சர்வாதிகாரம் தலைதூக்கும் அபாயம்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019 15:05 |
கொள்கை, கோட்பாடு, குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல் பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முன்பாக உருவான இக்கூட்டணிகள் தேர்தலுக்குப் பிறகு மாறக் கூடிய சூழ்நிலையை மறுப்பதற்கில்லை. நாளுக்கு நாள் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படும் போக்குக்கு எதிராக உண்மையான கூட்டாட்சியை உருவாக்க ஒன்று திரள வேண்டிய மாநிலக்கட்சிகள் பிளவுபட்டதோடு நிற்காமல் மாநில சுயாட்சிக்கு எதிரான பா.ச.க, காங்கிரசு கட்சிகளுடன் கைகோர்த்து நிற்கும் அவலத்தையும் காண்கிறோம். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், காவிரிப்படுகைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழை ஆக்குதல், 7 தமிழர் விடுதலை, கச்சத்தீவு மீட்பு, ஈழத்தமிழர் துயர்துடைத்தல் போன்ற மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பிரச்னைகள் குறித்து திராவிடக்கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் கூறுகின்றனவேதவிர இவைகுறித்து பா.ச.க. காங்கிரசு, கட்சிகள் எத்தகைய வாக்குறுதியையும் அளிக்க மறுக்கின்றன. பா.ச.க, காங்கிரசு, கட்சிகள் மத்திய ஆட்சி அமைக்க இரு திராவிடக்கட்சிகளும் ஆதரவு தந்தும், ஆட்சியில் அமைச்சர் பதவிகளைப்பெற்றும் இருந்தன. அப்போது மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க எதுவும் செய்யவில்லை. தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. நிர்வாகத்தில் இலஞ்சமும் ஊழலும் பெருகியுள்ளன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக் காடாக மாறிவிடும். மதவெறி தலைவிரித்தாடும் அபாயத்திலிருந்து நாட்டைக் காக்க வேண்டிய கடமை மக்களுக்கு உண்டு. அதை உணர்ந்து வாக்களிக்கத் தவறினால் சனநாயகம் மறைந்து சர்வதிகாரம் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் அவற்றுக்காகத் தொடர்ந்து போராடவும் உறுதியும், தமிழ்த் தேசிய உணர்வும் கொண்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்து வாக்களிக்குமாறு தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன். |