நச்சுக் கருத்துப் பரப்பும் நாகசாமி -இறையெழிலன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019 14:59

மேனாள் தொல்லியல் இயக்குநர் திரு. நாகசாமி தமிழைக் கொச்சைப்படுத்தி “Mirror of Tamil and Sanskrit”” என்னும் ஆங்கிலத்தில் எழுதிய நூலில் தமிழுக்கு எதிரான, பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது என்றும் பகவத் கீதை என்னும் நூலின் சாரம் குறள் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.
 2012இல் வெளியான இந்நூலில் "தமிழ் மொழி எழுத்து முறை” பார்ப்பனர்களிடமிருந்து பெற்றது என்றும், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும், சங்க இலக்கியங்கள் அனைத்தும் சமயச் சார்புடையவை என்றும் பதிவு செய்துள்ளார். இவை எல்லாவற்றையும் விடத் தொல்காப்பியம் ஒர் இலக்கண நூலே அன்று என்றும் எழுதி யுள்ளார்.அத்தோடு திருக்குறள் பற்றிய மற்று மொரு நூலில் நான்கு வர்ணத்தை கொண்டு "திருக்குறளை” கட்டமைக்கும் அவரது செயல்  சிறிதும் நாணயமில்லாதது; கண்டனத்துக்குரியது. அத்தோடு, தமிழை ஒரு கிளை மொழி என்கிறார். பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமற்கிருதத்திலிருந்து கடன் பெற்றுத்தான் செம்மொழியாக வளர்ந்தது” என்கிறார்.
இந்த நிலையில்தான் இந்திய அரசு இவருக்கு 2018ஆம் ஆண்டு "பத்ம பூசண்” விருதை வழங்கியது. தமிழைத் தாழ்த்தி, சமற்கிருதத்தை தூக்கிப் பிடித்த அவருக்கு "பத்மபூசண் பட்டம்” கொடுத்த கையோடு இன்று தமிழ் இலக்கியம் அனைத்தும் சமற்கிருத  நூல்களின் தழுவல் என்று எழுதிய அவரைத் தேர்ந்தெடுத்து தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறது.
உலகப் பொதுமறையாக, உலக அறிஞர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட திருக்குறளை இழிவுப்படுத்தி நாகசாமி கூறியுள்ள கருத்தை அறிவுலகம் ஏற்காது.  
"வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக் கொருநீதி” என  மனோன்மணியம் சுந்தரனார் கூறினார்.
"தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மரபில் தோன்றிய தமிழனால்தான், தமிழ்மொழியின் தொன்மையும், நுட்பத்தையும் ஆழத்தையும் ஆய்வு செய்ய இயலும். அயன்மொழிக்காரர்களும், அயல்நாட்டவரும் தமிழர் வரலாற்றையும்  தமிழையும்  ஆய்வு செய்வது, நுனிப்புல் மேய்வதை யொக்கும்” என்ற மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உறுதிபடக் கூறுகிறார். வீட்டில் ஒரு மொழியும், நாட்டில் ஒரு மொழியும், ஏட்டில் ஒரு மொழியும் கொண்டுள்ள திரு. நாகசாமி, தமிழ் மொழியையும்,  தமிழர்  வரலாற்றையும் ஆய்வு செய்யத் தகுதியற்றவர். அவர் துணைக்கு அழைத்திருப்பவர்களும் அவ்வாறே.
ஆதிச்சநல்லூரின் பொருநையாற்று நாகரிகம், மதுரை, கீழடியின் வையையாற்று நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், நைல் ஆற்று நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பழந்தமிழர் நாகரிகமே என்பதை திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார். சுமேரிய, பாபிலோனிய, எபிரேய, கிரேக்க, இலத்தீன் மொழி இலக்கியங்களில், நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள், திரிந்தும் திரியாமலும் இருப்பதையும் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை.
அவருக்குத் தெரிந்தவை, சமற்கிருதம், வேதங்கள், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்றவையே.  சமற்கிருதத்திலிருந்தே தமிழ்மொழி தோன்றியது என்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் மற்றுமல்லர், உலக மொழியியலறிஞர்கள் எவரும் இதுவரை சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களால் வாழ்வு பெற்ற நாகசாமிகள் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
சமற்கிருத வேதங்கள் மற்ற இலக்கியங்கள் அனைத்தும் வாய்மொழியாகவே, தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யப் பட்டன. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில், குசராத்தில் ஆட்சி செய்த ருத்திர தாமன் காலத்தில்தான், முழுமை செய்யப்படாத சமற்கிருத எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு, முதன்முதலில் அறியப்படுகின்றது.
வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்கள், கி.பி. 200 ஆண்டுகளுக்குப் பிறகே, எழுத்துவடிவம் பெற்றன என்று அறிஞர் பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார். ரிக் வேதத்தின் 10ஆவது அதிகாரமான புருஷ சூக்தம், கி.பி. 500 ஆண்டுகளுக்குப் பிறகே, வேதத்தில் இணைக்கப் பட்டதாகவும் கூறுகிறார். முதல் பகுதிகளில் காணப்படும் மொழிநடையும், 10ஆவது சூக்த மொழி நடையும் மாறுபட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார். இவற்றுக்கெல்லாம் நாகசாமி போன்றவர்கள் மறுப்போ, விளக்கமோ கூறவில்லை.
மகாபாரதக் கதை, வாய் மொழியாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலும்கூட, மூலக்கதையோடு பல கிளைக்கதைகள் இணைக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையும் அவ்வாறு, கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இணைக்கப்பட்டது. திருக்குறள், பகவத் கீதையின் தழுவல் என்று கூற, எவ்வகையான சான்றும் இல்லை.
நோபல் பரிசு பெற்ற அறிஞர் "ஆல்பர்ட் சுவைட்சர்", இந்தியத் தத்துவங்கள் குறித்து விரிவாக ஆய்ந்திருக்கிறார். பகவத் கீதையானது பிராமணியத்தின் சாரம் என்றால், திருக்குறள் தமிழர் பண்பாட்டின் சாரம் என்று அவர் கருதுகிறார். இந்த இரண்டு நூல்களையும் ஒப்பிட்டு  அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
 "திருக்குறளுக்கும் மனு நீதி சட்ட விதிகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. மனுநீதிச் சட்டவிதிகளில், பிராமண உணர்வின் மேலாதிக்கத்தின் கீழ், உலகமும் வாழ்க்கையும் உண்டு என்கின்ற உறுதிப்பாட்டுத் தத்துவம் உரைக்கப்படுகிறது. அதற்குப் பக்கத்திலேயே, உலகமும் வாழ்க்கையும் இல்லையென்கின்ற மறுப்புத் தத்துவமும் சகித்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. திருக்குறளிலோ உலகமும் வாழ்க்கையும் இல்லை என்கின்ற மறுப்புத் தத்துவமானது வானத்தில் வெகு தொலைவில் காணப்படும் ஒரு மேகமாகும்; அவ்வளவுதான். 250 நீதிக்கருத்துக்களில் - இவை இந்நூலின் இறுதிப் பகுதியாக அமைந்துள்ளன. நிலவுலகுக்குரிய அன்பு பெரிதும் போற்றப்படுகின்றது. அந்நீதிக் கருத்துக்கள் குற்றத்தை ஏற்படுத்தியமையால், கடவுளிடம் ஆன்மாவுக்குள்ள அன்பைப் பற்றியதே அது என்று தொடர் உருவகமாக அவற்றிற்குப் பிற்காலங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்படுகின்றது”.
"கீதை ஒரு சமயநூல் என்ற வகையில் எல்லைப்பட்டு நிற்பது; அது முன்வைத்துள்ள "சுயநலன் கருதாத செயல்திறன்” என்ற கருத்துநிலை, மக்கள் நலனுக்காகத்  தனிமனிதன் தன்னை ஒப்படைக்கவேண்டும் என்ற வகையில் அந்நூலில் அமைந்துள்ள தொனிப்பொருள் என்பன எவ்வளவு உயர்ந்தனவாகக் கருதப்படினும் அதன் சமயத் தளம் அதனைப் பொது நூலாகக் கொள்ள முடியாத வகையில் எல்லைப்படுத்தி விடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறளுக்கு இவ்வகையான சமய எல்லை இல்லை. அன்பு, அறம் என்பவற்றை மட்டுமே அது தளமாகக் கொண்டதால் மானுடத்தை நேசிக்கும் எவரும் தம்முடைய மன சாட்சியை அதில் தரிசித்து, தம் உடைமையாக, உரிமையாக, அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
