முள்ளிவாய்க்கால் பேரழிவு- மறக்குமோ தமிழர் நெஞ்சம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 ஜூலை 2019 15:15

2009 ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் கவனம் அதில் திரும்பியிருந்தது.

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்பது தெரியவந்தவுடன் முள்ளிவாய்க்கால் மக்கள் மீது ஈவு இரக்கமற்ற படுகொலையை சிங்கள இராணுவம் தொடங்கியது. அன்று, இரவு முழுவதும் மட்டுமல்ல, தொடர்ந்து  மூன்று நாட்களுக்குக் கொடூரமான வகையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களும் தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத துயரம் ததும்பிய நாட்களாகும். தமிழர்களின் அவலக் குரலுக்கு உலக நாடுகள் எதுவும் செவி சாய்க்கவில்லை. இந்தத் தமிழினப் படுகொலைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகிய அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகளும் துணை நின்றன.
உலக வரலாற்றில் இது போன்ற கொடுமை இதுவரை நடைபெற்ற தில்லை. முள்ளி வாய்க்காலில் உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் 1,40,000க்கும் மேற்பட்ட மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்னமும் சிவந்து கிடக்கிற மண்ணை நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது. உண்ணவும் முடியவில்லை, உறங்கவும் முடியவில்லை. நமது உடன்பிறப்புகளின் ஓலக்குரல் என்றும் நமது செவிகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. நமது உள்ளத்தில் மூண்டெழும் சினத்தீ என்றும் அணையப்போவதில்லை, அணையவும் கூடாது.
2007ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை வன்னிப் பகுதியில் வாழ்ந்த நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப இடம்பெயர்ந்த அவலம் நிகழ்ந்தது. வான்வழியாகவும், தரைவழியாகவும் சிங்கள இராணுவம் இடைவிடாது தொடுத்த கொடுந் தாக்குதல்கள் அந்த  மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து  தப்பியோடச்  செய்தன. இந்த ஈராண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் பதுங்குக் குழிகளை வெட்டி வைத்து விமானக் குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாக்க அதற்குள்ளாகவே மக்கள் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு முறையும் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்த போதெல்லாம் அங்கேயும் பதுங்குக் குழி வாழ்க்கை தொடர்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் சாலையோர மர நிழல்களில் வெய்யிலிலும், மழையிலும், காய்ந்தும் நனைந்தும் வாழ்ந்தார்கள். அந்த  மக்களுக்குப் போதுமான அளவு உணவோ,  மருந்தோ கிடைக்காதபடி இலங்கை இராணுவம் தடுத்தது. வானத்தைப் பார்த்த வண்ணம் மக்கள் அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள். எந்த நேரம் விமானங்கள் பறந்து வந்து குண்டு வீசுமோ என்ற அச்சத்தில் அவர்களின் வாழ்வு துன்பமயமாக மாறிப்போனது. பதுங்குக்  குழிகளே மரணக் குழிகளாயின. மக்கள் பயணம் செய்த வாகனங்கள், ஆம்புலன்சு வாகனங்கள், பள்ளிக்கூட வாகனங்கள் ஆகியவையும் பீரங்கித்  தாக்குதல்களுக்கு  ஆளாயின. வடகிழக்கு மாநில மனித உரிமைச் செயலகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களும்கூட இந்த தாக்கு தலிலிருந்து தப்ப முடியவில்லை கொல்லப்பட்டார்கள்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அகதிகள் ஆணையம் போன்றவை அளித்த நிர்ப்பந்தத்தின் விளைவாக சிங்கள இராணுவம்பாதுகாக்கப்பட்ட வளையங்கள்  சிலவற்றை அறிவித்தது. அதற்குள் அடைக்கலம் புகுந்த மக்கள் இராணுவத் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள்   என்ற  வாக்குறுதியையும் சிங்கள அரசு