2015ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற உலக நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் உயர்ந்துவரும் பூமியின் வெப்பத்தை 1.5 டிகிரி முதல் 2.0 டிகிரிக்குள் கட்டுப்படுத்தவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்து நாட்டுத் தலைவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினர்.
இந்த உடன்பாட்டின்படி உலக நாடுகள் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து உலக அறிவியல் அறிஞர்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு அக்டோபரில் கொரியாவில் நடைபெற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கைப் பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியிட்டுள்ளது. பூமியின் தட்பவெப்ப நிலை 2.0 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறையும், அதன் விளைவாக உணவு உற்பத்திக் குறைவும் ஏற்பட்டு உலக மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். அதாவது உலகில் தற்போதுள்ள மக்கள் தொகை 760 கோடியாகும். இதில் சுமார் 380கோடி மக்கள் மடிந்துபோவார்கள் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமியின் வெப்பம் தற்போது 1.0 டிகிரி அளவுக்கு உள்ளது. இது 2030ஆம் ஆண்டில் 1.5டிகிரி அளவுக்குஅதிகரித்துவிடும். எனவே அழிவை நோக்கி உலகம் விரைந்துகொண்டிருக்கிறது. உலக வெப்பம் 2.0 அளவுக்கு உயரும்போது பல உயிரினங்கள் அடியோடு அழியும். குறிப்பாக, பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். இதன் விளைவாக மகரந்தச் சேர்க்கை குறைந்து உணவு உற்பத்தி குறையும். உயிர்க் காற்றை உற்பத்தி செய்கிற பவழப் பாறைகள் முற்றிலுமாக அழிந்துவிடும். கடல் மட்டம் உயரும். கடல்வாழ் உயிரினங்கள் பேரழிவுக்குள்ளாகும். மனித குலத்திற்கும் மற்றைய உயிரினங் களுக்கும் ஏற்படக்கூடிய அழிவை விரிவாகச் சுட்டிக்காட்டி கொரியா மாநாடு எச்சரிக்கை செய்துள்ளது. அனல்மின் நிலையங்கள் நிறுத்தப்படவேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்படவேண்டும். தொழிற்சாலைகளின் உற்பத்தி முறையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். இயற்கையை அழிக்கும் அனைத்து திட்டங்களும் கைவிடப்படவேண்டும். இல்லையேல் மனிதகுலம் அழிந்துபோகும் என்றும் கொரியா மாநாடு கூறியுள்ளது. உலகம் அழிவைச் சந்திப்பதற்கு முன்னாலேயே தமிழகம் அழிவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் தங்குதடையின்றிசூறையாடப்படுகின்றன.மலைக்காடுகள் வெட்டப்படுகின்றன. மலைகளில் உள்ள கனிமங்களைச் சூறையாடுவதற்காக மலைகள் அழிக்கப்படுகின்றன. ஆற்றுமணல் கொள்ளையடிக்கப் படுகிறது. தென்மாவட்டக் கடலோரங்களில் பல ஆயிரம் ஆண்டுகாலமாகக் குவிந்திருக்கும் தாதுமணல் அளவில்லாத வகையில் அள்ளிச் செல்லப்படுகின்றன. ஏற்கெனவே தமிழ்நாடு மழைப் பற்றாக்குறை மாநிலமாகும். அதனால்தான் சங்ககால மன்னர்கள் காலத்திலிருந்து ஏரிகளையும், குளங்களையும் தோற்றுவித்து மழை நீரைச் சேமித்து வேளாண்மைக்குப் பயன்படுத்தினார்கள். ஆறுகளில் அணைகள் கட்டப்பட்ட விவரத்தை நீர்ச்சிறை என்ற பெயரால் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கரிகாலன் கட்டிய கல்லணையும் மற்றும் பாண்டிய மன்னர்கள் கட்டிய பல்வேறு அணைகளும் அதற்குச் சான்றுகளாகத் திகழுகின்றன. இந்தச் சூழ்நிலையில் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் ஆறுகளின் நீரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. காவிரி காவிரியில் வந்து இணையும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி கர்நாடகம் நீரைத் தேக்கியது. அணைகளைக் கட்டும்போதே தமிழகம் தெரிவித்த எதிர்ப்பை கர்நாடக அரசு கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. அதன் அத்துமீறிய நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய இந்திய அரசு வேடிக்கைப் பார்த்தது. 50 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டப் பிறகும் 2018ஆம் ஆண்டில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. ஆனாலும், செயல்படாத வாரியமாக அது உள்ளது. 1972ஆம் ஆண்டு வரை காவிரி நீரில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மொத்த அளவு 587டி.எம்.சியாக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக 177 டி.எம்.சி. நீராகக் குறைக்கப்பட்டது. இந்த நீரையும் கர்நாடகம் முறையாகத் தருமா?