சிறந்த படைப்பாளர் பிரபஞ்சன் மறைவு |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 12:01 |
சிறந்த எழுத்தாளராக விளங்கி தமிழுக்கு அரியப் படைப்புகளை வழங்கியப் பெருமைக்குரிய பிரபஞ்சன் அவர்களின் மறைவு எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் போது மொழிப் பெயர்ப்பாளராகவும் அறிவுரையாளராகவும் திகழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் உள்ள குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய "வானம் வசப்படும்' என்னும் நெடுங்கதையின் மூலம் புதுச்சேரியின் கடந்த கால வரலாற்றை அனைவரும் அறியச் செய்தார்.
அவருடைய எழுத்தாக்கங்களில் பல பெண்ணியம் சார்ந்தவையாகும். மகாபாரதத்தை ஆராய்ந்து அவர் "பிரபஞ்சனின் பாரதம்' என்றத் தலைப்பில் படைத்துள்ள நூலில் பாரதக் கதையில் வரும் பெண் பாத்திரங்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புகள் மற்றும் அநீதிகள் ஆகியவற்றிற்கு எதிராக பொங்கி எழுந்தக் காட்சிகள் அனைத்தையும் பெண்ணியக் கண்ணோட்டத்தில் தொகுத்துத் தந்திருப்பது படிப்போரின் உள்ளங்களில் ஆழமானத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது அவருக்கு அளிக்கப்பட்டது. புதுவை அரசு அவருக்குத் தனியாக விழா நடத்திப் பாராட்டியது. எழுத்தாளர் ஒருவர் வாழும் காலத்திலேயே அவருக்கு அரசு பாராட்டு விழா நடத்திச் சிறப்பிப்பது என்பது மிக அரியதாகும். அதைப் போல அவர் மறைந்த போதும் புதுவை அரசின் சார்பில் மாநில முதல்வர் திரு. நாராயணசாமி அவர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தியதோடு புதுவை அரசின் சார்பிலும் மரியாதை செலுத்தச் செய்தார். கவியரசர் கண்ணதாசன் மறைந்த போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கவியரசரின் இறுதி ஊர்வலத்தில் தானும் பிற அமைச்சர்களுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அதற்குப் பிறகு எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு புதுவை மாநில அரசின் சார்பிலேயே மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தமிழுக்குத் தொண்டாற்றும் எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பதோடு மட்டுமல்ல அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடத்துவதும் மறைந்த பிறகு அரசு மரியாதை செலுத்தப்படுவதும் தொடர வேண்டும். எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மறைந்துவிட்டாலும் அவரது எழுத்துக்கள் சாகாவரம் பெற்று தமிழுலகில் நின்று நிலவும். |