அளித்தது. இதை நம்பி பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் சரண் புகுந்தார்கள். அப்போது அவர்கள் இராசபக்சே விரித்த வஞ்சக வலைக்குள் தாங்கள் சிக்குண்டோம் என்பதை உணரவில்லை. சிறிய பரப்பளவான பாதுகாப்பு வளையங்களுக்குள் புகுந்த பெருந்திரளான மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வது சிங்கள இராணுவத்திற்கு எளிதாயிற்று. பாதுகாப்பு வளையங்களைச் சுற்றிலும் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு அந்த மக்கள் கொத்துக் கொத்தாக அலறித்  துடித்து  மாண்டனர். இறந்தவர்களின் உடல்கள் குப்பைகளை அள்ளிச்  செல்லும் லாரிகளில் வாரித் தூக்கி  எறியப்பட்டு வயல் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் வீசப்பட்டன. அவைகளை அடக்கம் செய்ய உறவினர்களோ வேறு யாருமே அனுமதிக்கப்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் திறந்த வெளிகளில் அமைக்கப்பட்ட மருத்துவமனைகளில் உயிருக்காகப் போராடினார்கள். அருகே செத்துப் போனவர்களின்  சடலங்களும் கிடந்தன. மருத்துவர்களும், மருத்துவத்  தொண்டர்களும் தங்கள் உயிரைப் பணயமாக வைத்து இந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தனர். ஆனாலும் அவர்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் பகுதி மணற்பாங்கான பகுதி. அங்கு தோண்டப்பட்ட பதுங்குக் குழிகள் மழையினாலும் குண்டுவீச்சின் அதிர்வுகளாலும்                               சரிந்து உள்ளே பதுங்கி இருந்த மக்களை உயிரோடு புதைத்தன. பெற்ற குழந்தைகளை மார்போடு அணைத்த வண்ணம் தாய்மார்கள் துடிதுடித்து இறந்தனர். குழந்தைகளின் கதறல்களும், அன்னையரின் ஓலமும் கடலோசையை மிஞ்சின.  
போரின் இறுதிக்கட்டத்தில் மிகக் கொடூரமான போர்த் திட்டங்களை நிறை வேற்றுவதற்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதற்கும் சிங்கள இராணுவம் கொஞ்சமும் தயங்கவில்லை. ஜெனீவாஉடன்பாட்டின்படி சர்வதேசநாடுகள் தடை செய்த கொத்துக் குண்டுகள், நாபாம் குண்டுகள், உடலில் பட்டாலே பற்றி எரியும் பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள இராணுவம் தாராளமாகப் பயன்படுத்தியது. உடலெங்கும் எரிந்த காயங்களுடன் கிடந்த சடலங்கள் இதை உறுதி செய்தன. தமிழர் களை இனப்படுகொலை செய்ததோடு சிங்கள இராணுவத்தினரின் கொலைவெறி குறையவில்லை. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்த குடியிருப்புகள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு அழித்தார்கள். தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழிப்பதன் மூலம் அவர்களை மீண்டும் தலையெடுக்க விடக் கூடாது என்பதே அவர்களின் திட்டமாகும்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என கூறியது. அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்த சட்ட வல்லுநர் குழுவும் இதே கோரிக்கையை பரிந்துரைத்தது. 2010ஆம் ஆண்டில் சனவரியில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என கூறியது. ஜெர்மன் மக்கள் தீர்ப்பாயமும் இதை வலியுறுத்தியது.
ஆனால், இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையைத் தொடங்காத காரணத்தினால் ஐ.நா. விசாரணைக் குழுவை பான்-கீ-மூன் அமைத்தார். இக்குழுவை இலங்கைக்குள்  நுழைவதற்கே அனுமதிதர இலங்கை அதிபராக இருந்த இராசபக்சே மறுத்தார். நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரால் தனக்குத்தானே ஒரு குழுவை அவர் நியமித்துக் கொண்டார்.
2012ஆம் ஆண்டு உள்நாட்டு விசாரணை, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை ஆகியவற்றைச் செயற்படுத்துவது குறித்த ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதையும் ஏற்றுக்கொள்வதற்கு இராசபக்சே மறுத்தார்.