என்ற கேள்விக்குறி தொடர்கிறது. ஏற்கெனவே பல அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு ஓடிவரும் நீரை தடுத்தது மட்டுமல்லாமல் இப்போது புதிதாக தமிழகத்தின் எல்லைக்கு மிக அருகில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் ரூபாய் 6,000 கோடி திட்ட மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்குக் கள ஆய்வு நடத்த கர்நாடகம் செய்துள்ள முடிவிற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதியை வழங்கியுள்ளது. இந்த அணை கட்டப்படுமானால் காவிரி நீரில் ஒரு சொட்டுகூட தமிழ்நாட்டிற்கு வராது. பாலாறு காவிரியைப் போலவே கர்நாடகத்தில் பாலாறு உற்பத்தியாகிறது. அம்மாநிலத்தில் 93 கி.மீ. தூரம் ஓடி ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, 33கி.மீ. ஓடிவந்து தமிழ்நாட்டில் நுழையும் பாலாறு வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வழியாக 222கி.மீ. ஒடி வங்கக் கடலில் கலக்கிறது. பாலாற்று நெடுகிலும் மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் 317 ஏரிகள் அமைக்கப்பட்டு கால்வாய் மூலம் இவற்றுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. இவற்றின் மூலம் 3,75,000 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி அளிக்கப்பட முடியும். ஆனால், 2,45,000ஏக்கர் வரைக்கும் மட்டுமே பாசன வசதி அளிக்கப்பட்டது. இதற்குக் காரணம் பாலாற்றின் உற்பத்தியிடம் தொடங்கி தமிழகம் எல்லை வரை இந்த ஆற்றின் இருபுறமும் 25க்கும் மேற்பட்ட ஏரிகளை கர்நாடகம் அமைத்து இவைகள் நிரம்பியப் பிறகே எஞ்சிய நீர் பாலாற்றில் விடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் 33கி.மீ. அளவே ஓடும் பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இந்த அணைகள் யாவும் நிரம்பி வழிந்தால்தான் தமிழகத்திற்குத் தண்ணீர் வரும். இதன் விளைவாக பாலாறு பாழாறாகிவிட்டது. முல்லைப் பெரியாறு மற்றொரு அண்டை மாநிலமான கேரளத்தில் நீர்வளம் மிகுதியாகும். கேரளத்தில் ஓடும் ஆறுகளில் கிடைக்கும் மொத்த நீர்வளம் 2,500 டி.எம்.சிக்கு மேலாகும். இதில் அம்மாநிலத்தில் பயிர் செய்யக்கூடிய நீரின் அளவு 500டி.எம்.சி.மட்டுமே. எஞ்சிய 2,000 டி.எம்.சி. நீர்வளம் கடலுக்கு வீணாகச் செல்கிறது. அம்மாநிலத்தில் நீர் தேக்கங்களை அமைக்கக் கூடிய தகுதியான இடங்களும் போதியளவு இல்லை. பயிர் செய்யக்கூடிய நிலங்களும் குறைவானவை. 350டி.எம்.சி.க்கு மேல் நீரை அம்மாநிலத்தினால் தேக்கிக் கொள்ள முடியாது. கடலுக்கு ஓடி வீணாகும் 2,000டி.எம்.சிக்கும் மேற்பட்ட நீரில் 10இல் ஒரு பங்கான 200 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்குத் திருப்பிவிட்டால் தமிழ்நாட்டின் வறட்சிப் பகுதிகள் வளம்பெரும். உணவு உற்பத்தி கூடும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருந்துதான் கேரளத்திற்கு உணவு, தானியங்கள், காய்கறி, பழங்கள், ஆடு, மாடு, கோழி போன்றவை அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி கூடுமானால் அதில் ஒரு பகுதியை கேரளத்திற்கு அனுப்பலாம். அம்மாநில மக்களும் பயனடைவார்கள். தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் பாலாறு, ஆழியாறு, உப்பாறு, அமராவதி, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆகிய ஆறுகள் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து கேரள மாநிலத்திற்குள் நுழைகின்றன. ஆனால், கேரளமோ தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு மறுக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் பெரியாற்றில் அணை கட்டி கிழக்கு முகமாக தமிழகத்திற்குத் திருப்பப்பட்டது. 1979ஆம் ஆண்டில் இந்த அணை பலவீனமாக இருக்கிறது என பொய்யான குற்றச்சாட்டினை இந்திய அரசின் பாசன ஆணையம் அறிவுறுத்தியதிற்கிணங்க இந்த அணையை ரூபாய் 12.5 கோடி செலவில் தமிழக அரசு வலுப்படுத்தியது. அதற்குப் பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளாமல் புதிய அணையை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை கேரளம் முன் வைத்தது. வேறு வழியில்லாமல் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றம் 145அடி வரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், முழுமையான மராமத்து வேலைகள் முடிவடைந்தப்பிறகு 152 அடி உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தது. முல்லைப் பெரியாறில் இப்போது இருக்கும் அணைக்குப் பதிலாக புதிய