தமிழ் இலக்கிய வரலாறு - தமிழர் வரலாறு மாற்றம் பெறும் - கீழடி தடயம் தரும் திருப்பம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 02 அக்டோபர் 2019 10:50

இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் அகழாய்வுப் பிரிவுகள் வடநாட்டில் ஐந்தும், தென்னாட்டில் ஒன்றும் அதுவும் பெங்களூரிலும் அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரிவான அகழாய்வுகள் நடத்தப் படவில்லை.

1947ஆம்  ஆண்டில் அரிக்கமேடு என்ற இடத்திலும், 1965ஆம் ஆண்டு பூம்புகாரிலும் 2005ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. மேலும்  சில இடங்களில்  அகழாய்வு நடந்தது. ஆனால், அவைகளெல்லாம் சிறிய அளவிலேயே செய்யப்பட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை சில ஆய்வுகளை செய்துள்ளன. வைகையாற்றின் கரையில் அனுப்பானடி, பரவை, அழகன்குளம், மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் அகழாய்வுகள் சிறியளவில் நடந்தன. பெரியளவில் தமிழ்நாட்டில் அகழாய்வுகள் நடத்தப்படவில்லை. பெங்களூரில் உள்ள தொல்லியல் ஆய்வுத்துறையின் தென்னகப்பிரிவின் தலைமை அதிகாரியாக அமர்நாத் இராமகிருட்டிணன் பொறுப்பேற்றப் பிறகு வைகை நதி நாகரிகம் குறித்து  முழுமையாக ஆராயவேண்டும் எனக் கருதி அதற்கான பணிகளை மேற்கொண்டார். ஆண்டிப்பட்டிக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் வைகை உற்பத்தியாகி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக 250 கி.மீ. நீளம் இந்த ஆறு ஒடி இராமநாதபுரம் பெரிய ஏரியில் கலந்து பிறகு வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் நெடுகிலும் இரு கரையிலும் 293 இடங்களில் மிகப் பழமையான தொல்லியல் தடயங்கள் இருப்பதை அமர்நாத் இராமகிருட்டிணன் குழுவினர் கண்டறிந்தனர். இவ்வளவு குறுகிய நீளம் மட்டுமே ஓடுகிற ஒரு ஆற்றின் கரைகளில் 293 இடங்கள் தொல்லியல் எச்சங்கள் கிடைப்பது என்பது ஒரு உண்மையை புலப்படுத்துகிறது. இந்த நதிக்கரையில் ஒரு சிறந்த நாகரிகம் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே அந்த உண்மையாகும்.
இதில் சித்தன் நத்தம்,  கீழடி, மாறநாடு ஆகிய  மூன்று  இடங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் மதுரைக்கு 15கி.மீ. தொலைவில் உள்ள கீழடியை இறுதி  செய்து  அகழாய்வு தொடங்கப்பட்டது.  கடைச்சங்க கால மதுரை வைகை ஆற்றின் தென் கரையில் இருந்தது. அதற்கு மேற்கே திருப்பரங்குன்றம் மலை  அமைந்திருந்தது என  சங்க இலக்கியங்களான  திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, அகநானூறு, பரிபாடல் போன்றவை கூறுகின்றன.  கீழடிக்கு மேற்கே தான் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. எனவே, இந்த இடம்தான் சங்க கால மதுரையாகவோ, அதன் புற நகராகவோ இருக்க முடியும் என முடிவு செய்து  இங்கு அகழாய்வை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழுவினர் தொடங்கினர்.
