தமிழீழமே தீர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 12:41

பார்சிலோனா மாநகராட்சி தீர்மானம்:
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க் குற்றங்களிற்கான அனைத்து நாட்டு நீதி விசாரணை மற்றும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பார்சிலோனா மாநகராட்சி தனது ஆண்டுக் கூட்டத்தொடரில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

தமிழர் இயக்கம் கடந்த  இருவருட காலமாக தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் விளைவாக இந்த உயர் நிறுவன ரீதியான தீர்மானத்தை பார்சிலோனா மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும்  தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐ.நா. மனித  உரிமைகள் அவைக்கு தாம் இத்தீர்மானத்தை அறிவிப்பதாக பார்சிலோனா மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீர்மானத்தின் நோக்கம்
தமிழர்கள் பாரம்பரியமாக 25 நூற்றாண்டுகளிற்கு மேல் இலங்கைத்  தீவில்  வாழ்ந்து வருகின்ற போதிலும் சிறீலங்கா அரசாங்கத்தால் அவர்களின் சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து 1948 இல் சிங்கள காலனித்துவத்திற்குட்படுத்தப்பட்டனர். இச்சிங்கள காலனித்துவ ஆட்சியில் தமிழர்கள்  மீது இன்றுவரை பல அடக்குமுறைச் சட்டங்கள் திணிக்கப்பட்டு அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
இதன் எதிரொலியாகவே 1960ஆம் ஆண்டுகளிலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காகப் போராட ஆரம்பித்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ, 1972இல்  ஈழத் தமிழர்களின் இந்நியாயமான போராட்டத்தை ஒடுக்கி அவர்களை இனவழிப்புச் செய்யும் நோக்குடன் குடியரசுச் சட்டத்தை அமுல்படுத்தி தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இச்சர்வாதிகாரப் போக்கே தமிழர்களை ஆயுத வழியில் போராடத்  தூண்டியது.
இவ்வாறாக இத்தீர்மானமானது தமிழின அழிப்பின் வரலாற்றை இன்றைய நாள் வரைக்கும் ஆய்வு ரீதியாக ஆதாரங்களுடன் வலியுறுத்தி நிற்கின்றது. அத்துடன்  சிறீலங்கா அரசினால் ஈழத் தமிழர்களிற்கு நியாயமான தீர்வுகள் எதுவும் வழங்கப்படமாட்டாதென்பதை இத்தீர்மானம் வலியுறுத்தி காட்டுகின்றது. ஈழத்  தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட இவ்அநீதிக்கான நீதி விசாரணையை அனைத்துலக நீதிமன்றம் பொறுப்பேற்று ஈழத் தமிழர்களிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வலியுறுத்துவதுடன், இவ்விடயங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் நியமிக்கவேண்டும்  என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றது.
தீர்மானங்கள்
1. அனைத்து நாட்டுச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் சிறீலங்காவில் அமைதியை மீட்டெடுத்தல்.
2. சிறீலங்கா தமிழ் அரசியல் மற்றும் போர்க் கைதிகள் தாமதமின்றி விடுவிக்கப்படல் வேண்டும்.
3. சிறீலங்கா அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக அனைத்து நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படல்  வேண்டும்.
4. தமிழர் பிரதேங்களில் சிறீலங்கா  இராணுவத்தின் 36 வருட ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.
5. தமிழ் மக்களின் சுதந்திரமான, இறையாண்மை மற்றும் சாத்தியமான அரசை அனுபவிக்கும் உரிமை பாதுகாக்கப்படல் வேண்டும். இதற்கான தீர்வு தமிழீழம் ஆகும்.
6.  ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் அவர்களின் பூர்வீக தாயகத்திற்குச் செல்வதற்கான உரிமை உறுதி செய்யப்படல் வேண்டும்.
7. அனைத்து  நாடுகளின் உத்தரவாதங்களுடன்  இருதரப்பு உடன்பாடு மூலம் தமிழர் மற்றும் சிங்களவர்களிற்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படல் வேண்டும்.
8.  தமிழ்ப் பிரதேசங்களில் பயங்கரவாதத்தை நிலை நாட்டும் சிறீலங்கா அரசாங்கம், சிறீலங்கா இராணுவம் மற்றும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை  விளைவிக்கும் அரச ஓட்டுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படல்வேண்டும்.
9. ஐ.நா. மனித உரிமைகள் சபை, சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளின் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி நீதிவிசாரணை மேற்கொள்ளல்வேண்டும்.
10. இனவழிப்பு, சர்வதேச  மனித உரிமை மீறல்கள் மற்றும் 2002 சூலை தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
11. சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  மனித உரிமை மீறல்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமைகள் அவையினால் சிறப்புத் தூதுவர் ஒருவரை  பிரத்தியேகமாக நியமித்தல் வேண்டும்.
இத்தீர்மானத்தின் விளைவாக ஐரோப்பாவின் ஏனைய பல நகராட்சிகள் தமிழர் இயக்கத்துடன் தொடர்புகளை மேற் கொண்டுள்ளன. தமிழீழ வடமாகாண சபை, தமிழ்நாடு சட்டமன்றம் போன்றவற்றைத் தொடர்ந்து மிகவும் வலுவான  தீர்மானமாக வெளிவந்திருக்கும் இத்தீர்மானமானது ஈழத் தமிழர்களின் தொடரும் தமிழினவழிப்பிற்கு எதிரான நீதிக்கான மற்றும் இறையாண்மைக்கான பயணத்திலும் ஓர் பாரிய முன் நகர்வாகும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பார்சிலோனா மாநகராட்சியின் அழைப்பையேற்று தமிழர்  இயக்கத்தின் வெளிவிகாரக்குழு அதிகாரப் பூர்வ பயணமொன்றினை மேற்கொள்ளவிருப்பதினால் அவர்களிற் கான உங்கள் வாழ்த்துச் செய்திகளை நாம் எடுத்துச் செல்ல முனைகின்றோம். இவ்வரலாற்றுத் தருணத்தில் பார்சிலோனா மாநகராட்சிக்கு அனைத்து உலகத் தமிழ் அமைப்புக்களும் நட்புப்பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்குமாறு  தமிழர் இயக்கம்  அன்புரிமையுடன் கேட்டுநிற்கின்றது.                                                                                                      

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.