அணையை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இந்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறையிடம் அனுமதிகோரி கேரளம் விண்ணப்பித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு இது எதிரானதாகும். தமிழக ஆறுகளில் இயற்கையாக பெருகிவரும் நீரை தடுத்து நிறுத்துவதற்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இடைவிடாது செய்யும் முயற்சிகளைத் தடுக்கவோ, கண்டிக்கவோ இந்திய அரசு முன்வரவில்லை. எந்தக் கட்சி தில்லியில் ஆட்சியில் இருந்தாலும் அனைத்துக் கட்சிகளுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நிலையில் செயல்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கின்றன. ஏற்கெனவே தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகும். தென்மேற்குப் பருவகாற்றின் விளைவாக தமிழகத்தில் பெய்யும் மழை குறைவானதாகும். வடகிழக்குப் பருவ காற்றினால் பெய்யும் மழையே அதிகமானதாகும். இருபருவ காற்றுகளின் மூலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு 940மி.மீ. மழை பெய்கிறது. தமிழ்நாட்டின் ஆற்றுப் படுகைகளின் மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவு 23,597.84மி.க.மீ. பிற மாநிலங்களிலிருந்து கிடைக்கும் நீர் 12,126.07மி.க.மீ.ஆகும். ஆக மொத்தம் 35,723.93மி.க.மீ. கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளிலும், ஏரிகளிலும் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு எவ்வளவோ, அந்தளவு நீர் கோதாவிரி ஆற்றின் மூன்று நாட்கள் ஓடும் நீரின் அளவாகும். கங்கையாற்றில் சில மணிநேரங்கள் ஓடும் நீரின் அளவைவிடக் குறைந்ததாகும். தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளத்தின் இருப்பு அபாயகரமான கட்டத்தை அடைந்துவிட்டது. தொழிற்சாலைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் நீரைக் கொண்டுவந்து விற்றுக் கொள்ளையடிக்கும் வணிக நீர் சூதாடிகள் நிலத்தடி நீரை அளவற்ற வகையில் உறிஞ்சி எடுக்கிறார்கள். நகர்ப்புறங்களின் விரிவாக்கத்தின் விளைவாக சாக்கடை நீர் ஆறுகளில் கலக்கின்றன. ஆற்று நீரிலும் மாசுபடுகிறது. தமிழ்நாட்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எரிவாயு திட்டங்களை செயல்படுத்த இந்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதை எதிர்த்துப் போராடும் மக்களை தமிழக அரசு ஒடுக்குகிறது. மொத்தத்தில் வளமான தமிழகம் சீர்குலைந்து அழிந்து வருகிறது. உலக அறிவியலாளர்கள் மாநாடு எச்சரித்துள்ள அபாயகரமான காலகட்டத்தை தமிழகம் மிக விரைவாக நெருங்கி வருகிறது. இயற்கைப் பேரழிவுகளான பூகம்பம், எரிமலை மற்றும் பனிச்சரிவு போன்றவை இல்லாத நாடு தமிழ்நாடாகும். ஆனால், பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய ஆழிப்பேரலை உருவாகி பழந்தமிழகமான குமரி நாட்டை அழித்தது குறித்து பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்குப் பின்னர் உருவான மற்றொரு ஆழிப்பேரலையால் பூம்புகார் மூழ்கியதையும், தமிழ்நாட்டோடு இணைந்திருந்த இலங்கையை கடல் தனியாகப் பிரித்ததையும் இலக்கியச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் பேரழிவுக்குள்ளானதை நாம் பார்த்தோம். இவற்றைத் தவிர காட்டுத்தீ, புயல், பெருமழை, வெள்ளம், வறட்சிப் போன்ற அழிவுகள் தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. தொல்காப்பியரும், பண்டைய சங்கப் புலவர்களும் தமிழ்நாட்டை ஐவகை நிலங்களாகப் பகுத்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வரையறுத்தனர். தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த பாலைவனங்கள் கிடையாது. பருவமழை தவறி நீர் பற்றாக்குறை மிகும்போது முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் பாலையாக மாற்றமடையும். இதை குறிக்கும் வகையில்தான் இளங்கோவடிகள் தான் இயற்றிய சிலப்பதிகாரத்தில் பின்வருமாறு கூறுகிறார்- "முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயருத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் மழையின்மையால் திரிந்து தங்களின் இயல்புகளை இழந்து துயரமிக்கப் பாலைவனமாக மாறும். இளங்கோவடிகள் கூறியபடி தமிழகத்தை முற்றிலுமாக பாலைவனமாக மாற்றும் தீவினையை நமக்குநாமே செய்துகொண்டிருக்கிறோம். எரியும் கொள்ளிக்கொண்டு நம் தலையை நாமே சொறிவது போன்ற செயல்களை நிறுத்தவேண்டும். இல்லையேல் வாழத் தகுதியற்ற பாழ்பட்ட ஒரு பாலைவனத்தை நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச்சென்ற குற்றத்திற்கு ஆளாவோம். |