உலகத் தமிழர்களுக்குத் துணையாக இருந்தவர் ம. நடராசன் முதலாண்டு நினைவு விழாவில் பழ. நெடுமாறன் உரை |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:30 |
"பல்வேறு சூழ்நிலைகளிலும் உலகத் தமிழர்களுக்குத் துணையாக இருந்தவர் ம. நடராசன். ஈழ பிரச்சனையில் தமிழர்களுக்கு வெளியில் தெரிந்தும், தெரியாமலும் உறுதுணையாக இருந்தவர் நடராசன்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வை நினைவுகூரும் விதமாக தஞ்சாவூர் அருகே நினைவுத் தூண் அமைப்பதற்காக அவரிடம் உதவி கோரினோம். ஆனால் அவர் நினைவு இல்லமே அமைக்கலாம் எனக்கூறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைவதற்கு முழுமையான உதவி செய்தார். உலகத் தமிழர்களுக்குத் துணைவராக இருந்தவர். உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வுகாண அவர்களுக்கு உதவி செய்தார். உலகத் தமிழர்களுக்குத் தோழராக இருந்த அவர் இப்போது இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பல்வேறு சோதனைகள் வாட்டி வதைக்கும் இச்சூழ்நிலையில், அவர் இல்லாதது உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு. அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்" என்றார் நெடுமாறன். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியதாவது- "நடராசன் இந்தச் சமுதாயத்துக்குப் பாடமாகத் திகழ்கிறார். அவரால் உதவி பெற்றவர்கள் கணக்கிலடங்காது. எத்தனையோ பேருக்கு ஏணிப்படியாக இருந்தவர். திராவிட இயக்கக் கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்" என்றார். மேலும், மனிதநேயர் முனைவர் ம. நடராசன் வாழும் நினைவுகள் என்கிற குறுந்தகடை எல். கணேசன் வெளியிட, அதை சிங்கப்பூர் துணைப் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த சுசோசுவா, மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சர் டத்தோ கமலநாதன், அமெரிக்காவின் மேரிலாண்ட் இராசன் நடராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். திருவாளர்கள் காசிஆனந்தன், டி.டி.வி. தினகரன், எஸ். அன்பழகன், எம். ரெங்கசாமி, தங்க. தமிழ்ச்செல்வன், உ. தனியரசு, எம்.ஜி.கே. நிசாமுதீன், பி.ஆர். பாண்டியன், பி. அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |