நாடாளுமன்றத் தேர்தல் முறை தோல்வி தேர்தல் முறையில் மாற்றம் தேவை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 ஜூன் 2019 16:07

பிரிட்டனைப் பின்பற்றி நமது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சனநாயக முறை அப்பட்டமாகப் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை இப்போது நடைபெற்ற தேர்தலிலும், இதற்கு முன்னர் நடைபெற்ற பல தேர்தல்களிலும் நடைபெற்ற பல முறைகேடுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

கள்ள வாக்குகள் போடுவது, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது போன்ற சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பெருகிய காரணத்தினால் வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி முறை மாற்றப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ((Electronic Voting Machine) கொண்டுவரப்பட்டது. ஆனால், "கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா?” என்ற பழமொழிக்கேற்ப சனநாயகத்திற்கு எதிரான வேறு பல முறைகேடுகள் கையாளப்பட்டன.
முதற்கோணல் முற்றும் கோணல் என்பது ஆன்றோர் வாக்காகும். மக்களுக்குத் தொண்டு புரிய வந்துள்ளதாக கூறி பல்வேறு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 7928 வேட்பாளர்களில் 1500பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, போட்டியிட்ட வேட்பாளர்களில் 5இல் ஒருவர் குற்றவழக்கை எதிர்கொள்பவராக இருந்தார். அதிலும், பாலியல் வல்லுறவு, கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிதல் போன்ற கொடிய குற்ற வழக்குகளைச் சந்திப்பவர்கள் 1070பேர் என்பது நம்மை அதிரவைக்கிறது. பஞ்சமா பாதகங்கள் என நமது அறநூல்கள் சுட்டிக்காட்டியுள்ள கொடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களில் பலர் வெற்றிப் பெற்று நம்மை ஆளுபவர்களாக நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளதை நம்மால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30% பேர் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் இவர்களில் 14% பேர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற மிக கடுமையான குற்ற வழக்குகள் உள்ளது. 2014-ஆம் ஆண்டில் இத்தொகை மேலும் உயர்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34% பேர் மீது குற்றவழக்குகளும் 21% பேர் மீது  கடும் குற்ற வழக்குகளும் சுமத்தப்பட்டு இருந்தன.
2019-நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்களில் 43% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட 539 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 233 பேர் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் ஆவார்கள்.
இவர்களில் பா.ச.க.வினர் 116 பேர் (39%), காங்கிரசுக்காரர்கள் 29 பேர் (57%), மீதும், தி.மு.க. வினர் 10 பேர் (43%) மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல கட்சியினர் மீதும் உள்ளன. இவர்களில் 32பேர் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேர்தலுக்குத் தேர்தல் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்ற வழக்குகள் உள்ளவர்களை எந்தக் கட்சியும் ஒதுக்கவில்லை. மாறாக, அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கொடிய குற்ற வழக்குப் பின்னணியில் உள்ளவர்களை இப்படி எல்லாக் கட்சிகளும் துணிந்து நிறுத்துவதற்கு என்ன காரணம்? எதைச் செய்தாவது, எப்படியாவது வெற்றியை இத்தகைய வேட்பாளர்கள் தங்களுக்குப் பெற்றுக் கொடுப்பார்கள் என கட்சித் தலைவர்கள் துணிந்து முடிவு செய்கிறார்கள். மேலும், இத்தகைய குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்ற காரணத்திற்காக மக்களும் அவர்களை ஒதுக்குவதில்லை. ஆக, கட்சித் தலைவர்களும், வாக்காளர்களும் குற்றப் பின்னணியைப் பொருட்படுத்துவதில்லை என்பது அதிர வைக்கிறது.
நமது நாட்டில் சாதி, சமய அடிப்படையில் பல கட்சிகள் இயங்குகின்றன. பல மாநிலங்களில்  இத்தகைய கட்சிகள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன. இந்தக் கட்சிகளில் உள்கட்சி சனநாயகம் என்பது அறவே கிடையாது. அதைபோல சாதிக்கு எதிரான கொள்கை கொண்டதாகத் தங்களை அறிவித்துக்கொண்ட கட்சிகளும், உள்கட்சி சனநாயகத்தை அடியாடு ஒழித்துக் குடும்பக் கட்சிகளாகிவிட்டன.  
