உச்சநீதிமன்றத்தின் தடுமாற்றம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019 15:02

இந்தியாவின் முதன்மை வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் அங்கம் வகிக்கிறார்கள். தலைமை நீதிபதியான விஜயா கமலேஷ் ரமாணி நாட்டில் உள்ள மிக மூத்த நீதிபதிகளில் ஒருவராவார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வகிக்கும் பெண்கள் இருவரில் அவரும் ஒருவர். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்பதவியிலிருந்துஓய்வுபெற விருக்கிறார். இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்படக் கூடிய தகுதி நிறைந்தவர். இத்தகைய ஒருவரை இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான மேகாலயாவின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உச்சநீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளின் குழு இடமாற்றம் செய்திருப்பது பெரும் புதிராகவும், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது. மிக எளிய மக்களால் கூட இந்த இடமாற்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகப் பார்க்கப்படுகிறது.  
தனது இடமாற்றத்தை நீக்கும்படி தலைமை நீதிபதி ரமாணி அவர்கள் விடுத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டதோடு, மேகாலயாவின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது அநீதிக்கு மேல் அநீதி  இழைக்கும் போக்காகும். இதன் விளைவாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கும், அதன் நகலை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். தன்மானமுள்ள யாரும் இதுபோன்ற காலகட்டத்தில்  எத்தகைய முடிவு எடுத்து செயல்படுவார்களோ அத்தகைய முடிவை எடுத்து திருமதி ரமாணி அவர்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் நீதிபதிகள் அனைவருமே அவரது பதவி விலகலை மறு ஆய்வுக்கு உட்படுத்தும்படி விடுத்த வேண்டுகோளை அவர் கண்ணியமாக மறுத்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு "இத்தகைய தன்னிச்சையான இடமாறுதல் நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதிபதிகளின் நம்பிக்கையையும், அடியோடு பறித்துவிடும். எனவே, இந்த இடமாறுதலை உடனே திருத்தும்படி உச்சநீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் அமைப்புகள் இந்த இடமாறுதலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"பதவி நீக்கம் என்னும் ஆயுதத்தைவிட இடமாற்றம் என்னும் ஆயுதம்  அபாயகரமானது. நீதித்துறையின் நிர்வாகத்தில் ஒப்பிட்டு சரிபார்த்தல், நிதானித்தல் ஆகியவை இல்லாமல் போவது கவலைக்குரிய ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளின் குழு உயர்நீதிமன்றங்களைத் தங்களுக்குக் கீழ்ப்பட்டதாகக் கருதும் வகையில் செயல்படுகிறது. இதன்மூலம் உயர்நீதிமன்றங்களின் மேதகு தன்மை பாதிக்கப்படும். அரசியல் சட்டத்தை நிலைநிறுத்தும் முக்கிய பொறுப்பு வகிக்கும் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தை இது அரித்துவிடும்” என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான வி. காலிடு முன்பு கூறியதை மூத்த வழக்கறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரமாணி பதவி வகித்தபோது குறிப்பிடத்தக்க முதன்மை வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். அவற்றில், பில்கிஸ் பானு வழக்கில்  அவர் அளித்தத்  தீர்ப்பு முக்கியமானதாகும்.
"குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தின்போது பில்கிஸ்  பானு என்ற முஸ்லீம் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதோடு அவருடைய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடங்கிய 7பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கும் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை அளித்தார்”.
இந்திய உயர்நீதிமன்றங்களில் அங்கம் வகிக்கும் நீதிபதிகளில் மூத்த நீதிபதிகளில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பரில் ஓய்வு பெறுகிறார். 2020 செப்டம்பருக்குள் மேலும் 3  நீதிபதிகள் ஓய்வு பெற இருக்கிறார்கள். இவ்வாறு காலியாகும் 4 நீதிபதி பதவிகளில் ஒரு பதவிக்கு திருமதி ரமாணி நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்தப் பின்னணியில் அவரது இடமாறுதல் ஆணையையும், அதை ஏற்க மறுத்து அவர் பதவி விலகியதையும் ஆராயவேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் அவருடைய இடமாற்றப் பிரச்சனையைப் பார்க்கும்போது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவும், அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்துவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அறத்தையும் நிலைநிறுத்தவேண்டிய நீதித்துறையிலேயே இத்தகைய தவறுகள் இழைக்கப்படுவது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
1972ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூவரைப் புறக்கணித்து, இளைய நீதிபதியான ஏ.என். ரே என்பவரை தலைமை நீதிபதியாக அப்போதைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அமர்த்தினார். இதன் விளைவாக மூத்த நீதிபதிகள் மூவர் தங்கள் பதவிகளிலிருந்து விலகினர்.  நாடெங்கும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இப்போது மத்திய ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக அன்று குற்றம் சாட்டியவர்கள் இப்போது  தலைமை நீதிபதி ரமாணி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எத்தகைய பதில் கூறப் போகிறார்கள்?
