தோழர் சி. மகேந்திரன் எழுதிய நூல் "அறிவு பற்றிய தமிழரின் அறிவு” பேராசிரியர் ந. முத்துமோகன் திறனாய்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019 15:22

நூல் வெளியீட்டு விழா
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர்   சி. மகேந்திரன் அவர்கள் எழுதிய "அறிவு பற்றிய தமிழரின் அறிவு" நூலின் வெளியீட்டு விழா 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மதுரை தமுக்கம் திடலில் புத்தகக் கண்காட்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது

 

 இந்நூலை வெளியிட்ட டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தோழர் வேதியப்பன் அனைவரையும் வரவேற்றார்.  
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு தலைமை தாங்கினார். பழ. நெடுமாறன் நூலை வெளியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் லிங்கம் உட்பட பலர் பெற்றுக்கொண்டனர். இந்நூலின் ஆய்வுரையை பேராசிரியர்கள் முத்து மோகன், சாலமன் பாப்பையா ஆகியோர்  ஆற்றினர் . தோழர்  சி. மகேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த திரளான தோழர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொண்டனர்.
சங்க இலக்கியங்கள் வீரத்தையும் காதலையும் முதன்மைப் படுத்துகின்றன என்ற பார்வை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தமிழ் ஆய்வில் நிலை கொண்டது என்பதை விமர்சிப்பதிலிருந்து தோழர் மகேந்திரன் தனது ஆய்வினை இந்நூலில் தொடங்குகிறார். 20ஆம் நூற்றாண்டில் வீரமும் காதலும் என்ற மதிப்பீடு பேராசிரியர் கைலாசபதியின் வீரயுகக் கவிதை (Heroic Poetry) என்ற ஆய்வுக் கருத்தால் உச்சக்கட்டத்திற்கு வளர்க்கப்பட்டது என்று ஒரு குற்றச்சாட்டினை நூலாசிரியர் முன்வைக்கிறார். சங்க இலக்கியங்கள் குறித்த "இக்கருத்து அமைவு வெகுஜன ரசனைக்கு மிகுந்த வசீகரத்தைத் தந்தது” என்று (பக்.16) அவர் எடுத்துக்காட்டுகிறார். இது, தமிழ் மரபு பற்றிய ஒரு "திசைமாற்றத்தை”, "தடுப்புச் சுவரை”, ஒரு "பொய்த் தோற்றத்தை” ஏற்படுத்தும் மாபெரும் கட்டுமானமாக உருவாகிவிட்டது என்று தோழர் மகேந்திரன் வருந்துகிறார். இதற்கு மாற்றாக, தமிழரின் அறிவு பற்றிய ஆய்வினை முன்வைப்பதை தனது நோக்கமாக அவர்  கட்டமைக்கிறார்.
வீரம், காதல் போன்ற விழுமியங்களை முன்வைப்பதில் ஐரோப்பியக் காலனிய முறையியல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று தோழர் மகேந்திரன் கருதுகிறார். ஐரோப்பிய வீரயுகப் பாடல்களைக் கொண்டு சங்க காலப் பாடல்களை அளந்து பார்க்கும் முறைமை நிலைகொண்டு விட்டது என்று அவர் கருதுகிறார். அறிவுக்கு முன்னுரிமை வழங்கும் முறைமைவடமொழிக்கே  உண்டு என்ற ஒரு முடிவுக்கு இடமளிப்பதாகஅம்முறைமை ஆகிவிடுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார். தமிழுக்குள் நுழைந்து நிலைகொண்டு விட்ட மேற்குறித்த காலனிய ஆய்வு முறையை விட்டு விலகி நாம் வெளிவர வேண்டும் என நூலாசிரியர் முன்மொழிகிறார்.
