இலங்கையில் நடைபெற்றது தமிழின அழிப்பே! முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டின் தீர்மானம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 17 ஜூலை 2019 12:24


2019 சூலை 6, 7 ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நினைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம்
அ. உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க முடிவு செய்தபோது தஞ்சையில் அதற்கு நிலம் தந்தும், பல்வேறு வகையிலும் துணையாக நின்றும் பேருதவிப் புரிந்த தமிழ்க் கலைமாமுகில் ம. நடராசன் அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும். அவருக்கு இம்மாநாடு தனது நன்றி கலந்த வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஆ. உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க காலம் முதல் துணைத் தலைவர் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றிய முன்னாள் துணைவேந்தர்  க.ப. அறவாணன், பெரும்புலவர் கி.த. பச்சையப்பன், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், தமிழறிஞர் மா. நன்னன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரின் மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அவர்களுக்கு இம்மாநாடு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானங்கள்
1.    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குக!
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கம் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும், அவர்கள் விடுதலை பெறவும் போராடி வருகிற அமைப்பாகும். ஆனால், இந்த அமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் இந்திய அரசு பழி சுமத்தித் தடைவிதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையொட்டி ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டன. இந்த நிலையில் இந்திய அரசு அந்தத் தடையை நீட்டித்திருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்தத் தடையை விலக்கிக் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது.
2.    ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு
இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஈழத் தமிழர்களின்  பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சொந்த ஊர்களுக்கோ, வீடுகளுக்கோ அவர்கள் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சுருங்கக்கூறின் தமிழின அழிப்பு தொடர்கிறது. இந்த நிலைமையில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்கின்ற ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்திற்கிணங்க அரசியல் ரீதியான தீர்வினைக் காண்பதற்கு ஐ.நா. பேரவை முன்வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
3.    காணாமல் போன ஈழத் தமிழர்கள் குறித்துச் செஞ்சிலுவைச் சங்க விசாரணை!
போர்க் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டியதும், பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதற்கான அதிகாரங்கள் அதற்கு உண்டு.  
இலங்கையில் போரின் போதும் அதற்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பற்றிய பதிவேடுகள் எதுவும் சிங்கள அரசிடம் இல்லை. அவர்களின் கதி என்னவாயிற்று? என்பது அவர்களின் குடும்பத்தினருக்கு இன்னமும் தெரிவிக்கப்படாத நிலைமையே நீடிக்கிறது. பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் இப்பிரச்சனையில் தலையிட அதிகாரமும், உரிமையும் உள்ளது.
ஏற்கெனவே 55 நாடுகளில் 1993ஆம் ஆண்டில் மட்டும் 1,44,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். செஞ்சிலுவைச் சங்கம் இதில் தலையிட்டு விசாரணை நடத்தி 10,000 பேர்களை மீட்டு அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. இப்பணியை அது தொடர்ந்து செய்து வருகிறது.
எனவே இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையைப் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் உடனடியாக மேற்கொண்டு அவர்கள் குறித்த நிலைமையை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், உயிரோடு இருப்பவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் முன்வரவேண்டும் எனப் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.  
4.    ஈழத் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு!
இலங்கையில் வாழும் தமிழர்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் இன அழிப்பு நடவடிக்கைகளில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
1948ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் கூடிய ஐ.நா. பேரவை இன அழிப்பு குறித்து  தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. 1951ஆம் ஆண்டு சனவரி 12ஆம் நாள் முதல் இத்தீர்மானம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கிணங்க இன அழிப்பைத் தண்டனைக்குரிய பெருங்குற்றமாக அறிவிக்கும் சட்டங்களை இயற்றுமாறு உலக நாடுகளைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் நடத்திய உலக மாநாடு வேண்டிக்கொண்டது. இம்மாநாட்டில் இன அழிப்பு (Genocide ) என்பதற்குரிய விளக்கம் வகுக்கப்பட்டது.
"இன அழிப்பு" என்பது ஒரு இனத்தைப் பகுதியாகவோ  அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களுக்காகக் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது ஆகும்.
(அ) ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்வது
(ஆ) உடல் ரீதியாக அவர்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது அல்லது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவது.
(இ) ஒரு தேசிய இன மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது, திட்டமிட்டு முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ இந்த இன அழிப்பைச்  செய்வது.
(ஈ) அந்தத் தேசிய இனத்தின் பிறப்புகளைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, கட்டாயக் கருக்கலைப்புச் செய்வது.
(உ) ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த குழந்தைகளைப் பிரித்து மற்றொரு தேசிய  இனத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது.
சர்வதேசச் சட்டத்திற்கிணங்க இன அழிப்பு என்பது தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். 1948ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தைச் சிங்களர் கையில் ஒப்படைத்துவிட்டு பிரிட்டன் வெளியேறிய நாள் முதல் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பை சிங்கள அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பெரும் பொறுப்பும், நீங்காத கடமையும் ஐ.நா. பேரவைக்கு உண்டு. அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுக் கதறிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களைக் காப்பாற்ற முன்வரும்படி ஐ.நா.பேரவையை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.