காசுமீரிகளுக்கு இழைக்கப்பட்ட வஞ்சனை மொழிவழித் தேசிய இன ஒழிப்பின் முதல் கட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019 15:34

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய துணைக் கண்டம் விடுதலை பெற்றபோது, இந்திய, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்த சுதேச மன்னர்கள் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியைக் குறித்த முடிவை அவர்களிடமே விட்டுவிட்டு ஆங்கிலேயர் வெளியேறிவிட்டனர். பெரும்பாலான சுதேச அரசுகள் இந்தியாவுடனும், சில சுதேச அரசுகள் பாகிஸ்தானுடனும் இணைந்தன. சம்மு-காசுமீர் அரசில் முசுலீம்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால், மன்னரோ இந்துவாக இருந்தார். பாகிஸ்தான் நிறுவனரான ஜின்னா அவர்கள் காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான சேக் அப்துல்லாவுடன் பேசி பாகிஸ்தானுடன் இணையும்படி வற்புறுத்தினார். அப்படி இணைந்தால் முழுமையான தன்னாட்சித் தகுதியை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால், சேக் அப்துல்லா அதற்கு இணங்கவில்லை. காசுமீர் முசுலீம்களும் இந்தியாவுடனேயே இணைய விரும்பினர். எனவே, அவர் அப்போதைய தலைமையமைச்சர் நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்மு-காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டார். காசுமீர் முசுலீம் மாநாடு என்ற பெயரில் இயங்கிய தனது கட்சியின் பெயரை காசுமீர் தேசிய மாநாடு என சேக் அப்துல்லா மாற்றினார். அதுமட்டுமல்ல, 1948ஆம் ஆண்டு பிப்ரவரியில் காசுமீர் பிரச்சனை தொடர்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்ட இந்திய தூதுக்குழுவில் அங்கம் வகித்து ஐ.நா.வில் பேசும்போது, பின்வருமாறு குறிப்பிட்டார்- "பாகிஸ்தானுடன் இணைவதைவிட நாங்கள் சாவைத் தழுவிக் கொள்வோம். மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாகிஸ்தானுடன் எங்களுக்கு எத்தகைய உறவும் தேவையில்லை" என வெளிப்படையாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் படைகள் மலைவாசிகள் வேடம் அணிந்து காசுமீர் மீது படையெடுத்து அதன் தலைநகரான சிறீநகரை நெருங்கிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் மன்னர் அரிசிங் இந்தியாவுடன் காசுமீரை இணைப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டார். உடனடியாக இந்தியப்படை அங்கு அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புப் படையினர் விரட்டியடிக்கப்பட்டனர். சம்மு&காசுமீர் அரசின் முதல்வர் பொறுப்பை ஏற்ற சேக் அப்துல்லா இந்திய தலைமையமைச்சர் நேருவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக காசுமீருக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டது. இதையடுத்து இந்திய அரசியல் சட்டம் 370ஆவது பிரிவில் 35ஏ உட்பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் ஒப்புதல் அளித்தார். 35ஏ சட்டப்பிரிவு விவகாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வில்லை. ஆனாலும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் காசுமீருக்குத் தனியாக சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டன. இராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்புத் துறைகள் ஆகியவற்றைத் தவிர மற்ற துறைகள் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் சம்மு&காசுமீர் மாநிலத்திற்குப் பொருந்தாது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சம்மு&காசுமீரில் அசையாச் சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்பட்டது. காசுமீர் பெண்கள் வெளிநாட்டவரையோ, வேறு மாநிலத்தவரையோ திருமணம் செய்தாலும் அவர்களும் அங்கு அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. பின்னர் இந்தச் சட்டம் திருத்தப்பட்டு வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தாலும் பெண்களுக்கு காசுமீரில் அசையாச் சொத்துக்கள் வாங்க உரிமை வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சொத்து வாங்க முடியாது என அறிவிக்கப்பட்டது. காசுமீர் மாநில எல்லைகளைக் குறைக்கவோ, கூட்டவோ இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. இந்திய அரசு கொண்டுவரும் சட்டங்களை காசுமீர் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதின் மூலம் ரத்து செய்ய முடியும். இந்தியக் கொடியுடன் காசுமீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும். மேலே கண்டவற்றை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவாகும். ஆனால், 1957ஆம் ஆண்டிலிருந்து 1964ஆம் ஆண்டு வரை இந்தப் பிரிவில் உள்ள பல அம்சங்களை அப்போது பதவியிலிருந்த காங்கிரசு அரசு படிப்படியாக நீக்கியது. தலைமையமைச்சராக நேரு அவர்கள் இருந்தபோதே காசுமீர் முதலமைச்சர் சேக் அப்துல்லாவின் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார். இறுதியாக காசுமீருக்கான அரசியல் சட்ட விதிகள், தனி கொடி, வெளிமாநிலத்தவர் சொத்து வாங்க தடை இந்த மூன்று அம்சங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அவற்றையும் இப்போது பா.ச.க. அரசு அடியோடு நீக்கிவிட்டது. இந்தியாவோடு இணைவதற்காக காசுமீர் மக்களுக்கு இந்திய அரசு வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்ட போதுதான் காசுமீர் மக்களின் போராட்டங்கள் தொடங்கின. காசுமீர் இளைஞர்கள் தங்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அலட்சியப்படுத்தப்பட்டதாகவும், தங்களின் எதிர்காலம் இருள்சூழ்ந்துப் போனதாகவும், தாங்கள் வஞ்சித்து ஏமாற்றப்பட்டதாகவும் உணர்ந்தபோது அப்போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறின. இப்போது பா.ச.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கை காசுமீர் மக்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி வன்முறைப் போராட்டங்கள் பெருகவே வழி செய்யும். ஆனால், மாநிலங்களவையில் காசுமீருக்கான சிறப்புத் தகுதியை நீக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்ட முன்வடிவின் மீது பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்வருமாறு கூறியுள்ளார். "அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்தோ அல்லது அப்பிரிவை நீக்கவோ குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம். ஆனால், இதற்கு மாநில சட்டப்பேரவையின் பரிந்துரை அவசியம் என இந்தப் பிரிவின் உட்பிரிவு 3இல் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் சட்டப்பேரவை செயல்பாட்டில் இல்லாவிட்டால் அந்த மாநிலத்தின் அரசு அதிகாரம் தானாகவே நாடாளுமன்றத்தின் வசமாகிவிடும். காசுமீர் சட்டமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதன்மூலம் 370ஆவது பிரிவில் மாற்றம் செய்யவோ, அதை ரத்து செய்யவோ சட்டப்பேரவையின் பரிந்துரை அவசியமானது என்ற பிரிவு அடிபட்டு விடுகிறது. சட்டப்பேரவை செயல்பாட்டில் இல்லாத நிலையில் 370ஆவது பிரிவைத் திருத்தவோ, நீக்கவோ நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு” என வாதமிட்டுள்ளார். சட்ட ரீதியிலும், தார்மீக ரீதியிலும் இந்த வாதம் செல்லத்தக்கதல்ல. 370ஆவது அரசியல் சட்டப்பிரிவில் ஏதாவது திருத்தம் செய்யப்பட வேண்டுமானால், அதற்கு காசுமீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை. அத்தகைய ஒப்புதலை அளிக்க சட்டமன்றம் தற்போது இல்லை. திட்டமிட்டே சென்ற நவம்பர் மாதம் அதை இந்திய அரசு கலைத்துவிட்டது. எனவே, சட்டமன்றம் இல்லாத நிலையில் நாடாளுமன்றம் அதை குறித்து முடிவு செய்யலாம் என வாதமிடுவது எந்தவகையிலும் சரியானது அல்ல. மீண்டும் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி அதன் பிறகு உருவான சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே 370ஆவது பிரிவில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்பதுதான் சட்டத்தில் உள்ள நடைமுறையாகும். ஆனால், தனது விருப்பம்போல அதை திரித்து அமித்ஷா பேசியிருப்பது பொறுப்பற்றச் செயலாகும். இந்திய அரசின் ஆளுங் கட்சிகள் மாறலாம். ஆனால், இந்தியாவுடன் இணைவதற்காக காசுமீர் மக்களுக்கு இந்திய அரசு கொடுத்த வாக்குறுதி என்பது நிலையானது. அதை மாற்றுவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமாகும். 370ஆவது பிரிவை நீக்குவதற்கு செய்ய அந்தப் பிரிவையே பயன்படுத்துவது என்பது சட்டமுரணானது என்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் வேண்டாத பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை பா.ச.க. அரசு கொஞ்சமும் உணரவில்லை. எதிர்காலத்தில் புதிய சட்டமன்றம் அமைந்து இந்திய அரசு கொண்டுவந்த இந்தச் சட்டம் செல்லாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினால் என்ன செய்வது? என்பதற்காகவே காசுமீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மாநிலத் தகுதி பறிக்கப்பட்டு இந்திய அரசின் நேரடியாட்சிக்குட்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன. மேலும், தில்லி, புதுச்சேரி போன்ற துணை மாநிலத் தகுதி அளிக்கப்பட்டப் பிறகு துணை ஆளுநர்களின் அனுமதியை பெறாமல் எந்த சட்டத்தையும் மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்ற முடியாது. எனவே, இது அரசியல் சட்ட ரீதியாக செய்யப்பட்டுள்ள பெரும் மோசடியாகும். நன்கு திட்டமிட்டு தனது தீயநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பா.ச.க. அரசு முற்பட்டுள்ளது என்பது கடந்த காலச் செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்ற பா.ச.க. திடீரென தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன் விளைவாகவே 2018ஆம் ஆண்டு சூன் மாதம் 20ஆம் நாள் சம்மு-காசுமீர் மாநில அரசமைப்புச் சட்டம் 92ஆவது பிரிவின் கீழ் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு 6 மாதங்கள் கழித்து 2018 டிசம்பரில் ஆளுநர் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டு இந்திய அரசியல் சட்டம் 356ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மக்களால் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு முதலில் ஆளுநர் ஆட்சியையும், அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியையும் கொண்டுவந்த முறைகேடு இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெற்றதில்லை. 1954ஆம் ஆண்டு சம்மு-காசுமீர் மாநிலத்திற்குப் பொருந்தும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் மாற்றம் காணவேண்டுமானால் காசுமீர் அரசியல் அமைப்பு மன்றத்தின் ஒப்புதலோ அல்லது அம்மாநில அமைச்சரவையின் ஒப்புதலோ பெறப்படவேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்திய குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்பிரிவு 370(1)ன்படி பிறப்பித்துள்ள ஆணை சம்மு-காசுமீர் அரசின் ஒப்புதலையோ அல்லது காசுமீர் அரசியல் அமைப்பு மன்றத்தின் ஒப்புதலையோ பெற்றப் பிறகே வெளியிடப்பட்டிருக்கவேண்டும். எந்த மாநிலத்தையும் பிரிக்கவேண்டுமானால் அம்மாநில மக்களின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால், சம்மு&காசுமீரத்தின் முழுமையான மாநிலத் தகுதியை குறைத்ததோடு, அதை இரண்டாகப் பிரித்து துணை ஆளுநரின் ஆட்சியின் கீழ் கொண்டு சென்றிருப்பதும், அதிகாரமற்ற சட்டமன்றத்தை உருவாக்கியிருப்பதும் இந்தியாவில் இதுவரை நடைபெற்றிராத ஒன்றாகும். ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை குறைக்கவோ அல்லது அதன் எல்லைகளை திருத்தி அமைக்கவோ நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருவதற்கு முன்னால் அச்சட்டம் முன் வடிவை அம்மாநில சட்டமன்றத்தின் கருத்தறிவதற்காக குடியரசுத் தலைவர் அனுப்பி வைக்கவேண்டும் என அரசியல் சட்டத்தின் பிரிவு 3 தெளிவாகக் கூறுகிறது. இந்திய கூட்டாட்சியின் அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடு இந்தச் சட்டப் பிரிவாகும். இது அடியோடு மீறப்பட்டிருக்கிறது. காசுமீர் மாநிலத்திற்கு இன்று ஏற்பட்ட நிலை, பிற மாநிலங்களுக்கும் ஏற்படலாம். அரசியல் சட்ட ரீதியாக காசுமீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதியைத் துச்சமென மதித்து பா.ச.க. அரசு தூக்கியெறிந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சம்மு&காசுமீர் மாநிலத்திற்கு மட்டுமே சிறப்பு உரிமை தரப்பட்டுவிட்டதாகவும், எனவேதான் அதை நீக்கி இந்தியாவின் பிற மாநிலங்களோடு சமமான நிலையில் ஆக்கி வைத்திருப்பதாக அமித்ஷா கூறியிருப்பது உண்மையை முற்றிலும் மறைப்பதாகும். இந்திய அரசியல் சட்டத்தின் 371ஆவது பிரிவின் கீழ் தலைமையமைச்சர் மோடி அவர்களின் குசராத் மாநிலத்திற்குச் சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே உரிமை மராட்டிய மாநிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 371(அ)முதல் ஐபிரிவுகளின்படி நாகாலாந்து, அசாம், மணிப்பூர், ஆந்திரா, சிக்கிம், மசோராம், அருணாச்சல பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களின் தனிப்பட்ட கலாச்சாரம் பாதுகாக்கப்பட இத்தகைய சிறப்பு உரிமைகளை இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. ஏதோ காசுமீருக்கு மட்டும் சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஒரு பொய்மையை பா.ச.க. திட்டமிட்டுப் பரப்புகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போது, அன்றைக்கு இருந்த தலைமையமைச்சர் நேரு அவர்கள் "இந்திப் பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும்”என்ற வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் அளித்தார். 1965ஆம் ஆண்டில் இந்த வாக்குறுதியை மீறி இந்தியை மட்டும் ஆட்சிமொழியாக்க இந்திய அரசு முயன்றபோது தமிழகம் கொந்தளித்தது. அதன் விளைவாக அப்போதிருந்த தலைமையமைச்சர் லால்பகதூர், இந்திப் பேசாத மக்களுக்கு நேரு அளித்த வாக்குறுதிக்கு அரசியல் சட்ட வடிவம் கொடுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இந்தச் சட்டத்தினையும் பா.ச.க அரசு நீக்கிவிட்டு இந்தியை தமிழக மக்கள் மீது திணிக்கும் நிலை ஏற்படலாம். மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்பதற்கு அடித்தளமான நியாயமான காரணங்கள் உண்டு. இந்தியா என்பது ஒரே நாடு அல்ல, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடு. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் மொழி, வரலாறு, பண்பாடு போன்ற தனிச் சிறப்புப் பண்புகள் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் வாழும் மண் அவர்களின் இந்த உணர்வுக்கு அரணாக நின்று காக்கிறது. மண்ணை இழந்த இனம் எல்லாவற்றையும் இழந்துவிடும். காசுமீர் மண்ணின் மைந்தர்களான காசுமீரிகளுக்கே அந்த மண் சொந்தமானது என்பதை ஏற்க மறுத்து, அந்த உரிமையை பறித்திருக்கிற பா.ச.க. அரசு பிற மாநிலங்களிலும் அந்த உரிமையை பறித்துவிட்டது. தமிழக மண்ணில் இன்றைக்குப் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கமே ஓங்கி நிற்கிறது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் பிறரால் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் தொழில், வணிகம் ஆகியவை பிற மாநிலங்களைச் சேர்ந்த பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்கள் வேலை வாய்ப்புகளையும் பறித்தெடுத்துள்ளனர். அந்தந்த மாநில மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு, தொழில், வணிகம் நடத்தும் உரிமை ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்ற குரல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஒங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அதற்கான போராட்டங்களும் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் ஒடுக்குவதற்கான முன்னோட்டமாக காசுமீரின் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இயற்கை எழில் நிறைந்த காசுமீர் வந்தேறிகளின் வேட்டைகாடாக மாறும் என்பதில் ஐயமில்லை. நாடு விடுதலை பெற்றப் பிறகு மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்கவேண்டும் என மக்கள் போராட்டங்கள் வலுத்தபோது,மொழி வழியாக மாநிலங்களைத் திருத்தியமைக்கவேண்டிய இன்றியமையாமை இந்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனாலும், அப்போது தலைமையமைச்சராக இருந்த நேரு அவர்கள் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு சீர்குலைந்துபோகும் எனக் கருதி, இந்தியாவை ஐந்து மண்டலங்களாக ஆக்குவதென முடிவெடுத்தார். ஆனால் இந்த