கொள்கை, கோட்பாடு, வேலைத்திட்டம் ஏதுவுமில்லாமல் பதவிகளைக் கைப்பற்றுவதே நோக்கமாகக் கொண்ட மேலே கண்ட கட்சிகள் யாவும்                    ஊழல் மலிந்தக் கட்சிகளாக நாளடைவில் உருப்பெற்றன. இக்கட்சிகள் தங்களின் தேர்தல் வெற்றிக்குப் பணத்தை  மட்டுமே நம்பியிருக்கின்றன. தங்கள் ஆட்சியை ஊழல் ஆட்சியாக மாற்றியதோடு இவர்கள் நிற்கவில்லை. தங்களுக்கு வாக்களிப்பதற்காக மக்களுக்கு இலவய பொருட்கள், பணம் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களையும் ஊழலுக்கு உடந்தையாக்கி  விட்டார்கள்.  சுருங்கக் கூறின் பணத்தை வைத்துப் பதவி, பதவியை வைத்துப் பணம் என்ற நச்சு வட்டத்திற்குள் மக்களையும், நாட்டையும் தங்களின் கட்சிகளையும் கொண்டுவந்துவிட்டார்கள்.
தொண்டு, துன்பம், தியாகம் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ள தூய்மையான வேட்பாளர்களை பணம், சாதி ஆகிய அடிப்படையில் கட்சித் தலைவர்களே புறக்கணிக்கிறார்கள். மக்களும் தெரிந்தோ, தெரியாமலோ அதற்குத் துணை நிற்கிறார்கள். வேட்பாளரின் தகுதியைவிட அவரின் பணமும், அவர் சார்ந்துள்ள சாதியுமே அவரை வேட்பாளராக்குகின்றன. இந்த நிலைமை தேர்தலுக்குத் தேர்தல் வளர்ந்து பெருகி சனநாயக மரத்தை அரித்துவிட்டன. பணநாயக நச்சு மரம்  வளர்ந்தோங்கிவிட்டது.   
தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் தேர்தலில் இதுவரை 5,000கோடி ரூபாய்க்கு அதிகமான பணமும், தங்கமும், பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களை விலைக்கு வாங்க வேட்பாளர்கள் செலவு செய்த தொகையில், பறிமுதல் செய்யப்பட்ட தொகை 5 சதவீதத்திற்கும் குறைவானதேயாகும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது என்பது நம்மைத் தலைகுனிய வைத்துள்ளது. எனவேதான், இந்தியாவின் பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமான பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோடீசுவரர்கள்
2019-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றி பெற்ற மொத்தம் உள்ள 539 உறுப்பினர்களின் 475 பேர் கோடீசுவரர்கள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ச.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 303  நாடாளுமன்ற உறுப்பினர்களில் 265பேர் (88%) கோடீசுவரர்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 43 பேர் (96%) கோடீசுவரர்கள் ஆவார்கள். தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 பேர் கோடீசுவரர்கள் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரும் கோடீசுவரரே.
2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் 2009-ல் இந்த எண்ணிக்கை 58% ஆகவும் 2014-ல் 82% ஆகவும் 2019-ஆவது தேர்தலில் 88.1% ஆகவும் உயர்ந்துள்ளது.
பணம் படைத்தவர்கள் மட்டுமே இனி தேர்தலில் போட்டியிடவும் வெற்றி பெறவும் முடியும் என்பதை மேலே உள்ள புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டி மெய்ப்பிக்கின்றன.
நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை நாடளுமன்றத்திற்கு 16 தேர்தல்கள் நடந்து இப்போது 17-ஆவது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஏறத்தாழ 81கோடி 45 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடக இந்தியா திகழ்கிறது. ஆனால் ஜனநாயகம் நாளுக்கு நாள் தேய்ந்து பணநாயகம் மேலோங்கி வருவதைத்தான் மேலே கண்ட புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு பணத்தை அள்ளிவீசி வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றிப்பெறக்கூடிய நிலை உருவாகியிருப்பது வெட்க கேடானது மட்டுமல்ல, ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிவிட்டது. தேர்தலுக்கு தேர்தல் பணநாயகத்தின் கையோங்கி வருவது இறுதியில் சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்துவிடும்.