கீழடியில் இரண்டு கட்ட  ஆய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் 2015-2016 ஆம் ஆண்டுகளில் அமர்நாத் இராமகிருஷ்ணன் குழுவினரால் நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் 5300 பொருட்கள் கண்டறியப்பட்டன.  கீழடியின் தொன்மை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான  அகழாய்வுகள் நடத்தப்படவேண்டும் என அவர் கூறினார். முதல் இரண்டு கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப் படுவதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு பெற்ற முடிவுகளின்படி கீழடியின் காலம் கி.மு. 220 & 160 (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) என்பது அறியப்பட்டது. மேலும் நகர்ப்பற நாகரிகத்திற்கான சிறந்த சான்றுகள் கிடைத்தன. சுடப்பட்ட மண் குழாய்களால் அமைக்கப்பட்ட கழிவு நீர் அமைப்புகள், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தளங்கள், உற்பத்தித் தொழில் நடந்தமைக்கான சான்றாக ஆறு உலைக்களங்கள், உறை கிணறு, வீட்டின் ஒரு பகுதி ஆகியவை கண்டறியப்பட்டன.
தமிழி எழுத்து பொறிப்புகள் 72 கிடைத்தன. அவற்றில் குவரன், குவிதன், ஆதன் போன்ற தமிழ்ப் பெயர்கள் கிடைத்தன. தமிழகத்தில் அகழய்வு நடந்த அரிக்கன்மேடு, பூம்புகார், உறையூர், அழகன்குளம் போன்ற இடங்களில் கட்டடங்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஆனால், கீழடியில் நகர்ப்புற நாகரிகத்தின் அடையாளமாகக் கருதத்தக்கப் பல கட்டடங்ளும், பிற பொருட்களும் கிடைத்தன. தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகத்தின் தடயம் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
கீழடியில் 2018இல் நடைபெற்ற அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இவற்றின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணித்து கூறியுள்ளனர். அதாவது, கீழடியின் நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிலான செறிந்த நாகரிகம் கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும் என்பது இதன்மூலம் நிறுவப்பட்டுள்ளது.
வைகைக் கரையில் நகர நாகரிகம், தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து ஆகியவை கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலானவை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாகத் தெரிகிறது.  அதாவது, கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவுப் பெற்ற சமுதாயமாகத் திகழ்ந்துள்ளனர் என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழின் தொன்மை குறித்து அறிஞர் சிலர் கூறிய கருதுகோள்கள் உண்மையானவை என்பதற்கு கீழடி ஆய்வு சான்றாக அமைந்துள்ளது என தொல்லியல் அறிஞரான கா. இராசன்  கூறியுள்ளார்.
 கீழடி தமிழி எழுத்துக்கள் அல்லது கிறுக்கல்கள் கொண்ட பானை                      ஓடுகள் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. அதன் முதன்மைத்  தன்மை                                     குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்                                                        ஜி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது சாலவும் பொருத்தமானதாகும்.
"மனித நாகரிகத்தின் சிறந்த கண்டுபிடிப்புகளில் பானையும், அதை வனையும் சக்கரமும் சிறந்ததாகும். அகழ்வாராய்ச்சியின்                                  அகரம் போன்றது பானை ஓடுகளாகும். பானை ஓடுகளின்                           மூலம் கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவை குறித்து ஆய்வாளர்கள் ஆராய்கிறார்கள்” என தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24-09-2009 அன்று நடைபெற்ற பானை அகழ்வாராய்ச்சிக்கான அனைத்து நாட்டு கருத்தரங்கில் பேசும்போது அவர் குறிப்பிட்டுள்ளதை இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும்.
தமிழி எழுத்துக்களின் முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்காலம் மற்றும் இரும்புகால மக்களின் எண்ணத்தை எடுத்துக் காட்டும் எழுத்து வடிவமாகும். கீழடியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய கீறல் பொறித்த பானை ஓடுகள் இரும்பு காலத்திலிருந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது.
"சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழி எழுத்துக்களுக்கும் இடையிலான இணைப்புச் சங்கிலியாக கீழடி பானைக் கீறல்களை நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் கிடைத்த கீறல்களைப் போன்ற கீறல்களும் கிடைத்திருக்கின்றன. ஆகவே, அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கவேண்டும். மேலும், இம்மாதிரி கீறல்களைக் கொண்ட பானை ஓடுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளன. அவற்றில் 75% தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன்குளம் ஆகியவற்றிலும் இதுபோன்ற பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில் தமிழி பொறிப்புகள் கிடைத்தப் படிநிலைக்குக் கீழே இவை கிடைத்துள்ளன. ஆகவே, அவை தமிழி எழுத்துக்கு முந்திய காலமாக இருக்கலாம்” என சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  
ஆரியத்திற்கு முந்திய தமிழ் நாகரிகம்
கீழடியில் கிடைத்த 70 எலும்புத் துண்டுகள் புனாவில் உள்ள டெக்காண் ஆய்வகத்தில்  பகுப்பாய்வு செய்யப்பெற்று திமில் உள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலை மான், காட்டுப் பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களின் எலும்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்க கால சமூகம் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு கால்நடை வளர்ப்பையும்  மேற்கொண்டிருந்தது என்பது தெரியவருகிறது.
இதில் மிக முதன்மையானது என்னவென்றால் கீழடி அகழாய்வில் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை என்பதாகும். கீழடியின் நாகரிகம் ஆரியர்களின் தாக்கம் படிவதற்கு முற்பட்ட நாகரிகம் என்பதும், முழுமையாக இது தமிழர்களின் நாகரிகமே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் நூல் நூற்கப்  பயன்படும் தக்களிகள், துணிகளில்  உருவ வடிவமைப்புகளை வரைவதற்குப் பயன்படும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட வரைகோல்கள், தறியில் தொங்கவிடும் கருங்கல் மற்றும் சுடு மண் குண்டு, செம்பிலான ஊசி, சுடு மண் பாத்திரம் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அரியவகை கல் மணிகளால் செய்யப்பட்ட நகைகள், முத்து, கண் மை  தீட்டும் கோல், சங்கு வளையல், கொம்பினால் செய்யப்பட்ட எழுத்தாணிகள், இரும்பு, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆயுதங்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட தாயக்கட்டை, தங்கத்திலான நகைத் துண்டுகள், செம்பு அணிகலன்கள் மற்றும்  வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. மீன் சின்னம் பாண்டியர்களின் சின்னம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே கீழடி சங்க கால மதுரையாகவோ அல்லது மதுரையின் புறப்பகுதியில் அமைந்த ஊராகவோ இருக்கக் கூடும்.
இங்கே கிடைத்திருக்கிற ரோமானிய மண் பாண்டங்கள் அவர்களோடு இந்தப் பகுதி மக்களுக்கு இருந்த தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன. சங்க காலப் பாண்டியர்கள் ரோமானியர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதையும் , ரோமானியரோடு தமிழர்களுக்கு வாணிபத்  தொடர்பு இருந்தது என்பதையும் நம்முடைய சங்க இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. இலக்கியங்கள் கூறும் இச்செய்திகளுக்குச் சான்றாக கீழடி தொல்லியல் ஆதாரங்கள் அமைந்திருக்கின்றன. சாதவாகனர் காலத்து பானை ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. எனவே, சாதவாகன வணிகர்கள் இங்கு வந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டின் பழமையான பானை ஓடுகளின் நிறம் கருப்புதான். மண் அடுக்குகளில் மிகக் கீழ்மட்டத்தில் இந்தப் பானைகள் கிடைப்பது முக்கியமானதாகும். சிறப்பான பானைகளை உருவாக்கும் தொழில்நுட்பம் அறிந்த ஒரு சமுதாயம் இங்கு வாழ்ந்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும். கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கீழ்ப்பகுதியில் கிடைத்தன. இவை இரும்புக் காலத்தைச் சேர்ந்தவை. இங்கு பல நிலைகளில் பல  பொருட்கள் கிடைத்துள்ளன. கீழ்நிலை, நடுநிலை, மேல்நிலை என்று பல பகுதிகளில் கிடைத்தப் பொருட்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். வடநாடு, சாதவாகனர் நாடு, ரோமாபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களோடு தொடர்புகொண்ட நகரமாக கீழடி விளங்குகிறது.
தமிழ்நாட்டில் பண்டைய நகரங்களில் பலவகையான வடிகால் முறை இருந்ததற்கான ஆதாரம் முதல்முறையாகக் கீழடியில் கிடைத்தது.  இங்கு மூன்று  வகையான  கால்வாய் முறைகள் இருந்தன. திறந்த கால்வாய், மூடிய கால்வாய், சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட குழாய் கால்வாய் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழாய் கால்வாய் ஊறல் தொட்டி ஒன்றில் முடிவடைகிறது. எத்தகைய திரவப் பொருளை கடத்துவதற்கு இக்குழாய்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஆய்வு நடத்தவேண்டியுள்ளது.
வீடுகளிலிருந்து சாக்கடை நீர் செல்லும் சுருங்கை வெளியே தெரியாதபடி மேற்புறம் மூடி மறைக்கப்பட்டிருந்தது. இந்தச் சுருங்கை நீர் தெருவில் உள்ள பெரிய சுருங்கைகளில் கலந்து அவை இறுதியாக மதில் புறத்திலிருந்த அகழியில் போய் விழுந்தது. அகழியில் கழிவு நீர் விழும் குழாய்  யானையின் தும்பிக்கை போல் இருந்தது என பரிபாடல் கூறுகிறது.
கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட தொல்லியல் மேட்டின் முழுப் பரப்பளவு 110 ஏக்கராகும். இதில் இரண்டு ஏக்கர் நிலத்தை தோண்டியதிலேயே  இத்தனை ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்கு அமைந்திருந்த நகரம் ஒரே காலத்தில் உருவானது அல்ல. மூன்று கட்டங்களாக இது வளர்ந்து உயரிய நிலையை அடைந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் இந்நகரம் அழிந்திருக்கிறது.
தலையானங் காலத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப்  போற்றும் வகையில் புலவர் மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி  என்னும்  நூலை எழுதினார். மதுரையின் மாண்பினை 354 அடிகளில் இந்த நூல் பாடுகிறது. மதுரை நகரின் செழிப்பை பல்வேறு மாண்புகளை, மக்களின் வாழ்க்கை முறைகளை இந்நூல் விளக்கிக் கூறுகிறது. மதுரை நகரின் அமைப்பு, ஊர் சிறப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறுகிறது. கீழடி அமைந்துள்ள 110 ஏக்கர் அளவிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் தடயங்கள் மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு தொல்லாய்வுச் சான்றாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
"தேவாரம் பாடிய நால்வரால் பாடப்பெற்ற  கோயில்கள் பெரும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.  பாடல் பெற்ற இந்தத் தலங்கள் சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற ஊர்களாகவோ அல்லது அவற்றின் அருகில் அமைந்த ஊர்களாகவோதான் இருக்கின்றன என்பது வியப்பான செய்தியாகும். அப்படியானால் சங்க காலத்தில் இருந்த ஊர்கள் தேவார காலம் வரை நீடித்து இருந்திருக்கின்றன என்பது மெய்ப்படுகிறது. சங்க காலத்தில் கோவில்கள் செங்கல் கட்டடங்களாக இருந்திருக்கக் கூடும். பிற்காலத்தில் அவை கற்றழிகளாக மாற்றம் பெற்றிருக்கும்" என பேரா.  வீ. செல்வக்குமார் கூறியுள்ளார்.
இந்த அரிய ஆய்வினை மேற்கொண்டு தமிழகத்தில் நகர நாகரிகத் தடயங்களைக் கண்டறிந்து கூறிய அமர்நாத் இராமகிருஷ்ணன்  அவர்களை பாராட்டுவதற்குப் பதில் உடனடியாக அவரை தொலைதூரத்தில் உள்ள அசாம் மாநிலத்திற்கு இந்திய அரசு மாறுதல் செய்துவிட்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் நடுவண் அரசு மூன்றாம் கட்ட ஆய்வு என்ற பெயரில் ஒரு ஆய்வை நடத்தி புதிதாக எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அதை முடிக்குமாறு ஆணையிட்டது.  தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தவுடன் தமிழக தொல்லியல்  துறை  அமைச்சர் பாண்டியராசன், துறையின் செயலாளர் உதயச் சந்திரன் ஆகியோர் 4ஆம், 5ஆம் கட்ட ஆய்வுகளை தமிழகத் தொல்லியல் துறையின் சார்பில் நடத்த முன்வந்து ஆணை பிறப்பித்ததை மனமாற பாராட்டுகிறோம். இல்லையென்றால் புதிய வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும். இத்துடன் நிற்காமல் அமர்நாத் இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியபடி வைகை ஆற்றின் இருபுறங்களிலும்  அமைந்துள்ள 293 இடங்களிலும்  முழுமையான அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் இலக்கியங்களில் மட்டுமே நகரங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை உறுதி செய்யும் வகையில் முதல் தொல்லியல் தடயம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், வடஇந்தியாவில் நடைபெற்ற எந்த தொல்லியல் ஆய்விலும் கீழடியில் கிடைத்ததுபோன்ற பானை ஓடுகளோ, வேறு ஏதாவது பொருட்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களோ கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
சங்க இலக்கியங்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் பாண்டியர்களின் தலைநகரமான மதுரை, கொற்கை, சோழர்களின் தலைநகரங்களான உறையூர், பூம்புகார் போன்ற மிகப் பழமையான நகரங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால், இக்குறிப்புகளை உறுதி செய்வதற்குரிய தொல்லியலாராய்ச்சித் தடயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை.  எனவே, நமது இலக்கியங்களில் கூறப்பட்டவை வெறும் கற்பனையே என உலகம் கருதும் நிலை இதுவரை இருந்தது.
ஆனால், இத்தகைய கூற்றினை பொய்யாக்கும் வகையில் கீழடியில் நகர்ப்புற நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே நிலவியது என்பதை அங்கு நடந்த  அகழாய்வு உறுதி செய்துள்ள நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் மட்டுமல்ல,  இந்திய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு ஆகியவை குறித்து இதுவரை எழுதப்பெற்றுள்ளவைகளை முற்றிலுமாக திருத்தி எழுத வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம்  நூற்றாண்டு வரையிலானது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதை இப்போது மாற்றவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என மொழிஞாயிறு பாவாணரும், பேரா. சி. இலக்குவனாரும் வரையறுத்துள்ளனர். 2181 எண்ணிக்கையுள்ள சங்க இலக்கியப் பாடல்களில் 800 பாடல்களுக்கு மேற்பட்டவை தொல்காப்பியத்திற்கும் முந்தியப் பாடல்களாகும் என இலக்குவனார் அறுதியிட்டுக் கூறுகிறார். இப்பாடல்களையும், பிறவற்றையும்  அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தமது இலக்கணத்தை இயற்றியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். தேவநேய பாவாணர் உட்பட பல அறிஞர்களும் தொல்காப்பியம், சங்க இலக்கியம் இவற்றின் காலத்தை இன்னும் பழமையானது என்று கூறியுள்ளனர்.
இந்த அறிஞர்களின் கருத்துகளையும், கீழடி நாகரிகத்தின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்பதை உறுதிசெய்துள்ள தடயங்களையும் மனதில் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வோமானால் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வு முடிவுகள் சரியானதே என்பது புலனாகும்.                                      எனவே, சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றின் வரலாற்றினை முற்றிலுமாக மாற்றி எழுதவேண்டிய தேவையை கீழடி ஆய்வு முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. இவை மட்டுமல்ல, தமிழக வரலாறும் மாற்றம் பெறவேண்டிய இன்றியமையாமை உருவாகியுள்ளது.   
வைகைக் கரையோரங்களில் அமைந்துள்ள தொல்லியல்  தடயங்கள் அத்தனையும் அகழாய்வு செய்யப்படுமானால் நம்முடைய வரலாறு மேலும் தொன்மை பெறும். உலகின் முதன்மொழி தமிழ்! முதன் மாந்தன்  தமிழனே! என பாவாணர் கண்டறிந்த ஆய்வு நூற்றுக்கு நூறு உண்மையே என்பது நிலை நிறுத்தப்படும்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.