா ஈழத் தமிழர்களின் நலன்களைப் பலிகொடுக்கத் துணிந்தது. இந்திய அரசின் திட்டங்கள் புறக்கணிப்பு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை தலைமையமைச்சர் விக்ரமசிங்கேயும், இந்தியத் தலைமையமைச்சர் மோடியும் பொருளாதாரத் துறை ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்று செய்துகொண்டனர். சீனா தந்த அழுத்தத்தின் விளைவாகவே இந்தியாவின் திட்டங்களை இலங்கை அரசு புறக்கணித்தது. இது குறித்து இந்திய அரசின் ஐயப்பாட்டினை போக்கிக் கொள்வதற்காக இலங்கைத் தலைமையமைச்சர் ரணில் இந்தியாவுக்கு வந்து தலைமையமைச்சர் மோடியை சந்தித்துப் பேசினார். அவர் தில்லியில் இருக்கும் வேளையில் இலங்கையில் திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய உளவுத் துறையான ரா அமைப்பு தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதாகக் குடியரசுத் தலைவர் சிறீசேனா பகிரங்கமாகத் தெரிவித்தார். பின்னர், இச்செய்தி மறுக்கப்பட்ட போதிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் இந்திய அரசுக்கு அதிர்ச்சி தந்தன. தலைமை யமைச்சராக இருந்த ரணில் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைமையமைச்சராக இராசபக்சே அறிவிக்கப்பட்டார். இருமுறை குடியரசுத் தலைவராக இருந்த இராசபக்சே மூன்றாம் முறை அப்பதவிக்குப் போட்டியிட முடியாது. எனவே தலைமையமைச்சராகப் பதவியேற்று தனது அதிகாரத்தை மீண்டும் நிலைப்படுத்திக்கொள்ள அவர் வகுத்தத் திட்டத்திற்கு சிறீசேனா ஒத்துழைப்புத் தந்தார். சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் இராசபக்சேவிற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்பதை 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் எடுத்துக்காட்டியது. இராசபக்சே, ரணில் ஆகியோருடன் ஒப்பிடும்போது சிறீசேனாவுக்கு சிங்கள மக்களின் ஆதரவு என்பது மிகக் குறைவாகும். அவர் ஒருபோதும் மக்கள் தலைவராகத் திகழ்ந்தவரல்லர். எனவேதான் தலைமையமைச்சரானால் அவரை எளிதாக அகற்றிவிட்டு அந்நாட்டின் சர்வாதிகாரியாக தானே ஆகிக்கொள்ளலாம் என இராசபக்சே வகுத்த சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்துகொள்ளாத சிறீசேனா அவருக்கு ஒத்துழைப்புத் தந்தார். நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சியில் இராசபக்சேயினால் வெற்றி பெற முடியவில்லை. இந்த உண்மையை உணர்ந்தவுடன் அவரது ஆலோசனையின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கையின் அரசியல் சட்டப்படி இந்நடவடிக்கை செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிரடியான இந்த நடவடிக்கையை அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகள் கடுமையாகக் கண்டித்தப் போதிலும் இந்திய அரசு தொடர்ந்து அமைதி காக்கிறது. சீனாவின் கரம் இலங்கையில் மேலோங்கிவிட்டது என்பதை உணர்ந்தேதான் இந்திய அரசு திகைத்து செய்வது இன்னது என்பதை அறியாமல் தடுமாறுகிறது. 1933ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இட்லரின் நாஜிக் கட்சிக்குப் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ஹிண்டன் பர்க், இட்லரின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரை தலைமையமைச்சராக்கினார். அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மக்களின் துயரைப் போக்குவதற்கான சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நான்காண்டு காலத்திற்குப் புதிய சட்டங்களை மேற்கொள்ள அமைச்சரவைக்கு இச்சட்டம் அதிகாரம் கொடுத்தது. சர்வாதிகார ஆட்சியை உருவாக்க உதவும் இந்தச் சட்டத்திற்கு எதிராக இருந்த கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 81பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சமூக சனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபடி தடுக்கப்பட்டார்கள். நாடாளுமன்றம் கூடியபோது நாடாளுமன்றத்திற்குள் நாஜிக் கட்சியைச் சேர்ந்த அடியாட்கள் குவிக்கப்பட்டனர். அச்சுறுத்தலும், மிரட்டலுமிக்க சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின்னர் சில மாதங்களிலேயே 