கீழடியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்தால்தான் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் தெரியவரும் என்றார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா.
தஞ்சாவூரில் சிந்தனை மேடை அமைப்பு சார்பில் 02-10-2019 புதன்கிழமை மாலை நடைபெற்ற கீழடி - தமிழர் வாழ்வும்-வரலாறும் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது- கீழடியில் முழுமையாகவும், இன்னும் ஆழமாகவும் அகழாய்வு செய்தால் தமிழர் நாகரிகம் எவ்வாறு தோன்றியது? எப்படி வளர்ச்சி பெற்றது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். அரிக்கன்மேடு, காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், உறையூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் செங்கல் கட்டடம் இருப்பது தெரியவந்தது. ஆனால், கீழடியில்தான் அதிக அளவில் செங்கல் கட்டடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இதை நகர நாகரிகம் இல்லை எனக்கூற முடியாது. இந்தக் கூற்றை மாற்றியது இரண்டாம் கட்ட அகழாய்வுதான். நகர மக்கள்தான் அதிநவீன வாழ்க்கையை விரும்புவர். கீழடியில் எங்களுடைய ஆய்வில் ஏறக்குறைய15 உறை கிணறுகள் கண்டறியப்பட்டது. அங்குள்ள உறை கிணறுகள், வடிகால் முறை போன்றவற்றை காணும்போது, அது நகர வாழ்க்கைதான் என்பது உறுதியாகிறது. அகழாய்வில் 1800 தொல்பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது. பொருள்கள் உற்பத்தி செய்யப் பட்டிருந்தால்,அதற்கானமூலப் பொருள்களின் தடயம் இருந்திருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்படியொரு தடயம் கிடைக்கவில்லை. அரைகுறைப் பொருள்களாக அல்லாமல், முழுமையான பொருள்களாகவே கிடைத் துள்ளது. எனவே, வெளியில் இருந்துதான் பொருள்களை வாங்கியிருப்பர். நகர நாகரிகத்தில்தான் பொருள்கள் வெளியில் வாங்கும் பழக்கம் இருக்கும். யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணிகலன்கள் போன்றவையும் கிடைத்தது. இதன்மூலம் கீழடியில் நகர நாகரிகம் என்பது மட்டுமல்லாமல், முழுமையான நாகரிக வாழ்க்கை கடைப்பிடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில்தான் பானை ஓடுகளில் கிறுக்கல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் இதுபோல வேறு எங்கும் இல்லை. சிந்துவெளியில்கூட வரைபட எழுத்துகள் தான் கிடைத்தன. வரைபடம் மூலம் தகவலை வெளிப்படுத்தும் முறை இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் காணப்படும் கிறுக்கல்கள் தமிழ் பிராமி எழுத்து என்பதை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த எழுத்து வடிவங்கள்தான் அசோகர் காலத்துக்குச் சென்றிருக்கும். பானையில் எழுதும் பழக்கம் சாமானிய மக்களிடம் தான் இருக்கிறது. பானையில் அரசன் எழுத வாய்ப்பில்லை. எனவே, அக்காலத்திலேயே தமிழர் நாகரிகத்தில் சாமானிய மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இப்போதும்கூட எவர்சில்வர் பாத்திரத்தில் பெயர் எழுதும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இந்தப் பழக்கம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. எனவே, கீழடி வளமைமிக்க நாகரிகமாகத்தான் இருந்திருக்கும். அகழாய்வின் போது எந்த மத அடையாளங்களும் கிடைக்கவில்லையே என்ற பார்வையாளர் ஒருவரின்கேள்விக்குப்பதிலளித்த அமர்நாத், "சங்க கால மக்களிடம் மத அடை யாளங்கள் இல்லை. அவர்கள் இயற்கையோடு இயைந்து, இயற்கையை வழிபட்ட வாழ்க்கைமுறையை கொண்டவர்கள்.பெருந்தெய்வ வழிபாடெல்லாம்பிற்காலத்தில் தோன்றியவைீஎன்றார்.உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதைவிட, ஆதாரங்களோடு பேசினால், எவராலும் மறுக்க முடியாது. எனவே, நாம் அறிவியல் கண்ணோட்டத் தோடு ஆய்வு முடிவுகளை அணுகி, வெளிப்படுத்தினால் எல்லோரும் ஏற்றுக்கொள்வர் என்றும் திரு. அமர்நாத் கூறினார். இன்னும் ஆழமாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் நாகரிக வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அதற்குத் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு அகழாய்வு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் தமிழர் வரலாற்றை மறு கட்டமைப்புச் செய்ய முடியும் என்றார் அமர்நாத் இராமகிருஷ்ணா. வழக்குரைஞர் அ. நல்லதுரை தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் திருவாளர்கள் உ.த.பே. தலைவர் பழ. நெடுமாறன், பொறியாளர் ஜோ. ஜான்கென்னடி, பூங்குழலி, பேராசிரியர். வி. பாரி, ஐயனாபுரம் சி. முருகேசன், துரை. குபேந்திரன், சு. பழநிராசன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட திரளானவர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களின் உரையினைக் கேட்டனர். |