தேர்தலில் இத்தகைய முறைகேடுகளை அடியோடு களைந்தெறிவதற்குப் பதில் அனைத்துக் கட்சிகளுமே இத்தகைய முறைகேடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊக்குவிக்கின்றன. தேர்தல் ஆணையம், காவல்துறை, உளவு  நிறுவனங்கள், சிவில் நிர்வாகம், நீதிமன்றங்கள் உட்பட அதிகார அமைப்புகளை முறையற்ற வகையில் கைப்பற்றி எவரும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் தடுப்பதற்கான சட்டப்பூர்வமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அவ்வாறு செய்திருந்தால் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படும்போது மக்கள் சட்டப்படியான உரிமைகளை நிலை நாட்ட முடியும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் உரிமைகளோடும் வாழ முடியும். ஆட்சி மாற்றம் என்பது நாட்டில் உள்ள எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டாமல் நடைபெற வேண்டும். அவசரகால நிலைக்குப் பிறகு அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா ஆணையம் போன்ற விசாரணை அமைப்புகள் அளித்தப் பரிந்துரைகள் எதுவும் சட்டமாக்கப்படவில்லை. இதன் விளைவாக ஆட்சியின் லகானை கைப்பற்றுபவர்கள் மேற்கண்ட அமைப்புகளையும் ஆட்டிப்படைக்க முற்படுகிறார்கள். வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டின் நிர்வாகமும், மக்களும் பாதிக்கப்படாத வகையில் சுதந்திரமான செயல்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் வழி செய்யப்படவில்லை. நிர்வாக அமைப்புகளை சீர்குலைத்ததற்கு காங்கிரசுக் கட்சி மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அனைத்துக் கட்சிகளுமே காரணமாகும். நீதிமன்றங்கள் தலையிட்டு முறைகேடுகளைக் கண்டிக்கின்றன. ஆனாலும், முறைகேடுகள் தொடர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மிக்க அதிகார அமைப்புகளே சீர்குலைக்கப்பட்டுவிட்டன.
பொருளாதாரத் திட்டங்கள், சமூக நலன் திட்டங்கள்  போன்றவை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறுவதோடு சரி. ஆனால், அவற்றை மட்டும் நம்பி அரசியல் கட்சிகள் செயல்படவில்லை. பணத்தையும், குண்டாத்தனத்தையும், இழிவான முறைகேடுகளையும் மட்டுமே வெற்றி பெறுவதற்காகக் கட்சிகள் நம்பியிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் பணம், பொய்ச் செய்திகள், சாதி-மதவெறி உணர்வுகளைத் தூண்டுதல், வெறுப்பு உணர்வுகளைப் பரப்புதல் ஆகியவை அனைத்து கட்சியினராலும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவற்றைத் தடுத்து நிறுத்த வலிமையற்றதாக தேர்தல் ஆணையம் திணறியது. தேர்தல் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது சட்டமாகும் ஆனாலும் உச்சநீதிமன்றம் 6-முறை தலையிட வேண்டியதாயிற்று. வெறுப்புணர்வை பரப்பும் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பரிதாபமாக முறையிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையமைச்சர் மோடியைக் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி ஆணை பிறப்பித்த அவலமும் நேர்ந்தது. இதற்கு பிறகு தேர்தல் ஆணையம் சில தலைவர்களின் பிரச்சாரத்திற்கு சில நாட்கள் தடைவிதிக்க முடிந்ததே தவிர, வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை. அதற்கு தேவையான அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை.
2014ஆம் ஆண்டிலிருந்து 9 குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது. தேர்தல் ஒழுங்கீனங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த அளவு 5ஆண்டு சிறை தண்டனை, தவறான மனுக்களை அளிப்பவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு, ஊழல் மற்றும் கடும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தகுதியற்றவர்களாக ஆக்கும் அதிகாரம் போன்றவைக் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக இக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் அளித்த 37 பரிந்துரைகளையும் நிறைவேற்றாமல் மோடியின் அரசு கடந்த 5 ஆண்டு காலமாக  கிடப்பில்  போட்டுவிட்டது.
கட்சித் தாவல் தடைச்சட்டம், கட்சியின் கொறடா பிறப்பிக்கும் ஆணை கட்சியின் உயர்மன்ற குழுக்களின் தீர்மானங்கள் போன்றவை இத்தேர்தலில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களால் வெளிப்படையாக மீறப்பட்டன. ஒரு கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் மறுக்கட்சிக்குத் தாவுவது பெருகியது. பணம், பதவி ஆசைகளைக் காட்டி தேர்தல் வேளையில் மாற்றுக்கட்சியில் இருப்பவரை தமது கட்சிக்கு இழுக்கும் போக்கு அனைத்து கட்சிகளாலும் கையாளப்பட்டது.
