தமிழ் - தமிழன்- உலகம் மதிக்காதது ஏன்? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:16

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த நாகரிகத்தின் சின்னமாக எகிப்திய மொழி விளங்கியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும், பாப்பிரஸ் ஏடுகளையும், படைத்தப் பெருமையுடையது.

எகிப்து முதல் சிரியா வரை இம்மொழி பேசப்பட்டது. உலகப் புகழ்பெற்ற பிரமிட் கோபுரங்களில் எழுதப்பட்ட மொழி இம்மொழியாகும். ஆனாலும், கி.பி. 16ஆம்  நூற்றாண்டிற்குப் பிறகு இம்மொழி வழக்கொழிந்து மறைந்துவிட்டது.
யூத மக்களின் மொழியான ஈப்ரு மொழி மிகப் பழமையானது. கி.மு. 13ஆம்  நூற்றாண்டிலிருந்து பல இலக்கியங்கள் படைத்த மொழியாகும். ஏறத்தாழ 4000 ஆண்டு காலத்திற்கும் மேலாக வாழ்ந்த இந்த மொழி கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கினை இழந்து வெறும் எழுத்து மொழியாக மட்டுமே திகழ்ந்தது. இஸ்ரேல் நாடு உருவான பிறகே இம்மொழிக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது. இஸ்ரேலில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் வாழும் யூதர்களின் குழந்தைகளுக்கு இம்மொழி கற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்பது செயல்படுத்தப்பட்டு இன்று பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு ஆகியவற்றைக் கொண்ட மொழியாகத் திகழ்கிறது.  
நபிகள் நாயகம் காலத்திற்கு முன்பே வேர்விட்டு வளர்ந்திருந்த மொழி அராபிய மொழியாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் இம்மொழிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இசுலாம் சமயம் பரவிய நாடுகள் அனைத்திலும் இம்மொழியே சமய மொழியாக பரவியது. இன்று உலகமொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
4000 ஆண்டுகளுக்கு முன்னமே வியக்கத்தக்க வளர்ச்சியைக் கொண்டிருந்தது சுமேரிய மொழியாகும். இதன் இலக்கியங்கள் களிமண் தட்டுகளில் படைக்கப்பட்டன. மத்திய ஆசியாவில் சிறந்த நாகரிகத்தை நிலைநாட்டியது. தமிழோடும், தமிழரோடும் உறவாடிய மொழி என்றும், இன தொடர்புடைய மொழி என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும்,  சிறந்த நாகரிகத்தைக் கொண்ட இந்த மொழி இன்று வழக்கற்றுப் போனது.
எத்தனையோ நூற்றாண்டு கால வரலாற்றுப் பெருமை கொண்டது சீன மொழியாகும். கி.மு. 4000த்திற்கு முன்பே மக்களின் வழக்கில் இருந்த இம்மொழி இன்று எழுத்துருவில் மட்டுமே வாழ்கிறது. ஆனால், பேச்சு வழக்கில் சீன மொழி பல கிளை மொழிகளாகப் பிரிந்துவிட்டது.  
மேல்நாட்டு மொழிகள் காலத்தால் மிகவும் பிந்தியவை. அறிவியல் மொழியாகக் கருதப்படும் செர்மன் மொழியில் முதல் எழுத்துச் சான்று கி.பி. 8ஆம் நூற்றாண்டிலேயே கிடைத்துள்ளது. கி.பி. 742-814 காலகட்டத்தில் சாலமன் ஆட்சி முதற்கொண்டுதான் தொடர்ச்சியாக எழுதப்பட்ட செர்மன் எழுத்துக்கள் கிடைக்கின்றன. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒரு நிலையான மொழி என்ற தகுதியை அம்மொழிப் பெறவில்லை. கி.பி. 1483-1546 காலகட்டத்தில் வாழ்ந்த மார்ட்டின் லூதரால்தான் இம்மொழிக்கு நிலைமொழித் தகுதி கிடைத்தது.  
ஐரோப்பிய நாடுகளின் மொழியாகக் கருதப்படும் பிரெஞ்சு மொழி இலத்தீன் மொழியிலிருந்து பிறந்ததாகும். இம்மொழியின் முதல் இலக்கியச் சான்று கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். கி.பி. 18, 19 நூற்றாண்டுகளில் உலக மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரெஞ்சு மொழி மிகப் பிந்திய கால வரலாற்றைக் கொண்டதாகும்.
கி.பி. 10 அல்லது 11ஆம் நூற்றாண்டுகளில்தான் ஸ்பானிஷ் மொழியின் முதல் எழுத்துருவம் பிறந்தது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில்தான் போர்த்துக்கீசிய மொழி எழுத்து வடிவம் பெற்றது. இசைக்கு இத்தாலியன் எனப் புகழப்படும் இத்தாலிய மொழி, இலத்தீன் மொழியிலிருந்து பிறந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் இம்மொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்தது.
