காலம் தோறும் புதிய கோலம் பூணும் தமிழ் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மே 2019 12:30

காலம் தோறும் அதற்கேற்ற புதிய கோலம் பூணும் வல்லமைப்படைத்தது தமிழ். தொல்காப்பியம் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நான்கு வகை பாவினங்களை மட்டுமே கூறுகிறது.

சங்க நூற்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை இந்த நான்கு வகை பாவினங்களால் மட்டுமே பாடப்பட்டன.
சங்க இறுதிக்காலத்தில் ஏறத்தாழ கி.பி.250-இல் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் காலத்தில் சமணம், பெளத்தம்  ஆகியவை தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றன. சமண சமய மொழியாக பிராகிருதமும், பெளத்த சமய மொழியாக பாலியும், விளங்கிய போதிலும் சமண - பெளத்த துறவிகள் தமிழை வளர்த்தனர். புதிய பாவினங்களை உருவாக்கினர். தாழிசை, துறை, விருத்தம் என்னும் புதுவகையான மூன்று பாவினங்களோடு பழமையான நான்கு பாவினங்களையும் அமைத்து பன்னிரு வகையான பாடல்களைப் பாடினார்கள். ஆசிரியப்பாவுடன் ஆசிரிய  தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்றும் வெண்பாவோடு வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்என்றும் கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு வஞ்சிதாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் என்னும் பாவகைகளை உருவாக்கி வளர்த்தனர். இத்தகைய பாவினங்களின் அமைப்பு திடீரென்று உருவாகிவிடவில்லை. இதற்கு பல ஆண்டுகள் சில தலைமுறைகள் சென்றிருக்கவேண்டும். புதிய பாவினங்களை புலவர் உலகம் ஏற்றிருக்கவேண்டும்.
புதிய பாவினங்களுக்குரிய இலக்கண நூல்கள் யாப்பிலக்கணம் என்ற பெயரால் எழுதப்பெற்றன அவிநயம், காக்கைப் பாடினியம், நேமிநாதம் வச்சணந்தி மாலை, யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலம், நம்பியகப் பொருள் போன்ற பல இலக்கண நூல்களில் சில பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து போயின .
சங்க கால இலக்கியத்தில் அகம், புறம் என மக்களின் வாழ்க்கையோடு இணைந்த பொருட்கள் குறித்து புலவர்கள் பாடினார்கள். காதலும், வீரமும் அப்பாடல்களில் போற்றப்பட்டன. ஆனால், அக, புறப் பொருட்களுக்கு புதிய கருத்துக்களை சமணரும், பெளத்தரும் வழங்கினர். பகைவரைப் போரில் வென்று பெறப்படுகிற வெற்றியைவிட அகப் பகையை வென்று பெறுகிற வெற்றிதான் சிறந்ததும், உயர்ந்ததுமான வெற்றி என்னும் புதிய கருத்தை அவர்கள் பரப்பினர். மனிதர்கள் ஐம்புலன்களையும் அடக்கி காமம், வெகுளி, மயக்கம் ஆகிய அகப் பகையை வெல்லுவதே வாழ்வின் உண்மையான வெற்றி என்னும் புதிய கருத்தை விதைத்தனர்.  
பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் ஆகியவையும் எழுதப்பட்டன. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகிய பெருங்காப்பியங்களையும் சூளாமணி, யசோதரகாவியம், வளையாபதி ஆகிய சிறுகாப்பியங் களையும் சமணர்கள் படைத்தனர். சூளாமணி நிகண்டு, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவற்றையும் சமணச் சான்றோர் எழுதினர். மற்றும் பல சிற்றிலக்கியங்களையும் படைத்தனர். இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களும், நன்னூல், தண்டியலங்காரம் போன்ற இலக்கண நூல்களைப் படைத்தவர்களும் சமணசமயத்தைச் சார்ந்தவரே. இலக்கணம், இலக்கியம் ஆகிய துறைகளில் சமணர் ஆற்றியத் தொண்டு அளப்பரியது ஆகும்.
18 கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முற்பட்டவையும், பிற்பட்டவையும் உள்ளன. திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக் காஞ்சி ஆகிய மூன்றும் கி.பி. 250 க்கு முன்பு எழுதப்பட்டவையாகும். மற்ற நூல்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும், 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைக்காலத்தில் எழுதப்பட்டவையாகும். நாலடியார் மட்டும் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவை அனைத்தும் அற நூல்கள் ஆகும்.  