முடிவுக்கு தமிழக முதலமைச்சரும், நேருவின் மிக நெருங்கிய தோழருமான காமராசர் உட்பட பலரும் உடன்படவில்லை. மக்களும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டும் என வற்புறுத்தினர். மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய நேரு மக்களின் விருப்பத்திற்குப் பணிந்து மொழிவழியாக மாநிலங்களைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்த சனநாயகப் பண்பு அவரிடம் குடிகொண்டிருந்தது. இப்போதுள்ள இந்திய அரசின் பொறுப்பில் உள்ள யாரும் நேரு அளவுக்கு மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் அல்லர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37.4% வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே பெற்று பா.ச.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணியுடன் இந்த வாக்குகளை மட்டுமே பா.ச.க.வினால் பெற முடிந்தது. 62.6% வாக்காளர்கள் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை சற்றும் எண்ணிப்பார்க்காமல் தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றவேண்டுமென பா.ச.க. முனைந்திருக்கிறது. அதிலும் சம்மு-காசுமீர் மாநில அரசியல் தலைவர்களை கைது செய்தும், இராணுவத்தைக் குவித்து மக்களை அச்சுறுத்தியும், சர்வாதிகாரமான முறையில் செயல்படுவது என்பது சனநாயகத்தின் ஆணிவேரையே அறுக்கும் செயலாகும். மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதே தவறானது என்ற கருத்தோட்டம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைத் தலைவராக இருந்த குருஜி கோல்வால்கர் பின்வரும் கருத்தை வெளியிட்டார். "சுயாட்சி உரிமை உள்ள மொழிவழி மாநிலங்களை அமைப்பது பிராந்தியவாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். பல மாவட்டங்களை இணைத்து அமைக்கப்படும் ஜனபாத அமைப்புகள் மாநில அரசுகளைவிட மக்களுக்கு நெருக்கமாக இருக்கும்” என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கட்சியான ஜனசங்கத்தின் பொதுச் செயலாளரான தீனதயாள் உபாத்யாயா, கோல்வால்கர் கருத்திற்கு செயல்திட்ட வடிவம் கொடுத்தார். "இந்தியாவில் உள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு ஜனபாத அமைப்பை உருவாக்க வேண்டும். அப்படி இந்தியா முழுவதும் 100 ஜனபாத அமைப்பு அமைக்கப்பட்டால், மொழிவழி மாநிலங்களும், சட்டமன்றங்களும், அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்; ஒரே ஒரு இந்திய அரசு மட்டுமே இருக்கவேண்டும்” ஜனசங்கம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் வலியுறுத்தப்பட்டது. ஜனசங்க அமைப்புதான் இன்றைய பா.ச.க.வுக்கு முன்னோடியாகும். ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட இந்த நச்சுக் கருத்தை செயல்படுத்த பா.ச.க. அரசு முனைந்திருக்கிறது. காசுமீரில் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை முன்னோடியான ஒன்றாகும். தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கும் இந்த நிலை வருவது அதிக தூரத்தில் இல்லை. காசுமீர் மக்களிடம் வேரூன்றியுள்ள இந்திய எதிர்ப்புணர்வின் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அதைப் போக்குவதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர, அம்மாநிலத்தின் சிறப்புத் தகுதியைப் பறிப்பதும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், இந்தியப் படையை அங்குக் குவித்து அந்த மக்களை அச்சுறுத்துவதும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஏற்கெனவே லடாக்கின் கணிசமான பகுதி சீனாவின் வசம் உள்ளது. சீனா அங்கு சாலைகள் அமைத்து தனது இராணுவத்தை நிறுத்தியுள்ளது. சம்மு&காசுமீர் மாநிலத்தின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் அணுஆயுத வல்லரசுகளாகும். காசுமீர் இம்மூன்று வல்லரசுகள் போர்க்களமானால் விளைவுகள் என்னவாகும்? என்பதை சற்றும் சிந்தித்துப்பாராமல் இந்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்தத் தென்னாசிய நாடுகளின் அமைதியை அடியோடு அழித்துவிடும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.