உலக மொழியாக என்று திகழும் ஆங்கில மொழியின் முதல் எழுத்துச் சான்று கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். கி.பி. 16ஆம்  நூற்றாண்டுக்குப் பிறகு உலக நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பினாலும், பல நாடுகளை அடக்கி ஆண்ட காரணத்தினாலும் அந்நாடுகளின் மக்கள் மீது ஆட்சிமொழியாக ஆங்கிலம் திணிக்கப் பட்டதாலும் ஆங்கிலம் உலகளாவிய மொழியாயிற்று.
கிழக்கு சிலாவிய மொழிகளில் ஒன்று ரஷ்யன் மொழி ஆகும். இதன் பழமையான எழுத்துச் சான்று கி.பி. 10  நூற்றாண்டைச் சார்ந்தது. பழைய ரஷ்யன் மொழி ரஷ்யன், உக்ரைனியன், பைலோ ரஷ்யன் ஆகிய மொழிகளாகப் பிரிந்தது.  கி.பி. 11ஆம்  நூற்றாண்டில்தான் ரஷ்ய மொழியில் கையெழுத்துப் படிகள் தோன்றின. கி.பி. 1056-1057 ஆண்டுகளில் ரஷ்யன் மொழியில் எழுதப்பட்ட வேதாகமம் இதற்குச் சான்றாகும். கி.பி. 1799-1837 காலகட்டத்தில் வாழ்ந்த புஷ்கின் காலத்தில்தான் இம்மொழி இலக்கிய நடையைப் பெற்றது. 20ஆம் நூற்றாண்டில் அக்டோபர் புரட்சியின் விளைவாக மன்னர் ஆட்சி வீழ்த்தப்பட்டு சோவியத் அரசு மலர்ந்த பிறகு அறிவியல் போன்ற துறைகளுக்குரிய ஆக்க மொழியாக இம்மொழி வளர்ந்துள்ளது.
பேரறிஞன் சாக்ரடீஸ் பேசிய கிரேக்கம் இன்று வழக்கில் இல்லை. மாவீரன் ஜீலியஸ் சீசர் பேசிய இலத்தீன் தேவாலயங்களுக்குள் முடங்கிவிட்டது. தத்துவ அறிஞர் கன்பூசியஸ் பேசிய சீன மொழி இன்று இல்லை. பெருங்கவிஞர்கள் வால்மீகி, பாணர் காளிதாசன், பவபூதி, இலக்கண அறிஞன் பாணினி போன்றோர்கள் வளர்த்த சமற்கிருதம் இன்று வழக்கொழிந்த மொழியாகி விட்டது. இன்று இதை பேச்சு மொழி எனக் கூறுவது மிகக் கடினம். 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் சமற்கிருதம் பேச, எழுத தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 25ஆயிரத்திற்குட்பட்டதே. காப்பியம் பல கண்ட இந்த மொழி இன்று கோயில்களின் பூசாரிகளின் முணுமுணுப்பு மந்திரங்களில் மட்டுமே வாழ்கிறது. மக்கள் மொழி என்ற தகுதி இதற்கு இல்லை.
தமிழ்
பழமைக்கு முந்திய பழமை வாய்ந்ததாகவும், புதுமைக்குப் பிந்திய புதுமையாகவும் விளங்கும் பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. கிறித்து பிறப்பதற்கு பல  நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கண, இலக்கிய மரபுகளைக் கொண்டு வாழ்ந்த  இம்மொழி இன்றும் வாழ்கிறது.
எகிப்தியன், சுமேரியன், பினிசியன் போன்ற மொழிகள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டிருப்பினும் இன்று வாழாத மொழிகளாகும். இம்மொழிகளைப் பேசும் மக்கள் மாற்று மொழிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டு பிற மொழிகளைப் பேசும் நிலையில் உள்ளனர். கணக்கிட முடியாத காலத்திற்கு  முன்பிருந்தே வாழ்ந்துவரும் தமிழ்மொழி இன்றும் அதிக மாற்றமின்றி பேசவும், எழுதவும்படுகிறது.
கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த சங்க  இலக்கியங்களும், சங்க மருவிய காலத்தில் தோன்றிய  சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் அறநூல்களும், கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம்  நூற்றாண்டு வரை தோன்றிய பக்தி இலக்கியங்களும், அதற்குப் பின்னர் தோன்றிய சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் போன்றவையும் அதற்குப் பின்னர் படைக்கப்பட்ட சிற்றிலக்கியங்களும், 20ஆம்  நூற்றாண்டில் தோன்றிய பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளும், எழுதப்பட்ட மொழியில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. சிறுசிறு வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அவையும் காலப்போக்கில் ஏற்பட்ட வேறுபாடுகளாகும். மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை இலக்கியங்களும் இன்று வாழும் தமிழர்களாலும் புரிந்துகொள்ளப்படுகின்றன. பேச்சு வழக்கிலும் பெரிய  அளவு மாற்றங்கள் கிடையாது. அறிஞர்களின் ஆராய்ச்சியில் மட்டுமல்ல, பாமர மக்களின் நாவிலும் தமிழ் தவழுகிறது. வாழும் மொழியாகவும், மேலும் வளரும் மொழியாகவும் காலத்திற்கேற்ற கோலங்களை புனைந்துகொள்ளும் மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்பாகும்.
