புத்தகங்கள் சாகாவரம் பெற்றவை (சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 13:42

மனிதன் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மகத்தானவை, பேசும் மொழியும், எழுதும் எழுத்தும் தான். அவற்றை விஞ்சும்படியாகவோ, ஏன் அவற்றுக்கு இணையாகவோகூட எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

சரித்திரம் நெடுகிலும் பொது நலனில் ஈடுபாடும், சமூக அக்கறையும் கொண்டு பலரும் அரசாங்கத்தின் அநீதிகளை எதிர்த்துப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையான மனித நேயர்கள்; தேச பற்று மிக்கவர்கள். ஆனால், சுயநலவாதிகளும் சர்வாதிகாரிகளும் அவர்களை "தேசத் துரோகிகள்" என்று குற்றம் சாட்டி நீதிமன்றத்தின் வழியே தண்டிக்கிறார்கள். அவர்கள் நஞ்சுண்டு சாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறார்கள். நீதிமன்றம் சொல்வதாலேயே ஒருவன் தேச துரோகியோ, குற்றவாளியோ கிடையாது. "குற்றம்", "தண்டனை" என்பதெல்லாம் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்டவை. மெசபடோமியா மன்னன் ஹம்முராபி, "அர்த்த சாஸ்திரம்" எழுதிய சாணக்கியன், "மனு தர்மம்" எழுதிய மனு இப்படிப் பலர் காலம் முழுவதிலும் இருக்கிறார்கள். அல்டாஃப் இட்லர், மகிந்த இராஜபட்சே என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
பேச்சு கேட்கும் போது சுடுமென்றால், எழுத்து, எப்பொழுதும் சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும். எழுத்து என்பது அணையாது கனலை வீசிக் கொண்டே இருக்கும். எனவேதான் எழுதப்பட்ட புத்தகத்திற்கு எல்லாம் பயப்படுகிறார்கள்.
மூவாயிரம் ஆண்டுகளாக, புத்தகங்களை அழிப்பதும் நெருப்பில் எரிப்பதும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதற்கு நாடு, மொழி,  இனம் வேறுபாடு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது என்று கருதும் புத்தகங்களைப் பறிமுதல் செய்து தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்.
அவர்கள் கூறுகிறார்கள்- "புத்தகம், அரசாங்கத்தின் இறையாண்மையைக் கேள்வி கேட்கிறது. அரசியல் சாசனத்தை  நிந்தனை செய்கிறது. வன்முறையைத் தூண்டுகிறது. பொது அமைதியைக் குலைக்கிறது. இப்படியெல்லாம் எழுத யாருக்கும் உரிமை இல்லை. இப்படி எழுதும் எழுத்தாளர்கள் நாட்டின் விரோதிகள். சுதந்திரமாக இவர்களை நாட்டில் உலவ விடக் கூடாது. இவர்கள் தங்களின் சொந்த லாபத்திற்காக சுதந்திரம் வேண்டி பேசியவர்களோ எழுதியவர்களோ இல்லை. மனித சமூகம் முழுவதற்கும் சுதந்திரம் வேண்டியவர்கள். இவர்கள் தேசத் துரோகிகள்"என்கிறார்கள்.
பிரிட்டிஷ் அரசு, பாரதியாரின் "கனவு" புத்தகத்தில், தேச துரோக கருத்துகள் உள்ளன என்று அறிவித்து, அந்நூலை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று தடை  போட்டது.
பாரதியார் காலமான பின்னர் அவர் மனைவி, பாரதியாரின் கவிதைகள் சிலவற்றைத் திரட்டி நூலாக வெளியிட்டார். அப்போது அதில் வந்த சொற்ப வருமானம்தான் அவர் வாழ்வாதாரமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா, 1928இல் "பாரதியாரின் கவிதைகள் இறையாண்மைக்கு எதிராக உள்ளன. அவை தேச துரோகத்தை ஊக்குவிக்கின்றன" என்று கூறி அந்நூலுக்குத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை மாகாண அரசும் அந்நூலுக்கு தடை போட்டது. புத்தகங்களைப் பறிமுதல் செய்தது.
புத்தகம் எழுதிய ஆசிரியர்களின் கையை வெட்டுவது, அவர்களைத் தூக்கில்  போடுவது, நாடு கடத்துவது, சிறையில் அடைப்பது, இவற்றாலெல்லாம் கருத்துப் பரவுதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. எழுதப்பட்ட புத்தகத்தை அழிப்பதால் அது இல்லாமல் போவதில்லை.
அமெரிக்கச் சுதந்திரப்  பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்ஸன் "அரசாங்கம் வேண்டுமா? எழுத சுதந்திரம் வேண்டுமா? என்று கேட்டால், நான் இரண்டாவதைத்  தான் தேர்ந்தெடுப்பேன்" என்று கூறினார். இந்த நூற்றாண்டில்தொழில்நுட்பம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துவிட்டது. சர்வாதிகார ஆட்சியின் முகமூடிகள் கிழிக்கப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர் என்று பாராட்டப்பட்டவரின் பத்திரம் பறிக்கப்படுகிறது.
பெயர் பெற்றவர்களும், புகழ் பெற்றவர்களும்தான் சுதந்திரம், சமத்துவம், மனித உரிமை, சமூக நீதி இவற்றைப் பற்றி பேச உகந்தவர்கள் என்பது இல்லை. மக்கள் விரோதிகள்தான், பொதுநலன் சார்ந்து பேசுகிறவர்களை சிறையில் அடைப்பார்கள். அவர்களின் புத்தகங்களை அழிக்க முற்படுவார்கள்.
புத்தகங்கள் சாகாவரம் பெற்றவை. அவற்றை எந்தவொரு சக்தியாலும் அழித்து ஒழித்துவிட முடியாது. சரித்திரம் அதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.