கீதையின் போதனைகள் பொதுநல நோக்கில் கடமையை வற்புறுத்துவன என்று கொள்ளும்போது யாருடைய, எத்தகு கடமைகள் என்பதை நுனித்து நோக்கினால் அதன் அடித்தளத்திலே குறிப்பிட்ட வருணச் சார்பு நலன் இருப்பதைத் தெளிவாக  இனங்காணலாம். வருண தர்மத்தைப் பாதுகாத்து உயர் வருணத்தினர் தம் உயர்நிலையைப் பேணிக் கொள்வதற்காக ஆக்கப்பட்ட நூல் அது என அந்நூல் புரிந்து கொள்ளப்படுவதைத் தவிர்க்க  முடியாது. நால் வருணத்தினரும் தத்தமக்கு  விதிக்கப்பட்ட கடமைகளை மீறலாகாது என்பது கீதையிலே (3:35, 18:41-47) வற்புறுத்தப்பட்டமை இங்குக் கவனத்திற்கொள்ளத்தக்கது. இன்றைய நோக்கில் கீதையைக் கண்டிப்பவர்களுக்கு அதன் இந்த  வருணச்சார்பு என்ற நிலை வாய்ப்பானதொன்றாக உள்ளது. குறளுக்கு இத்தகு பிரச்சினை இல்லை. அதுதான் எழுந்தகாலத்தின் நிலவுடைமைச் சூழலின் உழவுத் தொழில், முடியாட்சிக் கட்டமைப்பு என்பவற்றைச் சார்ந்த நூல் என்பது உணரப்பட்டாலும் அதன் உள்ளீடு ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் நலன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை”. 1
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான முனைவர் நா. சுப்பிரமணியன், பேராசிரியர் திருமதி. கெளசல்யா சுப்பிரமணியன் ஆகியோர் எழுதியுள்ள "இந்தியச் சிந்தனை மரபு” என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
"நிலவுடைமை எழுச்சிச் சூழலுக்கு ஏற்ப வேதமரபு சார்ந்து நிகழ்ந்த இவ்வாறான சமுதாய, சமய மாற்றங்களுக்கு ஒரு தத்துவ அடிப்படை தேவையாக இருந்தது. வேத மரபில் முன் வைக்கப்பட்ட பிரம்மம், ஆத்மா என்பன தொடர்பான சிந்தனைகளைப் புராண இதிகாச காலத் தெய்வ நம்பிக்கைகளுக்கேற்ப விளக்கியுரைக்க வேண்டிய தேவை  ஏற்பட்டது. அடிக்கடி நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளாலும், உள்நாட்டுப் பேரரசு விரிவாக்க முயற்சிகளாலும், இனக்குழுக்களின் சமுதாயக் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்ட நிலைகளில் மக்கள் மத்தியில் கருத்துக் குழப்பங்கள் ஏற்படலாயின. இந்நிலையில் ஆளும் வர்க்கத்தின் மீதான நம்பிக்கையை வலியுறுத்தவும் வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காக்கவும் தெய்வ நம்பிக்கையுடன் கூடிய ஒரு தத்துவ விளக்கம் தேவைப்பட்டது. இவ்விரு வகைத் தேவைகளையும் நிறைவு செய்யும் நோக்கில் உருவான நூலே கீதை. இது ஒருவகையில் வேத மரபின் வாரிசாகவும், இன்னொரு வகையில் புராண மரபின் சாரமாகவும் வேறொரு வகையில் தர்மசாத்திரங்களை நியாயப்படுத்தும் தத்துவமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
"இவ்வாறான ஒரு கருத்துக் குழப்பநிலை உருவான சூழலில் தமிழ் மரபின் மனிதநேய விழுமியங்களிற் காலூன்றி நின்று, அயல் மரபுகளின் உயரிய பண்புகளை உள்வாங்கிக்கொண்டு, அனைத்துலக மானுடத்துக்கும் பொதுவானதாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வாழ்வியல் நூலே திருக்குறள். தான் எழுந்த காலச் சூழல் காரணமாக அது உழவுத் தொழிலை முதன்மைப்படுத்திய் நிலவுடைமைச் சமுதாயத்தின் மன்னராட்சியைச் சார்ந்ததாயிற்று. ஆனால்  கீதையைப் போல் ஆளும் வர்க்கத்தின் மீதான நம்பிக்கையை வலியுறுத்தும் நோக்கு  அதற்கு இருக்கவில்லை. மக்கள் நலனைக் காப்பதில் மன்னராட்சி உட்பட எல்லாக் கூறுகளுமே எப்படிச் செயற்படவேண்டும் என்பதை விளக்குவதே அதன் இலக்காக இருந்தது. வேதமரபு, சமணம், பெளத்தம், ஆசீவகம், உலகாயதம், தர்மசாஸ்திரங்களின் கருத்துக்கள் என்பவற்றில் எதனையும்  நியாயப்படுத்த வேண்டும் என்பதோ அவற்றுக்கு வாரிசுரிமை கோர வேண்டும் என்பதோ குறளின் நோக்கம்  அல்ல.
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்பதற்கேற்ப எல்லாவற்றிலும் உள்ள மெய்ம்மைகைளைத் தெளிந்து கொள்ளவேண்டும் என்பதே குறளின் நிலைப்பாடு. இங்கே மெய்ம்மை என்பதைச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு ஏற்ற அடிப்படைக் கூறு என்று நாம் பொருள் கொள்ளலாம்.  
