தமிழர் தேசிய முன்னணியின் பொருளாளர் ம. உதயகுமார் மற்றும் தோழர்கள் திரட்டிய புயல் உதவிப் பொருட்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
புயல் வீசிய மறுநாள் முதல் கடந்த 8 நாட்களாக தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் மரு. பாரதிசெல்வன், பொருளாளர் ம. உதயகுமார், திருவாரூர் மாவட்டத் தலைவர் கலைச்செல்வன் மற்றும் தோழர்கள் அரிகரன், இராசசேகரன், மகேந்திரன், கணேசன், பாரதிதாசன், மணி, சுதாகர், சரவணன், ஆரிஸ், ஆசிக், ஸ்டாலின் ஆகியோர் மன்னார்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பிஸ்கெட், தீப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்கள். நோயாளிகளுக்கு மருத்துவர் பாரதிசெல்வன் மருத்துவ உதவிகள் அளித்தார். நவம்பர் 23ஆம் தேதி மன்னார்குடி பகுதியில் உள்ள முதல் செட்டி கிராமம், குன்னியூர், தென்பறை ஆகிய கிராமங்களுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், சி. முருகேசன், குபேந்திரன், ஜான்கென்னடி, இருதயராசு ஆகியோர் மரு. பாரதிசெல்வன் குழுவினருடன் சென்று மக்களைச் சந்தித்து உதவிப் பொருட்களை வழங்கினார்கள். நவம்பர் 25 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை, நெம்பலக்குடி விலக்கு ஈழ அகதிகள் முகாம்களுக்கு பழ. நெடுமாறன், அய்யநாதன், உதயகுமார், ஜான்கென்னடி, அமுதன், சபேசன், செழும்பரிதி, சொக்கலிங்கம் உட்பட பல தோழர்கள் சென்று உதவிப் பொருட்களை வழங்கினர். அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் புயல் நிவாரண உதவிப் பொருட்கள் திரட்டப்பட்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. அரசு மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகள் 1. கஜா புயல் வீசிய 12 மாவட்டவங்களில் பெரும் அழிவும், பேரிழப்பும் ஏற்பட்டுள்ளன. எனவே, தேசியப் பேரிடராக இதை அறிவிக்க வேண்டும். 2. குடிசைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விளக்கெரிப்பதற்கு 1 லிட்டர் மண்ணெண்ணெயும், 5 கிலோ அரிசியும் உடனடியாக வழங்கப்பட்டால் அவர்களே சமைத்துச் சாப்பிட்டுக்கொள்வார்கள். 3. வேதாரண்யத்திலும், அருகே உள்ள பகுதிகளிலும் உள்ள உப்பளங்களில் பல கோடி ரூபாய் பெறுமான உப்பு அழிந்துள்ளது. உப்பள உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவேண்டும். 4. மீண்டும் தென்னை நடுவதற்கும், 5 ஆண்டு காலம் அவற்றைப் பராமரிப்பதற்கும் 1 ஏக்கர் தென்னைக்கு ரூ. 11/2 இலட்சமும் , 1 ஏக்கர் வாழைக்கு ரூ. 2இலட்சமும், 1 ஏக்கர் கரும்புக்கு ரூ. 2இலட்சமும், 1 ஏக்கர் நெல் மற்ற வேளாண் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000/&மும் இழப்பீடாக தர அரசு முன்வரவேண்டும். 5. பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் புயலால் தூக்கி யெறியப்பட்டு உடைந்து நொறுங்கிக் கிடக்கின்றன. பல ஆயிரக்கணக்கான படகு எஞ்சின்கள் கடல்நீர் புகுந்ததின் விளைவாகபழுதுபட்டுள்ளன. கடற்கரையோரம் எஞ்சியிருக்கும் படகுகளைப் பாதுகாக்கவும், சேதமான படகுகளுக்கும், எஞ்சின்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 6. புயல் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கடற்கரை மாவட்டங்களில் தரைக்குள் மின்கம்பிகளை பதிக்கும் திட்டம் கொண்டு வரப்படவேண்டும். 7. காவிரிப்படுகை புயல் பற்றி ஆழமான ஆய்வுத் தேவை. அந்த ஆய்வின் அடிப்படையில் மக்கள் தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்ளும் நிர்வாக தொழில்நுட்பக் கலாச்சாரம் வேண்டும். 8. புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்ள அரசு, அனைத்துக் கட்சியினர், தன்னார்வலர் தொண்டர்கள், மக்கள் ஆகிய அனைவரும் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். மாநிலம் தழுவிய பேரிடர் உதவித் தொண்டர் படை அமைக்கப்படவேண்டும். 9. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்குப் பசுமை வீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித்தரவேண்டும். 10. புயலாலும், பெரும் மழையாலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரக்கேடு உருவாகித் தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தைத் தடுக்கவும், மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
|