ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புபடுத்தப்பட்டு 27ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடிவரும் 7பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து ஓராண்டுக் காலத்திற்கு மேலாகியும், இன்னமும் ஆளுநர் அந்தப் பிரச்சனையில் முடிவு எடுக்காமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதற்கிடையில், பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்குக் கருணைக் காட்டவேண்டும் என்று அப்போதைய ஆளுநருக்கு அளிக்கப்பட்ட கருணை மனுவை ஆளுநர் ஏற்க மறுத்து ஆணைப் பிறப்பித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் நால்வர் சார்பில் நான் தொடுத்த வழக்கில், மூத்த வழக்கறிஞரும், பிற்காலத்தில் நீதிநாயகமாக இருந்தவருமான திரு. கே. சந்துரு அவர்கள் வாதாடினார். இவ்வழக்கினை விசாரித்த மாண்புமிகு நீதிநாயகம் திரு. கே.கோவிந்தராசன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளை சான்றாக எடுத்துக்காட்டியுள்ளார். 1981ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிநாயகம் பகவதி அவர்கள் அளித்தத் தீர்ப்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 181ஆம் பிரிவின்படி குற்ற மன்னிப்பு வழங்கல் மற்றும் தண்டனைக் குறைப்பு ஆகியவற்றிற்கான அதிகாரம் ஆகியவை, ஆளுநருக்கு வழங்கப்பட்ட உளத் தேர்வின்படியான அதிகாரத்தின் வரம்பிற்குள் வராது. ஆனால், தம்முடைய அமைச்சரவையின் அறிவுரையின் பேரிலும் மற்றும் அதற்கிணங்கவும் செயல்படவேண்டுமே தவிர, முடிவு எடுப்பது மாநில அரசின் பொறுப்பாகும். ஆளுநர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், 161ஆம் பிரிவின்படி அமைச்சரவை செயற்பட்டு ஆளுநருக்கு அறிவுரை வழங்கும். அந்த அறிவுரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராவார் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் 1991ஆம் ஆண்டில் அளித்த மற்றொரு தீர்ப்பில் "அரசமைப்புத் திட்டத்தின்படி குடியரசுத் தலைவர் இந்திய ஒன்றியத்தின் தலைமை நிர்வாகியாவார். அவரிடம் ஒன்றியத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். இதேபோன்று, ஆளுநர், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை நிர்வாகியாவார். அவரிடம் அந்த மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் மேவி நிற்கும். 72ஆம் மற்றும் 161ஆம் பிரிவுகள், முறையே குடியரசுத் தலைவர் மற்றும் அந்த மாநில ஆளுநர்களுக்குக் கருணை வழங்கும் அதிகாரத்தின்படி மன்னித்தல் முதலியவற்றை வழங்கியுள்ளது. இந்த அரசமைப்பு அதிகாரம் தொகுப்புச் சட்டத்தின் 432ஆம் மற்றும் 433ஆம் பிரிவுகளில் அடங்கியுள்ள சட்டப்படியான அதிகாரத்தின் மீது சொல்லப்படுகிறது மற்றும் தொகுப்புச் சட்டத்தின் 433ஏ பிரிவின் வரம்பும் அதோடுகூட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) 54ஆம் மற்றும் 55ஆம் பிரிவுகளினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் மீதும் ஐயப்பாடின்றி இந்த அதிகாரம் மேலோங்கியிருக்கும். ஆனால், குடியரசுத் தலைவராலும் ஆளுநராலும் செலுத்தப்படவேண்டிய அந்த அதிகாரம் தங்களுடைய அமைச்சரவையின் அறிவுரையின் பேரிலேயே செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த மேற்கண்ட தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி நீதிநாயகம் திரு. கே. கோவிந்தராசன் அவர்கள் நால்வர் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனுக்களை தள்ளுபடி செய்து ஆளுநர் பாத்திமா பீவி அளித்தத் தீர்ப்பு செல்லாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை 25-11-1999 அன்று அளித்தார். 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் அரசியலமைப்புச் சட்டம் செயற்பாட்டுக்கு வந்த நாள் முதல் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட 25-11-1999 வரை கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதை மீறி ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் தன்னிச்சையாக தண்டனை குறைப்பு,விடுதலை ஆகிய பிரச்சனைகளில் முடிவெடுத்து வந்தனர். இந்த அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தப் போக்குக்கு இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது. உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும், பிற்கால நீதிநாயகமுமான கே. சந்துரு அவர்கள் பெற்றுத் தந்த இந்தத் தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் மாபெரும் திருப்பத்தினை ஏற்படுத்திற்று. அதன் பிறகே அனைத்து மாநில அமைச்சரவைகளும் தண்டனை குறைப்பு விசயமாக பரிந்துரை செய்தவற்றை ஆளுநர்கள் ஏற்றுத் தீரவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அதைபோல, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டிய நிலைமை உருவானது. இத்தீர்ப்புக்கு எதிராக ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தன்னிச்சையாக எவ்வித ஆணையும் பிறப்பிக்க முடியாது. இதை நன்கு உணர்ந்திருக்கிற காரணத்தினால்தான் இப்போதைய தமிழக ஆளுநர் 7 தோழர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என அமைச்சரவை அளித்தப் பரிந்துரையை ஏற்காமலும், எதிர்க்க முடியாமலும் காலங் கடத்துகிறார். ஆளுநரின் இந்தப் போக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் போக்காகும். திட்டமிட்டே ஆளுநர் இவ்வாறு காலதாமதம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உயர்நீதிமன்றத்தில் தொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். |