நெல் ஜெயராமன் - மறைவு - வேளாண்மைக்குப் பேரிழப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 12:01

தமிழ்நாட்டில் நமது உழவர்களால் பயிரிடப்பட்டு வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களையும், பூச்சி தாக்குல்களையும் தாங்கி நின்று வளரக்கூடியவை.

மருத்துவ குணங்கள் கொண்டவை. ஆனால், இவற்றை கைவிட்டு புதிய வீரிய ஒட்டு நெல் ரகங்களைப் பயிரிட்டும், இரசாயன உரங்கள்,  பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் நமது பாரம்பரிய நெல் ரகங்களை கிட்டத்தட்ட அழித்துவிட்டோம். நமது  மண்ணும் வளம் இழந்தது. மக்களின் உடல்நலமும் சீர்கேடடைந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் அழிவின் விளிம்பிலிருந்த 174 பாரம்பரிய நெல் ரகங்களை தேடித்தேடிக் கண்டறிந்து  அவற்றைப் பாதுகாத்து பல்லாயிரக்கணக்கான உழவர்களிடம் பரப்பிய பெருமை நெல் செயராமன் என்னும் தனியொரு மனிதரையே சாரும். 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் பாரம்பரிய வேளாண்மையை பாதுகாக்கும் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தப் பிறகு "நமது நெல்லைப் பாதுகாப்போம்” என்ற இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்ற செயராமன் பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து உழவர்களிடம் பரப்பிய பெருமைக்குரியவராவார்.
வேளாண்மை பல்கலைக்கழகமும், வேளாண்மை ஆய்வு மையங்களும் ஆற்றவேண்டிய பணிகளை தனியொரு மனிதராக விளங்கி வெற்றிகரமாக சாதித்தப் பெருமை அவருக்கு உண்டு. அவரே ஒரு நிறுவனமாகத் திகழ்ந்தார். நாடெங்கும் நெல் திருவிழாக்கள் நடத்தி நமது பாரம்பரிய நெல் ரகங்களை பரப்பினார். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிறப்பான தொண்டினை ஆற்றிய மாமனிதர் அவர்.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் அவருக்கு பல விருதுகளை வழங்கியது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் உழவர்கள் அவர்  நடத்திய நெல் திருவிழாக்களில் கலந்துகொண்டு தங்கள் மாநிலங்களிலும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கிலும் அவர் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட பன்னாட்டு பிரதிநிதிகள் பலரும் அவரது பணிகளைக் கண்டு வியந்துப் பாராட்டினர்.  
நமது  மண்ணுக்கும், நீருக்கும் ஏற்ற நெல் வகைகளை நமது முன்னோர் காலங்காலமாகப் பயிரிட்டு வந்தனர். அவர்களின் மரபார்ந்த வேளாண் அறிவினை நாம் புறக்கணித்ததின் விளைவாக ஏற்பட்ட அழிவுகளைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நமக்கே உரிய பாரம்பரியமான வேளாண்மைக்குத் திரும்ப வழிகாட்டிய பெருமைக்குரியவர் நெல் செயராமன் ஆவார். அவரின் நினைவாக சிறந்த இயற்கை வேளாண்மை உழவருக்கு நெல் செயராமன் விருது வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும். அவரின் குடும்பத்திற்கு உதவவேண்டியதும் தமிழக அரசின் கடமையாகும். 

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.