இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளாகிய ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் கிறித்தவ தேவாலயங்களில் பக்தி பெருக்குடன் மக்கள் வழிபாடு செய்து கொண்டிருந்த வேளையில் குண்டுகள் வெடித்து 300பேருக்கு மேல் உயிரிழந்தும், 500பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ள செய்தி உலகையே உலுக்கியுள்ளது.
இலங்கை தலைநகரான கொழும்புவில் கொச்சுக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் கிறித்தவ மக்கள் வழிபாடு செய்துகொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. இந்த குண்டுவெடிப்புகள் நடந்த சற்றுநேரத்தில் கொழும்புவில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகள் மூன்றில் மக்கள் உணவு உண்டு கொண்டிருந்த வேளையில் குண்டுகள் வெடித்து பலர் மாண்டனர். மேலும், பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் சில இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. மேலும், பல இடங்களில் காவல்துறையினர் வெடிகுண்டுகளையும், வெடி மருந்துகளையும் சோதனையில் கைப்பற்றியுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்கள் தற்கொலைப் படையினர் என்றும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், சர்வதேச அல்-கொய்தா அமைப்பினர் என்றும், பல்வேறு விதமான செய்திகள் வெளியிடப்பெற்றுள்ளன. இறந்தவர்களில் 31பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 11பேர் இந்தியர்கள் என்றும், அதில் 6பேர் கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் துல்லியமான விவரங்களை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? எத்தனை பேர் சிங்களர்கள்? என்ற உண்மையை மட்டும் இதுவரை வெளியிட சிங்கள அரசு மறுப்பது ஏன்? இந்த குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதில் ஐயமில்லை. யாரை குறிவைத்து நடத்தப்பட்டவை என்பது குறித்தும் கருத்து வேறுபாடு இல்லை. சர்வதேச சதி பின்னணி இதில் இருக்கக் கூடும். எது எப்படி இருந்தபோதிலும், யாரால் ஏவிவிடப்பட்டு யார் செய்திருந்தபோதிலும் இக்கொடிய செயல் மன்னிக்கப்பட முடியாததாகும். மானிட சமுதாயத்திற்கு விடப்பட்டிருக்கிற அறைகூவலாகும். இலங்கையின் மிகப்பெரும்பான்மை சமுதாயமாக பெளத்த சிங்கள சமுதாயம் உள்ளது. சிங்களர்களில் ஒருவர்கூட இந்து அல்லது முசுலீம் சமயத்தைச் சார்ந்தவர்களல்லர். மிகச் சிறுபான்மை சிங்களவர்கள் கிறித்தவத்தை தழுவி உள்ளனர். மேலும், கிறித்தவ சமயத்தைச் சேரும் சிங்களவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. சிங்கள பெளத்த பேரினவாதிகளால் இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. கடந்த கால வரலாறு இதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ் கிறித்தவர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார்கள். தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னோடியான தமிழரசுக் கட்சியை நிறுவிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஒரு கிறித்தவரே. அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் திகழ்ந்த நாகநாதன், சூசைதாசன், செல்லத்தம்பு, மார்ட்டின், ஜோசப் பரராஜசிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்ற பலரும் கிறித்தவர்களே. ஈழத் தமிழர்களை மதம் ஒருபோதும் பிரித்ததில்லை. மேலே கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தேவாலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது சிங்கள இராணுவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கிறித்தவ துறவியான பஸ்டியான், சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல கிறித்தவத் துறவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைகளுக்கு ஆளானார்கள். கிறித்தவர்கள் அனைவரும் தங்களை முதலாவதாகவும், இறுதியாகவும் தமிழர் என்றே கருதினர், செயல்பட்டனர். சிங்களப் பேரினவாதிகளுக்கு கிறித்தவர்கள் மீது கோபம் ஏற்பட இதுவும் முக்கிய காரணமாகும். 1960ஆம் ஆண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திவந்த பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. 1962ஆம் ஆண்டில் அப்போதைய தலைமையமைச்சர் சிறீமாவோ பண்டார நாயகாவின் அரசைக் கவிழ்க்க இலங்கை இராணுவத்திலிருந்த சில கிறித்தவ அதிகாரிகள் முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2015ஆம் ஆண்டிலிருந்து கிறித்தவ தேவாலயங்களில் மீதும், கிறித்தவ பாதிரியார்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் சிங்களத்தில் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் என்றும், தமிழ் கிறித்தவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட1மணிநேரம் ஒதுக்கப்படும் என்றும், சிங்கள அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அப்படியானால், தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தமிழ் கிறித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலா? என்ற கேள்வி நம் உள்ளங்களைக் குடைகிறது. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் வாழும் முசுலீம்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்களே. உருது பேசும் முசுலீம்கள் அங்கு அறவே கிடையாது. அவர்களின் தாய்மொழித் தமிழே. தாயகமும் தமிழீழமே. முசுலீம்கள் மொழியால் தமிழர்களே. எனவே, தமிழரசுக் கட்சித் தலைவராக செல்வநாயகம் அவர்கள் விளங்கியபோது ஏராளமான முசுலீம்கள் அதில் சேர்ந்தனர். பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டனர். எனவே முசுலீம்களைப் பிரிப்பதற்கான பல முயற்சிகளை சிங்கள அரசு தொடர்ந்து செய்தது. இலங்கை&பாகிஸ்தான் நட்புறவு நெருக்கமானபோது, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற பஷீட் வாலி முகம்மது என்பவரை இலங்கையில் தனது தூதுவராக நியமித்தது. இதற்கு ஆழமான நோக்கம் உண்டு. சென்னையில் பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களுக்குக் கிளை அமைப்புகள் நிறுவ இந்திய அரசு அனுமதித்தது. ஆனால், சென்னையில் துணைத் தூதுவர் அலுவலகம் அமைக்க பாகிஸ்தான் அனுமதி கேட்டபோது இந்திய அரசு இன்றுவரை அனுமதிக்கவில்லை. எனவே தென்னிந்தியாவுக்கு மிக அருகில் உள்ள கொழும்புத் தூதரகத்தை தனது சதிவேலைகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன்தான் பஷீட் வாலி முகம்மதை பாகிஸ்தான் அனுப்பியது. 2006ஆம் ஆண்டு இலங்கை கிழக்கு மாநிலத்தில் ஈழத் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சிங்கள அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கவும், ஆயுதங்கள் பெறவும் திட்டமிட்டு இவர் உதவினார். சிங்கள அரசுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியவர் இவரே. இப்பதவியிலிருந்து இவர் விலகிச் சென்ற பிறகு பாகிஸ்தான் விமானப் படையின் துணைத் தளபதியாக இருந்து ஒய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல், ஷேக் சட் அஸ்லம் செளத்ரி என்பவரை தனது தூதுவராக கொழும்புக்கு பாகிஸ்தான் அனுப்பியது. இந்தியாவின் முக்கிய தொழில் மையங்களும், ஆயுதத் தொழிற் சாலைகளும் நிறைந்திருக்கும் தென்னிந்தியாவை இலக்கு வைத்தே இலங்கைக்கு தனது தூதுவர்களை பாகிஸ்தான் நியமிக்கிறது. தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத் போன்றவற்றிலும் இம்மாநிலங்களைச் சேர்ந்த பிற முக்கிய நகரங்களிலும் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே இத்தகைய குண்டுவெடிப்புகள் நிகழக்கூடும். அதற்கான சதித்திட்டம் உருவாகி இருக்கிறது என இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த சதித்திட்டத்தை முறியடிப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து எவ்விதத் தகவலும் இல்லை. அரசின் அலட்சியப் போக்கையே இது அம்பலப்படுத்தியுள்ளது. தலைமையமைச்சர் ரணில் விக்ரம சிங்கே, இந்தச் சதி குறித்துத் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று கூறியிருப்பது ஆட்சியின் அவல நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், குடியரசுத் தலைவரான சிறீசேனா பாதுகாப்புத்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வற்புறுத்திப் பதவி விலக வைத்திருக்கிறார். நாடாளுமன்ற சனநாயக நெறியின்படி இத்துறைக்கு யார் பொறுப்போ அந்த அமைச்சர்தான் பதவி விலகவேண்டும். அதிகாரிகள் அல்லர். அப்படிப் பார்க்கப்போனால் பாதுகாப்புத்துறையின் பொறுப்பை குடியரசுத் தலைவர் சிறீசேனா தன்னிடமே வைத்திருந்தார். இன்னமும் வைத்திருக்கிறார். எனவே, தார்மீக ரீதியில் அவர் இந்தக் கொடிய நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்கவேண்டும். ஆனால், அவ்விதம் செய்யாமல் அதிகாரிகளைப் பலிகடாக்களாக்கியிருக்கிறார். இந்த குண்டுவெடிப்பு சதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராசபக்சேயின் தலையீடு இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் எழுந்துள்ளது. சிங்கள பெளத்த பேரினவாதிகளின் நலனைக் காக்க தன்னால் மட்டுமே முடியும். மற்ற எவராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்க அவர் தொடர்ந்து இனவெறியைத் தூண்டி வருகிறார். சிங்களரிடையே கிறித்தவ சமயம் பரவி வருவது குறித்து பெளத்த பிட்சுகள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் கிறித்தவ தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பின்னணியில் இராசபக்சேயின் தூண்டுதல் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படவேண்டும். 30 ஆண்டு காலம் நடைபெற்ற ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் சிங்கள இராணுவத்தை எதிர்த்து மட்டுமே நடத்தப்பட்டது. ஒருபோதும் சிங்கள அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை. அவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. மாறாக, அப்பாவித் தமிழ்மக்கள் மீது ஆயுதங்களை ஏவியும், குண்டு மழை பொழிந்தும் சிங்கள இராணுவம் கொன்றுகுவித்தது என்பதை உலகம் அறியும். இவ்வாறு பல கோணங்களில் இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணி ஆராயப்படவேண்டும். சிங்கள அரசோ, சிங்கள அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவோ இதை செய்யாது. எனவே சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால்தான் முழு உண்மையும் வெளிவரும். நன்றி - தினமணி - 29-04-2019 |