இவ்வாறாக, மேலே விரிவாக நோக்கியவற்றின் அடிப்படையில் சிந்திக்கும் போது கீதை, குறள் ஆகிய இரண்டும்  தாம் தோன்றிய பிரதேசம், தளம், நோக்கு, நிலை  என்பவற்றில் வேறுபடுவன என்பது தெளிவாகும்.2
சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், வில்லிபுத்தூரார் பாரதம் உட்படத் தமிழில் பாடப்பெற்ற பல்வேறு பாரதங்கள் ஆகியவற்றில் பகவத்கீதையைப் பற்றிய குறிப்போ அந்நூலின் தாக்கமோ காணப்படவில்லை என்பது தெளிவாகிறது. சங்க இலக்கியங்களிலிருந்து வில்லிபுத்தூரார் பாரதம் வரையிலும்-ஏன் அதற்குப் பின்னால் இருபதாம் நூற்றாண்டு வரை தோன்றிய தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலானவற்றில் குறளின் தாக்கம் காணப்படுகிறது. குறளின் கருத்துக்கள் இந்நூல்களில் விரவியுள்ளன. தமிழ் இலக்கியங்கள் குறள் ஏற்படுத்திய தாக்கத்தினை வேறு எந்த நூலும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் குறளின் கருத்தோட்டம் தமிழர்களின் பண்பாட்டுக் கருத்தோட்டமாக அமைந்தது. தமிழர் பண்பாட்டிற்கு எதிரிடையான கருத்துக்கள் கொண்டதும் வேதமரபின் வாரிசுமான கீதையின் தாக்கம் தமிழிலக்கியத்தில் படியாதது வியப்பிற்குரிய ஒன்று அல்ல.3
திருக்குறள், கி.மு. 31ஆண்டுகளில் வெளியிடப்பட்டது அல்லது, திருவள்ளுவரின் பிறப்பாண்டு என்று கருதப்பட்டது. உரோமானிய தத்துவ ஞானியும், கவிஞருமான செனகா திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலங்கையைப் பற்றிய தன் குறிப்புகளில் எழுதியுள்ளார் என பேராசிரியர் மருதநாயகம் மேற்கோள் காட்டுகிறார். திருக்குறளின் பெருமையும் புகழும் உரோமைக்கும் சென்றடைந்து, அதனின்றும் மேற்கோள் சொல்லப்பட்டிருப்பதால், கி.மு. 300 ஆண்டுகளில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப்படுகின்றது. இச்செய்திகளை யெல்லாம் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை.
வான்புகழ் வள்ளுவர் இயற்றிய திருக்குறளை இழிவுபடுத்த நினைப்பவர்கள் தமிழை,  தமிழரை, தமிழ்நாட்டை இழிவு செய்ய மனப்பால் குடிக்கிறார்கள். 2000 ஆண்டுகாலத்திற்கும் மேலாக இம்முயற்சியில் வடமொழி வெறியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டபோதிலும், அவர்களால் வெற்றிபெற இயலாமல் தோற்றுப் புறங்கண்டு ஓடி ஒழிந்துள்ளனர். திருக்குறள்  எந்த மொழியில் எழுதப்பட்டதோ, அந்த தமிழ்மொழி சீரிளமைத் திறம்  குன்றாத செம்மொழியாக இன்றளவும் வாழ்கிறது. உலகம் உள்ளளவும் வாழ்ந்து சிறந்தோங்கும். ஆனால், சமற்கிருதமோ செத்த மொழியாகி புதைகுழிக்குள் போய் அழிந்து ஒழிந்துவிட்டது. எத்தனை நாகசாமிகள்  முயன்றாலும் அதற்கு உயிரூட்ட முடியாது.  
தமிழகத் தொல்லாய்வுத் துறையில் இயக்குநராக இவர் பதவி வகித்தபோது தமிழ், தமிழர் குறித்தத் தொல்லாய்வுத் தடயங்களை எவ்வாறு மறைத்திருப்பார் என்பது  நன்கு புலனாகிறது. ஆகவே, தமிழ்மொழி பற்றிய அறிவோ அல்லது மொழியியல் அறிவோ சிறிதும் இல்லாத திரு. நாகசாமியை செம்மொழித் தமிழாய்வு நிறுவனப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும். தமிழ் சார்ந்த எந்தப்  பொறுப்புகளிலும் அவரை அமர்த்தக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
அடிக்குறிப்பு
1, 2,  3 - தமிழரும் கீதையும் - பழ. நெடுமாறன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.