நாட்டின் இறைமை, அரசியல் சட்டம், சனநாயக அமைப்புகள், ஆட்சியின் நிர்வாகம் போன்றவற்றை காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் நீதித்துறைக்கு உண்டு. நீதித் துறையிலேயே தவறுகள் நடக்குமானால், மேற்கண்ட அமைப்புகள் சீர்குலைந்துபோகும். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளின் குழு சுதந்தரமாக செயல்படவில்லை என்ற ஐயம் எழுந்திருப்பதே அதன்மீது படிந்த கறையாகும். தலைமை நீதிபதி ரமாணி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் மீது படிந்துள்ள கறை கழுவப்படாவிடில் நீதிமன்றங்களின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மறைந்துவிடும்.
பில்கிஸ் பானு வழக்கு
பில்கிஸ் பானு என்னும் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர். 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இவருடைய குடும்பத்தினர் 14பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்ணால் கண்டவர்.
ரான்திக்பூர் என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த தனது பெற்றோர்களைச் சந்திக்க 19வயதான பில்கிஸ் பானு தனது மூன்று வயது குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார். அந்தக் கிராமத்தில் இந்து மதவெறி கும்பல் நுழைந்து முஸ்லிம்களை தாக்கத் தொடங்கியது.
தனது மூன்று வயது மகளை சுமந்துகொண்டு பில்கிஸ் பானும்,  அவருடைய குடும்பத்தினரும் தப்பி ஓடினர். ஆனாலும் அடுத்த சில நாட்களுக்குள் அவர்கள் மறைந்திருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்த இந்து மதவெறிக்கும்பல் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியது. அவருடைய குழந்தையை பறித்தெடுத்து கற்பாறையில் வீசிக் கொலை செய்தது. அவரை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது. ஐந்து மாத கர்ப்பிணி என்பதைக் கூட அவர்கள் பார்க்கவில்லை.  அவருடைய உறவினர்கள் 14பேர் கொலை செய்யப்பட்டனர். இரண்டே இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்தனர்.
பானுவிற்கு சுயநினைவு வந்தபோது அருகே உள்ள மலையடிவாரத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அவரைக் காப்பாற்றினர். பிறகு கோத்ராவில் இருந்த அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய கணவரைக் கண்டார். பிறகு காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து முறையிட்டார்.  படிக்கத் தெரியாத அந்தப் பெண்ணை மிரட்டி காகிதம் ஒன்றில் கைரேகை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள். கொலையாளிகள் மீது எந்த வழக்கும் தொடுக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் கதவுகளை பானு தட்டியப்பிறகு இந்த வழக்கு விசாரணை  சி.பி.ஐ.யிடம்  ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு 2004ஆம் ஆண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும், குஜராத் நீதிமன்றத்தில்  நீதி கிடைக்காது என்ற பானுவின் முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மும்பை  நீதிமன்றத்திற்கு மாற்றியது. இதற்குள் 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. நீதிக்கான தனது போராட்டத்தில் பானுவின் குடும்பம் பெரும் சீர்குலைவைச் சந்தித்தது. அவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ முடியவில்லை. பத்து முறைக்குமேல் வீடு மாறி விட்டார்கள். எங்கே சென்றாலும் அவர்கள் தொடர்ந்து கொலையாளிகளாலும், காவலர்களாலும் மிரட்டப்பட்டார்கள்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரமாணி இருந்தபோது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 11பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 காவலர்கள், 2 மருத்துவர்கள் ஆகியோருக்கும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. பில்கிஸ் பானு நடத்திய நீதிக்கான நெடும் போராட்டத்தில் நீதி வழங்கியவர் தலைமை நீதிபதி ரமாணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்து மதவெறிக் கும்பலுக்கு தண்டனை விதித்தவர் என்பதையும், இப்போது அவர் சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் என்ற பெயரால் பதவியிறக்கம் செய்யப்பட்டதையும், நாம் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.