பெளத்தம்
சங்ககாலத்திலேயே பெளத்த சமயத்தைச் சார்ந்த புலவர்கள் இருந்துள்ளனர். சங்கப் புலவரான இளம் போதியார் பெளத்த சமயத்தைச் சார்ந்தவர் ஆவர். மணிமேகலை, குண்டலகேசி ஆகிய பெருங் காப்பியங்கள் பெளத்த புலவர்களால் எழுதப்பெற்றுள்ளன. பெளத்த மதம் பல்வேறு மொழி பேசும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. அந்தந்த மொழிகளில் பெளத்த அறநூல்கள் படைக்கப் பெற்றுள்ளன. ஆனால், அம்மொழிகளில் காப்பியம் எதுவும் எழுதப்படவில்லை. ஒரேயொரு பெளத்த காப்பியமான மணிமேகலை தமிழில் மட்டுமே எழுதப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் விம்பசாரக்கதை, சித்தாந்ததொகை, திருப்பதிகம் போன்ற இலக்கியங்களும் வீரசோழியம் என்ற இலக்கணமும் பெளத்தர்களால் தமிழுக்குக் கிடைத்த கொடையாகும்.
சைவம் - வைணவம்
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்தன. 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் தோத்திரபாடல்களைப் பாடித் தமிழையும், தமிழிசையையும் வளர்த்தனர். நம்பியாண்டார் நம்பி தேவாரப்பாடல்களைத் திருமுறை இலக்கியங்களாகத் தொகுத்தார். சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்கும் 14 சாத்திரங்கள் தமிழில் படைக்கப்பெற்றன. 63 நாயன்மார்களின் வரலாற்றைப் பெரியபுராணமாக சேக்கிழார் படைத்தார்.
12 ஆழ்வார்களின் பாசுரங்களைத் திவ்விய பிரபந்தமாக நாதமுனி தொகுத்தார். வைணவ கோட்பாட்டை விளக்கியும் திருமாலை போற்றியும் இராமானுசர், வேதாந்த தேசிகர் போன்றோர் பலநூல்களை எழுதினர். வைணவ சான்றோர்களின் பக்தி பாடல்களும், தத்துவக் கோட்பாடுகளும், நாலாயிர திவ்விய பிரபந்தமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் துணைப்புரிந்துள்ளன.
சைவ - வைணவ இலக்கியங்கள் அகப் பொருளுக்குப் புதியதொரு கருத்தைக் கூறின. மனித வாழ்க்கையில் ஆடவரும், மகளிரும் காதலித்துப் பெறுகிற சிற்றின்பத்தைவிட, உயிர்கள் இறைவனைக் காதலித்துப் பெறுகிற பேரின்பம் உயர்ந்தது என்னும் புதிய கருத்தை அகப் பொருளுக்குக் கற்பித்து இலக்கியங்களைப் படைத்தார்கள்.
அந்நியராட்சி
கி.பி. 1200 முதல் 1600 வரை தமிழகத்தில் சோழ, பாண்டிய அரசுகள் தகர்ந்து அந்நியர்களான நாயக்கர், மராட்டியர் போன்றவர்களின் ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. தமிழ் புலவர்கள் ஆதரிப்பாரின்றி நலிந்தனர். அமைதியற்ற, ஆதரவற்ற இந்தச் சூழ்நிலையில் புலவர்கள் சிறுசிறு இலக்கியங்களையே படைத்தனர். அவை சிற்றிலக்கியம் என வழங்கப்பட்டன. கலம்பகம், உலா, பரணி, பிள்ளைத்  தமிழ், பள்ளு, குறவஞ்சி போன்ற புதுவகை இலக்கியங்கள் பிறந்தன.
இந்த காலகட்டத்தில் அருணகிரிநாதர் திருப்புகழையும், குமர குருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் படைத்தனர். காளமேகம் போன்ற புலவர்கள் தனிப்பாடல்கள் பாடினர். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாயுமானவர், வள்ளலார் இராமலிங்க அடிகள் போன்றவர்கள் அருட்பாடல்களை பாடினர்.
