குற்றவாளியும் நானே! நீதிபதியும் நானே! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 12:05

அரை நூற்றாண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தையும் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவையும்  அமைக்குமாறு இந்திய  அரசுக்கு உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரியில் ஆணையிட்டது.

எனவே வேறு வழியில்லாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்த இந்திய அரசு அதற்கு நிரந்தரத் தலைவரை நியமிக்காமல் இடைக்கால தலைவராக மத்திய  நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் என்பவரை நியமித்தது. அப்போதே இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதின் விளைவாக தமிழகம் இப்போது பேரபாயத்தை எதிர்நோக்க நேரிட்டுவிட்டது.
காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்ந்தோடும் கர்நாடகம்,  கேரளம்,  தமிழகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் எந்த மாநிலமும் தொடர்புடைய பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எத்தகைய பாசனத் திட்டத்தையும், புனல் மின் திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தனது ஆணையில் ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் காவிரியாற்றின் குறுக்கே மேக்கே தாட்டு என்னும் இடத்தில் 5,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனல் மின் திட்டம் அமைக்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் மேட்டூர் அணைக்கு இப்போது வந்துகொண்டிருக்கும் நீர் முழுவதுமாக தடுக்கப்பட்டுவிடும். இத்திட்டத்திற்குத் தமிழகம் ஏற்கெனவே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் இத்திட்டம் தொடர்பாக கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததோடு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தில் நாம் புகார் மனு அளித்தால் அதன்மீது தீர்ப்பளிக்க வேண்டியவர் அதன் தலைவரான மசூத் உசேனே ஆவார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் கர்நாடகத்திற்கு அனுமதியளித்த அவரால், காவிரி ஆணையத் தலைவர் என்ற முறையில் அதற்கு எதிராகத்  தீர்ப்பளிக்க முடியுமா? குற்றம்  செய்தவரே தீர்ப்பளிக்க வேண்டிய நீதிபதியாக இருப்பாரானால் நீதி கிடைக்குமா?
உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமிக்காமல், இடைக்காலத் தலைவராக இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட நீர்வள ஆணையத்  தலைவரை நியமித்ததே ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். திட்டமிட்டு செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சியின் விளைவாக இன்று தமிழகம் பேரழிவை எதிர்நோக்க நேரிட்டுவிட்டது.
காவிரியில் வெள்ளக் காலங்களில் பெருக்கெடுத்து  ஓடிவரும்  நீரைத் தேக்கி  வைப்பதற்கு மேட்டுருக்குக் கீழே எந்த அணையையும் கட்டும் அளவுக்கு நில அமைப்பு இருக்கவில்லை. எனவே மேட்டூருக்கு மேலே ஒகேனக்கல்லில் நமது எல்லைக்குள் அணை கட்டி வெள்ள நீரைத் தேக்கி வைத்து தேவைக்கேற்ப பயன்படுத்தவும், மின் உற்பத்தி செய்யவும் நாம் திட்டமிட்டோம். ஆனாலும்  அதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்புத்  தெரிவித்ததின் விளைவாக, திட்டக் குழுவும், நடுவண்  அரசும் இதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.  எனவே நமது ஒகேனக்கல் திட்டம் கிடப்பில்  போடப்பட்டது. ஆனால், ஒகேனக்கல்லுக்கு மேலே நமது எல்லைக்கு மிக அருகில் மேக்கேதாட்டு புனல் மின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கள அறிக்கையைத் தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்? நடுவண் அரசின் நடவடிக்கை ஓரவஞ்சகமான செயலாகும்.
ஆற்று நீர் மிகை காலங்களில் காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவும், தமிழகத்திற்கு உரிய நீரை ஒழுங்குமுறைப் படுத்தவுமே மேகதாட்டு அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக கர்நாடகம் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால், தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சனைக் குறித்துப் பேசிய ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் யாரும் 1961ஆம்  ஆண்டு நாம் வகுத்த ஒகேனக்கல் மின் திட்டம் குறித்தும், அதற்கு நடுவண் அரசு அனுமதித்தர மறுத்ததும் குறித்தும் எதுவுமே பேசவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இப்போது தமிழகம் தொடுத்துள்ள வழக்கு விசாரணையின் போதாவது ஒகேனக்கல் மின் திட்டம் குறித்து நாம் உண்மை நிலையை எடுத்துரைக்கத்  தவறினால் விளைவு நமக்கு எதிராக  அமைந்துவிடும்.  வெள்ளக் காலத்தில் மிகை நீரைத் தடுக்கும் திட்டம்  தமிழகத்தில் எதுவும் இல்லை. எனவே, கர்நாடகத்தின் மேகதாட்டு திட்டத்தின் மூலம் வெள்ள நீரை சேமிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தவறாகக் கருத இடம் ஏற்பட்டுவிடும்.
மேற்கண்ட ஆதாரங்களை முன் வைத்து தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்  கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும். உச்சநீதிமன்றத்திலும் மேற்கண்ட உண்மைகள் நமது தரப்பில் முன் வைக்கப்படவேண்டும். இந்தக் கட்டத்தில்கூட நாம் ஒன்றுபடாவிட்டால் காவிரிப் படுகைப் பகுதி பாலைவனமாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.