ஜீவா பார்வையில் அப்பரும் - மாணிக்கவாசகரும் - குன்றக்குடி அடிகளார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 மே 2019 12:30

அமரர் ஜீவா பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் துறை போகிய அறிஞர். பொதுவுடைமை வாழ்க்கையை இப்பூவுலகம் முழுதும் வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்தவர்.

தாமரைத்தண்டு மண்ணோடு தொடர்பு கொண்டேயிருக்கிறது. அதன் மலர் விண்ணிலே உலவும் கதிரவனை நோக்கி மலர்கிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓர் அரிய இணைப்பை அங்கு பார்க்கிறோம். அதுபோல, அமரர் ஜீவாவின் சிந்தனைக் கால்கள் தமிழக நாகரிகத்திலேயே பரவி நின்றன. ஆயினும் அவர் சிந்தனை மார்க்சிய சித்தாந்தத்தை நோக்கி மலர்ந்தது. இவ்விரு கருத்துக்களுமிடையே எழுத்தால், பேச்சால் இணைப்பூட்டிய இணையற்ற சிற்பி அமரர் ஜீவா. அவர்தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரிரு சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டே இக்கட்டுரை அமைகின்றது.
திருச்சி தேவர் மன்றம் விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது. 20ஆம் நூற்றாண்டின்  சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தின் கொடிகள் அரங்கை அலங்கரித்திருந்தன. நெற்றி நிறைய நீறு பூசிய இளைஞர்களும், பெரியவர்களும் தேவர் மன்றத்தில் நிரம்பி வழிந்தனர். உயிருருக்கும் பாட்டினைத் தந்த மாணிக்கவாசகரின் திருவுருவம் அரங்கில் காட்சியளித்தது. திருவாசகப் பாடல்கள் பாடப்பெற்றன. இதற்கிடையில் அவையில் கையொலி-ஆரவாரம். அவையிலிருந்தோர் மன்றத்தின் நுழைவாயில் நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். கட்டான உடல், முறுக்கேறாத மீசை, கையில் ஓர் ஏடு ஆகியவற்றோடு ஜீவா உள்நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவரை அந்த விழா அரங்கில் பார்த்ததில் பலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிலும் கலந்து பழகும் பண்பை நினைவுறுத்தும் நற்காட்சி என்று ஒருமைப்பாட்டுணர்வுடையோர் பேசிக்கொண்டார்கள். அதிபக்திமான்களுக்கு அச்சம், நாத்திகர் திருவாசக விழாவில் பேசுவதா என்ற கேள்வி-குமுறல். அமரர் ஜீவா அவர்கள் வந்தமர்ந்தார். தவத்திரு அடிகளார் இன்ப அன்பு தழுவ வரவேற்றார், அமரர்  ஜீவா அவர்கள் பேசத் தொடங்கினார்.
திருவாசக விழாவில் திருவாசகம் பற்றி அமரர் ஜீவா பேசினார். என்ன அற்புதம்! மணிவாசக பக்தர்களும்கூட இவ்வளவு பெரிய பக்தியை மாணிக்க வாசகருக்குக் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். மிக அழகாக மரபு பிறழாமல் பேசினார். ஆனாலும் பார்வை நமது சொந்தப் பார்வையே! இல்லை. அப்படிச் சொல்வது சுத்தப் பொய்! நியாயமாகப் பார்த்தால் மாணிக்கவாசகர் பார்வைக்கும் அமரர் ஜீவா பார்வைக்கும் வேற்றுமையே இல்லை. இதுவே உண்மை. அன்று அவர் எடுத்துக்கொண்ட பாடல் "வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்” என்ற பாடல். இந்தப் பாடலின் பொருள்நலம் அமரர் ஜீவாவின் சொல்லாற்றலால் புதுநலம் பெற்றது. பொதுநலமும் பெற்றது. "இறைவனே மனிதரை ஆட்கொள்ளுவதற்காக-ஞானியரை ஆட்கொள்ளுவதற்காக அல்ல, அர்ச்சகர்களை  ஆட்கொள்ளுவதற்காக அல்ல, நிலப் பிரபுத்துவத்தின் மறுபதிப்பாக விளங்குகின்ற தர்மகர்த்தாக்களை ஆட்கொள்வதற்காக அல்ல, மடாதிபதிகளை ஆட்கொள்வதற்காகவும் அல்ல. மனிதரை, சாதாரண மனிதரை, கருப்பனை, சிகப்பனை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே இம்மண்ணுலகிற்கு வருகின்றான்”, என்ற அவர் முழங்கிய போது அரங்கத்தில் கையொலி அலையென எழுந்தது! மீண்டும் தொடர்ந்தார். "ஆட்கொள்ளும் வேலையின்மையால் வானையே பழிக்கின்றான் கடவுள், இன்றையச் சமயமோ வேலை செய்வதைக் குற்றமென கருதி, உண்டு உறங்கி வாழ்கிறது. ஜீவா கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் ஜீவா சொல்லுவதைக் கேட்க வேண்டாம். உங்கள் மாணிக்கவாசகர் சொல்லுவதையாவது கேட்க வேண்டாமா? மனிதன் பட்டினியால் நோயால் வாடியலையும் போது அவனை ஆட்கொள்ளும் பொறுப்பு யாருக்கு? மாணிக்கவாசகரைப் பாராட்டும் பரம்பரையினருக்கு இல்லையா? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்” என்று அவர் ஆவேசத்தோடு கேட்டபோது அரங்கில் உருக்கம் கலந்த அமைதி நிலவியது. அன்று அவர் பேசிய பேச்சில் சைவத்தின் சின்னமில்லை, சடங்கில்லை. ஆயினும் அதன் சாரமிருந்தது.
பிறிதொரு நாள் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூரில் திருத்தளிநாதர் திருக்கோயிலில் திருமுறை விழா மேடையில் நால்வர் சந்நிதியில் அமரர் ஜீவா நின்று, "நான் கண்ட அப்பர்" என்ற பொருள் பற்றிப் பேசியது இன்றும் அத்திருக்கோயிலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பூதியடிகளே அமரர் ஜீவா வடிவில் வந்து அப்பரடிகளைப் போற்றிப் புகழ்வது போலிருந்தது! கம்பீரக் குரலில் "நாமார்க்கும் குடியல்லோம்” என்ற பாடலை அவர் இடி முழக்கமென எடுத்துக் காட்டினார். "உலகில் முடியாட்சியை எதிர்த்து போராடியவர்கள் வரிசையில் அப்பரடிகளும் நிற்கின்றார். அவர்தம் பெயரை நானிலமும் நாடும் அறியாமல் சிலையாக்கி சிறைப்படுத்தி வைத்திருக்கும் சைவர்களின் நிலைமையை நான் என்னென்பேன்” என்று கூறியபோது அவை மெய்சிலிர்த்தது. ஆவேசம் கொண்டது. 20ஆம் நூற்றாண்டின் வரையிலும்கூட நிறபேதத்தை ஒழிக்காத மேலைநாடுகள் உண்டு. 7ஆம் நூற்றாண்டிலேயே சாதி இன வேறுபாடுகளைச் சாடிய பெருமை அப்பரடிகளுக்கு உண்டு. அவர்தம் ஒருகுல நெறி பேணாமல் இன்றைய கோயில்களும் மடங்களும் சாதி குலவேற்றுமைகளை மேலும், மேலும் வளர்த்து வருகின்றன. அவர்களுக்கு அப்பரடிகள் பெயரைச் சொல்ல உரிமை ஏது? நான் கம்யூனிஸ்டாக  இருந்தாலும் எனக்கே அந்த உரிமை உண்டு என்று அப்பரடிகள் மீது உரிமை கொண்டாடினார் ஜீவா. பின், அப்பரடிகள் பாடல்களில் பல்வேறு பாடல்களை  எடுத்துக் காட்டினார். இரப்பவர்க்கு ஈய வைத்தார். ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர்  தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார் என்ற திருப்பாடலை அவர் சிந்தனை கலந்த நகைச்சுவையுடன் விமர்சனம் செய்தது இன்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி. பசி என்று கேட்பவனுக்குக் கொடுத்து வாழ்பவனுக்கே திருவருள். இல்லையென்று கூறி வஞ்சித்து வாழ்பவனுக்கு நரகம். இது அப்பரடிகள் கருத்து இல்லை, ஆணை. இன்றோ சமயநெறி நிற்பவர்கள் கொடுக்காதது மட்டுமல்ல, கொள்வதையே கடமையாகக் கொள்கிறார்கள். பலரை வஞ்சித்து வாழ்பவர்களும் இன்று மிக எளிமையாகச் சமயப் போர்வை போத்திக் கொள்ளுகிறார்கள் என்று உணர்ச்சி ததும்ப எடுத்துக் காட்டியபோது அவையில் அமைதி நிலவியது.
இங்ஙனம்  மார்க்சிய  சித்தாந்தத்தில் ஊறிய அமரர்  ஜீவா, இந்த நாட்டுக் கவிஞரை, பண்பாட்டை மறக்காமல் பாராட்டியது பெருமைக்குரியது, பாராட்டுதற்குரியது. அமரர் ஜீவா, இயற்கையிலே ஒரு சிந்தனையாளர். சமுதாய மாற்றத்தைச் சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் நாட்டில் சட்டத்தின் மூலம் கொண்டு வரலாம். மக்களாட்சி முறை நடைபெறும் நாட்டில் கருத்து, வளர்ச்சி, மனமாற்றத்தின் மூலமே கொண்டுவரவேண்டும் என்ற நம்பிக்கை அமரர்  ஜீவாவுக்கு உண்டு. அதற்கெனவே,  அவர் கலை இலக்கியப் பெருமன்றத்தைக் கண்டார். நாளும் வளர்த்தார். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கலை, இலக்கியப் பெருமன்றத்திற்கு நமது பாராட்டுக்கள்.
-நன்றி - குன்றக்குடி அடிகளார், நூல்வரிசை தொகுதி-7

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.