1934ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த ஹிண்டன் பர்க் காலமானார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோதே இட்லரின் தலைமையில் அமைச்சரவைக் கூடி குடியரசுத் தலைவர் மற்றும் தலைமையமைச்சர் பதவிகளை ஒன்றாக இணைத்து ஒரு புதிய பதவியை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. மறுநாள் குடியரசுத் தலைவர் மறைந்ததும் இட்லர் அந்த நாட்டின் சர்வாதிகாரியானார். அதற்குப் பிறகு நடந்தவை உலக வரலாற்றில் என்றும் அழியாத வடுக்களைப் பதித்துவிட்டன. ஏறத்தாழ ஜெர்மனியிலும் அந்நாடு கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது, சுமார் 60இலட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். யூதர்கள் அல்லாத கிழக்கு ஐரோப்பிய மக்கள் 20இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இனத் தூய்மைத் திட்டம் என்ற பெயரால் இட்லர் நடத்திய இந்தப் படுகொலைகள் மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போரின் விளைவாக உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகமாகும். இட்லரின் கொலைவெறி போக்குக்கு உரமிட்டு வளர்த்தப் பெருமை பிரிட்டனின் தலைமையமைச்சராக இருந்த சேம்பர்லினையே சாரும். 1938ஆம் ஆண்டில் செர்மனியின் அண்டை நாடுகளான செக்கோஸ்லோவியா, போலந்து போன்ற நாடுகளிலும் குடியேறிருந்த செர்மானியர் வாழும் பகுதிகளை செர்மனியுடன் இணைக்கவேண்டும் என இட்லர் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியபோது பிரிட்டன் அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. மாறாக, பிரிட்டனின் தலைமையமைச்சர் சேம்பர்லின் இருமுறை செர்மனிக்கு நேரில் சென்று இட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தார். அதன்படி செக்கோஸ்லோவியாவின் ஒரு பகுதியான சூடட்டன் லேன்டு செர்மனியுடன் இணைக்கப்பட்டது. மற்றும் போலந்து போன்ற நாடுகளில் செர்மானியர் வாழும் பகுதிகள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச ஆணையம் ஒன்றை அமைப்பதென இருவரும் ஒப்புக்கொண்டனர். இதற்கான உடன்படிக்கை மூனிச் நகரில் கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின் பிரதியை பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் எடுத்துக்காட்டி பேசிய சேம்பர்லின் "நம்முடைய காலத்தில் என்றும் அழியாத அமைதியை கொண்டுவந்ததோடு பிரிட்டனின் தன்மானத்தையும் நிலைநிறுத்தியுள்ளோம்” என்று கூறினார். ஆனால், இந்த உடன்பாட்டை கிழித்தெறிய இட்லர் அதிக நாட்களை எடுத்துக்கொள்ளவில்லை. ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மீதும் படையெடுத்து ஆக்கிரமித்ததோடு மட்டுமல்ல, இறுதியாக பிரிட்டன் மீது படையெடுக்கவும் அவர் தயங்கவில்லை. இட்லரின் இனவெறி போக்குக்குத் தொடக்கக் கட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க பிரிட்டன் முன்வந்திருக்குமானால் இரண்டாம் உலகப்போரே மூண்டிருக்காது. பல கோடி மக்கள் இறந்திருக்கமாட்டார்கள். இராசபக்சே மற்றும் அவருக்கு முன்பும், பின்பும் இலங்கையின் ஆட்சிப் பீடங்களில் அமர்ந்திருந்த சிங்களத் தலைவர்களின் தமிழர்களுக்கெதிரான இனவெறி போக்குக்கு இந்திய அரசு தொடக்கக் கட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைத்திருக்குமானால் இலங்கையில் இன்றுள்ள அவல நிலை ஏற்பட்டிருக்காது. 1948ஆம் ஆண்டு இலங்கை விடுதலை பெற்றவுடன் முதன்முதலாக இந்திய வம்சாவழித் தமிழர்கள் எனப்படும் மலையகத் தமிழர்களின் குடியுரிமைகளைப் பறித்தது. ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக அந்த நாட்டில் வாழ்ந்து இரப்பர் தேயிலைத் தோட்டங்களை தங்களுடைய இரத்தத்தைச் சிந்தி உருவாக்கிய மலையகத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்ற இந்திய அரசு முன்வந்திருந்தால் அவர்களும் நல்வாழ்வு பெற்றிருப்பார்கள். ஈழத் தமிழர்களும் உரிமைகளைப் பெற்றிருப்பார்கள். ஆனால், ஆட்சியில் தொடர்ந்து இந்திய தலைமையமைச்சர்கள் சிங்களவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழர்களை பலிகடாக்களாக்க ஒருபோதும் தயங்கியதில்லை. உச்சகட்டமாக இராசீவ்காந்தி தலைமையமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக இந்தியப் படை அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கள அரசுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமல்ல, ஆயுத உதவிகளையும், ஆயுதப் பயிற்சிகளையும் அளிக்க இந்திய அரசு கொஞ்சமும் தயங்கவில்லை. ஈழத் தமிழர்களின் காவலனாக விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடைவிதிக்கவும், அதை ஒடுக்கவும் உலக நாடுகளை இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு தூண்டியது. ஒரு காலகட்டத்தில் மேற்கு நாடுகள் உண்மையை உணர்ந்தன. 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்யப்பட்டபோது ஐ.நா. மனித உரிமை ஆணையம் உட்பட உலக நாடுகள் அதை கண்டித்தப் போது இலங்கை அரசுக்கு அரணாக நின்று இந்தியா அதைப் பாதுகாத்தது. விடுதலைப் புலிகள் எந்த காலகட்டத்திலும் தங்களையும், ஈழத் தமிழர்களையும் பாதுகாப்பதற்காக இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கைகோர்க்கவும், உதவிகளைப் பெறவும் ஒருபோதும் முன்வந்ததில்லை. இறுதிவரை அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், சிங்களர்களோ, சிங்கள அரசுகளோ இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்பு கொள்ளவும், உதவிகளைப் பெறவும் ஒருபோதும் தயங்கியதில்லை. 1962ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்த போது இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் கட்சியான தமிழரசுக் கட்சி, மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இந்தியாவுக்குப் பேராதரவு அளித்தன. இந்தியாவுக்கு உதவுவதற்காக நிதியையும், தொண்டர்களையும் திரட்டின. ஆனால், சிங்கள இனவெறி கட்சியான ஜே.வி.பி. கட்சி ஆக்கிரமிப்பாளன் என இந்தியா மீது குற்றம்சாட்டியது. சீனாவின் நிலையை ஆதரித்தது. திருமதி பண்டாரநாயகாவின் கட்சியும் மற்ற இடதுசாரி கட்சிகளும் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முன்வராமல் நடுநிலை வகித்தன. இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்காக இலங்கை தமிழர்கள் திரட்டிய நிதியை இந்தியா அனுப்புவதற்கு சிங்கள அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது. 1972ஆம் ஆண்டு வங்கதேசப் போர் மூண்டபோது இந்தியாவின் மேலாக பாகிஸ்தான் விமானங்கள் பறக்கக் கூடாது என்ற தடையை இந்திய அரசு விதித்தது. ஆனால் பாகிஸ்தானின் போர் விமானங்கள் கொழும்பு வந்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு வங்காள தேசம் வரை சென்று குண்டுகளை வீசித் தாக்குவதற்கு சிங்கள அரசு அனுமதித்தது. இந்தியாவுக்குச் சோதனையும், நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு எதிராகவே சிங்கள அரசுகள் செயல்பட்டிருக்கின்றன என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மையாகும். மற்றொரு உண்மையையும் இந்திய அரசு உணரத் தவறிவிட்டது. இந்துமாக்கடலில் இலங்கை அமைந்துள்ள இடம் மிகமிக முதன்மை வாய்ந்ததாகும். தென்கிழக்காசியா, தென்னாசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு நடுவில் இலங்கை அமைந்திருப்பது சிறப்பானதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்காக மட்டும் இலங்கையை பிரிட்டன் கைப்பற்றவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளுடன் கடல் வழித் தொடர்புகளுக்கு முதன்மையான இணைப்பு நாடாக இலங்கை விளங்குவதை உணர்ந்திருந்த காரணத்தினால்தான் தனது கடற்படை தளத்தை அங்கு வைத்திருந்தது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகுகூட திரிகோணமலையில் இருந்த கடற்படை தளத்தையும், கட்டுநாயகாவில் உள்ள விமானப் படைத் தளத்தையும் தன்னிடமே வைத்துக்கொள்ள இலங்கையிடம் பிரிட்டன் ஒரு பாதுகாப்பு உடன்பாட்டினைச் செய்துகொண்டது. இந்துமாக்கடல் பகுதியில்உள்ள சூடன், திரிகோணமலை, சிங்கப்பூர் ஆகிய மூன்று துறைமுகங்கள் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தன. குறிப்பாக, இலங்கையின் ஆதிக்கம் யார் கையில் இருக்கிறேதோ அவர்கள் இந்துமாக்கடலிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற உண்மை இரண்டாம் உலகப்போரின்போது வெளியானது. 