கனவு இன்னமும் கலையவில்லை களம் மட்டுமே மாறியுள்ளது - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2019 10:42

ஈழத்தமிழர்கள் மீது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் உட்பட பல நாடுகளின் துணையுடன் இலங்கை அரசு மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நடத்தி முடித்த கொடூர இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு  தஞ்சையில் சூன் 6, 7 நாட்களில் கீழ்க்கண்ட நோக்கத்துடன் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டில் நமது உடன் பிறப்புகளான தமிழீழ மக்கள் குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்றரை இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் பதறப் பதறப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களைக் காக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டுப் போராடத் தவறியதின் விளைவாக தமிழின வரலாற்றில் என்றும் நேர்ந்திராத பேரவலத்தை நாம் சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போதாவது தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று குரல் கொடுக்கவும், அழிவின் விளிம்பில் நின்று கதறும் தமிழீழ மக்களின் துயரத்தைத் துடைக்கவும் வழி வகுக்கப்படவேண்டும் என்பதற்காகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
முள்ளிவாய்க்கால்கொடூர நிகழ்வு நமக்கெல்லாம் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நாம் எதற்காக பல ஆண்டுகள் போராடினோமோ எதன் மீது அளவற்ற நம்பிக்கையை வைத்திருந்தோமோ அந்த நம்பிக்கை தகர்ந்ததாக நினைத்தோம். அழுதோம். அரற்றினோம். எந்த ஒரு அழுகைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? பத்தாண்டுகளாக அழுதோம். இன்னமும் அதைத்தான் செய்து கொண்டுள்ளோம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா?
இங்குள்ள பலரும் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை ஈழப் போராட்டத்திற்கு துணை நிற்பதில் செலவழித்துள்ளீர்கள். அந்த உழைப்பு வீணாகலாமா? அதற்காகவா நாம் இத்தனை ஆண்டுகள் போராடினோம்?
என்னைப் பொருத்த வரை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக ஈழப் போராட்டத்தை பார்த்து வளர்ந்து வந்துள்ளேன். அதுதான் எனக்குத் தெரிந்த முதல் அரசியல். என்னைச் சுற்றி உறவுகளாக நான் அறிந்தவர்கள் அனைவரும் களத்தில் போராடும் புலிகளாகவோ அல்லது இங்கு தமிழகத்தில் அவர்களுக்கு துணை நின்றவர்களாகவோதான் இருந்து வந்துள்ளனர். இவர்கள்தான் எனக்குள்ளும் ஈழக் கனவை ஊட்டினர்.
அந்தக் கனவு அழிந்துவிட்டதாக நான் நம்பவில்லை. களம் மட்டுமே மாறியிருப்பதாக நான் நினைக்கிறேன்.
கையில் ஆயுதம் ஏந்தி, கழுத்தில் குப்பி மாட்டி, குடும்பத்தை விட்டுப் பிரிந்து காட்டுக்குள் உயிரை பணயம் வைத்து போராடும் களத்தில் நாம் இன்று இல்லை. மாறாக நமது இயல்பான வாழ்வை வாழ்ந்து கொண்டே ஜனநாயக வழியில் இராசதந்திர களத்தில் போராடும் நிலையில் நாம் உள்ளோம். இதை உணர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் உள்ள இளைஞர்கள் பல இராசதந்திர முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த முன்னெடுப்புகள் 2009 மே மாதத்திலேயே தொடங்கிவிட்டன. 2009 மே 10-ஆம் நாள் நார்வேயில் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. "இனி தமிழீழத் தனி நாடே தீர்வு" என்று தந்தை செல்வா அவர்கள் தலைமையில் அறிவித்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இன்னமும் ஆதரவு உள்ளதா என்ற கேள்வியுடன் அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நார்வேயில் வாழும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் இவ்வாக்கெடுப்பில் வாக்களித்தனர். அதில் 98.85 விழுக்காட்டினர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து மே, சூன், சூலை மாதங்களில் அய்ரோப்பிய நாடுகள் அனைத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எல்லா நாடுகளிலும் இத்தீர்மானம் 98 விழுக்காடு வாக்குக்குக் குறையாமல் பெற்று வெற்றி பெற்றது.
இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை என்ன? முன்பே கூறியபடி வட்டுக்கோட்டைத் தீர்மானம்தான் முதன் முதலாக ஈழத் தமிழர்கள் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தத் தீர்மானம். 1976-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திலிருந்து தமிழ் மக்கள் இன்னமும் விலகவில்லை என்பதை உலகிற்கு உறுதிப்படுத்தவே அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் வெற்றிக்குப் பின், நார்வேயில் அதே 2009 நவம்பர் மாதத்தில் "ஈழத் தமிழர் மக்களவை” என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. நார்வேயில் வாழும் ஈழத்தமிழ் மக்களிடையே முறையாக தேர்தல் நடத்தி அதன் மூலம் இந்த மக்களவைக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஈழத் தமிழர் சிக்கல் குறித்து நார்வே வாழ் ஈழத் தமிழர்கள் சார்பாக உலக அரங்கில் பேசும் உரிமை இவர்களுக்கு இதன் மூலம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அய்ரோப்பாவின் பல நாடுகளிலும் கனடாவிலும் இப்படியான ஈழத் தமிழ் மக்களவைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் 2010 சனவரி 14, 15, 16 - நாட்களில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் கூடிய இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம் என்ற உலகளாவிய அமைப்பு போரில் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் வாக்குமூலங்களைத் திரட்டி அவற்றை விசாரித்து அதனடிப்படையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையே 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை ஈழத் தமிழர் மீது இலங்கை எடுத்த இராணுவ நடவடிக்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்து உலகிற்கு அறிவித்தது. மேலும் இனப்படுகொலை நடந்திருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் அதனை அய். நா. விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த அமைப்பின் விசாரணைக்கு வேண்டியத் தரவுகளைத் திரட்டி அளித்ததிலும் போரில் பிழைத்தவர்களின் வாக்குமூலங்களைத் திரட்டி அளித்ததிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் சிலர் முக்கிய பங்காற்றினர்.