கிறித்தவம்
கி.பி. 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் வாணிபம் செய்யவும், கிறித்தவத் துறவிகள் சமய பரப்புரை செய்யவும் தமிழகம் வந்தனர். அதற்காக தமிழைக் கற்றனர். கி.பி. 1680-இல் பெஸ்கி என்னும் இத்தாலியத் துறவி தமிழகம் வந்து தமிழைக் கற்று அதில் புலமைப்பெற்று தன்னுடைய பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டு இலக்கிய இலக்கண நூல்களைத் தமிழில் படைத்தார். அவற்றுள் தேம்பாவணி தலைச்சிறந்த காப்பியமாகும். உரைநடை நூல்கள் பலவற்றை எழுதினார். திருக்குறள், திருவாசகம், ஆகியவற்றை இலத்தீன் மொழியில் பெயர்த்தார். சதுரகராதி போன்ற அகராதிகளை எழுதினார். தமிழ் எழுத்து சீர்த்திருத்தத்தையும் மேற்கொண்டார்.
எல்லிஸ், இராபர்ட் கால்டுவெல் ஆகியோர் ஆரியமொழிகளும் திராவிடமொழிகளும் வெவ்வேறானவை என்பதை நிலைநாட்டினர். திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி தமிழே என்று நிறுவிய பெருமை இவருக்கு உண்டு. ஜி.யு. போப் எனும் கிறித்தவ துறவி திருக்குறள், திருவாசகம், நாலடியார் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் உலகம் எங்கும் அவற்றின் பெருமையைப் பரப்பினார்.  
தமிழ்நாட்டு கிறித்தவர்களான வேதநாயகம் பிள்ளை தமிழில் முதன்முதலாக தோன்றிய புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். சர்வசமய சமரச கீர்த்தனைகளையும் பாடினார். எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை இரட்சண்ய யாத்திரிகம் என்னும் நூலை இயற்றினார். வேதநாயக சாத்திரியார் பெத்லேகம் குறவஞ்சி என்னும் நாடக நூலை இயற்றினார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்னும் கிறித்தவத் துறவி சொற் பிறப்பு ஆராய்ச்சியில் சிறந்த பேரறிஞராவார். மற்றொரு கிறித்தவத் துறவியான தனிநாயகம் அடிகளார் உலகெங்கும் சென்று தமிழைப் பரப்பினார், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவினார். உலகளவில்  தமிழுக்குப் பெருமை தேடித் தந்தவர் இவர்.
இசுலாம்
தமிழக மக்களில் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கும் இசுலாமியர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு அளப்பரியவையாகும். தமிழ்நாட்டில் அந்நியர்களின் ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டபோது, இசுலாமிய தமிழறிஞர்கள் பல புதிய இலக்கியப் படைப்புகளை தமிழில் இயற்றி தங்களின் தாய்மொழியாம் தமிழுக்கு  வளம் சேர்த்தனர். "இசுலாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி” என முழங்கி, கடந்த 4 நூற்றாண்டு காலமாக ஏறத்தாழ 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து செந்தமிழுக்குச் செழுமைச் சேர்த்துள்ளனர்.      
இசுலாமியப் புலவர்கள் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு குறித்து                                      யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய தமிழறிஞர்                                               சு. வித்தியானந்தன் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்- "எண்ணிறைந்த இசுலாமியப் புலவர்கள் மிகச் சிறந்த நூல்கள் பலவற்றைத் தமிழில் படைத்திருக்கிறார்கள். ஆனால், அவ்விலக்கியங்களைப் பற்றி பலருக்கும் தெரியாது. சீறாப்புராணம் போன்ற சில நூற்கள் தமிழ்கூறும் நல்லுலகுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனவே தவிர, தமிழ்த் தொண்டில் ஊறித் திளைத்த நூற்றுக்கணக்கான முசுலீம் புலவர்களின் படைப்புகள் இன்னமும் தக்க முறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை”.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இசுலாமியத் தமிழ்த் துறை இந்த குறையைப் பெரிதும் போக்கியுள்ளது. இசுலாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆறு பெரும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. மற்றும் முனைவர் மா.மு. உவைஸ் அவர்கள் தொகுத்தளித்த இசுலாமியத் தமிழ் நூல் விவரக் கோவை என்னும் அரிய நூலும் வெளியிடப்பட்டுள்ளது.   
இலங்கையிலும் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களை கால வரிசையில் தொகுத்துக் கூறும் சுவடியாற்றுப்படை என்ற நூலும் வெளிவந்துள்ளது.
இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள் எழுதியுள்ள இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
"இசுலாமியத் தமிழ் இலக்கியங்களுள், ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவை இசுலாமியச் சிற்றிலக்கியங்களாகவே உள்ளன.
இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் தோற்றம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு எனலாம். அந்நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் ிபல்சந்த மாலைீ என்னும் சிற்றிலக்கியமே நமக்கு முதன்முதலில் கிடைத்துள்ள இசுலாமியத் தமிழ் இலக்கியம் ஆகும். ஏறத்தாழ ஏழு நூற்றாண்டு கால எல்லைப் பரப்பினை இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பெற்றுள்ளன.
புதுவகைச் சிற்றிலக்கியங்கள், பொதுவான சிற்றிலக்கியங்கள் என்று இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களை இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். கிஸ்ஸா, நாமா, மசலா, முனாஜாத்து, படைப்போர், நொண்டி நாடகம், திருமண வாழ்த்து என்ற ஏழும் இசுலாமியர் அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்கள் ஆகும். அரபு, பாரசீகம் போன்ற மொழிகளில் புகழ்பெற்று விளங்கிய சில இலக்கிய வகைகளை முசுலிம் புலவர்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். கிஸ்ஸா, மசலா, முனாஜாத்து ஆகிய மூன்றும் அரபி மொழியிலிருந்தும், நாமா பாரசீக மொழியிலிருந்தும் தமிழை வந்தடைந்த புதுவகை இலக்கிய வடிவங்கள் ஆகும்.
படைப்போர், நொண்டி நாடகம், திருமண வாழ்த்து ஆகிய மூன்றும் முசுலிம் தமிழ்ப் புலவர்களால் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட புதிய சிற்றிலக்கிய வகைகள் ஆகும்.  முசுலிம் புலவர்கள் அறிமுகப்படுத்திய புதிய சிற்றிலக்கிய வகைகளில் பிற சமயப் புலவர்கள் பாடவில்லை என்பது எண்ணத்தக்கது.
பெரும்பாலும் சமயநெறி சார்ந்தவைகளாகவும், பேரின்பப் பொருளைப் பாடுவதாகவும் இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. சிற்றின்பப் பொருளைப் பாடுவதாக ஒரு நூலைக்கூட முசுலிம் புலவர்கள் எழுதவில்லை. இசுலாமியக் கோட்பாடுகளையும், வரலாற்றையும், பாமரர் அறியப்பாடுவதும், ஒழுக்கத்தை வலியுறுத்துவதுமே இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் உயரிய நோக்கங்களாக உள்ளன.
இசுலாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்
இசுலாமிய மெய்ஞ்ஞானம் "சூஃபித்துவம்" எனப்படுகிறது. உள்ளத்தைத் தூய்மைப்படுத்திய, மாசற்ற உயர் பண்புகளை வளர்த்து. அகத்தையும், புறத்தையும் ஒருங்கே பக்குவப்படுத்துவதற்கான வழி வகைகளைக் கூறுவதே இசுலாமிய மெய்ஞ்ஞானமாகும். தக்கலை பீர் முகம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் காசிபு, கோட்டாறு ஞானியார் சாகிபு, கல்வத்து நாயகம்,மோனகுரு சேகு மஸ்தான் போன்ற எண்ணற்ற மெய்ஞ்ஞானக் கவிஞர்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்தைத் தமிழ்த் தேனில் குழைத்துத் தந்துள்ளனர்.
ஆண்கள் மட்டுமே மெய்ஞ்ஞானிகள் என்று கருதிய நிலையை மாற்றிய பெருமை இசுலாமியப் பெண் சூஃபிகளையே சாரும். கீழக்கரை ஆசியா உம்மாள், இளையான்குடி கச்சிப்பிள்ளை அம்மையார், தென்காசி ரசூல் பீவி போன்றோர் இசுலாமிய மெய்ஞ்ஞானிகளாகத் திகழ்ந்துள்ளனர்”.
காலத்திற்கேற்ற புதுமைக் கோலம் பூண்டு புத்திலக்கியங்களைப் படைத்து தனது சீரிளமைத் திறன் குன்றாது வளர்ந்தோங்கும் வல்லமை தமிழுக்கு மட்டுமே உரியது. சமணம், பெளத்தம், சைவம், வைணவம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயங்களைச் சார்ந்த சான்றோர் செந்தமிழில் இலக்கியங்கள் படைத்துத் தமிழுக்குச் செழுமைச் சேர்த்துள்ளனர். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை. அறுவகைச் சமயங்களும் அருந்தமிழைப் போற்றி வளர்த்தன; வளர்த்து வருகின்றன.
(நன்றி - தினமணி - ரம்சான் மலர்)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.