வியாழக்கிழமை, 16 மே 2019 12:34 |
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்கள் 6-4-19 அன்று காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த் தேசியக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அனைவருக்கும் உணர்த்திய பெருமைக்குரியவர் அதைப்போல் சங்க இலக்கியங்கள், மணிமேகலை, கம்பராமாயணம், இராவணகாவியம், சீறாப்புராணம், பாவேந்தர் பாடல்கள் போன்ற இலக்கியங்கள் குறித்து இவர் ஊர்தோறும் ஆற்றிய சொற்பொழிவுகள் இவரது ஆழ்ந்த புலமையை எடுத்துக்காட்டின.
தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனராக வீற்றிருந்து இவர் ஆற்றிய அருந்தொண்டு என்றும் மறக்கமுடியாததாகும். 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பணிகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகும் உலகத்தமிழ் மாநாட்டின் மலரை மிக சிறப்பாக உருவாக்கி முதல்வர் அண்ணா உள்பட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். மாணவர் நகலக உரிமையாளரும், தமிழ்ப் போராளியுமான நா.அருணாசலம் அவர்கள் உருவாக்கிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு ஏற்று தமிழ்நாட்டில் புதிய விழிப்புணர்வை ஊட்டியவர்களின் ஒருவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட முறையில் என்மீது அவர்காட்டிய பேரன்பு என்றும் மறக்கமுடியாததாகும் அவரின் மறைவு தமிழர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும் அவரின் பிரிவினால் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - பழ. நெடுமாறன். |