இந்த நிலையில் இலங்கை அரசு 2009 முள்ளிவாய்க்கால் போரில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஜெகத் டயஸ் என்பவரை ஜெர்மன் நாட்டின் துணைத் தூதராக 2011 மே மாதத்தில் நியமித்தது. இதனை எதிர்த்தும் ஜெகத் டயஸ் மீது போர்க் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டியும் ஜெர்மன் நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீவிரத் தன்மைப் புரிந்து இலங்கை அரசு 2011 நவம்பரில் ஜெகத் டயசை திரும்பப் பெற்றது.
அதே 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் நாள் அன்று தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி உலகளாவிய தமிழ் இறையாண்மை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ஈழத் தமிழர்களுக்கு வரலாற்று ரீதியான இறையாண்மை மட்டுமல்ல, தங்களது போராட்டம் மூலம் பெற்றெடுத்த இறையாண்மையும்  அவர்களின் இழப்பிற்கான நிவாரண இறையாண்மையும் உண்டு என்று அறிவித்தனர். அத்துடன் அந்த இறையாண்மையை நிலைநாட்டவும் காக்கவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதியளித்தனர்.
அதே 2011-ஆம் ஆண்டில் நார்வே நாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது இனப்படுகொலை வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கின் விவரங்கள் அய்ரோப்பா முழுவதும் அனுப்பப்பட்டன.
அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு மீது வழக்குத் தொடரப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் அவர்கள் தலைமையில் அரசியற் பிரிவு போராளிகள் வெள்ளைக் கொடியுடன் வந்த போது அவர்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதற்கு எதிரான வழக்கு இது.
அதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் உள்ள "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்” என்ற அமைப்பு பசில் இராஜபக்சேக்கு எதிரான வழக்கு உட்பட இலங்கைக்கு எதிராக பல வழக்குகளை தாக்கல் செய்தது.
2012 சூன் மாதத்தில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து வந்த இராஜபக்சே தமிழர்களின் போராட்டத்தால் விரட்டியடிக்கப்பட்டார். அவரது உரை இரத்து செய்யப்பட்டது. அவர் மீது போர்க் குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் 2012-இல் அய். நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானம் இலங்கையில் நடந்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற போதும் இலங்கை அரசு அமைத்துள்ள உள்ளக விசாரணை ஆணையத்தின் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தது. 2013 மற்றும் 2014 ஆண்டுகளிலும் இவ்வாறே உள்ளக விசாரணையை ஆதரித்தே தீர்மானங்கள் அய். நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே 2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மொரிசீயஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் மறுத்துவிட்டன.
அதே நேரத்தில் 2013 மார்ச் 27 அன்று தமிழக சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தில் இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதி செய்து உடனடியாக பன்னாட்டு விசாரணை வேண்டும் எனக் கோரியது.
2014-இல் அய். நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை "இலங்கையின் செயல்பாடுகள் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை” என்று தெரிவித்தார்.
2014-இல் உள்ளக விசாரணை வெற்றி பெறாவிடில் பன்னாட்டு விசாரணை நடத்தப்படும் என அய். நா. மனித உரிமைகள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2014 அக்டோபரில் அய்ரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது. அதற்காக வழக்குத் தொடர்ந்து பாடுபட்டவர்கள் 2011-இல் இளைஞர் கூட்டறிக்கையை வெளியிட்ட இளைஞர்களே.
2015 பிப்ரவரியில் இலங்கையின் வடக்கு மாகாண சபை இலங்கையில் 60 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்கள் மீது இனப் படுகொலை தொடர்ந்து வருகிறது என்றும் அதனை உடனடியாக இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதோ இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கனடா நாட்டின் பிராம்ப்டன் நகர சபையும் மே மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகர சபையும், "இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்தது இனப்படுகொலையே” என்றும் "அதற்கு உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றின.
கடந்த சூன் மாதத்தில் கனடா நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழருக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
முதன் முதலாக ஒரு நாட்டு நாடாளுமன்றத்தில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை சாதித்தவர்கள் நம்மைப் போல ஈழ விடுதலையில் முழுமையான அக்கறை கொண்டுள்ள சாதாரண மக்கள்தான்.
இந்தியாவில் இதைப் போன்ற இராசதந்திர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து தளர்ச்சியடையாமல் தொடர்ந்து போராடுவோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.