தமிழ்மொழியின் தொன்மை, பழமை, தமிழிலிருந்து பிறந்த பிற தமிழிய மொழிகளின் தொன்மையும், பழமையும் மேனாட்டு மொழிகளுக்கும், வட-இந்திய மொழிகளுக்கும் மிகமிக முந்தியவையாகும். காலவெள்ளத்தால் அழியாத இலக்கியங்களையும்,  இலக்கணங்களையும் தமிழும் பிற தமிழிய மொழிகளும் கொண்டிருக்கின்றன.
தமிழர்
இத்தகைய பீடுசால் பெருமைக்குரிய தமிழ்மொழியைப் பேசும் மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட உலக நாடுகளில்  வாழ்கிறார்கள். இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் பெருமளவிலும் இதர தென்கிழக்காசிய நாடுகளிலும், ஆசுதிரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். உலகில் ஆங்கிலேயருக்கு அடுத்தப் படியாக பல நாடுகளில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்களே.
மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் தமிழர்கள் ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்திருக் கிறார்கள். சிங்கப்பூரில் குடியரசுத் தலைவராகவே ஒரு தமிழர் பதவி வகித்தார். மொரீசியஸ், கயானா போன்ற நாடுகளில் தலைமையமைச்சராகவும், அமைச்சர்களாகவும், உயர்  பொறுப்பு களில் தமிழர்கள் பதவி வகிக்கிறார்கள்.  இந்தியாவில் வாழும் பிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய உலகளாவிய பெருமை கிடையாது. இந்தியாவுக்கு வெளியே உள்ள எந்த நாட்டிலும் அவர்கள் அதிகாரப் பொறுப்புகளில் அமர்ந்திருக்கவில்லை.
இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தமிழர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவராகவும், நடுவண் அமைச்சர் களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் களாகவும், பல்வேறு பிற மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், உயர் அதிகாரி களாகவும் தமிழர்கள் பதவிகளை வகித்தார்கள். வகிக்கிறார்கள்.
இத்தகைய பெருமைக்குரிய தமிழினத்தின் இன்றைய நிலை என்ன? உலகம் முழுவதிலும் பரவி வாழும் நமது இனம் அதற்குரிய மதிப்பினைப் பெற்றிருக்கிறதா? உலக அரங்கில் தன்னை நிறுத்திக் கொண்டுள்ளதா? என்ற கேள்வி நமது உள்ளங்களைக் குடைகிறது.
இயல்பாகவே தமிழினம் உலகளாவிய சிந்தனையைப் பெற்றுப் பரப்பிய இனமாகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என உலக மக்களுடன் உறவு கொண்டாடினார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார். சங்கப் பாடல்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களில் உலகு, உலகம் என்ற சொற்கள் முதன்மையாக இடம்பெறுகின்றன. திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், சேக்கிழார் போன்ற பெருங்கவிஞர்கள் தமது புகழ் செறிந்த இலக்கியங்களைப் படைக்கும்போது உலகு, உலகம் என்றே தொடங்கினார்கள். உலக  மக்கள் அனைவரையும் மொழி, இனம்,  நாடு ஆகிய வேறுபாடின்றி உறவு கொண்டாடி மகிழ்ந்த  இனம் நமது  தமிழினம். ஆனால், இன்று இலங்கையில் நமது  தமிழ் மக்கள் இன அழிப்புக்கு ஆளாகிக் கதறிய போது ஏன்? என்று கேட்கவும், அதைத்  தடுத்து நிறுத்தவும் இந்தியாவும் உலகமும் முன்வரவில்லை.
தமிழ்நாட்டிலும், புதுவை மாநிலத்திலும், உலக நாடுகள் பலவற்றிலும் ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் தமிழர்களால் ஈழத் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம் முழுவதிலும் பரவி வாழ்கிற ஏறத்தாழ 12கோடி தமிழ்மக்கள் பதறித் துடித்துப் புலம்பியபோதும் அவர்களைக் காப்பாற்ற  முடியவில்லை. இத்தகைய கையறு நிலைக்கு நமது இனம் ஆளானது ஏன்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய காலகட்டம் இது. உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து தோளோடு தோள் பிணைந்து  நின்றாலொழிய நம்மையும்  காக்க  முடியாது, நமது மொழியையும் நிலை நிறுத்த முடியாது என்ற அப்பட்டமான உண்மையை உணர்ந்தா யொழிய நமக்கு விடிவில்லை, வாழ்வும் இல்லை.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.