நீண்ட காலமாகத் தமிழில் வழக்கில் உள்ள வீரம், காதல்  என்ற திசைவழியை அறிவு, அறம், சிந்தனை, தருக்கம், கல்வி என்ற விழுமியங்களைக்கொண்டு மறுகட்டுமானம் செய்யவேண்டும் என்பது அவரது முன்மொழிவாக உள்ளது. இதனை ஒரு மிகச் சவாலான ஆய்வுப் பிரச்சினையாக நாம் கருத வேண்டியுள்ளது. தமிழ் மரபு மதம், புராணம் ஆகியவற்றை ஏற்காத ஓர் அறிவு மரபு என்ற கருத்தை தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற வரலாற்றுப் பணியின் முக்கியத்துவத்தையும் அவர் நூலின் இறுதிப் பகுதியில் சுட்டிக்காட்டுகிறார். அறிவார்ந்த நீதி, சுயமரியாதை கொண்ட சமத்துவ சமூகம் (பக். 235) நோக்கிய ஒரு நகர்வினை தமிழர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற ஒரு வேலைத் திட்டத்தை நூலாசிரியர் உருவாக்குவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. கடந்த இருநூறு ஆண்டுகால நமது தமிழ் மரபு குறித்த  வீரம் காதல் என்ற புரிதலை அறிவை முன்னிறுத்தி விமர்சனம் செய்யும் வேலையை  நூலின் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்கங்கள் செய்கின்றன என்பதைக் காணுகிறோம். இதுவே இந்நூலின் அமைப்பு என்று புரிந்துகொள்ள முடிகிறது. தோழர் மகேந்திரன் ஒர் ஆய்வாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து இந்நூலின் கருதுகோளை முன்  வைத்துள்ளார் என்பதை உணருகிறோம்.
தமிழ் அறிவுப் பரப்பு
200 பக்கங்களில் தமிழ் அறிவுப் பரப்பை நூலாசிரியர் சித்தரிக்கிறார். இருப்பினும் முதலாவதாக, ஃபிரடெரிக் ஏங்கெல்சின் ்குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதில் உழைப்பின் பாத்திரம் என்ற முக்கியமான கட்டுரையின் கருத்துக்களிலிருந்து தொடங்குகிறார். ஏங்கெல்ஸ் அக்கட்டுரையில் விலங்கினச் சூழலில் வாழ்ந்த மனிதக் குரங்குகள் தமது முன்னங்கால்களை உயர்த்தி நேராக நிமிர்ந்து, அவற்றைக் கைகளாகப் புனரமைத்துக் கொண்டன என்ற மாற்றத்தைக் குறிப்பிடுகிறார். இதன்மூலம் கைகளின் செயல்பாட்டினால், உழைப்பு தோற்றம் பெற்றது. இரண்டாவதாக, மனிதக் குரங்குகளின் கூட்டு வாழ்க்கை அவர்களிடையில் மொழியை உற்பத்தி செய்தது. உழைப்பு, மொழி ஆகிய இந்த இரண்டு மாபெரும் மாற்றங்களே மானுட சமூக வாழ்வை உற்பத்தி செய்தது என்று ஏங்கெல்ஸ் கருதுகிறார். உழைப்பின் அனுபவங்களே அறிவின் தோற்றுவாய். அவ்வனுபவங்களை மொழியில் தக்க வைக்கும்போதே அறிவு உருவாகிறது. எனவே மொழியின் தொன்மையுடன்     அறிவு உற்பத்தியும் அறிவுச் சேகரமும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவை என தோழர் மகேந்திரன் நிறுவுகிறார்.
அடுத்து,தமிழ்மொழியின் கட்டமைப்பு, ஒலி உச்சரிப்பு, செழுமையான வேர்ச் சொற்கள், கலைச் சொல்லாக்க ஆற்றல், அதன் கணித அடிப்படை ஆகிய திறன்கள் குறித்துப் பேசுகிறார்.
தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய இரண்டு அரிய பெரிய நூல்களும் முன்வைக்கும் தமிழின் பொதுவான மெய்யியல் பரப்பை மூன்றாவதாகஅறிமுகப் படுத்துகிறார். முதலெனப்படுவது நிலமும் பொழுதும் எனக் கூறித் தொடங்கும் தொல்காப்பியத்தின் திணைக் கோட்பாடு விரிவாகப் பேசப்படுகிறது. மொழித்தளத்தில் உயிர், மெய், உயிர்மெய் என எழுத்துக்களைப் பகுத்தும் புணரியும் எடுத்துக்காட்டும்சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது.அது போலவே அகமும் புறமுமாக பண்டைத் தமிழர் வாழ்வு சித்தரிக்கப் படுவதும் விவாதிக்கப்படுகிறது. தொல்காப்பியமரபியலில் பேசப்படும் உயிர்கள் (ஓரறிவு, ஈரறிவு) பற்றிய பதிவு தொல் காப்பியம் மிகக் கறாராக இயற்கை சார்ந்த அறிவுத் தொகுதியை தன்னில் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வியல் பகுப்புகளைக் கொண்ட திருக்குறள் தொடர்ந்து பேசப்படுகிறது. திருக்குறளில் அறத்துக்கு முன்னுரிமை வழங்கும் முறைமை அந்நூலிலிருந்து ஒரு சமூகவியல் உருவாவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை உணர முடிகிறது. திருக்குறள் நூல் அறிவு, அறம், அன்பு ஆகிய மூன்று முக்கியமான கருத்துக்களை முன்வைத்துத் தனக்குள் நடத்தும் விவாதங்களைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார். குறளின் அறிவுபூர்வமான, அறம் சார்ந்த சமத்துவம் என்ற கருத்து புதிய எல்லை ஒன்றுக்கு நம்மை இட்டு செல்லலாம். திருக்குறளில் பேசப்படும் அறிவு இயற்பியல், வேதியியல் ஆகியவற்றைப் போல முழுக்கப் புறவயமானதல்ல, கணிதத்தில் பேசப்படுவது போல் வடிவவியல் (Formalist) பண்பு கொண்டதுமல்ல. அவற்றைவிடச் செழுமையான, நெகிழ்வான, முழுமையான பண்புகள் அதற்கு  உண்டு.
தொடர்ந்து பயணிக்கும் தோழர் மகேந்திரன், பேராசிரியர் நிர்மல் செல்வமணி முன்வைக்கும் தமிழ் அறிவுத் தோற்றவியல் கருத்துக்களை விரிவாக விவாதிக்கிறார். அறிவு என்பதனை சங்கத் தமிழ் காட்சி என்றே குறித்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். காட்சியின் வகைமைகள், காட்சி வாயில்கள், பிழைகள், பிழைகளை நீக்கும்  முறைகள், உத்திகள் எனக் காட்சி பற்றிய பழந்தமிழ்க் கோட்பாடுகள் விரிகின்றன. காட்சியின் அளவைகளைப் பற்றிப் பேசும்போது காட்சி, ஐயம், தெளிவு என்ற மூவகை நிலைகளின் ஊடாக அறிவு பயணம் செய்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அறிவைக் கண்காணிக்கும் கட்டுப்படுத்தும் பணியினைச் செய்யும் நிறுவனங்களாக நூல்கள் (முதல் நூல், வழி நூல், உரை நூல் போன்றவை) மற்றும் (சான்றோர், மூத்தோர்)  அவைகள் தொழில்பட்டு வந்தமையைச் சுட்டிக்காட்டுகிறார்.
முடிவாக
தமிழ்ச் சூழலுக்கு மிகவும் தேவையான ஒரு நூலாக இந்நூல் அமைந்துள்ளது. வீரம், காதல் என்ற நிலைப்பாடுகளிலிருந்து அறிவு, அறம், சமூகம் என்ற நிலைகளை நோக்கி நாம் நகரவேண்டும் என இந்நூல் அழைக்கிறது. இதனைச் சாதிக்கும் சமூக அணியாக புதிய தலைமுறையின் இளைஞர்கள் அமைவர் என நூலாசிரியர் கருதுகிறார்.
வீரத்தையும் காதலையும் நிராகரிக்கிறோம் என்று இதனைக் கொள்ள வேண்டியதில்லை.  அறிவையும்  அறத்தையும் முன்னோக்கி நகர்த்துகிறோம் என்பது மட்டுமே நமது நிலை. பல ஆய்வு வாய்ப்புகளை இந்நூல் ஆய்வாளர்களுக்கும், கருத்தாளர்களுக்கும் வழங்குகிறது. அவை தமிழையும் நம்மையும் செழுமைப்படுத்தும், வலிமைப்படுத்தும்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.