உலக வரலாற்றில் நூல்கள் அழிப்பு - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 13:30

பழ. நெடுமாறன் எழுதிய "தமிழீழம் சிவக்கிறது" என்னும் நூலின் 2,000 பிரதிகளை தமிழக அரசு 2002ஆம் ஆண்டில் பறிமுதல் செய்தது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி பழ. நெடுமாறன் மீதும், ஏற்றுமதி செய்ய முயன்றதாக சாகுல் அமீது மீதும் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், 2006ஆம் ஆண்டு இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் நூல்களை திரும்பத்தர மறுத்துவிட்டது. எனவே அவற்றைத் திரும்பப் பெற நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த முறையீட்டு மனு 12 ஆண்டுகளாக விசாரணைக்கே எடுக்கப்படவில்லை. 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் விசாரிக்கப்பட்டு நவம்பர் 14 ஆம் நாள் மனுவை தள்ளுபடி செய்ததோடு, நூலின் 2000ம்  பிரதிகளையும் அழிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் இத்தகைய அதிர்ச்சி தரத்தக்க ஆணை இதுவரை பிறப்பிக்கப்பட்டதில்லை.
2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நூலகத்தையும், அதிலிருந்த 8,000த்திற்கும்  மேற்பட்ட நூல்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எரித்து அழித்தனர். மொசூல் பல்கலைக்கழக நூலகத்தையும், அந்நகரிலிருந்த தனிப்பட்டவருக்குச் சொந்தமான நூலகங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. இச்செயலை உலகமே கண்டித்தது.
கி.மு. 212-213ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள குயின் மன்னர் பரம்பரையைச்  சேர்ந்த முதலாவது பேரரசன் நூல்களை மட்டுமல்ல, அதை எழுதிய அறிஞர்களையும் எரித்துச் சாம்பலாக்கினான். வரலாற்றில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட தீச் செயல் இதுவாகும். கி.மு. முதலாவது நூற்றாண்டில் பண்டைய எகிப்திலிருந்த அலெக்சாண்ட்ரியா நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. பண்டைய சிரியாவிலிருந்த ஆன்டியோக் நூலகம்,  செராப்கியம் நூலகம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் சமய ரீதியான காரணங்களுக்காக அழிக்கப்பட்டன. கி.பி.1193ஆம் ஆண்டில் நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்த புத்தச் சுவடிகள் முஸ்லிம் மன்னனான கில்ஜியின் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டின் தலைநகரமான வார்சாவில் ஜாலுஸ்சி நூலகத்தை இட்லரின் நாஜிக் படையினர் எரித்து அழித்தனர். கம்போடியாவிலிருந்த தேசிய நூலகத்தை கெமர் ரோக் படையினர் 1970களில் அழித்தனர். தென்னாசியாவில் இரண்டாவது பெரிய நூலகமான யாழ்ப்பாண நூலகத்தையும், அதனுள் இருந்த 95,000த்திற்கும் மேற்பட்ட நூல்களையும், ஓலைச் சுவடிகளையும் சிங்கள படையினர் தீயிட்டு சாம்பலாக்கினர். 1984ஆம் ஆண்டில் இந்தியப் படையினர்  மேற்கொண்ட தாக்குதலில் சீக்கியர்களின் மேற்பார்வை நூலகம் எரிக்கப்பட்டது. பல புத்தகங்கள் இந்தியப் படையால் கைப்பற்றப்பட்டன. அதை திரும்பப் பெறவேண்டுமென சீக்கியர்கள் போராடி வருகிறார்கள்.
மேற்கண்ட அனைத்து நூல் எரிப்பு நிகழ்ச்சிகளும், அப்போது ஆட்சியிலிருந்தவர்களால் நடத்தப்பட்டன. ஆனால், 2018ஆம்  ஆண்டு நவம்பர்                                    14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழீழம் சிவக்கிறது என்னும் நூலை அழிக்கும்படி ஆணையிட்டிருக்கிறது. சனநாயக நாடு ஒன்றில் நூல்களை அழிக்கும்படி சட்டபூர்வமான ஆணை பிறப்பிக்கப்படுவது இதுவே முதல்  தடவையாகும். பல நூல்களுக்குப் பல்வேறு சூழ்நிலைகளில் நீதிமன்றங்கள்  தடைவிதித்திருக்கின்றன. பல எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நூல்களை அழிக்கும்படி எந்த நீதிமன்றமும் இதுவரை ஆணையிடவில்லை.
இந்த  நூலை எழுதிய நெடுமாறன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அவரை கீழ்மை நீதிமன்றம் விடுதலை செய்ததை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.  ஆனால், அவர் எழுதிய நூலை அழிக்க உத்தரவிடுகிறது. நீதி வழங்குவதில் இத்தகைய முரண்பாடு? ஏன்?
பல மாதங்கள் இரவு பகலாக உழைத்து ஒரு எழுத்தாளன் தனது நூலைப் படைக்கிறான். இந்த நூலைப் பொறுத்தவரையில் நெடுமாறன் தனது உயிரை  துச்சமாக மதித்து தமிழீழத்தில் போர்ச் சூழலில் சுற்றுப்பயணம் செய்து  தான் நேரில் கண்டறிந்த உண்மைகளை நூலாக வடித்துள்ளார். ஆனால், அந்த நூல் மக்களுக்கு எட்டாதபடி தடுக்கப்பட்டுள்ளது. இதைவிட பெரும் அநீதியை ஒரு எழுத்தாளனுக்கு இழைக்க முடியாது. தனது நூலுக்காக நெடுமாறன் போராடவில்லை. எழுத்துரிமையையும், கருத்துரிமையையும் காக்கவே அவர் போராடுகிறார்.
2016ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நூலின் ஆங்கிலப் பதிப்புக்கு தடை விதிக்க மறுத்தது. அந்நூல் குறித்து வாசகர்களே முடிவெடுக்கட்டும் என்று கூறியது. உச்சநீதிமன்றமும் இத்தகை தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
 இந்திய அரசியல் சட்டம் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை வழங்கியுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க அரசு முயலும்போது நீதித்துறை தலையிட்டு மக்களின் உரிமையை நிலைநாட்டவேண்டும். சனநாயகத்தைக் காப்பதுதான் நீதித்துறையின் கடமையாகும். மக்களுக்கும் மட்டுமல்ல,  மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் அனைவரின் கடைசி நம்பிக்கை நீதித்துறைதான். இந்தியா முழுவதிலும் பல்வேறு காலகட்டங்களில் மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. சில வேளைகளில்  அவர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள். இத்தகை சூழ்நிலையில் நீதிதுறைதான் அவர்களை காப்பாற்றவேண்டும். வலுவான மக்களாட்சியின் அடிப்படை என்பது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே வகுக்கப்பட்டுள்ள எல்லைக்  கோடேயாகும். இந்த எல்லைக்கோடு தடுமாற்றமடைந்து அரசின் நிலைப்பாட்டையே நீதித்துறை பிரதிபலிக்குமானால் சனநாயகத்திற்குப்  பேரபாயம் விளையும்.  இந்தத் தீர்ப்பு அதைதான் சுட்டிக்காட்டுகிறது.  இது ஒரு அபாய அறிவிப்பாகும். இதைகண்டு நாம் விழிப்புற்று எழுந்து குரல் கொடுக்க  தவறுவோமேயானால் நீதித்துறையின் தன்னுரிமை பறிபோகும். அதன் விளைவாக நாட்டில் சனநாயகம் ஆழக் குழித்தோண்டிப் புதைக்கப்படும்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.