தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை பா.ச.க. அரசு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது. காங்கிரசு ஆட்சியின்போது பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் புலிகள் இயக்கம் மீது தடை விதித்தது.
அந்தத் தடையை பா.ச.க அரசு நீட்டித்திருப்பது தமிழர்களுக்கெதிராகச் செயல்படுவதில் இரு அரசுகளுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை என்பதை மெய்ப்பித்துள்ளது. 1991ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது காங்கிரசு அரசு தடை விதித்தது. பயங்கரவாத இயக்கம் என்றும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்தே தமிழீழம் அமைக்க முயலுகிறார்கள் என்றும், இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இதன்மூலம் ஊறு ஏற்படும் என்றும் குற்றச்சாட்டுகளை காங்கிரசு அரசு அடுக்கியது. இந்தத் தடைக்கெதிராக நான் வழக்குத் தொடுத்தேன். விடுதலைப்புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நூல்கள், சிறு வெளியீடுகள், கொள்கை அறிவிப்புகள் ஆகிய எல்லாவற்றையும் சிறப்பு நீதிமன்றத்தில் அளித்தேன். இவற்றில் எதிலாவது இந்தியாவின் எந்தப் பகுதியையும் இணைத்து தமிழீழம் என புலிகள் அறிவித்திருக்கிறார்களா? என்ற வினாவை எனது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் நீதிமன்றத்தில் எழுப்பினார். அரசு தரப்பில் அதற்கு எத்தகைய பதிலையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆனாலும், இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்ய வியப்பான காரணத்தைக் கூறியது. இந்த தடைக்கு எதிராக புலிகள் மட்டுமே வழக்குத் தொடுக்க முடியுமே தவிர, நெடுமாறன் வழக்குத் தொடுக்க முடியாது என்று சொல்லி எனது மனுவை ஏற்க மறுத்தது. பின்னர் சகோதரர் வைகோ தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தத் தடையை நீட்டிப்பதற்கு பா.ச.க. அரசின் உள்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்... கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. "இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு அந்நாட்டு இராணுவத்திடம் தோல்வியடைந்தது. ஆனாலும், அவர்கள் தமிழீழ கோரிக்கையைக் கைவிடவில்லை. தங்கள் இலக்கை அடைவதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் நிதி திரட்டியும் வருகின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இணையதளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, விடுதலைப்புலிகள் தோல்விக்கு இந்திய அரசுதான் காரணம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் உள் நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் ஆதரவைத் திரட்ட முயன்று வருகின்றனர். மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பு இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அந்த அமைப்பினர் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளது. 2009ஆம் ஆண்டில் இலங்கையில் போர் முடிவுற்றபோது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபக்சே அறிவித்தார். இந்திய தலைமையமைச்சராக மோடி அவர்கள் பதவியேற்றபோது, அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இராசபக்சே கலந்துகொண்டார். கடந்த 5 ஆண்டு காலத்தில் இலங்கையிலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலோ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட்டதற்கோ அல்லது வன்முறையில் ஈடுபட்டதற்கோ ஒரு சிறு ஆதாரத்தைக் கூட இந்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டவில்லை. இந்திய மக்களின் பாதுகாப்புக்கும், இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருப்பது ஓநாய் - ஆடு கதையை நினைவுப்படுத்துகிறது. ஒரு ஓடையின் மேற்புறத்தில் ஓநாயும், கீழ்ப்புறத்தில் ஆடும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன.