பேரா. கல்விமணியை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடு! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 31 மே 2019 14:41 |
பேராசிரியர் பிரபா. கல்விமணி அவர்களை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க இயலாது. மனிதநேயமிக்க அந்த மாபெரும் மக்கள் தொண்டர் தனது வாழ்வையே ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒப்படைத்த பெருமகனாவார்.
அவர் ஆற்றிய, ஆற்றிவரும் அருந் தொண்டுகளைப் பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்குண்டு. ஆனால், அந்த அரசின் காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளராக இருக்கக்கூடிய விவேகாநந்தன் என்பவர் பேராசிரியரின் பெருமையை சற்றும் உணராது சட்டையைப் பிடித்து இழுத்தும், அவதூறாகப் பேசியும் இழிவுபடுத்தியிருக்கிறார். பழங்குடிச் சமுதாயத்தைச் சேர்ந்த மோகன் என்பவரையும், அவருடைய மகளையும் இழிவாகத் திட்டி, தாக்கிய உதவி ஆய்வாளர் மீது புகார் மனு எழுதி கொடுத்ததுதான் பேராசிரியர் செய்த பெருங் குற்றமாகக் கருதி அவரை இழிவுபடுத்தியிருக்கிறார் கசடர் ஒருவர். எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்ப் பிழைத்து வாழ வாய்ப்புண்டு. ஆனால், அறிவும், ஆற்றலும், பீடும், பெருமையுமிக்க பெரியார் ஒருவருக்கு தவறு இழைப்பவர் தப்பிப்பிழைப்பது அரிதினும் அரிதாகும் என்றார் வள்ளுவர். இந்த உண்மையை சிறிதளவுகூட அறியாது காக்கி உடையின் கண்ணியத்தைச் சீரழித்த கல்லாத கசடர் ஒருவர் பேராசிரியர் பிரபா. கல்விமணி எழுத்தாளர் இரா. முருகப்பன் ஆகியோருக்கு இழைத்த கொடுமை என்பது மன்னிக்க முடியாததாகும். நீதி நெறியும், கடமையும் தவறியதோடு, பேராசிரியர் போன்ற நாடறிந்த ஒரு மக்கள் தொண்டரையே இவ்வாறு தரக்குறைவாக நடத்திய திண்டிவனம் துணை ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் நீங்காத கடமையாகும். |