1942ஆம் ஆண்டில் சிங்கப்பூரை கைப்பற்றிய சப்பானியர் இலங்கையையும் கைப்பற்றத் திட்டமிட்டு, கொழும்பு, திரிகோணமலை ஆகிய துறைமுகங்களின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தினார்கள். இலங்கையை சப்பான் பிடித்தால் இந்தியா வீழ்ச்சியடைந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு எதிரான நாடு ஒன்றின் கையில் இலங்கை சிக்குமானால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேரபாயம் ஏற்படும் என்ற மாபெரும் உண்மை அப்போது அனைவராலும் உணரப்பட்டது. இந்திய கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் எழுதியுள்ள The Indian Ocean A strategic posture for India என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்-"பிரிட்டனுக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவுக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ, அதைபோல இந்தியாவுக்கு இலங்கை முதன்மையானதாகும். இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அதனால் அபாயம் வந்தே தீரும்”. அவர் குறிப்பிட்டுள்ள அந்த அபாயம் இப்போது வந்துவிட்டது. சீனா இலங்கையில் ஆழமாகக் காலூன்றிவிட்டது. இலங்கையின் தென்கோடியில் இந்துமாக்கடலில் கடற்கரையில் உள்ள அம்பன்தொட்டா துறைமுகத்தை சீனா கட்டித்தந்து தனது கடற்படைத் தளத்தையும் அங்கு அமைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார உதவிகள் அனைத்தையும் சீனா செய்து வருகிறது. ஆகவேதான் இந்தியா அளிக்க முன் வந்த பொருளாதார உதவிகளை சிங்கள அரசு அலட்சியம் செய்தது. சின்னஞ்சிறு நாடான இலங்கைக்கு இராணுவ உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ய சீனா முன் வந்திருப்பது ஏன்? எதற்காக? சீனாவின் பொருட்களை விற்பதற்கு இலங்கை என்ன பெரிய சந்தையா? அந்நாட்டினால் சீனாவுக்கு பொருளாதார ரீதியில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை, ஒருபோதும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எதற்காக சீனா இந்த உதவியை செய்கிறது? இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாகவும், இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும் இலங்கை தனக்குப் பயன்படும் என சீனா கருதுகிறது. தனது கருத்திற்கு இலங்கையை இசையவைத்து அங்கு காலூன்றிவிட்டது. இட்லரை எப்படியாவது திருப்திப்படுத்தவேண்டும் என பிரிட்டனின் தலைமையமைச்சர் சேம்பர்லின் கடைப்பிடித்தக் கொள்கை இட்லரை சர்வாதிகாரியாக ஆக்கிற்று. யூதர்களுக்கு எதிரான இனவெறி படுகொலைகளை ஊக்குவித்தது. அதைபோல இராசீவ் காலத்திலிருந்து மோடியின் காலம்வரை இந்திய தலைமை யமைச்சர்கள் தொடர்ந்து சிங்கள அரசுகளைத் திருப்திப்படுத்த கையாண்டுவரும் கொள்கை இலங்கையில் சனநாயகம் அழிக்கப் படுவதற்கும், சர்வாதிகாரம் வேரூன்றுவதற்கும் ஈழத் தமிழர்கள் இனவெறி படுகொலைக்கு ஆளாவதற்கும் வழிகோலி விட்டது. உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இந்த உண்மையை உணராமல் இந்திய அரசு கடைப்பிடித்தக் கொள்கையின் விளைவாக இந்துமாக்கடலின் ஆதிக்கத்தை சீனாவிடம் இந்தியா இழந்ததோடு, இந்தியாவே பேரபாயத்திற் குள்ளாகிவிட்டது. இந்தியாவைச் சுற்றியுள்ள தென்னாசிய நாடுகள் அனைத்தும் சீனாவின் நெருக்கமான நட்பு நாடுகளாகிவிட்டன. மியான்மர் நாட்டில் மூன்று கடற்படைத் தளங்களையும், வங்காள தேசத்தில் ஒரு கடற்படைத் தளத்தையும், இலங்கை, மாலத்தீவு ஆகியவற்றில் கடற்படைத் தளங்களையும் சீனா அமைத்துள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகத் திகழ்கிறது.நேபாளத்தில் மாவேயிஸ்ட்டுகளின் ஆட்சி உருவாகிவிட்டது. இந்தியா அமைத்த தென்னாசிய நாடுகளின் கூட்டமைப்பு செயலற்றுச் சிதைந்துவிட்டது. இந்தியாவுக்கு அருகே உள்ள நாடுகளில் எதுவும் இந்தியாவின் நட்பு நாடாக இல்லை. இந்த உண்மையை இந்தியா எவ்வளவு விரைவில் உணர்ந்து தனது வெளியுறவுக் கொள்கையை குறிப்பாக, இலங்கையைத் திருப்தி செய்யும் கொள்கையை அடியோடு கைவிடுகிறதோ அப்போதுதான் விடிவு பிறக்கும். |