ஓநாய் குடித்ததுபோக, எஞ்சி வழியும் நீரையே ஆடு குடிக்க முடியும். ஆனாலும், "நான் குடிக்கவிருந்த தண்ணீரை அசுத்தப்படுத்துகிறாய்" என குற்றம்சாட்டி, ஆட்டின் மீது பாய்ந்து கடித்துக் குதறிய ஓநாயைப் போல இந்திய அரசு நடந்துகொள்கிறது. ஈழத் தமிழர்கள் அனைவரின் ஒருமனதான ஆதரவைப் பெற்ற ஒரே இயக்கம் விடுதலைப்புலிகளின் இயக்கமே ஆகும். 1990களில் இருந்து 2009 வரை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகளின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களே தமிழர் பகுதியில் அமைந்துள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வென்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஈழத் தமிழ் மக்களின் ஆதரவைப்பெற்ற இயக்கம் என்பதை இந்தத் தேர்தல்கள் உலகிற்கு எடுத்துக்காட்டின. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் அந்த நாட்டின் பூர்வீகமான குடிகளாவார்கள். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகள் போன்றவற்றின் மூலம் நெருக்கமான உறவு பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும். இந்த உறவு இயற்கை வழிபட்ட உறவாகும். இவ்வாறு இரு நாட்டுத் தமிழர்களும் உறவு கொண்டிருப்பதே குற்றமாகும் என்கிற முறையில் இந்திய அரசு கூறுவது அடாத செயலாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளம் ஒரே மாநிலமாக இருந்தது. 1947ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் எனப் பிரிந்து இருவேறு நாடுகளான போது கிழக்கு வங்கம் பாகிஸ்தான் உடனும், மேற்குவங்கம் இந்தியாவுடனும் இணைந்தன. கிழக்குவங்க மக்கள் மீது பாகிஸ்தான் அரசு உருது மொழியைத் திணித்தபோது அந்த மக்கள் கொதித்தெழுந்துப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தைப் பாகிஸ்தான் இராணுவம் மிகக் கொடூரமான முறையில் அடக்க முனைந்தது. 50இலட்சத்திற்கும் மேற்பட்ட வங்க முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது இந்தியா முழுவதிலுமிருந்த அரசியல் கட்சிகள் வங்க மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் போராடின. இந்திய இராணுவத்தை உடனே கிழக்கு வங்கத்திற்கு அனுப்புமாறு அன்றைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்களை வற்புறுத்தின. அப்போது பா.ச.க.வின் முன்னோடி கட்சியாக விளங்கிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்தை அனுப்புமாறு வற்புறுத்தி தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்களின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது என்பதையும், அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியப் படை கிழக்குவங்கத்திற்கு அனுப்பப்பட்டு வங்கதேசம் சுதந்திர நாடாவதற்கு வழிகோலப்பட்டது என்பதை இன்றைய இந்திய அரசு உணரவேண்டும். கிழக்கு வங்கம், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடானால் இந்தியாவில் உள்ள மேற்கு வங்கமும் பிரிந்து கிழக்கு வங்கத்துடன் இணைந்துவிடும் என்ற ஐயம் வாஜ்பாய் உட்பட யாருக்கும் ஏற்படவில்லை. ஆனால், வங்காளி மீது வராத ஐயம் தமிழன் மீது மட்டும் வருவது ஏன்? ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருவங்கமும் ஒன்றாக இருந்தவை. ஆனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாடும், இலங்கையில் உள்ள தமிழீழமும் எந்தக் கால கட்டத்திலும் இணைந்து ஒரே நாடாக இருக்கவில்லை. மொழியாலும், பண்பாட்டாலும் நாங்கள் இணைந்தவர்களே தவிர, நாட்டால் வேறுபட்டவர்கள். ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பாதிக்கும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஏற்படும் அவலம் ஈழத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கும். இது இயற்கையின் நியதியாகும். ஆனால், இதை முந்திய காங்கிரசு அரசு கொஞ்சமும் உணராமல் இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பி 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது. அதுமட்டுமல்ல, தொடர்ந்து சிங்கள இராணுவத்திற்குப் படைப் பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து உதவியது. இறுதிக் கட்டப் போரில் இந்திய இராணுவத் தளபதிகள் சிங்கள இராணுவத்திற்கு வியூகங்கள் வகுத்துக்கொடுத்தனர். இந்தியக் கடற் படையை இலங்கைச் சுற்றிலும் நிறுத்தி புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றிவந்த கப்பல்களை மூழ்கடித்தனர். இலங்கை இராணுவம் அப்பாவித் தமிழர்கள் மீது ஐ.நா. தடை செய்த ஆயுதங்களை ஏவியும், நச்சுக் குண்டுகளை வீசியும் ஈவுஇரக்கமற்றப் படுகொலையில் ஈடுபட்டபோது, இந்தியக் கடற்படையும் அந்த இனஅழிப்பில் பங்கு கொண்டது. இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நடுவண் அரசின் உள்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடமிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு முற்படவில்லை. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பகை நாடுகள் என்பதை அனைவரும் அறிவார்கள். சிங்கள அரசுதான் இந்தியாவின் இந்தப் பகை நாடுகளுடன் அன்று முதல் இன்றுவரை உறவாடி வருகிறது. விடுதலைப்புலிகள் விரும்பியிருந்தால் சீனாவிடமோ, பாகிஸ் தானிடமோ உதவிகளைப் பெற்றிருக்க முடியும். அந்த நாடுகளும் உடனடியாக முன்வந்து உதவியிருக்கும். விடுதலைப்புலிகள் இந்தியாவின் பகை நாடு எதனிடமிருந்தாவது எத்தகைய உதவிகளையும் பெற்றார்கள் என்பதை இந்திய அரசால் ஆதாரப் பூர்வமாக எடுத்துக்காட்ட முடியுமா? இலங்கையின் ஆட்சித் தலைவராக செயவர்த்தனா இருந்தபோது, பேச்சுவார்த்தையின் மூலம் தமிழர் பிரச்சனையை தீர்க்க அன்றைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி கொடுத்த அழுத்தத்தை முறியடிப்பதற்காக திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால், அமெரிக்க அரசு அதற்குத் தயங்கியது. திரிகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையானவர்களாக வாழ்கிறார்கள். அது தமிழர் பகுதியில் அமைந்திருக்கிறது என்பதால் அமெரிக்கா தயங்கியது. விடுதலைப் புலிகள் திரிகோணமலை தங்கள் மண் என்பதற்காக மட்டும் போராடவில்லை. அங்கு அமெரிக்கக் கடற்படைத் தளம் அமையுமானால் தமிழீழத்திற்கும் மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்காகவும் அவர்கள் போராடினார்கள். அதன் காரணமாக அங்கு அமெரிக்கக் கடற்படைத் தளம் அமையவில்லை. இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் தென்கோடியில் உள்ள அம்பன்தொட்டாவில் சீன கடற்படைத் தளம் அமைக்க இடம்கொடுத்த சிங்கள அரசை தனது நெருங்கிய நண்பனாக இந்தியா கருதுகிறது. ஆனால், இலங்கையில் எந்த நாட்டின் அந்நிய தளமும் அமைவது என்பது இந்தியாவுக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பதனால் அதை எதிர்த்துப் போராடிய விடுதலைப்புலிகளை தனது எதிரிகளாக இந்தியா கருதுகிறது. உண்மையான நண்பன் யார்? பகைவர் யார்? என்பதைப் புரிந்துகொள்ளாமை தனது அழிவுக்குத் தானே வழி வகுத்ததாகிவிடும். விடுதலைப்புலிகளைத் தனது பகைவர்களாகக் காங்கிரசு அரசும், பா.ச.க. அரசும் கருதுவது என்பது பன்னெடுங்காலமாகத் தொடரும் பகை உணர்வின் காரணமாகும். விடுதலைப்புலிகள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை ஒழிப்பதற்கு இந்திய அரசு வரிந்து கட்டுகிறது. ஏனென்றால் தொல்காப்பியர் காலம் முதல் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் அழிப்பதற்கு இடைவிடாது தொடர்ந்து வடவர்கள் செய்துவரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இதுவாகும். கடந்த காலத்திலும் இம்முயற்சி தோற்றது. தமிழ் தனது சீரிளமைத் திறன் குன்றாது மேலும் மேலும் வளர்ந்தோங்கி உலகத்தின் செம்மொழிகளில் சிறந்ததொன்றாகத் திகழ்கிறது. அழிக்க முயன்ற வடமொழி தானே அழிந்து இருக்கும் இடம் தெரியாமல் ஆழ குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. புதைக்குழியில் கிடந்தாலும் இன்னமும் தமிழுக்கு, தமிழர்களுக்கெதிராகப் பகை உணர்வைக் கக்கிக்கொண்டேயிருக்கிறது. அதன் விளைவுதான் புலிகள் மீதான தடையாகும். |