2013ஆம் ஆண்டில் மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த திருமதி. நவநீதம்பிள்ளை வற்புறுத்தினார்.
2014ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றுகூடி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன. 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இத்தீர்மானம் அமைந்திருந்ததால் அதை ஆதரிக்க முடியவில்லை என இந்திய அரசு அறிவித்தது.
அதற்குப் பின்னர் மனித உரிமை ஆணையம் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானங்களை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டது.  போர் குற்றங்களை விசாரணை செய்து தண்டிக்கும் பொறுப்பை இலங்கை அரசே மேற் கொள்ளட்டும் என இந்திய அரசு திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தது. அதாவது சர்வதேச நீதிவிசாரணையிலிருந்து இலங்கை அரசை இந்தியா காப்பாற்றியது.
ஆனால் 2012 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானங்களில் எதையும் இலங்கை அரசு மதிக்கவில்லை. செயற்படுத்தவில்லை. அவ்வப்போது ஐ.நா.வை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இராச பக்சேவாக இருந்தாலும், சிறீசேனாவாக இருந்தாலும் மிகக் கொடுமையான போர்க் குற்றங்களைப் புரிந்த  தங்கள் நாட்டு இராணுவத்தையும், காவல்துறையையும் விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றுவதில் இருவரும் ஒன்றுதான். தொடர்ந்து உலகை ஏமாற்றும் நடவடிக்கைகளில் சிங்கள இனவெறி அரசுகள் ஈடுபட்டன. உலகமும் ஏமாந்தது. இந்திய அரசும்  ஏமாந்தது.
ஐ.நா. மனித உரிமை மற்றும் சனநாயக உரிமைப் பாதுகாப்புச் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன், அமெரிக்காவின் அரசியல் துறைச் செயலாளர் நாயகமான ஜெப்ரி பெல்ட்மேன் ஆகியோர்  இலங்கைக்கு 2017 சூலை 19 அன்று நேரில் வருகை தந்து 3 நாட்கள் தமிழீழப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து உண்மைகளைக் கண்டறிந்து இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
2015ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற சிறீசேனா புதிய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்படும் என்றும், போருக்கு முன்பும், பின்பும் காணாமல் போனவர்கள் குறித்துக் கண்டறிய சட்டம் இயற்றப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், இரண்டாண்டு காலமாக அவரோ அல்லது தலைமையமைச்சராக இருந்த இரணில் விக்ரமசிங்கேயோ எதுவும் செய்யவில்லை. ஆனால் ஐ.நா. சிறப்புத் தூதுவர் பென் எமர்சன் அமெரிக்காவின் அரசியல் துறை அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மேன் ஆகியோர் இலங்கைக்கு வருகைதந்து உண்மைகளை நேரில் கண்டறியும் முயற்சியில்  ஈடுபட்ட பிறகே அவசர அவசரமாக 'காணாமல் போனவர்கள் சட்டத்திற்கு'  21-7-17 அன்று ஒப்புதல் அளித்தார். மறுநாள்   22-7-17 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமையமைச்சர் இரணில் விக்ரமசிங்கே '2018ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுவிடும் என்றும், இச்சட்டத்தின் மூலம் தமிழர் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அறிவித்தார்'.
ஆனால் இந்த அறிவிப்புகளைக் கண்டு பென் எமர்சன்,ஜெப்ரி பெல்ட்மேன் ஆகியோர் ஏமாறவில்லை. ஐந்து நாள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு 'ஜெனீவா தீர்மானத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வேலை அடியோடு தடைப்பட்டுக் கிடக்கிறது' என பென் எமர்சன் பகிரங்கமாகக் கண்டித்ததோடு பின்வருமாறும் தெரிவித்தார்.
'கொடிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றுச்சட்டம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த இலங்கை அரசு அதன்படி நடந்துகொள்ளவில்லை. 1979 ஆம் ஆண்டு அவசரகால நடவடிக்கையாக பயங்கரவாதச் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும்  தமிழர்களுக்கு எதிராக மட்டுமே இச்சட்டத்தை சிங்கள அரசு பயன் படுத்தியுள்ளது.சிங்கள அதிகார வர்க்கத்தின் சித்திரவதைக்கொடுமைகளை இச்சட்டத்தின்கீழ் தமிழர்கள் அனுபவிக்க நேர்ந்தது.காவல்துறையிலும், இராணுவத்திலும் சிங்களரே இருந்த காரணத்தினால் இனவெறியுடன் தமிழர் களை பல்வேறு  மிருகத்தனமான கொடுமை களுக்கு ஆளாக்கியுள்ளனர்' .
இவ்வாறு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர்களைச் சந்தித்து அவர்களிடம் நேரடியாக கண்டறிந்த உண்மைகளை எமர்சன் பகிரங்கப்படுத்தினார். மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவ ஆதாரங்களும் உண்டு என்று கூறினார்.
'இலங்கையில் சித்திரவதை என்பது நடைமுறை ஒன்றாகிவிட்டது. சிங்கள அரசோ, அதிகாரிகளோ இதை ஒருபோதும் மறுக்கவில்லை. அந்நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் ஒரு அங்கமாக சித்திர வதைகளைஅவர்கள்ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகத்திலேயே மிக மோசமான அளவில் சித்திரவதைகள் நடைபெறும் நாடாக  இலங்கை விளங்குகிறது. புதிய ஆட்சியிலும் இது தொடர்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது' என அவர் கூறிய உண்மைகள் அதிர்ச்சிகரமானவையாகும்.
'ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொண்ட இலங்கை  அரசு அதை  மதியாமல் நடக்குமானால் அதன் விளைவாக மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழு ஆகியவற்றால் கண்டனம் செய்யப்படும் நிலை உருவாகும்'  என்றும் எமர்சன் எச்சரித்துள்ளார்.
அவ்வாறே அமெரிக்க அதிகாரியான பெல்ட்மேன் தலைமையமைச்சர் இரணில், வெளியுறவுத்துறை அமைச்சர் இரவி கருணா நாயகே ஆகியோரிடம் தனது கண்டனத்தை நேரில் தெரிவித்தார். பன்னாட்டுச் சட்டங்கள், நடைமுறைகள், மரபுகள் ஆகிய எதனையும் மதியாத போக்கில் இலங்கை அரசு நடந்துகொள்வது புதியதல்ல. வழக்கமாக அது பின்பற்றிவரும் கொள்கையேயாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று பத்தாண்டுகள் முடிந்த பிறகும் ஈழத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு காணப்படவில்லை. மேலும் மேலும் அவர்கள் துன்பங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். ஐ.நா. பேரவையோ அல்லது ஐ.நா. மனித உரிமை ஆணையமோ இலங்கை அரசின் மீது எவ்வித நடவடிக்கையை மேற்கொள்ளவோ, போர்க் குற்றங்களுக்கான விசாரணையைமேற்கொள்ளவோ இன்றுவரை எதுவும் செய்ய முன் வரவில்லை.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'  என்று முழங்கிய சங்ககாலச் சான்றோரின் வழியில் வந்த தமிழர்கள் உலக மக்கள் அனைவரையும் தங்களது உறவினர் களாகவும், உலக நாடுகளைத் தமது  சொந்த  நாடுகளாகவும் கருதி மானுடம் தழைப்பதற்கு உரமிட்டனர். ஆனால், அந்தத் தமிழினம் அழிவுக்குள்ளானபோது உலகம் அவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை. பத்தாண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு கைகொடுத்துக் கரையேற்ற உலகில் யாரும் தயாராக இல்லை. இந்தச் சூழ்நிலையில் நமக்கு நாமே உதவிக்கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை. உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து நின்று ஈழத் தமிழர்களைக் காப்பதற்கும், அவர்களின் மண்ணை மீட்பதற்கும் தோள் கொடுத்துத் துணை நிற்போம் என்ற சூளுரையை ஏற்று செயல்படுவோமாக. 

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.