புல்வாமா தாக்குதலையும் அதற்கு எதிராக பாலக்கோடு பதிலடியையும் முன் வைத்து இந்து தேசியவாதவெறியைக் கிளப்பியதோடு, பாகிஸ்தானையும் உள்நாட்டு பயங்கரவாதிகளையும் எதிர்கொள்ளும் துணிவும் திறமையும் மோடிக்கு மட்டுமே உண்டு என்ற தோற்றத்தைத் திட்டமிட்டு பா.ச.க பரப்பியது. இதற்கு சரியான பதிலடியைக் கொடுக்க காங்கிரசும் மற்ற கட்சிகளும் தவறின. பா.ச.க விரித்த வலையில் காங்கிரஸ் விழுந்தது. பா.ச.க-வின் தீவிரவாத இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு மிதவாத இந்துத்துவாவை காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் கையில் எடுத்தன. அதன் விளைவாக காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. மற்றும் பல அகில இந்திய கட்சிகளும் அடியோடு சீர்குலைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலக் கட்சிகளும் அவ்வாறே தோல்வியைச் சந்தித்துள்ளன.
கூட்டாட்சி
பா.ச.க முன்வைத்த ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்னும் குறுகிய தேசியவாத வெறிப்போக்குக்கு மாற்றாக பல மொழிவழித் தேசிய இனங்களும், பல்வேறு பண்பாடுகளும், பல மதங்களும் கொண்ட நாடே இந்தியா என்பதையும், பல தேசிய இனங்கள் இணைந்து அமைத்துள்ள கூட்டாட்சி நாடாக இந்தியா விளங்க வேண்டும் என்பதையும், இப்போதுள்ள கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு (Unitary Constitution)) மாற்றாக கூட்டாட்சி அரசியல் அமைப்புச் சட்டம் (Federal constitution)உருவாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு முழுமையான தன்னாட்சி அதிகாரங்களும், மத்தியில் வெளியுறவு, இராணுவம், நாணயம் வெளியிடுதல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் மாற்றுத் திட்டம் ஒன்றினை எதிர்க்கட்சிகள் கூட்டாக அளித்திருக்கவேண்டும்.
ஆனால், அதை செய்ய எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவறிவிட்டன. இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. மொழிவழியாகவும், மதரீதியாகவும், சிறுபான்மையினராக உள்ளவர்களின் வாக்குகள் தேவைப்படாமலேயே தான் வெற்றிபெற முடியும் என்பதை பா.ச.க. எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது, இந்தி  பேசாத மாநிலங்களில் (கர்நாடகம் தவிர) பா.ச.க. வெற்றிபெற முடியவில்லை. அதைபோல முஸ்லீம்கள், கிருத்தவர்கள் ஆகியோரின் வாக்குகளும் பா.ச.க.விற்குக் கிடைக்கவில்லை. ஆனால், இந்திமொழிப் பேசும் மாநிலங்களில் 180 இடங்களிலும் மற்ற மாநிலங்களில் 123 இடங்களிலும் அடைந்த வெற்றியின் மூலம் அக்கட்சி ஆட்சியை கைப்பற்ற முடிந்திருக்கிறது. இதன் விளைவாக இந்தியா ஒரே நாடு என்ற தத்துவத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. இந்தி அல்லாத மொழிபேசுகிற மக்களும், சிறுபான்மை சமுதாய மக்களும் முற்றிலுமாக அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். தனியொரு தலைவராக மோடி பேருருவம் எடுத்துள்ளார். அவரை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பெருவடிவம் கொண்டுள்ளது.
பெற்ற வாக்குகளுக்கேற்ப நாடாளுமன்றத்தில் இடங்கள்
அதைபோலவே தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகாலமாக இந்தித் திணிப்பு, காவிரி, பெரியாற்றுப் பிரச்சனைகள், சல்லிக்கட்டு, நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக, 2009ஆம் ஆண்டில் இலங்கையில் 11/2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்ததைத் தடுக்க அப்போதிருந்த மத்திய காங்கிரசு ஆட்சியும், மாநில தி.மு.க. ஆட்சியுமே தவறிவிட்டன எனக்  கொதித்த மக்கள் அக்கட்சிகளை தோற்கடித்தனர். ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரசு கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளதற்கு என்ன காரணம்? என்பதை உணர்வுள்ள தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.  
இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நாடாளுமன்றத்திற்கு 16 முறை தேர்தல்கள் நடைபெற்று இப்போது 17ஆவது முறையாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.  உலகத்திலேயே மிக அதிகமான வாக்காளர்களை கொண்ட சனநாயகப் பரிசோதனைக் களமாக இந்தியா திகழ்கிறது. இந்தப் பரிசோதனைக் களம் படுதோல்வியடைந்துவிட்டது. தேர்தல் முறை கேடுகளின் மூலம் கட்சிகள் வெற்றி பெறுகின்றன. உண்மையில் சனநாயகத்தையும், தங்களது உரிமைகளையும் தேர்தலில் வாக்களிப்பதின் மூலம் நிலைநிறுத்திக் காக்கவேண்டிய மக்கள் கடமை தவறியுள்ளனர். முறைகேடான தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திருக்கிறது. தங்களைத் தாங்களே ஆள்வதற்கான உரிமையை மக்கள் முறைகேடுகள் என்னும் பலிபீடத்தில் இழக்கிறார்கள். இதன் விளைவாக சர்வாதிகாரம் தலைதூக்கும். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாட்டிலும் சனநாயகம் இல்லை. ஏதாவது ஒருவகையான சர்வாதிகாரம் அந்நாடுகளில் கோலோச்சுகிறது. நாமும் அந்தப் பாதையில் விரைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
கொள்கை கோட்பாடு ஆகியவற்றை முன் வைத்து தேர்தலில் இனி எந்த கட்சியும் போட்டியிட முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. மேலும் பணம் படைத்தவர்கள் மட்டுமே அல்லது பெரும் தொழில் அதிபர்களின் தயவை பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலைமை உருவாகிவிட்டது. இதற்கு மாற்றாக பெரும் தொழில் அதிபர்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் நமது நாட்டின் இயற்கை வளங்களையும் மக்களின் உழைக்கும் சக்தியையும் தங்கு தடையின்றி சுரண்ட முடியும். இவற்றைத் தடுக்கும் சக்தி மக்களுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
தங்களை ஆளவேண்டியது யார் என்பதை முடிவு செய்வதற்காகப் பொதுமக்களுக்கு இருந்த உரிமையைப் பணம் பறித்துவிட்டது. இயற்கை வளங்களைக் காப்பதற்காக, மனித உரிமைகளுக்காக உண்மையில் போராடும் மக்களின் தொண்டர்கள் இனி ஒருபோதும் தேர்தல்களில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிவிட்டது. மக்களும் வெறும் வாக்காளர்களாக மட்டுமே இருக்கலாம் அவர்கள் ஒருபோதும் வேட்பாளராக மாறமுடியாது. அவர்களை அவ்விதம் சிந்திக்க விட கூடாது என்பதில் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
அதிகாரப் பதவிகளில் அமர்ந்து இருப்பவர்களின் ஊழல் பிம்பங்களை மறைத்து அவர்களைத் திறமையானவர்களாக ஊதி ஊதிப் பெருக்கிக் காட்டும் ஊடக எசமானர்களும் விலை போய்விட்டனர். வாக்காளருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஊடகங்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. இனி ஒருபோதும் மீளமுடியாத சரிவை நோக்கி நமது நாட்டின் ஜனநாயகம் விரைந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுப்பது எப்படி? இதற்கு மாற்று என்ன?
விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
பிரிட்டனிலும் அப்பேரரசின் குடியேற்ற நாடுகளாக இருந்து பிறகு விடுதலைப் பெற்ற நாடுகளில் மட்டுமே நாடாளுமன்ற சனநாயக முறை பின்பற்றப்படுகிறது. தங்களின் சனநாயகக் கடமையை உணர்ந்து மக்களும், கட்சிகளும் பொறுப்புணர்வோடு செயல்படும் நாடுகளில் நாடாளுமன்ற சனநாயக முறை வெற்றி பெறுகிறது.
உலகில் உள்ள ஏனைய நாடுகளில் பெரும்பான்மையானவற்றில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே பின்பற்றப்படுகிறது. தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு விகிதத்திற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் அக்கட்சிகளுக்கு இடங்கள் கிடைக்கும். அந்த இடங்களுக்கான பிரதிநிதிகளை அந்தந்தக் கட்சியே தேர்ந்தெடுத்து அனுப்பும். அதாவது தேர்தலில் 30% வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் ஒரு கட்சிக்கு நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உள்ள இடங்களில் 30% இடங்கள் ஒதுக்கப்படும். 10% வாக்குகளை மட்டுமே ஒரு கட்சி பெறுமானால் அதற்கு 10% இடங்கள் கிடைக்கும். இதன்மூலம் வாக்காளர்களின் அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் இடம் பெறுவார்கள். ஆனால், இப்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக முறையில் நடைபெறும் தேர்தலின்படி 30% முதல் 40% வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே பெறும் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்கிறது.
2019-ஆம் ஆண்டு தேர்தலில் பா.ச.க. தனித்து 303 இடங்களில் வென்றது. பதிவான வாக்குகளின் (37.4%) வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் அது பெற்றுள்ள வாக்குகளின் விகிதாச்சாரப்படி அதற்கு 204 இடங்களில் மட்டுமே உரியதாகும். ஆனால், அதற்கு மேலாக 99 இடங்களில் பா.ச.க. பெற்றுள்ளது. தி.மு.க. பதிவான வாக்குகளில் 37.78% வாக்குகளை பெற்று 23 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், அது பெற்றுள்ள வாக்குகளின் விகிதாச்சாரப்படி 13 இடங்கள் மட்டுமே பெற்றிருக்கவேண்டும். ஆனால் மேலும் அது 10 இடங்களைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க. பதிவான வாக்குகளில் 18.5% வாக்குகளை பெற்று ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. அக்கட்சி பெற்ற வாக்கு விகிதாச்சாரத்தின்படி அதற்கு 7 இடங்கள் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், 6 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது.  இதைபோலவே தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் விகிதாச்சாரப்படி காங்கிரசு 5 இடங்களையும், பா.ம.க., அ.ம.மு.க., தலா 2 இடங்களையும், பா.ச.க., தே.மு.தி.க., இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி, இந்திய  மார்க்சிஸ்ட் கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு இடங்களைப் பெற்றிருக்கவேண்டும். ஆனால், ஆனால், இவற்றில் சில கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீகிதத்திற்கும், அவர்கள் பெற்றுள்ள இடங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. நமது நாடாளுமன்ற தேர்தல் முறையில் உள்ள பெருங்குறைபாடு இதுதான்.
ஆனால், விகிதாச்சார தேர்தல் முறையில் இத்தகைய குறைகள் இல்லை. பெரும்பாலான நாடுகளில் கட்சிகளுக்கு மட்டுமே வாக்குகள் அளிக்கப்படும் முறை பின்பற்றப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாகவே ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்களின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொடுத்து விடவேண்டும். தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைக்கும் வாக்கு சதவிதிதத்திற்கு ஏற்ற முறையில் அந்தப் பட்டியலில் வரிசைப்படி உள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நெதர்லாந்து போன்ற நாடுகளில் வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் வாக்களிக்கும் முறை உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தேசிய சட்டமன்றத்திற்கும் மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தேர்தல் முறையின் மூலம் கீழ்க்கண்ட நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
1. வாக்காளர்கள் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் கிடைக்கிறது.
2. அனைத்துக் கட்சிகளும் தாங்கள் பெறும் வாக்குகளுக்கேற்ப நாடாளுமன்றத்தில் இடம் பெறுகின்றன.
உலகில் 80%க்கும் மேற்பட்ட நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும், வேட்பாளர்கள் பட்டியலை முன்னதாகவே அறிவிக்கும் முறையும்  நடைமுறையில் உள்ளன.
இத்தேர்தல் முறையில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றை  விரிவாக இங்கு குறிப்பிட இடமில்லை. அதே  வேளையில் இந்த முறையிலும் குறைகள் இல்லாமல் இல்லை. குறிப்பாக, நம்முடைய நாட்டில்  உள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை குடும்ப அரசியல், வாரிசு அரசியல் ஆகியவற்றால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நாடாளு மன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் கட்சித் தலைவரின் சர்வாதிகாரமே முதல் நிலை வகிக்கும். சனநாயக ரீதியில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வழியில்லை. இதன்மூலம் கட்சித் தலைவர் அல்லது அவரது குடும்பத்தினருக்குக் கட்டுப்பட்டவர்களும், மக்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்களும் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அபாயம் உண்டு.  
கட்சிகளில் உண்மையான சனநாயகம் கடைப்பிடிக்கப் பட்டால்தான் விகிதாச்சார தேர்தல் முறையும் நமது நாட்டில் வெற்றிபெற முடியும்.
(தோழர்கள் இக்கட்டுரையை சிறு வெளியீடாக அச்சிட்டு மக்களுக்கு வழங்க வேண்டுகிறோம். விரும்புகிறவர்களுக்கு இக்கட்டுரை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.)
தொடர்புக்கு... மின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.